ஜாக்கிரதை!

பார்துவின் நிம்மதியான நான்கு வருட திருமண வாழ்வில் மிகவும் கோரமான ஒரு திருப்பம் நேர்ந்து விட்டது. அவனுக்கு வாழ்க்கையை வாழ இஷ்டமே இல்லாமல் ஆக்கி விட்டது. 'போலீசாக இருந்தது போதும்' என்ற திடீர் வைராக்கிய உணர்வோடு ராஜா ரவி வர்மாவை போல் சித்திரம் செய்யவேண்டும் என்ற திடீர் ஆர்வம் கொண்டு விஜயநகரத்தில் ஓரளவுக்கு வசதியான இரண்டு மாடி வீட்டிற்கு ஏழு மாதங்கள் வாடகை கட்ட இயலாமல் துளைத்து, இரண்டு வாரங்களுக்கு முன் பார்துவின் தந்தையின் ராசியான விசாகபட்டணம் வீட்டின் வாசலில் வந்து நின்றிருந்தார்கள் பார்துவின் அக்காவும் மாமாவும். இவர்களில் இந்த விஷமம் எல்லாம் செய்தது மிஸ்டர் பாவா. பார்துவின் அக்கா பத்து என்றவள், சற்று பாவம்தான், ஆனால் காட்டிக்கொடுக்கமாட்டாள். போலீஸ் ஸ்டேஷனில் போரென்சிக் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை செய்து எப்படியோ குடும்பத்தை நடத்துகிறாள்.

இந்த திருப்பம் ஏன் பார்துவிற்கு அவ்வளவு கோரமாக இருந்ததற்கு விளக்கம், கீழே காணப்படும் நள்ளிரவு வசனத்தினால் தெரியப்படும். காட்சி நடக்கும் இடம்; பார்துவின் படுக்கை அறை. பேசும் பாத்திரங்கள்; பார்து, பார்துவின் மனைவி பாப்பு.

"என்னை மன்னிச்சிடுங்க." அழுவது போல் மூக்கை சிந்தினாள். அவன் கவலையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இருட்டில் அங்கே இங்கே கையை நீட்டி குறி தெரியாமல் தவித்து கடைசியில் அவளின் சிறிய மூக்கை கண்டுபிடித்தான்.

"ஏன், பாப்பு? சமையல்ல தெரியாம மூக்கை சிந்திட்டையா?" அவள் மூக்கை லேசாக கட்டை விரலால் அமுக்கினான். "பரவாயில்லை, அக்காவும் பாவாவும் சாப்பிட்டாங்களே. ஒன்னும் சொல்லலை."
"அப்படி எல்லாம் நான் ஒன்னும் செய்யலை."
"பின்ன?"
"... உங்க மாமாவை நான்... காதலிக்கறேன்."
முகத்தை சுருக்கினான்.
"உன் மிலிட்டரி அப்பாவையா?"
"இல்லை! மாப்பிளையை."
"உங்கப்பாவோட மாப்பிளை... நான்தான்." சிரித்தான். "நீ என்னைத்தானே காதலிக்கற?"
"இல்லைங்க! உங்க அக்காவோட புருஷனை."
"என் மாமாவையா காதலிக்கற?"
"ஆமாம்." அவன் கையை பிடித்து ஒரு சொட்டு கண்ணீரை அது மேல் விழ வைத்தாள். "என்னால இந்த வீட்டுல இருக்க முடியலை. நான் ஆர்மில பிளேன் ஓட்ட போகப்போறேன்." 
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான். அவளின் கன்னத்தை பற்றி அந்த ஒற்றை கண்ணீர் சொட்டின் ஈரமான பாதையை துடைத்தான்.
"அது எப்படி உன்னால முடியும்?!"
"கல்யாணத்துக்கு முன்னாடி பைலட்டாத்தானே வேலை செஞ்சிண்டு இருந்தேன்?"
"பிளேன் ஓட்டறதை சொல்லலை." தொண்டை அடக்கியதை மீறி கேட்டான். "பாப்புங்கிற பெயரை வைச்சிண்டு நீ எப்படி ஆர்மில இருக்க முடியும்?"
மூன்று வினாடிகள் ஒன்றும் சொல்லவில்லை.
"அது என் நிஜம் பெயரில்லைன்னு உங்களுக்கு தெரியும்தானே?"

பார்துவிற்கு அன்றைக்கு இரவு தூக்கம் வராது என்று தோன்றியிருந்தாலும் அவனை மீறி தூக்கமும் வந்து விட்டது. நல்ல ஒரு மறக்கப்பட்ட கனவுடன் ஆறு முப்பத்தியாறு மணிக்கு எழுந்து விட்டான். கண்களை இறுக்க மூடி, மூக்கெலும்பின் மீது ஆள்காட்டி விரலால் மிருதங்கம் வாசித்துக்கொண்டே சிந்திக்க ஆரம்பித்தான், அவன் மனைவியை எப்படி அவனுடனேயே வைத்துக்கொள்வதென்று.
"இந்த வீட்டில் இருந்தால்தானே பிரச்சனை? வேறு வீட்டிற்கு சென்றால்?"
உடனடியாக எழுந்து தயாரானான். தன் ஆபிஸ் வேலைக்கு செல்வது போல் பாப்புவிடம் பாசாங்கு செய்துவிட்டு அவளின் தாத்தாவின் உயிலில் அவளுக்கு என்று எழுதப்பட்ட அவர்களின் துவ்வாடா இல்லத்திற்கு சென்றான்.

"இதோ பாருங்க, மாப்பிளை. பாப்பு என் அக்கா பொண்ணுதான். ஆனால் ஜமீன் குடும்பத்தில இருந்து வளர்ந்து, அப்பா அம்மா குடும்பம் எல்லாத்தையும் மீறி உங்களை கல்யாணம் பண்ணது எங்களுக்கு சரியா பாடலை." என்று அந்த மாமி சொன்ன பொழுது பார்துவிற்கு வந்த ஆத்திரத்தை அடக்கி பேச முயன்றான்
"என்னங்க இது, அநியாயமா இருக்கு? பாப்புக்காகத்தானே உயில்ல எழுதியிருக்கு இந்த வீடு? அதுவும் அவ யாரு? உங்க பெரியம்மாதானே, அவளுக்காக இதைக்கூட செய்ய மாட்டீங்களா?"
அந்த மாமி அவனை பார்த்து முறைத்ததில் அவன் தவறாக என்ன கேட்டு விட்டான் என்று ஒரு நொடி யோசித்தான்.
"பெரியம்மா இல்லை, சித்தி."
"என்ன சொல்லறீங்க? பாப்பு உங்க அப்பாவோட இரண்டாவது மனைவியா?" மூச்சு திணறி பின் வாங்கினான். "நான் உங்க அப்பாவா?"
"உளறாதீங்க. நான் பாப்புவுக்கு சித்தி."
"அப்படின்னா அவ உங்களோட அக்கா பொண்ணு."
"அதைத்தானே நான் முதல்ல சொன்னேன்?"
"என்னவா இருந்தாலும் ஏதோ ஒரு நெருங்கிய உறவுதானே?" உதட்டை பிதுக்கினான். "அவளை பத்தி யோசிச்சு பாருங்க? பாப்புங்கிற பெயரை வைச்சிண்டு, எப்படி ஆர்மில இருப்பா?"
அவனை மேலிருந்து கீழ் ஏறிட்டு பார்த்தார்கள்.
"அது அவ நிஜம் பெயரில்லைன்னு உங்களுக்கு தெரியும்தானே, மாப்பிளை?"

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தயங்கி நின்று, ஒரு கல்லுடன் புட்பால் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அவனின் அக்கா வெளியில் வந்தாள். அவனை பார்த்து லேசாக புன்னகைத்து, அவனருகில் வந்து அந்த கல்லுடன் நடந்த புட்பால் மேட்சில் கலந்து கொண்டு ஜெயிக்க ஆரம்பித்தாள். இருவரும் பேசிக்கொண்டே பஸ் ஸ்டான்ட்டிற்கு பொறுமையாக நடந்தார்கள்.
"தனிக்குடித்தனம் போயே ஆகணும், பத்து."
"ஏன், பார்து? எங்களோட கலகலப்பா இல்லை? இரண்டு பேருக்கும் இன்னும் குழந்தை பிறக்கலை. ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா நல்லாதானே இருக்கு?"
அது சரி. பத்துவின் பாவா இருப்பதினால்தான் பிரச்சனையே என்று எப்படி சொல்வது?
"பாப்புக்கு எங்களை பிடிக்கலையா?"
"நோ நோ! அதுக்கு நேர் எதிர்-" சொல்லவந்ததை முழுங்கினான். எப்படி அக்காவை சமாளிப்பதென்று யோசித்துக்கொண்டிருந்த பொழுது ஒரு விமானம் மிகவும் நெருங்கி அவர்களை தாண்டி சென்றது. பத்து அதை மிகுந்த ஆர்வத்துடன் கழுத்தை திருப்பி கவனித்ததில் அவன் பாதி உண்மையை சொல்லி விடலாம் என்று முடிவெடுத்தான்.
"திடீர்னு அவளுக்கு பிளேன் ஓட்டணும்னு ஆசை."
சட்டென்று கீழே திரும்பி அவனை நோக்கினாள். கண்களை சுருக்கியபடி பாதியாக சிரித்தாள்.
"ஓஹோ. அப்படியா."
"ம்ம். என் கூடையே இருன்னு சொல்லி பார்த்தேன். கேட்க மாட்டேங்கிறா. மாமாக்கூட இருக்க போறாளாம்."
"பாவாக்கூடத்தானே வீட்டுல இருக்கிறா?"
"உன் பாவா இல்லை."
"அவ பாவா... யாரு, நீயு." சிரித்தாள். "உன்கூடத்தான் இருக்க போறாளா?"
"நான் இல்லை. அவ அப்பா."
"ஓ, மிலிட்டரி மாமாவா." 
இப்பொழுது புரிந்திருக்கும், பார்துவின் உறவுகளினால் வரும் குழப்பம் குடும்ப வியாதி என்று. 
"ஆமாம். ஆர்மிக்கு போறாளாம்."
"போகட்டும். நல்லதுதானே. அவளுக்கு ஒரு காண்பிடென்ஸ் கிடைக்கும். வீட்டுலையே எத்தனை நாள் அடக்கி வைப்பே?"
"நான் ஒன்னும் அடக்கி வைக்கலை." கால்பந்தாக அத்தனை நேரம் வேலை செய்த கல்லை பெரிதாக உதைத்தான். ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒரு சாக்கடையில் அது பாவமாக விழும் வரை இருவரும் கவனித்தார்கள். அவன் பத்துவிடம் திரும்பி கண்களை ஏறிட்டு பார்த்தான்.
"நான் அவளை முழுசா காதலிக்கிறேன்."

