பட்டாம்பூச்சிகள்

அண்ணிக்கும் அண்ணனுக்கும் நிறைய வயது கிடையாது ஆனால் நறை முடிகள் இப்பொழுதே காதுகளின் அருகில் நடனம் ஆடியது. எல்லாம் சந்துருவினால்தான். முதல் பையனின் கல்யாணமான இரண்டு மாதங்களில் சந்துருவின் அப்பா அம்மா ஸிட்டி வாழ்க்கை வேஸ்ட்டென்று சொல்லிவிட்டு பெட்டி படுக்கைகளோடு சொந்த ஊரிற்கு (மதுராந்தகம்) ஓடி விட்டார்கள். இப்பொழுது சந்துருவின் வாழ்க்கை அவன் கையில் இல்லாமல் அவனின் அண்ணன் அண்ணியின் கைகளில் விழுந்து விட்டது. அவர்கள் இருவரும் ஒரே சாப்ட்வேர் கம்பெனியில் வேளை செய்தார்கள். வசதியான போக்கு வரத்து. சில சமயம் அண்ணன் ஸ்கூட்டி ஓட்டுவான், சில சமயம் அண்ணி ஓட்டுவாள். ஒரே ஹெல்மெட் இருந்த படியால் நிறைய சமயம் அண்ணியே ஓட்டுவாள். 
"ட்ச, ஐ காண்ட் கீப் டூவிங் திஸ். இன்னொரு ஹெல்மெட் வாங்கியே ஆகனும்."
"ஏன், இப்ப உனக்கு என்ன கஷ்டம்?"
"நீங்க சொல்லிட்டீங்க, நான்தானே போலீஸ் காரங்க கிட்ட மாட்டினா கெஞ்சனும், சார் விட்டுடுங்க பிளீஸ் அப்படின்னுட்டு. நீங்க ஒரு நாள் போய் பண்ணி பாருங்க, மானம் போய்டும். ஹும்!"
"செரி, செரி. சாரி. கூடிய சீக்கிரத்தில் ஹெல்மெட் வாங்கிக்கலாம்!"
அது ஆறு மாதங்கள் முன் நடந்த வசனம். இன்னமும் ஹெல்மெட் வாங்கவில்லை.

மதுராந்தகம் செல்ல ஒரு பெட்டி பாக் செய்து மூடக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அண்ணியை வேடிக்கை பார்த்து நின்றுகொண்டிருந்தான் சந்துரு. அண்ணன் அதை வெறுப்புடன் கவனித்து வெளியிலிருந்து ஓடி வந்தான்.
"தள்ளுடி, நான் மூடறேன்."
சந்துருவை முறைத்துப் பார்த்துக்கொண்டே மூடினான். எழுந்து அவனிடம் நேராக பேசினான்.
"ஏண்டா, அண்ணி கஷ்டப் படறதை சும்மா பார்த்துண்டு இருக்கே? ஹெல்ப் பண்ண மாட்டியா?"
சந்துரு தலை குனியாமல் அண்ணனின் முகத்தை ஆராய்ந்தான்.
"என்னடா பார்க்கற? பதில் சொல்லு." தலையசைத்தான். "வேண்டாம். நீ ஒன்னும் சொல்லத் தேவையில்லை. இனிமேல் யாராவது கஷ்டப் படறதை பார்த்தா ஹெல்ப் வேணுமான்னு கேளு, போதும்."
அண்ணி எழுந்து அவள் கணவனின் தோளின் மேல் ஒரு கையை வைத்தாள். மெதுவாக சிரித்தாள்.
"விடுடா, சந்துரு. நீ உள்ளே போ."
அவன் மௌனமாகவே உள்ளே செல்ல, அண்ணன் குழப்பத்துடன் அவளை நோக்கினான்.
"வாட்?"
"நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது..."
"என்னடி, இழுக்கற? என்ன விஷயம்?"
