சந்துரு; எழுத்தாளர் எக்ஸ்டிரா ஓர்டினேர்

"சரிதான். சந்துரு என்றால் ஒருவன் என்று நினைத்து நம் பரிசை வேறு எவனிடமோ கொடுத்து விட்டார்கள்!"
சந்தியா துருவனைத் திரும்பி பார்த்தாள். அவளின் குல தெய்வம் திருவனந்தபுரம் அனந்தபத்மனாபனை போல் படுத்துக்கொண்டு இருந்தான். போட்டியில் கலந்த அனைவருக்கும் வந்த அந்த அறிவிக்கையை வேடிக்கையுடன் ஃபோனை பார்த்து படித்தான். 
"சந்துருவி்ற்கு வெற்றிதான், ஆனால் நம் இருவருக்கும் தோல்வி." முகத்தை சுறுக்கினான். "நாம் எழுதிய கதை போட்டியில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஆனால் புகழ் எல்லாம் எவனோ தெலங்கானாவில் இருக்கும் பினபல்லே கிராமத்தின் சின்னாவீதி சந்திரசேகரிடம்!"
சந்தியா அவனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். தன் பெயர்களிலிருந்த முதல் இரண்டு எழுத்துகளை எடுத்து புனைப்பெயர் உருவாக்கி சிறுகதை எழுதும் இந்த தம்பதிக்கு இந்த பரிசு பறிபோன விஷயம் கொஞ்சம் அவநம்பிக்கையாகவே இருந்தது.
சந்தியா தலை அசைத்தாள்.
"நம் பரிசை திரும்பி வாங்கிக்கொள்ள வேண்டும்." 
துருவன் தன் இரண்டு வருட காதலியை பார்த்தான். அந்த இரண்டு வருடங்களில் இருவரிடையில் பெரிதான வித்தியாசமில்லை. டிகிரி வாங்கி விட்டார்கள். அவர்களின் கிராட்யுவேஷன் தொப்பியை மேலே தூக்கிப்போட்டு குதித்து, சந்தியாவின் தங்கை ஃபோட்டோ எடுக்க, லென்ஸை பார்த்து வாய் விட்டு சிரித்த புகைப்படத்தைத்தான் அவர்களின் ஃபோன் வால்பேப்பராக வைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த ஃபோட்டோவில் இருவருக்கும் ரெட்-ஐ.
பின்னால் ஏதோ ஒரு பெரிய வண்டி உருமும் சத்தம் கேட்டது. ஶ்ரீஹரிகோட்டாவில் எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கும். சந்தியா பின்னால் சாய்ந்தாள். கண்களை மூடிக்கொண்டாள். 
துருவன் அவளைப் பார்த்து முறைத்தான்.
"எப்படி வாங்கிக்கொள்வது? கேஸ் போட சொல்றியா?" 
கண்களை மூடியபடி தலையசைத்தாள்.
"திருடிவிடலாம்."
"வாட்?!"
"நிஜமாக பார்த்தால் அது திருட்டாக இருக்காது. நமக்கு சேர வேண்டியது சேர்ந்துவிடும் வழியாக இருக்கும்." 
"நீ சொல்வது சரிதான்... ஆனாலும்..."
அவன் இழுத்ததை கேட்டு முறைத்தாள். கண் திறந்து அவனை பார்த்தாள். அவனின் கண்கள் ஜொலித்தன. அந்த ஜொலிப்பை கவனித்தவுடன் சிரித்துக்கொண்டே திரும்பவும் கண் மூடிக்கொண்டாள்.
"எனக்கு உன்னை பற்றி தெரியாது? நம்மை போன்ற எழுத்தாளர்களுக்கு, இது ஒரு சாஹசம். பினபல்லே கிராமத்தில் இருக்கும் சின்னாவீதியை கண்டுபிடித்து, அங்கே வசிக்கும் சந்திரசேகர் மூஞ்சியில் ஒரு குத்து குத்திவிட்டு நம் பரிசை திரும்பிக்கொண்டு வரவேண்டாமா?"
"கொஞ்சம் வையலென்ட்... பட் ஓகே." அவள் பக்கத்தில் சாய்ந்து அவளையே உற்று பார்த்தான். "நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சின்ன விஷயமும் நமக்கு தீனிதான். இந்த சாஹசத்தால் எவ்வுளவு வரும்?" 
அவள் மறுபடியும் கண் திறந்து அவனை பார்த்தாள். குழப்பத்திலும் வேதனையிலும் கடித்த உதடுகள், இப்பொழுது ஒரு வித பரவசத்துடன் துடித்தன. அந்த உதடுகளை லேசாக வருடினாள். மெதுவாக சிரித்தான்.
"பினபல்லே சின்னாவீதி இஸ் நாட் ரெடி ஃபார் அஸ்."

கோதாவரி ஆற்றங்கரையில் மதியம் மூன்று மணிக்கு இத்தனை கூட்டம் இருக்கும் என்று சண்டி எதிர்பார்க்கவில்லை. நிறைய தூரம் அப்படியே ஆற்றங்கரை ஓரமாக நடந்துகொண்டே சென்றான். கால்கள் போன திசையில் அவனுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை. 
சண்டி தன் அம்மா முறை மாமனின் கிளினிக்கில் முழு நாளும் வேலை செய்து விட்டு, நடுவில் பிரேக் கிடைக்கும் பொழுது கோதாவரியிடம் சரன் புகுவான். வழக்கமாக ஒரு அழகான வெண்ணிற புத்தகத்தை கொண்டு வருவான், அதில் அவனின் நினைப்புகளை சேகரிக்க. ஆனால் இன்றைக்கு அந்த புத்தகம் இல்லை, வெறும் கையுடன் வந்திருந்தான், கைகளோ பாக்கெட்டில் வசதியாக உட்கார்ந்தனர். அவன் நினைப்புகள் எழுத்து வடிவில் கொண்டுவராத விதம், ஒரு சின்ன முறைப்பு அவனின் புருவங்களை கிள்ளியது. அலையலையாக பாயும் எண்ணங்கள்!
மெதுவாக கரை பக்கத்தில் சென்றான். டிரவுஸர்ஸ் ஈரமானதை கண்டுக்கவில்லை. அப்படியே நடந்தான். பெருமூச்சு விட்டு, நிம்மதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து, ஒரு சின்ன பாறை மேல் சாய்ந்துகொண்டான். முட்டியை கட்டிக்கொண்டு மெதுவாக தன்னை சுற்றி நடந்து கொண்டிருந்ததை பார்த்தான். கோதாவரி கண்களை அழைத்தது என்று மறுபடியும் அந்த ஆற்றின் அலைகளை கண் கொள்ளாமல் பார்த்தான்.
ஒரு பந்து தன் பக்கத்தில் "நானும் பார்க்கிறேன்" என்பது போல் மெல்ல உருண்டு வந்தது. சண்டி பின்னால் நோக்கினான். 
"டேய்! ஏண்டா அவ்வளவு வேகமாக அடிச்ச? இப்ப எங்க போச்சு பாரு!"
"அதுக்கென்ன இவ்வளவு அலட்டிக்கரே? அந்த அண்ணையா பக்கத்துலதான் இருக்கு. அவரை பாஸ் பண்ண சொல்லு, ஈஸி." 
"டேய்! எனக்கு இப்ப பேட்டிங் டர்ன்னு தெரிஞ்சுதான் நீ இப்படியெல்லாம் பண்ணரே, இல்லை?"
"நீ ஒழுங்கா விளையாடி என்னை அவுட் ஆக்கினா என்ன? நான் எதிர்க்கப்போறேனா? நியாயமா விளையாடு, சூடு!"
அந்த பையன் அவனின் நண்பனை கேலி செய்யும் விதமாக பேட்டை ஆட்டினான். அந்த இன்னொரு பையன் கோபத்துடன் எகிறி குதிச்சான். சண்டி கண் இமைப்பதற்குள் அவர்கள் மணலில் புரண்டுகொண்டிருந்தார்கள். அந்த கிரிக்கெட் டீமில் இருந்த மற்றவர்கள் சுற்றி வெருமென பார்த்தார்கள். 
சண்டி தலையசைத்தான். வெறுப்புடன் எழுந்து, அந்த பந்தை கீழிருந்து பிடுங்கி அவர்களின் சண்டை நடந்துகொண்டிருந்த இடத்திற்கு விறு விறு என்று நடந்தான். மற்ற குழந்தைகள் அவனின் ஆவேசத்தை கண்டு தானாகவே வழி விட்டனர்.
"ஆப்பு! ஆப்பு மீ இத்தரு!" 
அந்த சிறுவர்களை சிரமப்பட்டு பிரித்தான் எப்படியோ. அந்த இரண்டும் அவனை பயந்து விரிந்த கண்களால் பார்த்தன. 
"நீங்கள் இருவரும் நண்பர்கள்தானே?"
"ஆ... ஆமாம்?"
"நண்பர்கள் எல்லாம் இப்படி சண்டை போடுவார்களா? என்ன நினைத்து கொண்டு நீங்கள் ஒருவரிடம் ஒருவர் கை நீட்டுகிரீர்கள்?"
மௌனமாக பார்த்தனர். சண்டி மூச்சு வாங்கிக்கொண்டான். திரும்பினான். 
"இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமான சண்டைகளில் நான் மறுபடியும் உங்களை பார்த்தேன்... இந்த உலகத்தில் யாரும் உங்களுக்கு நண்பர்களாக இருக்க முடியாதபடி ஆக்கிவிடுவேன், ஜாக்கிரதை."
எப்படி ஆக்கிவிடுவானோ, அவனுக்கு தெரியாது. ஆனால் அந்த எச்சரிக்கை வேலை செய்தது. திரும்பி பார்க்காமல் நடந்தான். மௌனமாக இருந்த சிறுவர்கள் கூடிய சீக்கிரத்தில் பந்து தூக்கிப்போடுவதும் அடிப்பதும் இசையாக சண்டியின் காதுகளில் விழுந்தது. பெருமூச்சு விட்டான்.
"எங்கே பார்த்தாலும் தோழர்கள் சண்டை பொட்டுக்கொண்டிருக்கிரார்கள்."
தரையில் உட்கார்ந்து தன் ஃபோனை வெளியே எடுத்து பார்த்தான். அதில் ஒரு ஈமெயில் (ஏற்கனவே படித்தது) திறந்தான். 
"வாழ்த்துக்கள் சின்னாவீதி சந்திரசேகர்! உங்களின் சிறுகதை 'நாங்களும் வீரர்கள்' இந்த வருட சிறப்பு போட்டியில் வெற்றி பெற்று, தங்கள் பதிவு செய்திருந்த 'சந்துரு' என்கிற புனைப்பெயரில் வெளியீடு ஆகி உள்ளது. 
உங்களின் முதலிடம் பரிசான ஒரு லட்ச ரூபாயை பெற சென்னையில் இருக்கும் எங்களின் தலைமைச் செயலகத்திற்கு அழைப்பு கொடுக்கிறோம். தங்களால் வரமுடியாத பட்சத்தில் இரண்டு வாரம் தவிர்த்து நீங்கள் குறித்த விலாசத்திற்கு அனுப்பிவிடுவோம்.
எங்களின் போட்டியில் கலந்ததற்கு மிக்க நன்றி. தங்களை சந்திக்க விருப்பத்துடன் காத்துக்கொண்டிருக்கும்..."
சண்டி அந்த ஈமெயிலை குப்பையில் போட்டான். திரும்பத் திறந்துவிட்டு சென்னையில் இருந்த அந்த இதழின் அலுவுலகத்தை குறித்து கூகிள் மாப்ஸில் தேடினான், கண்டுபிடித்தான். 
"அவன் எனக்கு செய்த துரோகத்தை இப்படித்தான் தீர்த்துக்கொள்ள முடியும்."
திரும்பிப்பார்த்தான். அந்த குழந்தைகள் சண்டை போடாமல் விளையாடிக்கொண்டிருந்தன. அப்பப்ப ஒரு வித பயத்துடன் அவனை பார்த்தார்கள், அவனும் அவர்களை பார்த்து மெல்ல சிரித்தான். கீழே படுத்துக்கொண்டான். வானத்தை பார்த்து கையால் ஒரு துப்பாக்கியை செய்தான். 
"துருவா, யூ ஆர் நாட் ரெடி ஃபார் மீ!"
சட்! என்று அந்த துப்பாக்கியை சுட்டான்.

பினபல்லேவை நெருங்கிக்கொண்டிருந்தது அந்த சிறிய டாட்டா நானோ கார். சந்தியா ஜன்னலை கீழே இறக்கி அதில் கையை வைத்து வெளியே கடந்து போன மரங்களையும், மரங்களின் நிழல்களில் தங்கிக்கொண்டிருந்த கடைகளையும், கடைகளில் வசிக்கும் மனிதர்களையும், மனிதர்கள் பக்கத்தில் உலாவும் பிராணிகளையும் வேடிக்கை பார்த்தாள். துருவன் அவளைப் பார்த்து சிரித்தான். 
"டிட் யூ நோ ஐ கிரூ அப் ஹியர் இன் பத்திராசளம்?"
பெருமூச்சு விட்டாள்.
"உன் சிறுவயது கதைகள் தொகுப்பின் முதல் எடிட்டர் நான்தான் என்பதை மறந்து விட்டாயா?"
வெட்கத்துடன் சிரித்தான். இப்பொழுது அந்த புத்தகத்தின் பெயர் "கோதாவரி கோங்குரா". தெலுங்குகாரன் ஆன அவனுக்கு  பிடித்த டைட்டீல், கோங்குரா என்றால் என்னவென்று தெரியாத மாவடுப்ரியைக்கு அகப்படாத டைட்டீல். கதைகள் பிரதானமாக தமிழில்தான் இருந்தன, அங்கங்கே தெளித்தது தெலுங்கு. 
"நிஜ வாழ்கையில் நடக்கும் சம்பவங்களை கிலாமறைஸ் செய்து காட்டுவதில்தானே ஒரு எழுத்தாளரின் திறமை அடங்கி உள்ளது." அவளை பார்த்து கண் அடித்தான். "என் திறமை எப்படி?"
"ஹுஊம்... முதலில், ரோட்டை பார்த்து ஓட்டுவதில் திறமை காட்டு. அப்புறம் எழுத்து திறமை பற்றி விவாதம் செய்யலாம்." 
அவன் பெருமூச்சு விட்டு விரக்தியுடன் பதில் அளித்தான்.
"என் அருமை யாருக்கும் புறியாதடி, புரியவே புரியாது. தெரியவும் தெரியாது. ட்ச!"
சந்தியா அவனின் புலம்பலை காதுகளில் வாங்கிக்கொள்ளவில்லை. வெளியே அழகான நீல தரை போல் ஜொலித்துக்கொண்டிருந்த கோதாவரி நதி, அவளின் கண்களை கிள்ளியது. அவள் உற்று பார்ப்பதை துருவன் கவனித்தான்.
"ஒரு தடவை நான் இங்கே என் அம்மாவிடம் சொல்லாமல் தோழர்களுடன் குளிக்க வந்தேன். என்னை எப்படியோ கண்டுபிடித்துவிட்டு தர-தர என்று வீட்டிற்கு அழைத்துச்சென்று, ரெண்டு சாற்று சாற்றிவிட்டு அதே கைகளால் இறவு தயிர்சாதமும் கோங்குராவும் ஊட்டிவிட்டு, "நா பங்காரம் கதா, இனிமேல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது" என்று டோட்டல் பான் போட்டுவிட்டாள். அந்த பயத்தில் இன்றைக்கு வரைக்கும் கோதாவரி கிட்ட நான் சென்றதில்லை, தெரியுமா உனக்கு?"
சந்தியா புருவங்களை உயர்த்தினாள்.
"ஐ கிரு அப் இன் சென்னை. கூவத்தில் குளிக்க நினைத்தால் கூட நீ கிலோஸ் கேஸ்தான்." அவளின் நகைச்சுவைக்கு அவளே சிரித்தாள்.
அவனின் சிறுவயது பரிதாபக் கதையை கேட்டு ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டாள் என்று துருவனுக்கு கொஞ்சம் உறுத்தியது. மௌனமாக காரை செலுத்தினான். 
"டேய், யுவர் மதர் இஸ் நோ மோர், கரெக்ட்?"
"ட்ச! இப்படியாடி கேட்பது? எவ்வளவு கேஷுவலாக சொல்லிவிட்டாய்?"
"சாரி டா, பட் லூக். உண்மைதானே?"
"ம்ம்..."
"ஐம் ரியலி சாரி. ஆனா இப்போ பாரேன்." அவள் நதியை காண்பித்தாள். "வா. நீச்சல் அடிக்கலாம். அப்புறம் நான் உன்னை திட்டாமல் அடிக்காமலேயே மோர்சாதமும் கோங்குராவும் ஊட்டிவிடுகிரேன்."
துருவன் வாய் விட்டு சிரித்தான். தன் கதையை அவள் காது கொடுத்து கேட்டதற்கான அறிகுறியை தெரிவித்துவிட்டாள். டக்கென்று ஒரு ரைட் எடுத்து, கோதாவரி கரைக்கு சென்றது அந்த நானோ கார்.

மாலை நேரத்தில் சூரியன் கீழே நழுவிக்கொண்டிருந்ததை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான் சண்டி. கோதாவரி கரை பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தபடியால் கால்களில் அவ்வப்பொழுது தண்ணீர் மிதந்தது. அந்த சில் படும் நேரம் கால்களை பின்னால் கொண்டுவருவான், அலை பின் செல்வதோடு கால்களை முன் வைப்பான். தன் கால்களின் தானியங்கி நாட்டியத்தால் மணலில் ஏதோ கிரந்த லிபி எழுத்துக்கள் தோன்றின. ஆனால் அதெல்லாம் அவனுக்கு அந்த நேரத்தில் முக்கியமாக இல்லை. 
நல்ல ஒரு காற்று அடித்தது. அவனின் கை பாக்கெட்டில் இருக்கும் ஒரு விஷயத்தை கெட்டியாக பிடித்தது. காற்று அடங்கியதும் வெளியே எடுத்து பார்த்தான். அன்று இரவு 7 மணிக்கான பத்திராசளம் டு சென்னை டிரெயின் டிக்கெட். கை கடிகாரத்தை நோக்கினான். மணிக்கட்டு காலியாக இருந்தது. பெருமூச்சு விட்டு கூடிய சீக்கிரத்தில் ஒரு வாட்ச் வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற சங்கல்பம் போட்டான். நேரம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பத்திராசளம் தன் வீட்டிலிருந்து பத்து நிமிடங்கள்தான். பெட்டி படுக்கைகளை கையோடு கவ்வி, அம்மாவிற்கு டாட்டா காட்டி, அப்பாவின் அறிவுரைகளை "அலாகே நான்னா, அலாகே நான்னா" என்று சொல்லி ஆமொதித்துவிட்டு கிளம்பினால் கூட நேரம் செரியாக இருக்கும். 
யோசனையில் வளைத்த புருவங்களை "வதலு பாபு" என்ற மனதின் நம்பிக்கை வார்த்தைகளால் நேராகின. மெதுவாக பின்னால் சாய்ந்து மறுபடியும் தானாக வளைந்த புறுவங்களோடு கண்களை மூடிக்கொண்டான். அப்பொழுது என்று ஒரு இறைச்சல்!

"ரேஸ் யூ டு தி வாட்டர்!"
துருவன் காரை பார்க் கியரில் வைப்பதற்கு முன்னாலேயே அவள் கதவைத் திறந்து ஓடி விட்டாள். பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். துருவன் மறுபடியும் காதலித்துவிட்டான்.
"சந்தியா! நோ ஃபேர்!"
அவள் திரும்பிப் பார்த்தாள். மணல் என்றால் என்னவென்றே தெரியாதபடி தத்தித் தத்தி நடந்து வந்தவனை பார்த்ததில் அவர்களின் முதல் சந்திப்பின் பொழுது எழுந்த (சந்தோஷ) பட்டாம்பூச்சிகள் மறுபடியும் தோன்றின. பல் வரிசை முழுவதும் தெரியும் அளவு சிரித்து விட்டு நதிக்குள் செல்வதற்கு பிரயத்தனமாக அவளுடைய கேப்ரி பேண்ட்ஸை உயர்த்திக் கொண்டாள். 
"சந்தியா!! ஒழுங்காக ரேஸ் நடத்தனும்! இது நியாயமா?!" என்று பின்புறத்திலிருந்து அவள் எதிர்பாராத விதம் அனைத்துக் கொண்டான். அவள் சிரித்து தலையசைத்துக் கொண்டே அவனிடம் விளக முயன்றாள். நடுவில் அடக்க முடியாத சிரிப்புடன் சொன்னாள்.
"ட்சீ, மிருகம்டா நீ! மான்ஸ்டர்!"
"ஆ, ஐம் யுவர் மான்ஸ்டர்." என்று அவளின் கண்ணத்தில் டப்பென்று ஒரு முத்தம் இட்டான். 
"நாம் வந்த வேலை என்னது, நீ செய்துக்கொண்டிருப்பது என்னது?"
"ஏய், டோண்ட் பிலேம் மீ. நா பாட்டுக்கு சரியான ரூட்டில் ஓட்டிக்கொண்டிருந்தேன். நீ தான் 'உன் அம்மா போய்ட்டாள் இல்லை, வா சுவிம்மிங் போகலாம்' அப்படி சொல்லி இங்கே கூட்டின்டு வந்துட்டே!"
அவள் அவனிடம் விட்டு எகிறி குதிச்சு நீரிற்குள் சென்றாள். கோதாவரி அவளின் கால்களை உறசியதில் "ஹீ, ஹீ!" என்று அழகாக சிரித்து தண்ணீரை உதைத்து விளையாடினாள். துருவன் மணலில் நின்று ஒரு மெல்லிய புன்னகையுடன் பார்த்தான். சந்தோஷத்துடன் ஒரு பெருமூச்சு விட்டான்.
"இன்னும் இரண்டு மாதங்களில் இவள் என்னவள்!" என்ற திடீர் குதூகலத்துடன் அவளின் பக்கவாட்டிற்கு சென்று அவளின் கையை பற்றினான். அவள் அவன் கண்களையும் பார்த்தாள், அப்புறம் பின்னாடி ஒரு உருவம் அவர்களையே உற்று பார்த்துக்கொன்டிருப்பதை கவனித்தாள். துருவன் தலை குனிந்து அவளின் பார்வைக்குள் மறுபடியும் வந்தான்.
"என்ன ஒரு நல்ல நேரம், இல்லையா?"
"சூரியன் இறங்கும் நேரம். ராட்சஸர்கள் உளாவும் நேரம்."
குழப்பத்தில் அவனின் விரிந்த புன்னகை சூரியனுடன் சேர்ந்து இறங்கியது. 
"என்ன சொல்கிறாய்?"
"அக்கட சூடு?"
துருவன் திரும்பி அக்கட நோக்கினான். அந்த மணலில் உட்கார்ந்திருந்த இளைஞனுக்கும் அவர்களுக்கும் நடுவில் எத்தனை தூரம் இருந்தாலும், அவனின் பார்வை அவர்களை உறசியது. துருவன் முறைத்தான்.
"வெட்கமே இல்லாமல் உன்னையே பார்த்து கொண்டிருக்கிறான்!"
"நீயும் தானே."
"ஐம் நாட் அ ஸ்ட்ரேஞ்ஜர்!"
சந்தியா வாயை பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்கி கொண்டாள். 
"என்ன சிரிப்பு?"
மெல்லிய குரலில் பதில் அளித்தாள்.
"சின்னாவீதி சந்திரசேகர்!"
"வாட்?! அவன் மூஞ்சி எப்படி உனக்கு தெரியும்?"
"இல்லை, அவனாக இருக்குமோ என்று..." துருவனை பார்த்து சிரித்தாள். அவன் தலையில் அடித்து கொண்டான். 
"பினபல்லேயில் இருக்கும் எந்தக் கண்டவனும்  சின்னாவீதி சந்திரசேகரா?" 

சண்டி அந்த இளம் தம்பதி ஓடி வந்தது, கட்டித் தழுவி முத்தம் கொடுத்த அட்டகாசத்தை வேடிக்கையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். தனக்குள் சிரித்து மெய் சிலிர்த்து போனான். முட்டியை கட்டிக்கொண்டு அவர்களையே பார்த்தான். அவனின் காதலி மனதிற்குள் தோன்றினாள். மாமாவின் கிளினிக்கில் வேலை செய்யும் நர்ஸ், பைரவி. முழு நாளும் வேளையில் இருப்பாள், அந்த கடன்காரன் டாக்டர் பக்கவாட்டிலேயே கிடப்பாள். "யெஸ், டாக்டர்! நோ, டாக்டர்! ஓ, நெவர் டாக்டர்!" அவள் மழுப்பிய விதம், அவளிற்கு டாக்டரை பிடிக்கும் என்ற அச்சம் உருவாக்கியிருந்தது சண்டியின் மனதில். பரவாயில்லை. டாக்டருக்கு முப்பது மேல் இருக்கும். இவள் இப்பொழுதுதான் படிப்பை முடித்தாள். நேராக அவளின் அப்பாவை பார்த்து பேசவேண்டியதுதான். சண்டியை வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பே இல்லை. 
பாக்கெட்டில் இருந்த டிக்கட்டை தொட்டு பார்த்தான். பெருமூச்சு விட்டான். கல்யாண நினைப்பெல்லாம் சென்னை போய்ட்டு வந்தவுடன்தான்.
கோதாவரியில் விளையாடிக்கொண்டிருந்த அந்த தம்பதி திரும்பி அவனை பார்த்த பொழுதுதான் அந்த பாய்-ஃப்ரண்ட் யார் என்று தெரிய வந்தது. முறைத்துக்கொண்டே எழுந்தான். 
"பைரவி! திஸ் இஸ் ஃபார் யூ!" என்று தனக்குள் சொல்லிவிட்டு, அவர்களை நோக்கி நடந்தான்.

"ஐயோ. என்ன இங்கே வரான்?"
"வரட்டும். பார்த்துக் கொள்ளலாம்." சந்தியா விரல்களை பிடித்துக்கொண்டு டிரமாட்டிக்காக ஒரு கங் ஃபூ போஸ் செய்தாள். துருவன் அவளை தேற்றும் விதமாக அவளின் தோளின் மேல் கை வைத்தான். அவர்களுக்கு முன் வந்து கைகளை மடித்துக்கொண்டான் அந்த அந்நியன். துருவனை ஒரு சிறிய புன்னகையுடன் பார்த்தான்.
"நேனு எவரு அனி நீகு தெளியலேது?"
துருவன் முறைத்தான். ஒரு முறை மேலும் கீழும் பார்த்தான். யாராக இருக்கும் என்று அவன் மனதில் வேலை பார்க்கும் நரம்புகள் அங்கும் இங்கும் அலைவது சந்தியாவிற்கே தெரிந்தது. 
"ஒக ஐடியா உந்தி... காணி..."
"கரெக்ட், ரா. நேனு சண்டி."
துருவனின் குழப்பம் தெரிவித்த புருவங்கள் இப்பொழுது நேராகி அவன் சிரிப்பிற்கு ஏற்ப அழகாக தெரிந்தன.
"ச-சண்டியா?! ஓ மை காட்! எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கிறது!" 
சண்டியின் தோள்களை பற்றி குளுக்குவான் என்று நினைத்தாள் சந்தியா. அவனின் காலேஜ் நண்பர்களை பார்த்தால் அப்படித்தான் செய்வான். ஆனால் சண்டிக்கு வேறு டிரீட்மெண்ட். அவனின் கையை பற்றி மனதில் வைத்துக்கொண்டான்.
"எப்படி இருக்கேடா?"
சண்டியின் முகத்தில் இருந்த புன்னகையை சந்தியா உற்று பார்த்தாள். அது அவளுக்கு பிடிக்கவில்லை. மனதில் வேர் எதையோ வைத்துக்கொன்டிருக்கிரான் என்று அவளுக்கு தோன்றிற்று. ஆனால் துருவனின் புன்னகை சந்தோஷத்தில் ஜொலித்தது. 
"யூ பாய்ஸ் நோ ஈச் அதர்?"
"யெஸ்! சந்தியா, இது என்னோட சிறுவயது தோழன். ஒரே ஸ்கூல், ஒரே டியூஷன், ஒரே தெரு. டேய், இன்னமும் அங்கேதான் இருக்கிறாயா?"
சண்டி ஒரு சிறிய முறைப்புடன் சிரித்தான். பல்களை கடித்துக்கொண்டே சொன்னான்.
"இல்லை. நான் இப்ப இங்கே, பினபல்லே சின்னாவீதியில் இருக்கிறேன்."
சந்தியா வாய் திறந்து அதிர்ச்சியுடன் துருவனை பார்த்தாள். அவன் அவநம்பிக்கையுடன் தலையசைத்தான்.
"யு ஆர் ஜோக்கிங்! டேய், உன் வீதியில் இருக்கிற ஒருத்தரை தேடித்தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்."
"ஐ நோ." 
அவனின் மெல்லிய சிரிப்பு சந்தியாவிற்கு எரிச்சல் மூட்டியது. சண்டி சொன்ன கடைசி மொழியை கேட்டு துருவனுக்கே சந்தேகம் உண்டாயிற்று.
"வாட் டூ யூ மீன் யூ நோ?"
சண்டி கைகளை உயர்த்தி நீட்டினான். இரண்டு முடக்கு சத்தம் அங்கே இங்கே கேட்டது. மணலில் டக்கென்று உட்கார்ந்துவிட்டு அவர்களையும் உட்கார சொன்னான்.
துருவன் சந்தியாவை ஓரக் கண்ணால் பார்த்து குழப்பத்துடன் முறைத்தான். இருவரும் உட்கார்ந்த உடன் சண்டி தலையை ஆட்டினான். 
"பத்திராசளம் போகும் பொழுதெல்லாம் உன் அப்பாவை பார்ப்பேன். நன்றாக இருக்கார்."
துருவன் மௌனமாக இருந்தான். என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தான். சண்டி தொடர்ந்து விசாரிச்சான்.
"அப்போ? கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி..."
"டேய், எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை!"
சண்டி உதட்டை கடித்து கொண்டான். துருவனின் கல்யாண பத்திரிக்கை சண்டியின் வீட்டின் ராமர் சந்நிதியில் முன் உட்கார்ந்து இருந்தது. போன முறை துருவனின் அப்பாவிற்கு அம்மாவின் கடலை மிட்டாயை கொடுக்க போன பொழுது தந்திருந்தார்.
"நீங்க ரெண்டு பேரும் ஶ்ரீஹரிகோட்டாவில்தானே வேலை செய்கிறீர்கள்?"
சந்தியா முறைத்தாள்.
"அது சரி. எங்களின் வாழ்க்கை பற்றி விசாரிக்க, நீ யார்?"
"சந்தியா, அவன் என் சிறு வயது தோழன். நம் கல்யாணத்திற்கு அவனுக்கு அழைப்பெல்லாம் சென்றிருக்கிறது."
சந்தியா சண்டியை உற்று நோக்கினாள். அவன் முகத்தில் கொஞ்சம் அழகு, கொஞ்சம் அசடு. அவன் உண்மை வயது துருவனின் வயதாகத்தான் இருக்கும், ஆனாலும் பால் கொஞ்சம் வழிந்தது. பாவம். அப்பாவி போலும், என்று தன் எரிச்சலை சீராக்கினாள். ஒரு சின்ன சந்தேகம் மனதை உறுத்தியது.
"துருவா..."
அவன் அவளை பார்த்து என்ன என்ற விதம் தலை தூக்கினான்.
"உன் நண்பனின் உண்மை பெயர் என்ன?"
மெல்ல ஏதோ புரிய ஆரம்பித்தது துருவனுக்கு. தன் நண்பனை இத்தனை நேரம் சந்தோஷத்துடன் பார்த்திருந்தவன் திடீர் என்று எழுந்து, அவனை ஏமாற்றத்துடன் பார்த்தான்.
"சண்டி... இல்லை இல்லை." முறைத்தான். "சந்திரசேகரா!"
சந்தியாவும் எழுந்தாள். வாய் பொத்தி தலை அசைத்தாள்.
"நான் அப்பவே சொன்னேன்..."
"வேடிக்கை செய்வதற்கு இதுவா நேரம்? என் உயிர் தோழன் இப்படி ஒரு துரோகம் செய்வான் என்று நான்..." ஒரு நிமிடம் தயங்கினான். தலையை சொரிந்துவிட்டு, திரும்பி கீழே சண்டியை பார்த்தான். "இப்பொழுது என்ன அவ்வளவு பெரிதாக நடந்து போய் விட்டது?"
அவனின் திடீர் மாற்றம் சந்தியாவிற்கு புரியவில்லை. இது என்ன அந்நியன் கதை மாதிரி நிமிடத்துக்கு நிமிடம் யோசனை மாறுகிறான்? ஒரு வேளை அடுத்த நிமிடம் வெறியில் கோதாவரிக்குள் தன் நண்பனை தள்ளிவிட்டு விடுவானோ! பயத்துடன் அவனை பார்த்தாள்.
சண்டி சிரித்தான்.
"எனக்கு தெரியும்! நீ இப்படித்தான் லைட்டாக எடுத்துக்கொள்வாய் என்று!"
ஈ என்று சிரித்தவன் எழுந்து நின்று, துருவனின் கையைப் பற்றி ஆசையுடன் தட்டிக்கொண்டான். சந்தியாவிற்கு அது பிடிக்கவில்லை.
"நாம் பத்தாவது படிக்கும் பொழுது செய்த புனைப் பெயர் இல்லையா? அதைப்போய் வேர் ஒருவருடன் நீ உபயோகிக்கிறாயே?" 
துருவன் குற்ற உணர்ச்சியுடன் உதட்டை கடித்து கொண்டான். சண்டி சந்தியாவை பார்த்து முறைத்தான். அவளும் பதிலிற்கு முறைத்தாள்.
"நாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம்! எங்களின் புனைப்பெயரை பற்றி உனக்கு எங்கே வந்தது கஷ்டம்?"
"நான் சொல்வது உனக்கு புரியவில்லையா? அது எனக்கும் துருவனுக்கும் இருந்தது. நீ உன் வருங்கால கனவனுடன் கதை எழுத வேண்டும் என்றால், வேறு புனைப்பெயர் வைத்துக்கொள்வதுதானே?!"
"ஏன், நீ தான் விட்டு கொடுப்பது. உன் வாழ்க்கையில் எங்கே இவனை இனிமேல் பார்க்கப்போகிராய், சேர்ந்து கதை எழுதப்போகிராய்?"
தன் உயிர் தோழனும் உயிருக்கும் மேலான காதலியும் சண்டை போட்டுக்கொள்வதை டென்னிஸ் மாட்ச் பார்ப்பது போல் பார்த்தான் துருவன். ஒரு இடத்தில் நினைவுக்கு வந்தவன் போல் தலையை அசைத்து, அவர்கள் இருவரையும் நிறுத்த வைக்க "ஸ்டாப் இட், யூ டூ!" என்று கத்தினான்.
அவர்கள் இருவரும் அவனை திரும்பி பார்த்து முறைத்தார்கள்.
"எல்லாம் உன்னால்தான் வந்தது. என்ன இந்த உலகத்தில் புனைப்பெயர்களுக்கு பஞ்சமா? நாம் இருவரும் சிறுவயதில் சேர்ந்து எழுதிய சிறுகதைகளும், எடுத்த குறும்படங்களும் 'சந்துரு' என்ற பெயரில் வெற்றி அடைந்து நிறைய பரிசுகளும் கோப்பைகளும் வாங்கினோம், மறந்துவிட்டாயா?" கைகளை மடித்து கொண்டான் சண்டி. கூர்ந்து பார்த்ததில் அவன் முறைப்பில் வேறொன்றும் இல்லை. ஏமாற்றம்தான் தெரிந்தது. 
"அது நம் புனைப்பெயர்."
மெல்லிய குரலில் முடித்து திரும்பி சூரியனை நோக்கினான். வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் குங்குமம் எல்லாம் வாங்கி கிளம்பும் கிளம்பாமல் வாசலில் நின்ற விதம் பேசிக்கொள்வது போல் சூரியனும் கோதாவரியும் ஏதோ பெரிய பேச்சில் இருந்தார்கள். 
துருவன் பெருமூச்சு விட்டான்.
"ஐம் சாரி சண்டி. நான் வந்து..."
"நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்." சண்டியின் மனது துருவனைப் பார்த்த பின்பு மாறிவிட்டது. அந்த பழி உணர்வு அவ்வளவாக இல்லை. அவன் அப்பொழுது என்ன செய்தான், ஏது செய்கிறான் என்று அவனுக்கு தெரியாமலேயே அவன் கை தன் பாக்கெட்டிற்குள் சென்று அந்த பத்திராசளம் டூ சென்னை டிக்கெட்டை கிழித்து, அந்த மாலை வேலை காற்றில் மிதக்க வைத்தது.
"என்ன சீட்டு அது?" துருவன் கேட்டான்.
சண்டி தலையசைத்தான். சிரித்தான். கீழே மணலில் ஏதோ கால்களால் வரைந்தான்.
"அது... சந்துருவின் மேல் நான் வைத்துக்கொண்டிருந்த அளவில்லாத பற்று." அவன் திரும்பி துருவனையும் சந்தியாவையும் பார்த்தான். "என் தோழனின் எழுத்து திறமைக்கு ஏற்ப ஒருத்தி கிடைத்ததுவிட்டாளே, என்று நான் யோசிக்கவே இல்லை. சுயநலமான பார்வையில்தான் முழுக்க முழுக்க பார்த்துவிட்டேன்." துருவன் கிட்டே நடந்து தன் இடுப்பில் கை வைப்பது போல் கட்டிக்கொண்டான்.
"உன்னை நேரில் பார்த்து, உன் வருங்கால மனைவியை சந்தித்தது என் மனதை மாற்றி விட்டது." புருவங்களை உயர்த்தினான். "நல்ல வேளை. இல்லையென்றால் பரிசுத்தொகை ஒரு லட்சத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன் என்று தெரியாமல் தவித்துப் போயிருப்பேன்!"
மூவரும் சிரித்தனர். துருவன் தன் கைகளை மேலே கொண்டுவந்து சண்டியைத் தழுவினான். சிறிது நேரம் கோதாவரியுடன் மௌனத்தில் நின்றுகொண்டு, வானம் கிருஷ்ணனின் வண்ணம் ஆனவுடன் பிரிந்தனர்.

"ஹலோ, மேடம்?"
அந்த ரிசப்ஷனிஸ்ட் மேலே நோக்கினாள். ஒரு வித வெட்கத்துடன் அவளை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த துருவனையும் சந்தியாவையும் ஆராய்ந்தாள்.
"யெஸ்? வாட் இஸ் யுவர் அப்பாய்ண்ட்மெண்ட் வித் அஸ்?"
"நாங்கதான் சந்துரு, எழுத்தாளர் டூவோ..."
"ஓஹ், ஆர் யூ சின்னாவீதி சந்திரசேகர்?"
துருவன் தலையசைத்தான். "இல்லையில்லை நான்-"
சந்தியா முன் வந்தாள். "என்ன உலருகிராய்." அவளை பார்த்து, "வை டூ யூ நீட் சின்னாவீதி சந்திரசேகர் நௌ?"
"அவர் பெயரில்தான் ரெஜிஸ்டர் ஆயிருக்கு இந்த புனைப் பெயர்."
துருவனுக்கு மெல்ல ஏதோ விளங்கிக்கொண்டிருந்தது.
"இருங்கள்! வெற்றி பெற்ற கதையின் பெயர் என்ன?"
அவள் எதையோ வறக்காக டைப் அடித்து கணினியிலிருந்து படித்தாள்.
"'நாங்களும் வீரர்கள்'. உங்கள் கதைதானே?"
சந்தியா பின் வாங்கினாள். துருவன் வாயை பொத்திக்கொண்டான்.
"அது நம் சிறுகதையில்லை..."

Comments

Popular posts from this blog

ஜாக்கிரதை!

Dharam Yuddh - 4

Dharam Yuddh - 5