பஸ் வந்ததென்று இருவரும் ஏறினார்கள். இரண்டு பூக்காரிகளுக்கு நடுவில் நின்று பேச்சை தொடங்கினார்கள்.
"யோசிச்சு பாரு, பத்து? பாப்புங்கிற பெயரை வைச்சிண்டு எப்படி அவ ஆர்மில இருக்க முடியும்?"
பூக்காரிகள் ஜாதிமல்லி மொட்டுகளை பஸ்ஸின் வேகத்தில் தொடுப்பதை உற்று பார்த்துக்கொண்டிருந்த பத்து மூச்சு திணறி தலையை அவனிடம் திருப்பினாள்.
"கரெக்ட்டு, நான் அதை யோசிக்கலை. ச்ச!" உதட்டை கடித்தாள். "இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கே?"
"எனக்கு ஐம்பது லட்சம் வேணும்."
"ஐம்பது லட்சமா? ஓ, உன் கூடவே இருக்கறதுக்கு அவளுக்கு லஞ்சம் கொடுக்க போறையா?"
"அவ தாத்தா அவளுக்காக எழுதி வைச்ச வீட்டை அவளோட சித்தி கிட்டேருந்து வாங்கலாம்னு இருக்கேன்."
"ஐயோ, சித்தியா?" அவநம்பிக்கையுடன் தலையசைத்தாள். "ஜமீன் குடும்பம். அப்படித்தான் இரண்டு மூணு வைச்சிப்பாங்க போல."
"இவங்க ஒருத்தங்கதான்."
"அப்படியா?"
"அவ அம்மாவோட ஒரே தங்கச்சி." அதற்கு ஏன் பத்து அப்படி முகத்தை சுருக்கிக்கொண்டாள் என்று தெரியாமல் தலையை சொரிந்தான். 
"என்ன கர்மமா இருந்தாலும் பாப்புக்காக அவ தாத்தா எழுதி வைச்சிருக்காருன்னா அவளுக்கு தான் முழு உரிமை இருக்கு அதுமேல." பத்து அவளின் மூக்கின் எலும்பை ஆள்காட்டி விரலால் தட்டிக்கொண்டே கண் மூடியபடி யோசித்தாள். பார்து உற்று கவனிக்க அவள் சட்டென்று நிறுத்தி அவனை கண் திறந்து பார்த்து சிரித்தாள். 
"ஐம்பது லட்சம்தானே? உனக்கு எப்படியாவது வாங்கி கொடுத்துடறேண்டா."

~ ~ ~

அன்றைக்கு இரவு இருவரும் ஒரு அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் வாசலில் நின்றனர். வெல்லப்பாகை இழுத்தது போல் உயரமாக ஆனால் ஒல்லியாக, கண்களை கூச வைக்கும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. லிப்ட்டின் மேல் முழு நம்பிக்கை இல்லாததால் இருவரும் படிகளை ஏறினார்கள்.
"எத்தனாவது மாடிக்கு போறோம்?"
"பன்னண்டாவது."
"இன்னும் எட்டு மாடி ஏறணுமா?"
"இரண்டாவதுலதான் இருக்கோம். இன்னும் பத்து இருக்கு."
"பத்தா?!"
"புலம்பாதே! பன்னண்டாவது மாடிலதான் உனக்கு ஐம்பது லட்சம் வெயிட்டிங்."
பார்துவின் முகத்தில் அப்பொழுது தோன்றிய திடீர் வெளிச்சம் அந்த இருட்டு படிக்கட்டை ஒளிரச் செய்தது. மெல்ல மெல்ல ஏறி பன்னண்டாவது மாடியில் மூச்சை வாங்கிக்கொண்டிருந்தவனை தோளில் தட்டி ஒரு கதவை காண்பித்தாள். 
"அதோ..." மூச்சு இழுத்து விட்டாள், "அந்த வீட்டுலதான்..." மறுபடியும், "உன்..." இன்னொரு முறை, சற்று வேகமாக, "ஐம்பது லட்சம்!"
மார்பை பிடித்து நின்றான் பார்து. அவள் காட்டிய கதவை நோக்கினான். கருநீல கலரில், அவசரமாக பெயிண்ட் செய்திருந்தார்கள். இடுக்குகளிலிருந்து மீதி கட்டிடத்தின் சுயமான கிறீம் கலர் ஹயிட்-ஆண்ட்-சீக் விளையாடுவது போல் எட்டிப் பார்த்தது. டோர்பெல் மேல் தொங்கியது ஒரு சிறிய கருப்பு போர்ட். 'பூனை ஜாக்கிரதை!' 
என்று அனாவசியமான நாடகபாணியில் சொன்னது. பக்கவாட்டில் வெள்ளை சாக்கில் கேவலமாக ஒரு பூனை பொம்மை வரைய பட்டிருந்தது.
"அது பூனையா?"
"இல்லை. பூனை பொம்மை."
"என்ன பத்து?"
"பின்ன? போர்ட்ல அப்பட்டமா எழுதியிருக்கு, பூனைகள் ஜாக்கிரதைன்னு. பூனையா இல்லாம, நாயாவா இருக்கும்?"
"இந்த பூனை வீட்டுலையா..."
"எஸ்." சுற்று முற்றும் பார்த்து டோர்பெல்லை மெல்ல வருடினாள். 

அவள் டோர்பெல்லை அழுத்துவதற்கு முன் கதவு திறக்கப்பட்டது. சற்றே திறந்த க்ரில் டோர் வழியாக தெரிந்தார் ஒரு நடுத்தர வயது மனிதர். இளம் சிவப்பும் ஊதா கலர்களில் கட்டம் போட்டிருந்த லுங்கியை தாறுமாறாக பாக்ஸர் தெரியும் அளவு மேலே மடித்து கட்டியிருந்தார். மார்பில் இருந்த முடியை மறைக்க மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது அந்த மூத்த வீரரான அவரின் சாயம் போன வெள்ளை பனியன். அவர் கையில் இருந்த குப்பை பையை பார்த்து பத்து முன் வந்து சிரித்தாள்.
"சார், குடுங்க. குப்பையைத்தானே போடணும். நாங்க போடறோம்." 
அவர்கள் இருவரிடமும் ஆராய முடியாத ஒரு பார்வையை அளித்து குப்பை பையை அவர்களிடம் நீட்டினார். பத்து அடக்கத்துடன் வாங்கி பார்துவின் கையில் திணித்தாள்.
"போடா, வைச்சிட்டு வா. சார் வெயிட் பன்றார் இல்லை." அவரிடம் திரும்பி வெகுளித்தனத்துடன் ஒரு புன்னகையை வீசினாள். அவரும் லேசாக அதைக்கண்டு நகைத்தார். பார்து குப்பையை தொட்டியில் (மூக்கை பிடித்திக்கொண்டே) வைத்துவிட்டு திரும்பியும் அங்கேயே அப்படியே சிலை போல் நின்றிருந்தார்கள். அவர் அவனை ஏறிட்டு பார்த்து அவளிடம் திரும்பினார்.
"குப்பைக்காரங்க என்ன ராத்திரி நேரத்துல கூட வர ஆரம்பிச்ச்சுட்டீங்க?"
"ஹா ஹா ஹா." அவள் உறக்காக சிரித்து, பார்து சிரிக்காததை கவனித்து அவனை இடுப்பில் லேசாக இடித்து அவனையும் சிரிக்க வைத்தாள். 
"நாங்க குப்பைக்காரங்க இல்லை, சார்." இருவரும் சிரித்ததை நிறுத்தி அவரை நேராக பார்த்து கண்களை பெரிதாக்கி பார்த்தனர். "ஒரு வேலைக்காக வந்திருக்கோம்."
அவரின் புருவங்கள் எம்பி குதித்து அவரின் நெற்றியை தொட்டு உடனே இறங்கின. கதவை முழுதாக திறந்து உள்ளே விட்டார்.
"அப்படின்னா உள்ள போயி பேசலாம்."

எப்படியோ ஐம்பது லட்சங்களுக்கு நெருங்கிவிட்டோம் என்று பார்து யோசித்துக்கொண்டிருந்தான், அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் பொழுது. பத்துவிற்கு சற்றும் பயமே இல்லை. முகத்தில் எப்பொழுதும் நிலை நாட்டியிருந்தது ஒரு லேசான புண் சிரிப்பு. அது அவனையும் பயம் இல்லாமல் வைத்தது. சிரித்து அவளின் கையை பற்றினான். அதை கண்டு அவன் அருகினில் வந்தாள்.
"கவலைப்படாதே. எல்லாம் சரியா நடக்கும்."
"இந்த ஆளு யாரு, பத்து?"
"ஸ்டேஷன்ல பேசிண்டு இருந்தாங்க. ஊருல இருக்கிற வீ ஐ பீ எல்லாருக்கும் வேலை முடிச்சு கொடுக்கறவரு. குரேஷி பாய்ன்னு பெயர்."
"வேலைன்னா?"
"என்ன சொல்லறாங்களோ. என்ன ஒன்னு, பைசா கொடுக்கணும்."
"நீயும் இப்ப அவர்கிட்ட ஏதோ வேலை வாங்கப்போறேன்னு சொன்னே?"
"நீ சொல்லறதை பார்த்தா நான் என்னவோ  அவரை வீட்டை துடைச்சு பெருக்க சொல்லப்போற மாதிரி..." தலையசைத்தாள். "அதுக்குதான் வீட்டுல இரண்டு ஆளுங்க இருக்காங்களே இப்பவே."
"நல்ல சிஸ்டம் வைச்சிருக்காங்க, பத்து."
"ரொம்ப முக்கியம். இரு." 
குரேஷி பாய் என்றவர் அப்பொழுது அணைத்து ஜன்னல் கதவுகளையும் சாற்றி வந்து அவர்கள் எதிரில் உட்கார்ந்தார். அவரின் கால் பக்கவாட்டில் அப்பொழுதுதான் பார்து ஒரு பெரிய வெள்ளை பஞ்சு பந்தை கவனித்தான். அந்த பஞ்சு பந்திற்கு எங்கிருந்தோ ஒரு இளம்சிவப்பு நாக்கு வெளியில் நீட்டி அதையே நக்க ஆரம்பித்தது. அவன் வாய்க்குள் சிரித்ததை குரேஷி பாய் கவனித்து முறைத்து பார்த்தார்.
"தம்முடு, என்ன சிரிப்பு?"
பஞ்சு பந்திலிருந்து மேலே அவரை நோக்கினான்.
"அது வந்து... சார், ரொம்ப க்யூட்டா இருக்கு இந்த பூனை. இது போயி..."
"ஹ்ம். யாரும் கேட்காத கேள்வியே ஒன்னும் நீ கேட்கலை இப்ப."
அவர் என்ன சொன்னார் என்று முழுசாக புரிந்து கொள்ள சற்று தாமதம் ஆயிற்று பார்துவிற்கு. ஆனாலும் தொடங்கினார். அவர் பின்னால் ஒரு சிவப்பு கட்டம் போட்ட லுங்கியால் மறைக்கப்பட்ட டீவீயின் மேல் தொங்கிய ஒரு படத்தை காண்பித்தார். பத்து மரியாதையான ஒரு ஆர்வத்துடன் முன் வந்தாள்.
"யாருங்க சார் அது?"
"என் மனைவி. ஹசீனா."
படத்தில் தெரிந்த ஹசீனாவின் முகம் முழுவதும் கருநீல கலர் நிகாப்பால் மறைக்கப்பட்டு இருந்தது. அந்த நிகாப்பில் புள்ளி புள்ளியாக வைரங்கள் போட்டோவை மீறியும் மங்கலான அந்த அறையின் ஒளியில் ஜொலித்தன. அவளின் பழுப்பு நிற கண்கள் ஒரு செவ்வக துணி ஓட்டை வழியாக தரிசனம் அளித்தன. அடர்த்தியான புருவங்கள் அந்த கண்கள் மேல் வசதியாக உட்கார்ந்து பார்ப்பவர்களை வார்த்தையில்லாமல் பயமுறுத்தின. பார்து மறுபடியும் எச்சிலை முழுங்கினான். பத்து நெருங்க முயற்சித்தாள்.
"நிகாப்புக்கு கீழே அழகா சிரிச்சிருப்பாங்க, இல்லை?"
"அட, நீ வேறம்மா. அவ முழுசா மனசாலை நேசிச்சவங்களை பார்த்துதான் சிரிப்பா." பெருமூச்சு விட்டார். "நான் கூட பார்த்ததில்லை." 
சரியாக சமயம் பார்த்து அந்த பூனை பந்து அவர் மடியின் மேல் குதித்தது. அவர் அதை ஆசையாக தடவிக்கொடுத்து, திடீர் என்று வாயிலேயே முத்தம் அளித்தார். பார்து ஒரு பெரிய மூச்சு திணறலுடன் பின் வாங்கினான். அவர் பாதி சிரித்தார்.
"தம்முடு, இது வேற யாரும் இல்லை. என் ஹசீனா."
பத்து பார்துவை திரும்பி பார்த்ததில் அவன் உடனேயே புரிந்து கொண்டான், இதை பற்றி மேலே எதுவும் கேட்டால் ஆபத்து என்று. ஏற்கனவே பார்துவுக்கு இந்த குரேஷி பாய் செய்யும் வேலை என்னவென்று பாதிதான் புரிந்திருந்தது. அவனின் பொறுமை வேறு அவன் மனதில் ரிலே ரேஸ் வீரர்கள் போல் ஓடி சென்று திரும்பி வந்து ஓடி சென்று திரும்பி வந்து முடிவில்லாத ஒரு வட்டத்தில் ஓட்டப்பந்தயம் செய்துகொண்டிருந்தது. ஐம்பது லட்சமாவது, ஒரு ரூபாய் நோட்டாவது இந்த காலி வீட்டில் எங்கேயாவது கிடைக்கிறதா என்று சந்தேகப்படாத அளவு சுற்று முற்றும் பார்க்க ஆரம்பித்தான். கண்ணில் பட்டது... கிச்சன் டேபிள் மேல் ஒரே ஒரு டாலர் நோட் மட்டும் தான். அமெரிக்கனோ ஆஸ்திரேலியனோ, யார் கண்டுண்டார்கள்? ஒரு பெருமூச்சுடன் திரும்பினான். பத்து இன்னமும் நெருங்கியிருந்தாள்.

"வேலையை கேட்கலாமா?"
"தாராளமா." பூனையின் கழுத்து கீழ் சொரிந்து விட்டார். "என்ன வேலை செய்யணும்? எவ்வளவு கொடுப்பீங்க, முக்கியமா?"
"நாங்க வந்தது உங்களுக்கு வேலை கொடுக்க இல்லை."
பூனை ஹசீனாவின் கழுத்தில் விளையாடிக்கொண்டிருந்த விறல் சட்டென்று நின்றது. கண்களை சுருக்கி முன் வந்தார். பத்து அவசரமாக தலையசைத்தாள்.
"ஆமாங்க. எங்களுக்கு உங்க கிட்ட வேலை செய்யணும்."
"என்ன சொல்லறீங்க, எதுக்கு இது?"
"எங்களுக்கு பணம் தேவை."
"அதுக்கு எங்கேயாவது போயி கடன் வாங்கிக்கோங்க! பேட்டை ரவுடி கிட்டையா வருவீங்க? அதுவும் பணத்துக்காக?"
"எங்களுக்கு தேவையானது ரொம்ப பெரிய அமவுண்டுங்க. அதுவும் சீக்கிரம் வேணும்." உதட்டை பிதுக்கினாள். அதை கண்டு பார்துவுக்கே அவளிடம் பணம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. குரேஷி பாய் தயங்கி பூனையின் மூக்கை வருட ஆரம்பித்தார்.
"எவ்வளவு?"
"ஐம்பது லட்சம்."
மெல்லிய குரலில் அவள் சொன்னது எதோ பெரிய போர் அறிவிக்கை செய்தது போல் அவர் குதித்து எழுந்தார். ஹசீனா பூனை கீழே சரிந்து விழுந்து அவர் கால்களில் சுருங்கியது. பத்துவை பெரிய விரிந்த கண்களுடன் மேலே கீழே பார்த்தார்.
"என் குப்பையை வாங்கிண்ட போதே தெரிஞ்சிருக்கணும். பைத்தியங்கன்னு." முகவாக்கட்டையை தடியாக்கினார். "கிளம்புங்க."
"இருங்க. உங்க கிட்ட ஐம்பது லட்சம் இப்ப இருக்குன்னு எங்களுக்கு எப்படி தெரியும்னு நீங்க யோசிச்சு பார்க்கலை?"
குரேஷி பாயிடம் அவள் என்ன மாய வலையை அந்த ஒரு வாக்கியத்தால் வீசியிருந்தாளோ, அவர் எச்சிலை முழுங்கி பூனையை குனிந்து கைகளில் வாரி எடுத்து, அவர் மார்பின் பக்கத்தில் வைத்து அணைத்துக்கொண்டார். பின் திரும்பினார். அநேகமாக அதுக்கு மட்டும் சொல்ல முயன்றிருப்பார், ஆனால் அவரின் மெல்லிய குரல் நிசப்தமாக இருந்த அந்த சிறிய வீடு முழுவதும் கேட்டு விட்டது.
"இவளுக்கு எப்படி ஹஸீ தெரியும், நாம செஞ்ச வேலையை பத்தி?"

~ ~ ~

பார்து அவன் மணிக்கட்டை பார்த்த பொழுது ஏமாற்றம்தான் வந்தது. வாட்ச் இல்லை. அவன் அக்காவை பார்த்தான். ருஷிகொண்டா பீச்சில் ஒளிந்துகொள்வதற்கு வசதியாக இவ்வளவு புதிருகள் இருக்கும் என்று அவனுக்கு பத்துவினால்தான் இப்பொழுது தெரியவந்தது. பத்துவின் முகத்தில் வடிந்தது சாந்தமும் பொறுமையும் ஒரு வித ஆர்வமும். எப்படித்தான் பயம் என்பது ஒரு சொட்டும் விழலையோ? அவனுக்கு முகம் முழுவதும் பீதி இருந்தது. வயிற்று சற்று உறக்காகவே கலக்கியது.
"சு!"
"நான் என்ன பண்ணுவேன் பத்து? அது சத்தம் போடறது."
"ஏழு மணிக்கே சொன்னேன். சாப்பிட்டுடு, அப்புறம் எப்போ சாப்பாடு கிடைக்கும்னு தெரியாதுன்னு." முணுமுணுத்தாள். "சின்ன வயசு மாதிரியே ஒத்த சாதத்தை சாப்பிட்டுட்டு, இப்ப வந்து அழறது."
நிஜ சம்பவம் அது. காலையில் வீட்டில் அம்மா சிரமப்பட்டு அடுப்படியில் நின்று வாத்த தோசைகளில் ஒன்றே ஒன்று, ஒரு சொட்டு சட்னியுடன் அவசரமாக வாயில் திணித்து விட்டு, ஸ்கூலில் க்ளாஸ் மத்தியில் வயிறு வலிக்கிறது என்று புலம்பி தீர்த்து, வீட்டுக்கு போகிறேன் என்று ஸ்கூல் நர்ஸிடம் பொய் சொல்லிவிட்டு, தெருவோரம் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை அம்மா மளிகை கடை ஜன்னல் வழியாக பார்த்து, அங்கேயே பிடித்து, நல்ல திட்டு வாங்கினவன்தான் பத்துவின் அருமை தம்பி பார்து. வீட்டிற்கு பத்து திரும்பியதும் தம்பி மேல் உள்ள ஏதோ ஒரு விசுவாசத்தினால் ஸ்கூலை விட்டு செல்ல அவள்தான் அவனிடம் சொல்லியிருந்தாள் என்று பழி வாங்கிக்கொண்டாள். இத்தனை வருடங்களில் மாறியிருப்பான் என்று எண்ணினால் இல்லை என்று ஒரு பெருமூச்சுடன் அவள் பதிலளிப்பாள்.

"இப்ப நாம இங்கே இன்னும் எத்தனை நேரம் காத்துண்டு இருக்கணும்?"
"இரு. பாய் சொன்னார் இல்லை?" சுற்று முற்றும் பார்த்தாள். ஒரு பெரிய ஜீப் வண்டியின் ஹெட்லைட்டுகளின் வெளிச்சம் அவர்களின் மேல் பட்டு அவர்கள் மாட்டிப்பதற்கு முன் பார்துவின் வாயை பொத்தி இன்னொரு புதிருக்குள் குதித்தாள். அவன் சிணுங்கியதை உணர்ந்து அவள் அவனை பார்த்து தீவிரமாக முறைத்தது அந்த ஹெட்லைட்டுகளின் மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தன. அந்த பார்வையிலேயே பார்துவுக்கு கொஞ்சம் வெட்கம் வந்துவிட்டது.
"ச்ச! உன்னை கூட்டிண்டு வந்திருக்க தேவையே இல்லை! இதுக்கு என் எக்ஸ்-போலீஸ் பாவாவையே கூட்டிண்டு வந்திருக்கலாம்." பெருமூச்சு விட்டாள். "அவர் என்னன்னா கலை பயிற்சி செஞ்சிண்டு இருக்காரு. போலீஸ் ஜோலியில எல்லாம் கொஞ்சம் கூட இஷ்டமே இல்லாம."
"நாம இப்ப போலீஸ் ஜோலி பண்ணவா வந்திருக்கோம்?" பதிலுக்கு சிரித்தாள்.
"அதுக்கு நேர் எதிர். எவனோ ஒரு எம் எல் ஏ இந்தப்பக்கமா வரப்போறானாம், அவன் சின்ன வீடோட பீச்சில வாக்கிங் போக. அப்போ நாம குறி பார்த்து அவளை கடத்திண்டு போகணுமாம்." 
"அப்புறம்?"
"குரேஷி பாயிகிட்ட கூட்டிண்டு போகணுமாம்."
"அப்புறம்?"
"பைசா வாங்கிண்டு கிளம்பிண்டே இருக்கணுமாம்."
"அப்புறம்?"
அவள் அவனை மேலே கீழே பார்த்து இமைத்தாள். 
"இப்ப என்ன பதில் எதிர்பார்க்கற?"
குரேஷி பாயிற்கும் அந்த சின்ன வீட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கண்டுகொள்ள அவனுக்கு சற்றே ஆர்வமாகத்தான் இருந்தது. அதை எப்படி அக்காவிடம் அப்பட்டமாக வெட்கமே இல்லாமல் கேட்பது?
"எப்போ வருவாங்களாம்?"
"ஏதோ நான்தான் பெருசா அவங்களுக்கு வெத்தலை பாக்கு தாம்பூலம் கொடுக்க இந்த நேரத்துக்கு வாங்கன்னு சொன்னேங்கற மாதிரி கேட்கற?" அவன் கன்னத்தை ஆசையாக அடித்து பற்கள் வழியாக பேசினாள். "பொறுமையா இருடா, என் பங்காரம்."

கூடிய சீக்கிரத்தில் இரண்டு பெயர்கள் ஒருவரை ஒருவர் 'பங்காரம்' என்று கொஞ்சிக்கொண்டே அந்த பக்கம் நடந்து சென்றார்கள். ஒரு ஆன் குரல், ஒரு பெண் குரல்.
"போங்க, நீங்கதான் பங்காரம்."
"இல்லை, நீதான்."
"நீங்கதான்."
"நீதான்."
பத்து புதிருக்கு வெளியில் குதித்து அந்த இரண்டு தங்கக்கட்டிகளை மெல்ல பூனை போல் தொடர ஆரம்பித்தாள். பார்து அங்கேயே உட்கார்ந்திருப்பதை கவனித்து கையை அசைத்தாள். மெல்லிய குரல்களில் பேசினார்கள்.
"வாடா சீக்கிரம்!"
"நான் ஏன்? நீயே பண்ணிடு."
"உனக்கு ஐம்பது லட்சம் வேணுமா வேணாமா?"
"நீதானே சொன்னே, நான் வந்திருக்கவே வேணாமுன்னுட்டு?"
"தேவுடா, இப்ப அதை யூஸ் பண்ணுவியா? வாடா!" திரும்பி சற்று தூரம் சென்ற காதல் ஆந்தைகளை பார்த்துவிட்டு, சாந்தமாக திரும்பி அவனை பார்த்தாள்.
"பாப்புக்காக பண்ணுடா."

பார்து என்ற பொம்மைக்கு சரியான கீயை கண்டுபிடித்து விட்டாள். அவன் மனைவியின் (செல்ல) பெயரை சொன்னதும் புதிரை விட்டு எகிறி குதித்தான். பத்துவின் கையை பிடித்து பீச் வழியாக இருவரும் ஓடினார்கள். சிறு வயதில் அம்மா அப்பாவுடன் அடிக்கடி பீச்சிற்கு வந்து, அவர்கள் இருவரும் மணலில் வீடு கட்ட (நிஜ வாழ்க்கை போல்), பத்துவும் பார்துவும் அலைகளிடம் குறி பார்த்து ஓடுவார்கள், உள்ளே குதித்து துணியெல்லாம் ஈரமாக்கிவிளையாட, வெளியில் கைகள் கோர்த்து உறங்கச்செல்லும் சூரியனை அலைகளின் ஓரத்தில் கால்களும் கணைக்கால்கள் வரை தூக்கியிருந்த பாண்ட்டுகளும் இன்னொரு முறை ஈரமாக சிலைபோல் நின்று வேடிக்கை பார்ப்பார்கள். பத்து பார்துவை பார்த்து சிரித்தாள், அவனும் அவளை பார்த்து திரும்பி சிரித்ததில் இருவரும் சற்றே வலது பக்கமாக சென்று அலைகளில் கால்களை ஈரமாக்க அந்த எம் எல் ஏவையும் அவரின் தங்கமான சின்ன வீட்டையும் துரத்தினார்கள். பின்னாலிருந்து நெருங்கிய பொழுது அவர்களின் சம்பாஷணையின் கடைசி பகுதி மட்டும் கேட்டது.
"உன்கண்ணாக்கு தெரிஞ்சுதுன்னா..."
"என்னைக்கும் தெரியாது. கவலைப்படாதே." அவள் முகத்தில் ஒரு முத்தம் கொடுத்தார்.
"தெரிஞ்சா என்ன நடக்கும்னு பயமா இருக்கும்."
"மாக்சிமம் என்ன பண்ணுவான். உன்னை கடத்துவான். அவன் செத்துப்போன மனைவியோட உன்னை கம்பேர் பண்ணுவான். வேற என்ன பண்ண முடியும் அவனால?"
குபுக்கென்று அவள் சிரித்த பொழுதுதான் பார்து பத்துவின் துப்பட்டாவை வைத்து பெண் பங்காரத்தின் வாயை பொத்தி அமுக்கினான். வாயடைத்து போன அந்த எம் எல் ஏ ஏதாவது சொல்வதற்கு முன் அவரின் நடு முதுகில் ஒரு துப்பாக்கி வைக்கப்பட்டது. முரட்டுத்தனமான ஒரு குரல் ஒலித்தது.
"அசையாதீங்க. மூலாதாரத்துல துப்பாக்கி வைச்சிருக்கேன். அங்கே சுட்டா என்ன ஆகும்னு எனக்கே தெரியாது."
"ஐயோ, வேண்டாங்க!" கைகளை அவசரமாக தூக்கினார். "இவளை கூட்டிண்டு போங்க!"
"ம்ம்! ம் ம்ம்ம் ம்ம் ம்ம்!"
அவள் என்ன சொன்னாள் என்று தெரிந்துகொள்ள பார்துவுக்கு சற்று ஆர்வமாகத்தான் இருந்தது. ஆனால் வேகமாக அவளை இன்னும் இறுக்கமாக கட்டி பின் செல்ல ஆரம்பித்தான். பத்து (விரல்களால் செய்த) துப்பாக்கியை எடுக்காமல் எம் எல் ஏவின் இடுப்பு பகுதி கீழ் ஒரு பலத்த உதையை அளித்து அவர் கீழே கிடந்து துடிப்பதை கண்டுக்காமல் அவள் தம்பியை உதவச்சென்றாள். 

"என்ன, வேலையை முடிச்சிட்டீங்களா?"
"ஆமாம்." பெரிதாக சிரித்தபடி அவர்கள் ருஷிக்கொண்டா பீச்சில் அவ்வளவு கஷ்டப்பட்டு கடத்திய பெண்மணியை குரேஷி பாய் முன் காண்பித்தார்கள். அவரை பார்த்து அவள் கண்களை பெரிதாக திறந்தாள். ஒரு நொடியில் அவள் கண்கள் பக்கவாட்டில் ஹசீனாவின் முறைக்கும் முகத்தை பார்த்துவிட்டு திரும்பியது.
"சரீனா. என்னை ஞாபகம் இருக்குதானே?"
"ம்ம் ம்ம்."
"ம்ம்-ம்ம்மா?" முறைத்தார். "என்னை ஞாபகம் இல்லை உனக்கு?"
"சார்..."
"என்ன?"
"வாய் கட்டியிருக்கு."
நிமிர்ந்து பத்துவை பார்த்து வெறுமென இமைத்தார். அவர் தலையசைக்க அவள் சரீனாவிடம் சென்று வாயில் கட்டிய அந்த துப்பட்டாவை கிழற்றி அவளின் கைகளில் இன்னொரு சுற்றாக கட்டினாள்.
"அடப்பாவி. ஆளுங்கள வைச்சி என்னை கடத்தறே? வெட்கமா இல்லை?"
"நானே பண்ணத்தான் போனேன். அவங்களா வந்து செய்யறேன்னு சொன்னாங்க."
சரீனா அவர்களை திரும்பி பார்த்து முறைத்தாள். பத்து தோள்களை இயல்பாக குலுக்கினாள்.
"பெரிய கதை."
"பெரிய கதையெல்லாம் எனக்கு கேட்க வேண்டாம்." சரீனா குரேஷி பாயிடம் திரும்பி இன்னும் அடர்த்தியாக முறைத்தாள். அந்த முறைப்பில் எதையோ கண்டுகொண்டு மூச்சு திணறினான் பார்து. "அட! நீங்க ஹசீனாவோட தங்கச்சியா?"
"ஆமாம், பெரிய கண்டுபிடிப்பு. போங்கடா." அவள் எரிந்து விழுந்ததில் பார்து அவன் அக்காவிடம் குதித்தான். அவள் சரீனாவை பார்த்து கண்களை சுறுக்கியது பார்துவுக்கே சற்று பயமுற்றியது.
"பாய், எங்களுக்கு உங்க பர்சனல் விஷயத்துல தலையிட இஷ்டம் இல்லை."
"அப்படியா?" அவள் காதில் எட்டி கேட்டான் பார்து. "இங்கே என்ன நடக்கறதுன்னு கொஞ்சம் ஆர்வமாத்தான் இருக்கு."
பத்து கண்களை இறுக்க மூடி பற்கள் வழியாக பதிலளித்தாள்.
"பாப்பு."
"சரி. சாரி."

பத்து ஒரு பெருமூச்சுடன் குரேஷி பாயிடம் திரும்பினாள். அவர் அவளை பார்த்து ஒரு பாதி சிரிப்பு அளித்தார். அவரின் மடியில் இருந்த பூனையை தலையில் தட்டினார். அது குதித்து பத்துவின் கால்களில் சுழன்று உட்கார்ந்தது. பத்து அவரை மெல்ல பார்த்த பொழுது அவர் அதே புன்சிரிப்புடன் தலையசைத்தார். அவள் குனிந்து அதை வாரி அணைத்துக்கொண்டாள். அவரைப்போல் அதனின் கழுத்துக்கு கீழ் சொரிந்து விட்டாள். அதை கண்டு குரேஷி பாய் பெரிதாக சிரித்ததில் பார்துவும் பெரிதாக சிரித்தான். பூனை உடனடியாக குதித்து எங்கேயோ வேகமாக சென்றது. உள்ளிருந்து ஒரு பெட்டியை இழுத்துக்கொண்டு வந்ததை ஆச்சரியத்துடன், சற்றே திறந்த வாய்களுடன் வேடிக்கை பார்த்தார்கள். பார்துவின் பக்கவாட்டில் அந்த பெட்டியை வைத்தது. அவன் மெல்ல குரேஷி பாயை பார்த்தான். அவர் மறுபடியும் தலையசைத்தார்.
"ஐம்பது..."
"லட்சம்தான். எண்ணக்கூட வேண்டாம்." பூனை அவர் மடியின் மேல் மறுபடியும் குதித்து உட்கார்ந்து கழுத்தில் விரல்களினாலான மசாஜ் வாங்கிக்கொண்டிருந்தது. "என் ஹஸீனாக்கு எல்லாம் தெரியும்."

இரண்டு வாரங்களில் துவ்வாடா இல்லத்தை வாங்கி பாப்புவுக்கு பரிசாக அளித்தான் பார்து. கடைசி பையை டாக்சியில் வைத்துக்கொண்டிருந்த பொழுது பத்து அவனை பார்த்து செய்த கண் சிமிட்டல் அவனுக்கு வாழ்க்கையை வாழ பெரிதாக ஒரு இஷ்டம் அளித்தது. அவளை திரும்பி பார்த்து, அவள் கையை அவன் கையில் வாங்கிக்கொண்டு திரும்பி கண்ணை சிமிட்டினான்.

"தாங்க்ஸ். அக்கா."

Comments

Popular posts from this blog

Dharam Yuddh - 4

Dharam Yuddh - 5