அவள் சிரித்தாள். 
"உங்களுக்கு என் சின்ன அத்தை பையன் நியாபகம் இருக்கா?"
அண்ணன் லேசாக முறைத்தான். அவள் மறுபடியும் சிரித்தாள்.
"தம்பி வயசுதான்."
அண்ணனின் புருவங்கள் நேரானது.
"அவனுக்கு என்ன?"
"அவன் ஃப்ரெண்ட் கல்யாணமாம், சிட்டிக்கு வந்திருக்கான். இங்கே தங்க இடம் இருக்கேன்னு கூப்டுட்டேன்..."
அண்ணன் ஒரு கத்திரிக்கோலை எடுத்து தபாலில் வந்த டப்பாவை மிகவும் கொடூரமாக கிழிக்க ஆரம்பித்தான்.
"நாளைக்கு பழனி போறோமே... பரவாயில்லையா?"
"அவனுக்கு சாமர்த்தியம் உண்டு. அவனால சந்துருவை சமாளிக்க முடியும்."
புருவங்களை அவநம்பிக்கையோடு உயர்த்தி சிரித்தான்.
"ஆனாலும் போ. உன் அத்தை மகன் மேல வைச்சிருக்க நம்பிக்கையே என் மேல வைக்களையே?"
"நான் தான் சொல்லிட்டேனே, அவன் தம்பி வயசுன்னு!"

அண்ணனும் அண்ணியும் டாக்ஸியில் அவர்களின் பெட்டிகளுடன் ஏற, கைகளை மடித்தபடி ஓரமாக நின்று பார்த்துக்கொண்டு இருந்தான் சந்துரு. அண்ணன் தலையசைத்தான்.
"சொல்லியும் ஹெல்ப் வேனுமான்னு கேட்கிறானா, பாரு? வெட்கமே இல்லை."
"செரி விடுங்க. அந்த வயசுல நீங்க மட்டும் எப்படி இருந்தீங்க?"
"ஏய், காலேஜ் படிக்கும் போது நான் ஒன்னும் இவ்வளவு மோசமா இல்லை! அம்மாக்கு உதவி எல்லாம் செய்வேன்."
"எனக்கு எங்கே தெரியும், உங்களோட காலேஜ் சாகசங்கள்? கல்யாண மேடையிலதானே நான் உங்களை முதல்ல பார்த்தேன்."
"ஆமாம், இதே சோகக் கதையை எவ்வளவு நாளா சொல்லிண்டு இருப்பியோ?"
அவள் டாக்ஸி கதவை கொஞ்சம் வறக்காகவே சாற்றினாள். அண்ணன் அவளை பார்த்து தலையை அசைத்து, சந்துருவிடம் திரும்பினான்.
"தம்பி, என் கண்ணு இல்லை? பத்திரமா பார்த்துக்கோடா வீட்டை. ஒழுங்கா சாப்பிடுடா." என்று கெஞ்சாத குறையாக கேட்டான்.
சந்துரு தலையசைக்காமல் நின்றான். டாக்ஸியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அண்ணன் அவனை வருத்தத்துடன் பார்த்து விட்டு டாக்ஸியிடம் சென்றான். கதவை திறந்தான். ஏதோ ஞாபகம் வந்து திரும்பினான்.
"ஞாபகம் இருக்குதா சந்துரு, இன்னிக்கி யார் வராங்க வீட்டுக்கு?"
கீழே அனாதைகளாகக் கிடந்த கனகாம்பரம் புஷ்பங்களை தன் தன் வீட்டுக்குத் தூக்கிக்கொண்டுப் போய்க்கொண்டிருந்த எறும்புகளை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"பாரதி."
"அப்பாடா! யெஸ், குட். அவனை உள்ளே கூட்டிண்டு போய் உன் ரூம் கொடு. நாங்க போய்ட்டு வர வறைக்கும் எங்க ரூம் எடுத்துக்கோ. செரியா?"
எறும்புகள் இப்பொழுது பக்கத்தில் இருந்த தென்னமரத்தை ஏறத் தொடங்கின. அண்ணன் பற்களை வெறுப்புடன் அழுத்தினான்.
"ட்ச!"
அவன் கதவையும் கொஞ்சம் வறக்காகவே சாத்தினான். 
"சார், கதவைக் கொஞ்சம் பார்த்து மூடுங்க."
"சரிப்பா. கிளம்பு."
"தம்பிக்கு என்னங்க, ஏதாவது கோளாறா?"
"அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. காலேஜ்ஜுல படிச்சிண்டு இருக்கான். பீ. எஸ். சீ. ஃபிசிக்ஸ். நல்லா பாஸ் பன்னுவான். இந்த ஏரியால நடக்குற எல்லா கட்டுறை எழுதும் போட்டிலையும், மாத்ஸ் கோம்பெடிஷன்லையும் கலந்து கொள்வான். நிறைய ஜெயித்ததில்லை, ஆனால் நல்லா எழுதுவான்." ஜன்னலில் கையை சாய்த்து ஒரு பலத்த பெருமூச்சு விட்டான். "ஒரு இரண்டு வருஷமா, காலேஜ் சேர்ந்ததிலிருந்து இப்படி ஆயிட்டான்."
"என்ன காரணத்துக்காக இருக்கும்?"
அண்ணன் அந்த இளம் டிரைவரை ஆராய்ந்து விட்டு அண்ணியை திரும்பிப் பார்த்தான்.
"என்னை எதுக்கு பார்க்கறீங்க? சொல்லுங்க!"
"அவனுக்கு என்ன பிரச்சினைன்னு நீ வேணும்னா கண்டுபிடிச்சு தாயேன், பா. நாங்க கடன் பட்டு கிடப்போம்."
"ஐயோ! அந்த வம்பெல்லாம் எனக்கு வேண்டாம், சார்!"
மதுராந்தகத்தின் பாதையை பிடிக்க, அந்த டாக்ஸி ஹைவேயில் சேர்ந்தது.

டாக்ஸி தெருமுனை சென்று மறையும்வரை அதையே பார்த்து நின்றான் சந்துரு. வாசலில் கவர்ச்சிகரமாகத் தொங்கும் அண்ணி வீட்டின் பழைய ஜூலாவில் உட்கார்ந்து கொண்டான். பின்னால் சாய்ந்து மேலே பார்த்தான். ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியில் இரண்டு பட்டாம்பூச்சிகள் "டகாஷீஸ் காஸில்" விளையாட்டைப் போல் அதனின் ரக்கைகளை காப்பாற்ற அங்கே இங்கே பாய்ந்து பறந்தது. எழில் வெருமென பார்த்தான். அப்பொழுது என்று கேட் அருகில் ஒரு சத்தம் சந்துருவை எழுப்பியது.
வெளியில் வந்தவனை கேட் திறக்காமல் உற்றுப் பார்த்தான். வந்தவன் அநேகமாக பாரதியாகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும் சந்துரு மௌனமாக, கண்கள் வழியாகவே விசாரித்தான். 
அவன் சிரித்தான்.
"ஹாய், ஐம் பாரதி. நீ?"
கேட்டின் மீது சாய்ந்தபடி நின்று கொண்டான். சாதாரணமான பரட்டை தலை முடி, நன்றாக வாரி அடக்கி வைத்திருந்தான்.  பெரிய, விரிந்த கண்கள், இமைகளின் முடிக்கு தனியாக ஒரு சீப்பு வைத்துக்கொள்வான் போல். சின்ன மூக்கு, நுனி மேலே நோக்கியது. பற்களை பொக்கிஷம் போல் காட்டும் காட்டாமல் சிரித்தான். இடது கண்ணத்தில் மட்டும் ஒரு கஞ்சத்தனமான குழி மரியாதைக்காக விழுந்தது.
"என்ன, என்னை இப்படி பார்க்கற? உள்ள விட மாட்டியா?"
சந்துருவிற்கே இந்த ஈர்ப்பு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. கேட்டை உள்ளிருந்து திறந்தான். ஒரு டஃபல் பாகை தன் தோளின் மேல் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்து வந்தான் பாரதி. அவனின் சட்டையிலும் பாண்ட்டிலும் மண் தங்கியிருந்தது, ஷூவில் போலிஷ் போய் ஏதோ ரன்னிங் ரேஸ் ஓடி விட்டு வந்தவன் போல் தெரிந்தது. ஆனாலும் நிமிர்ந்த நடை, பாக்கெட்டில் கை, பொறுமையுடன் நடந்தான். மின்விசிறியில் நடக்கும் பட்டாம்பூச்சி நிகழ்ச்சியை கண்களின் ஓரங்கள் வழியாகப்பார்த்தான். அந்த மின்விசிறிக்கான ஸ்விச்சை அனைத்து வீட்டிற்குள் சென்றான். சந்துரு அவனை கவனித்துக்கொண்டே பின் தொடர்ந்தான். 

"சூப்பரா இருக்கு வீடு. அதுவும் வெளியில் இருக்கிற ஜூலா இருக்கே... டாப் இடம்." கீழே தரையில் அவன் பையை வைத்துக்கொண்டே உட்கார்ந்தான்.  "மாமா வீட்டுல அது இருந்த போது தனி ரூமுல இருக்கும். அவங்களைப் பார்க்க வரும்போது எல்லாம் நான் அங்கேதான் தங்குவேன்."
முழுக்க முழுக்க முகத்திலிருந்து வடியாத புன்னகையுடன் பேசினான். அந்த புன்னகை தொத்தியது போல் சந்துருவின் முகத்திலும் மெதுவாக ஒரு புன்னகை மலர்ந்தது. அதைக் கண்டு பாரதி தன் புன்னகையை இன்னமும் விரித்தான். 
"எனக்கு ஒரு டீ போட்டுத் தரமுடியுமா? பிளீஸ்?"
அவ்வளவு மரியாதையுடன் அவன் கேட்ட விதம் சந்துருவின் மனதைக் கொஞ்சம் கிள்ளியது. உள்ளே ஓடி இஞ்சியை துருவி, வெந்நீர் வைத்து, பாலை சுட பன்னி சிறிது நேரத்தில் டீ அடுப்பில் கொதித்துக் கொண்டு இருந்தது. 
பாரதி கிட்சனிற்குள் நுழைந்தான். மறுபடியும் பாக்கெட்டில் கை, இப்பொழுது முனுகளில் ஏதோ பாட்டு. கிட்சனை சுற்றி பார்த்தான்.
"நான் நல்லா சமைப்பேன்." சிரித்தான். "என் ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு நானே சமைக்கறேன்னு சொன்னேன், அவன்தான் வேண்டாம்னு சொல்லிட்டான்." 
"ஏன்?"
பாரதி எளிமையாகத் தோளை குலுக்கினான். 
"அவன் கல்யாணத்துக்கு இருநூறு பேர் தான் வராங்களாம்... நான் ஜாஸ்தி சமைச்சிடுவேனாம்!"
சந்துரு சிரித்து இரண்டு டம்ளரை எடுத்து வைத்தான். பாரதி அவன் பக்கத்தில் வந்து அவைகளை வைத்து 'டம்ளராட்டம்' செய்தான்.
"நீ சமைப்பியா?"
டீ பொங்கி வர அடுப்பை அணைத்தான் சந்துரு.
"ஹும்."
"நல்லா சமைப்பியா?" சிரித்து டம்ளர் நாட்டியத்தை விட்டான். "அதுதானே முக்கியம்?"
சந்துரு சேர்ந்து சிரித்தான். ஃபில்டர் செய்த டீ டம்ளரை கொடுத்தான். பாரதி புருவங்களை உயர்த்தினான்.
"ஓகே, நீயே இந்த டீயை குடிச்சு நான் நல்லா சமைப்பேனா இல்லையான்னு கண்டுபிடி, அப்படிங்கற?"
சந்துரு மறுபடியும் சிரித்து தன் டீ டம்ளரை எடுத்துக்கொண்டான். பாரதி முறைத்தான்.
"என்ன, உன் வீட்டில் டீயோட சேர்த்து ஒன்னும் சாப்பிட மாட்டீங்களா?"
சந்துரு தன் டம்ளரை உதடுகளில் இருந்து குடிக்காமல் கீழே கொண்டு வந்தான். பக்கத்தில் இருந்த ஒரு டப்பாவை எடுத்து திறந்தான்.
"பிஸ்கட் இருக்கு?"
பாரதி தலையசைத்தான். 
"அதுவும் நல்லாத்தான் இருக்கும், செரி. ஆனால் நான் ஒன்னு செய்ய சொல்லித்தறேன், அதை உன் அண்ணன் அண்ணிகிட்ட செஞ்சு காட்டினேன்னா  அவங்க அசந்து போய் விடுவாங்க!"
சந்துருவின் முகம் சுருங்கிக் கொண்டது. அழகாக அவன் முகத்தை அலங்கரித்த புன்னகை மறைந்து, அவன் தன் டீ டம்ளரை எடுத்து கிச்சனை விட்டு வெளியே ஜூலாவிற்கு சென்றான்.
பாரதி கூடிய சீக்கிரத்தில் அவனுடைய டீ டம்ளருடன் வந்து வாசல் படிகளில் உட்கார்ந்தான். 
"வாட்ஸ் ராங்? உன் அண்ணன் அண்ணியை சும்மா மென்ஷன் பன்னதும் இப்படி ஓடிட்டே?"
சந்துரு ஜூலாவில் பின் சாய்ந்தான். கால்களை மேலே தூக்கி அணைத்துக்கொண்டு, தென்னை மரத்தில் பிக்னிக் செய்வது போல் சாப்பாட்டுடன் ஏறிக்கொண்டிருந்த எறும்புகளை உற்று நோக்கினான். 
"உனக்கு அந்த எறும்புகளை பார்த்தால் பொறாமையா இருக்கா?" பாரதி பெருமூச்சு விட்டான். "உண்மையை சொல்லப் போனால் எனக்கும் ரொம்பவே இருக்கும்." 
பாரதியின் வெளிப்படையான வெகுளித்தனமான பேச்சு சந்துருவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுக்கு எதையோ ஞாபகப் படுத்தியது. மௌனமாக டீ குடித்து முடித்து டம்ளரை ஜூலாவின் அடியில் வைத்தான். பாரதியும் குடித்து முடித்து அவனைப் பார்த்து சிரித்தான்.
"டீ நல்லா இருக்கு. யூ ஆர் எ குட் குக்!"

அடுத்த நாள் காலையில் சந்துரு எழுந்து காலேஜ் பைக்குள் புத்தகமும் பென்சிலும் அடைத்துக்கொண்டு இருக்கும் பொழுது பாரதி கிச்சனிலிருந்து இரண்டு டீ டம்ளர்களுடன் வந்தான்.
"நானே எனக்கு போட்டிருப்பேன்..."
"அது செரி. அப்புறம் என் கை வண்ணம் உனக்கு எப்படி தெரிய வரும்?" 
பாரதியின் இடது கண்ண குழியை பார்த்துக்கொண்டே குடித்தான் சந்துரு. டீ விநோதமாக இருந்தது.
"இதுல என்ன இருக்கு?"
"டீ பொடி."
"வேற என்ன?"
"ஹும்? அது என் ரகசிய ரெசிப்பி. நான் நேத்திக்கு உனக்கு வேறொரு ரகசிய ரெசிப்பி சொல்லி தரலாம்ன்னு பார்த்தேன். உனக்குத்தான் அதுல விருப்பம் இல்லையே."
சந்துரு மௌனமாக டீ குடித்தான். டம்ளரை அங்கேயே வைத்துவிட்டு, தன் காலேஜ் பையை தோளில் மாட்டிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் வெளியில் சென்றான். 
சாயங்காலம் வீட்டிற்குள் நுழையும் பொழுதே ஒரு இனிப்பான வாசனை மூக்கை துளைத்தது. சந்துரு உள்ளே ஓடி தன் அண்ணனின் படுக்கையில் அவன் காலேஜ் பையை வீசி விட்டு (அது பாவமாகக் கீழே சரிந்து விழுந்தது) கிச்சனிற்குள் சென்றான். அங்கே தோளின் மேல் துணியுடன், கல்யாண சமையல்காரரைப் போல் நின்று, ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த பாரதியை குழப்பம் கலந்த புன்னகையுடன் பார்த்தான். 
"வா, வா! உனக்காகத்தான் வெய்ட்டிங்!" 
"என்ன செய்யற? வாசனை சூப்பர்!"
பாரதி சிரித்தான். 
"இது என் கிளாசிக் ரெசிப்பி. என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. என் மாப்பிள்ளை ஃபிரண்டுக்கு ஒரு பேட்ச் செஞ்சிட்டேன்... கிச்சனை இலவசமா வாடகை தர உங்களுக்கு ஒரு பேட்ச் இதோ செஞ்சிண்டு இருக்கேன்."
சந்துரு சிரித்தான். அவனுக்கு இப்பொழுது பாரதியின் பேச்சு ஏன் அவ்வளவு பிடிப்பட்டது என்று தெரிந்தது. அவனின் சிறுவயது தோழி மீனாவைப் ஞாபகப் படுத்தியது.
"என்னதது?"
 பாரதி விரல்களால் ரிவர்சில் எண்ணினான்.
"திரீ, டூ, ஒன்..."
மைக்குரோவேவ் பாட்டு பாடியது. உள்ளிருந்து ஏதோ பர்ஃபி மாதிரி தெரிந்த ஒன்றை எடுத்தான். 
"பார்த்து, வெறும் கை!"
"எனக்கு பரவாயில்லை. இதெல்லாம் ஒரு சூடே இல்லை."
அழகாக வெட்டினான். சிரிது ஆறியதும் உள்ளங்கையில் பத்திரமாக வைத்து சந்துருவிடம் நீட்டினான். 
"குல தெய்வத்தை வேண்டிக் கொண்டே சாப்பிடு." கண் அடித்தான். 
சந்துரு தன் வாயிற்குள் அந்த பீஸை மெல்ல இறக்கினான். உடனே கரைந்தது. வெள்ளத்தால் வந்த இயற்க்கை சுவை. பாரதி அன்று காலையில் செய்த டீயைப் போலவே இதில் ஏதோ விசித்திரமாக இருந்தது, ஆனால் நன்றாக இருந்தது. இன்னொரு பீஸ் எடுக்கச் சென்றான். இரண்டு ஒன்றும் செய்யாது என்று சுவையாலேயே அறிந்து.
"நல்லா இருக்கு, இல்லை?" பாரதி தனக்கு ஒரு பீஸ் வெட்டி, லபக்கென்று வாயில் போட்டுக் கொண்டான். "சின்ன வயசுல மைசூர் பாக்குன்னா எனக்கு அவ்வளவு இஷ்டம். எவ்வளவோ நாட்கள், என் அப்பா கொடுத்த பாக்கட் மணியை மைசூர் பாக்குல மட்டும் செலவு பண்ணுவேன். வாரா வாரம் சாப்பிட்டு தீர்ப்பேன்!" தலையசைத்தான். "என் அம்மாக்கு பிடிக்கலை. நியாயமான வருத்தம். எந்த அம்மாக்கு அவங்க குழந்தைகளோட அடிக்ஷன் பிடிக்கும், சொல்லு?"
சந்துரு அவனின் அப்பா அம்மாவை நினைத்து கொண்டான். ஸ்கூலில் நண்பர்களை சேகரிக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவனுக்கு அவர்களின் குடும்ப நண்பரின் பெண் மீனாவை அறிமுகப் படுத்தி வைத்திருந்தார்கள். அந்தப் பெண்ணின் மீது சந்துருவிற்கு வளர்ந்த பாசமும் நேசமும் அடிக்ஷன் தான். இது அப்பா அம்மாவிற்குத் தெரியாமல் போனாலும் அண்ணனும் அண்ணியும் உடனேயே கண்டுபிடித்து விட்டார்கள்.
"அம்மா என்னை திருத்தனும்னு எனக்கு இந்த இன்ஸ்டண்ட், ஹெல்த்தி ரெசிப்பி கொடுத்தாள்." பாரதி இன்னொரு பீஸ் எடுத்து ஒரு சிரிப்புடன் விழுங்கினான். "அதுக்கப்புறம் அந்த தெருமுனையில் இருந்த சுவீட்டு மாமாவுக்கு ஒரு கஸ்டமர் லாஸ்! ஹா, ஹா!"
சந்துரு இன்னொன்று எடுத்துக்கொண்டான். நன்றாகத்தான் இருந்தது, ஆனால் அவன் கை அந்த டப்பாவிடம் செல்லும் பொழுது பாரதியின் முகத்தில் தோன்றிய சந்தோஷம் சந்துருவிற்கு இன்னமும் பிடித்திருந்தது. 
அன்றைய இரவு சந்துரு மைக்குரோவேவில் பால் சுடவைத்து எடுத்த பொழுது அந்த சுவீட்டைப் போல் இனித்தது.

சீனுவின் வாசலில் நின்று சிகரெட் குடித்துக் கொண்டிருந்தான் சந்துரு. எத்தனையோ நாட்கள் அந்த திண்ணையில் உட்கார்ந்து மீனாவுடன் சேர்ந்து பல்லாங்குழியும் அவளின் அண்ணனின் நிண்டெண்டோவிலும் விளையாடி இருக்கிறான், இங்கிலீஷ் எக்ஸாமிற்காக மாங்கு மாங்கு என்று படித்திருக்கிறான். 
"நீ சிகரெட் குடிப்பியா, செம."
பின்னால் வந்த குரலை உடனே அடையாளம் கொண்டு பெருமூச்சு விட்டான். நிறம் மாறாத அந்த மெல்லிய புன்னகையுடன் இளஞ்சிவப்பு சட்டையும், தலை முடியை இழுத்து வாரி, பாண்ட் பாக்கெட்டுகளில் அலட்சியமாகக் கைகளை சொருகியபடி காட்சி அளித்தான் பாரதி. அவன் பின்னால் அனாவசியமாக ஹாரன் அடித்துக் கொண்டே சென்றது ஒரு ஆட்டோ. 
"இந்த தெரு வழியாத்தான் உன் வீட்டுக்கு போய்ண்டு இருந்தேன். உன்னை இங்கே பார்த்ததும் உடனேயே ஆட்டோக்கு காசு கொடுத்துட்டு வெளியில குதிச்சுட்டேன்!"
சந்துரு மௌனத்தை நிலை நாட்ட, பாரதி அந்த வீட்டையும், அந்த தின்னையையும் கண்களால் ஆராய்ந்தான். 
"யார் வீடு இது? உன் ஃப்ரண்டுதா?"
பதில் கூறாமல் பார்த்துக் கொண்டிருந்த சந்துரு திடீர் என்று மாடி பக்கம் ