அனுவின் ஆள்
அவளுடையவன் என்கிற அடைமொழி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "என்னவன்" என்று அவள் என்னை அழைத்தாள் நன்றாக இருக்கும் என்று நான் பல நாட்கள் கனா கண்டதுண்டு. ஆனால் இப்பொழுது வறைக்கும் அவள் என்னை அப்படி அழைத்ததில்லை. பரவாயில்லை. அவளின் வீட்டின் மக்கள் அனைவரும் என்னை "அனுவின் ஆள்" என்று அழைக்கும் பொழுதே எனக்கு ஒருவித பெருமை தோன்றுகிறது. அவளை சந்தித்ததும் காதலியாக பெற்றதும் சாதாரண விஷயம் இல்லை. அதுவும் என் தகுதிக்கு. என்னை இந்த பெருமையை அனுபவிக்க விடுங்கள்.
"கிர்ல்ஸ்! இந்த டிரஸ் நல்லா இருக்கா?"
அவளையும் அவளின் இரண்டு தோழிகளையும் ஒரு பஜாரிற்கு கூட்டி சென்றிருந்தேன். ஒரு ஊதா நிற பாவாடை அணிந்து கண்ணாடிக்கு முன் நின்றாள். தன்னைத் தானே ரசித்துக் கொண்ட விதத்தில் நான் மறுபடியும் அவளை காதலித்தேன்.
என் பீ. எஃப். ஏ. முதல் வருட, முதல் செமஸ்டர், முதல் கிளாசில் நாம் வண்ண சக்கரம் பற்றி கற்றுக்கொன்டோம். எந்த நிறங்கள் மற்ற நிரங்களுடன் நன்றாக இருக்கும், கண்களுக்கு சுவையாக இருக்கும் என்று. இந்த டிரஸ்ஸை டிசைன் செய்தவர் அந்த வகுப்பின் பொழுது விடுமுறை எடுத்துவிட்டார் போல், இந்த டிரஸ்ஸின் இரண்டு பிரதானமான நிறங்கள் ஒழுங்காக சேரவில்லை. ஊதாவும், மழைவரும் மேகங்களை குறிக்கும் நீளமா? ஒன்றுக்கு பின்னால் இன்னொன்று ஒளிந்துகொண்டிருந்தது. இந்த அறிவை நான் மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற தடுமாற்றத்தில் வெருமென அவளை பார்த்தேன்.
அந்த செட்டிலே வந்த (மூடு பணி நிறம்!) துப்பட்டாவை எடுத்து பஞ்சாபி பெண்போல் தலையில் அணிந்து கொண்டாள். அவளின் தோழிகளைக் கண்ணாடி வழியாக பார்த்து கண் அடித்தாள். சேர்ந்து மூவரும் சிரித்தனர். என்னை திரும்பி பார்த்தனர்.
"அனுவின் ஆளிற்கு ஓகே என்றால்..."
அவள் என்னை எதிர்பார்ப்புடன் நோக்கினாள். டிரஸ்ஸில் ஒரு சுற்று சுற்றினாள். அதுவும் அழகாக குடை மாதிரி விரிந்து அவளுடன் சேர்ந்து சுற்றியது. நானும் அதனுடன் சேர்ந்து அவளை சுற்றினேன்.
"பிடித்திருக்கிறதா?"
அவள் அருகில் சென்று அந்த துப்பட்டாவை அவளின் தலையில் இருந்து எடுத்து அவளின் தோளின் மேல் ஏதோ எனக்கு தெரிந்த விதம் போர்த்தினேன். மௌனமாக என்னை பார்த்தாள்.
"எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது." என்று ஒரு மெல்லிய குரலில் என்னிடம் சொன்னாள். மெதுவாக அந்த துப்பட்டாவின் அடுத்த முனையை எடுத்து என் தோளின் மேல் உளர்த்தினாள், சிரித்தாள்.
பிடித்திருந்ததால் அந்த டிரஸ்ஸை கடைசி முறையாக பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது! ஓர் உடையின் அழகு என்பது அணிபவர்களை பொறுத்ததுதான். எனக்கும் அது பிடித்திருந்தது. அவளின் தோழியின் அக்காவின் கல்யாண ரிசப்ஷன் ஃபோட்டோவில்தான் அடுத்து பார்த்தேன் அந்த உடையை.
"நீங்க என்ன வேலை பண்றீங்க?" என்று அவள் என்னை முதல் முதலில் பார்த்து பேசியபொழுது கேட்டது, கேட்ட விதம், எல்லாம் அப்படியே என் மனதில் வாடகை கொடுக்காமல் தங்கிக்கொண்டிருக்கின்றது. ஒரு சீ. ஏ. டீ. வகுப்பிற்கு இருவரும் லேட்டாக சென்ற பஸ்ஸில் சந்தித்தோம். பிரோஃபசர் அட்டெண்டன்ஸ் எடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள். அதனால் நாம் இருவரும் காலேஜுக்கு வெளியே இருந்த டீ கடைக்கு சென்றோம்.
"அனிமேஷன் படம் எடுக்க போரியா? அதுல ஸ்கோப் இருக்குதா?" சிரித்தாள். ஒரு தனி முடியை எடுத்து தன் காதிற்கு பின்னால் சொருகினாள். "என்னை வரைவாயா? உன் அனிமேஷன் படத்தில் எனக்கு நடிக்க சான்ஸ் கிடைக்குமா?" என்று நகைத்தாள்.
பதிலிற்கு நானும் சிரித்தேன். மௌனமாக ஒருவரின் ஒருவர் புண்ணகைகளை பார்த்துக்கொண்டே டீ குடித்தோம். சுமாராகத்தான் இருந்தது. அந்த டீ கடைகாரரை பார்த்தேன். அவர் லாவகமாக ஆத்திக்கொண்டு இருந்தார். ஒரு சொட்டு விழவில்லை. இவ்வளவு திறமை உள்ளவரின் டீ ஏன் எனக்கு பிடிபடவில்லை என்று தெரியவில்லை.
"டீ நல்லா இருக்கு இல்லை?" விரும்பிக்குடித்தாள். "அப்பப்ப இங்கே வரனும்!"
என் அடுத்த மடக்கில் அந்த டீ நன்றாகத்தான் இருந்தது.
"அனு அக்காவின் புருஷனா நீ?"
அவளின் வீட்டு வாசலில் நின்று காத்துக்கொண்டிருந்தபோழுது இரு சிறுமியர்கள் என்னை நோக்கினர். விளை உயர்ந்த ஃப்ராக் அணிந்திருந்தார்கள். தீபாவளிக்கு வாங்கினது, அப்புறம் இன்றைக்குத்தான் வெளி உலகத்தை பார்க்கின்றன போல்.
"சரிதான். அனு அக்காவின் புருஷன் இல்லையா. காதலன்தானா?"
சிவப்பு ஃப்ராக் தன் பச்சை ஃப்ராக் தோழியிடம் திரும்பினாள்.
"அக்காவின் ராசிக்கு இதெல்லாம் பத்தாது. வாடி, பக்கத்து வீட்டு ராமுவை கூட்டிண்டு பொம்மை கடைக்கு போகலாம்."
நான் முறைத்தேன். காதலிப்பவர்கள் அனைவருக்கும் ராசி சரியாக இயங்காதுதான். அதென்ன அவளின் ராசிக்கு நான் பத்தமாட்டேன் என்று சொல்கிறது இது? திரும்ப அழைத்தேன் அதை. என் முறைப்பை கண்டு சிரித்தாள்.
"கோவமா? அண்ணா, சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. அனு அக்காவோட குடும்பத்துல யாருக்கும் உன்னை பிடிக்காது. அதுவும் நியாயம்தானே? எவனுக்கு உன்னை மாதிரி ஊமை மாப்பிளை வேணும்?"
என் மனதில் அடித்த முதல் அம்பு.
"இதில் நீ உருப்படியாக ஏதாவது செய்தால் கூட பரவாயில்லை... டிராயிங் போடறே? சினிமா எடுக்கரே?"
இரண்டாவது அம்பு.
"இதெல்லாம் அவங்க உன் மூஞ்சிக்கு நேரா சொல்லிவிட மாட்டாங்க. இன்னிக்கி வீட்டுக்கெல்லம் கூப்பிட்டு, டீ கொடுத்து, ஆசை காட்டிட்டு, நாளைக்கே அக்காவை அவ மாமனுக்கோ மச்சினனுக்கோ திடுதிப்னு கட்டி வெச்சிடுவாங்க. நீ இங்கே வந்து விசாரிக்கும் பொழுது..." சிரித்தாள். "அக்கா இங்கே இருக்க மாட்டா."
மூன்றாவது அம்பு. நான்காவதாக ஒரு போனஸ் அம்பும் லேசாக மனதை சொறாண்டி விட்டு சென்றது. இதையெல்லாம் என்னவளின் பக்கத்து வீட்டு பாப்பாவிடம்தான் நான் தெரிந்துகொள்ள வேண்டுமா?
"வாடி போகலாம். ராமு காத்துண்டு இருப்பான்."
நன்றாக என் உள்ளத்தில் ஒரு போரை துவக்கி விட்டு, அவள் விளையாட சென்று விட்டாள். திண்ணையில் தொல்வியுடன் உட்கார்ந்து கொண்டேன். பொருளில் குற்றம் இல்லை என்றால் மனது இவ்வளவு புலம்புமா?
"இங்கே என்ன உட்கார்ந்துவிட்டாய்? உள்ளே வா."
மேலே பார்த்தேன். வேலையிலிருந்து வந்திருந்தாள். கழுத்தில் ஐ.டீ. பேட்ஜ் தொங்கியது. புன்முறுவலுடன் சேர்ந்து மதியம் சாப்பிட்ட புளியோதரையும் என்னை பார்த்து சிரித்தது. சுட்டி காட்டினேன். சிரித்து, துடைத்துகொண்டாள்.
"இப்பொழுதுதான் லஞ்ச் சாப்பிட்டேன். டே முழுக்க டைம் இல்லை! ஒரே வேலை!" என்னை உள்ளே அழைத்தாள். என் சப்பலை அவளுடைய சப்பலின் பக்கத்தில் அழகாக வைத்துவிட்டு அவளைப் பின் தொடர்ந்தேன். பெருமூச்சு விட்டாள்.
"சீக்கிரம் உன் படத்துல எனக்கு சான்ஸ் கொடு. ஐ காண்ட் வெயிட் டூ எஸ்கேப் ஃப்ரம் மை போரிங் சாப்ட்வேர் ஜாப்." ஐ. டீ. பேட்ஜ் கழற்றி என் கையில் செலுத்தினாள். நான் அதை பொக்கிஷம் போல் தாங்கிக்கொன்டே அவளின் பின் தொடர்ந்தேன்.
"நான் கண்டிப்பா நல்லா பேசுவேன், என்ன. மிமிக்ரி எல்லாம் வராது, ஆனால் நன்றாக பேச வரும். பிராமிஸ்!"
அவளின் சத்தியத்திற்கு நான் சிரித்தேன். எதிரில் அவளின் அண்ணி வந்தாள், அண்ணனுடன். என்னை பார்த்து முறைத்தார்கள்.
"யாரடி இவன். தினமும் வந்து இங்கே கொட்டிக்கரான்."
"பாவம் அனு. இவனிடம் என்ன பார்க்கிறாளோ?"
இது எனக்கு சகஜம்தான். அந்த பிங்க் ஃப்ராக் பெண் சொன்னது எல்லாம் கசப்பு உண்மை. ஆனாலும் எனக்கு எதில் பெரிய குழப்பம் என்றால் இவளுக்கு முன்னாடியே இப்படி பேசுகிறார்களே, ஏன் அவள் என்பொருட்டு ஒன்றும் சொல்லவில்லை? குடும்பத்தினர் மீதுள்ள மரியாதையா, பயமா? இல்லை... என்னை முழுமையாக காதலிக்கவில்லையா? அவர்கள் சொல்வது உண்மைதானே என்று நினைக்கிறாளா?
என்னை லிவிங் ரூம் சோஃபாவில் உட்கார சொன்னாள். ஒரு கண்ணடித்து விட்டு உள்ளே சென்றாள். இவளுக்காக, இவளின் முறுவல்களுக்கும் கண்களுக்கும் சேஷ்ட்டைகளுக்கும் நான் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பொறுமையாக கிடப்பேன், எத்தனை பெயரின் திட்டையும் அசடைப்போல் வாங்கிக்கொள்வேன்.
"இந்தாப்பா, டீ குடி."
மாமா (அவளின் தந்தை) வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தார். என்னை நன்றாகப் பார்த்து வாய் திறந்து சிரித்தார். அந்த பெண் சொன்னது மனதில் ஒளித்தது. இவருக்கு என்னை பிடிக்காமல்தான் இப்படி செய்கிறாரா? குற்ற உணர்ச்சியாக இருக்கும். ஒரு வாயில்லாத ஜீவனை ஏமாற்றப்போகிரோம் என்பதில்.
அவர் எனக்காக மேசையில் வைத்த டீ டம்ளரை எடுத்தேன். தூக்கி குடித்தேன். நல்ல இஞ்சி சுவை, தொண்டை சுட்டுப்போயிற்று. ஏற்கனவே பாலைவனம் போல் காய்ந்து கிடக்கும் என் உபயோகமற்ற தொண்டைக்குள் எவனோ தீயை மூட்டி அணைக்காமல் சென்றது போல தெரிந்தது. இருமினேன்.
"சூப்பியே குடி. பரவாயில்லை. நீ எங்கள் வீட்டில் ஒருவனாக போகிறாய்."
இன்னமும் இருமிநேன். இது என்ன விநோதமான வார்த்தைகள்? என்னை பார்த்தா சொல்கிறார்?
"அனுவும் நீயும் நல்ல ஜோடி. தெய்வமாக சேர்த்து வைத்தது. நான் முயன்றிருந்தால் கூட இவ்வளவு நல்ல ஜோடியை தேர்ந்தெடுத்திருக்கமாட்டேன்!" கை கூப்பி மேலே பார்த்தார். "முருகன் கிருபை."
சூப்பிக்கொண்டே குடித்தேன்.
"உன்னால் எனக்கு ஒரு பெரிய கஷ்டம் தீர்ந்து விட்டது டா. நன்றி தம்பி."
மறுபடியும் இருமினேன். அவர் சொன்ன வார்த்தைகள் முழுசாக நம்ப முடியவில்லை. என்னை தம்பி என்று அழைக்கிறார்? ஏதோ கஷ்டமாம்? தங்க விக்ரஹம் போல் ஒரு பெண்ணை பெற்றுவிட்டு இப்படியெல்லாம் பேசுகிறார்? விளங்கவில்லையே...
அவள் வந்தாள். டிரஸ் மாற்றியிருந்தாள். என்னருகில் வந்து உட்கார்ந்தாள். அவள் முட்டியும் என் முட்டியும் அபாகஸ் போல் இடித்து இடித்து விலகின. நன்றாக இருந்தது. அவள் என் காளி டம்ளரை எட்டி பார்த்தாள்.
"டீ நல்லா இருந்ததா?"
தலையசைத்தேன், ஆமாம் என்று.
"நான்தான் செய்தேன்."
பெருமையாக சிரித்தாள். எனக்கு அந்த சிரிப்பு அவளின் இஞ்சி டீயை விட அதிகமாக பிடித்திருந்தது. மாமா எங்கள் இருவரையும் ஒரு மெல்லிய புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார். அவரின் டீயை சூப்பி குடித்து முடித்து டம்ளரை மேசையில் வைத்தார். அவரின் மகளை பார்த்தார். அவள் என்னுடன் மறுபடியும் முட்டி விளையாட்டு தொடங்கினாள். டம்ளரை எடுத்து மீண்டும் மேசையில் வைத்தார். அவள் அவரை நோக்கினாள்.
நான் சற்றும் எதிர்பாராத ஒரு காரியத்தை செய்தார்.
"இவன் அப்பா அம்மாவை கூப்பிடு. கல்யாண பேச்சை துவங்கிவிடலாம்." என்று வாய் வார்த்தைகளால் அல்ல, செய்கைகளால் தெரிவித்தார்.
நான் செய்கை பாஷையை சிறு வயதிலேயே கற்று கொண்டிருக்கிறேன். அவளிடம் அவ்வளவாக பயன்படுத்தியதில்லை. ஒன்று, அவளுக்கு தெரியாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இரண்டு, என்னிடம் இருந்து என்ன விஷயம் வேண்டுமோ ஒற்றைப் பதில் கேள்விகளாள் பெற்றுக்கொள்ளும் சாமர்த்தியம் அவளுக்கு உண்டு. ஆக மொத்தத்தில், அவளுக்கு பேச பிடிக்கும், எனக்கு அவளின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்க பிடிக்கும்.
"அப்பா என்ன சொல்கிறார், புரிகிறதா?"
இப்பொழுது அவர் செய்கைகளால் சொன்னது புரிந்தது. ஏன் அப்படி சொன்னார் என்றுதான் புரியவில்லை! இல்லையில்லை. எதோ மெதுவாக விலங்கிக்கொண்டுதான் இருந்தது.
கல்யாண மேளம் சத்தம் என் காதுகளில் மங்களகரமாக முழங்க, அவள் காதுகளிலும் விழுகிறதா என்ற சந்தேகத்துடன் அவளின் கழுத்தில் தாளியை கட்டினேன். நெருப்பிலிருந்து வந்த புகை வழியாக அவளுடைய சிறிய புன்னகையை பார்த்தேன். எதையோ சாதித்து பெருமை கொள்கிறாள் போல தெரிந்தது. நானும் வாய் நிறைய சிரித்தேன். 'அடி கில்லாடி! இப்படி ஒரு மாய வளையை நான் பார்த்ததே இல்லையே, பலே!' என்று நினைத்து, புகை வழியாக அவளின் கண்ணத்தில் ஒன்று கொடுத்தேன். வெட்கம் இல்லாமல் எனக்கும் திரும்பிக் கொடுத்தாள். நாள் முழுவதும் அப்பொழுது மேடையில் மலர்ந்த என் புன்னகை என்னை விட்டு விலகவில்லை.
"பால் நல்லா இருக்குதா?"
கொஞ்சம் சக்கரை, தண்ணீர் ஜாஸ்தி. சரியாக இல்லைதான், ஆனாலும் அவள் கொண்டுவந்து அவள் கைகளினால் கொடுத்திருக்கிறாள்.
"ஓகேயா?! என் அண்ணி அதில் பாதிக்கு மேல் தண்ணி கலக்கி கொடுத்ததை என் கண்களால் பார்த்தேன். நானே கலக்கி கொடுக்க முயன்றால் கிச்சனை விட்டு துரத்திவிட்டாள்! அம்மாவும் துணையாக என்னை விரட்டினாள், இந்த டம்ளருடன். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹும்."
பாலை பற்றிய என் ஐயம் தவறில்லை.
"என் அப்பாவை தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் உன்னைக் கண்டாலே பிடிக்கவில்லை போலத் தெரிகிறது."
இப்பொழுதுதான் கண்டுபிடிக்கிறாளா? அவளின் அடுத்த வார்தைகளில்தான் என் வாழ்க்கையே அடங்கி உள்ளது என்று உற்று கவனித்தேன்.
"அவர்களுக்கு உன் அருமை புரியவில்லை. நீ கவலைப்படாதே."
மூச்சு நிறைவுடன் வெளியே வந்தது. கவலையே இல்லை. பெரிதாக சிரித்தேன். என் மார்பில் தலையை வைத்து சிறிது நேரம் என் இதயத்துடிப்பை கேட்டாள். இல்லையில்லை, உணர்ந்தாள்.
"கல்யாணத்திற்கு பிறகு நீ ஒன்றும் அவர்களுடன் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ள வேண்டாம். நான்தான் உன்னோடு இருக்கப்போகிறேனே."
அவளின் ஆசை மொழிகளில் மயங்கிக்கிடந்தேன். மௌன பதிலாக அவளின் முகத்தில் விழுந்த ஒரு முடியை எடுத்து அவளின் காதிற்கு பின்னால் சொருகினேன். அங்கே எதோ ஒரு பிளாஸ்டிக் பொருள் விரல்களில் பட்டது. நிச்சயமாக கம்மல் இல்லை.
என் கையை பற்றி பிடித்தாள், சிரித்தாள்.
"நீ மட்டும் எனக்கு போதும். நீ என்னுடைய ஆள். என்னவன்!"
Comments
Post a Comment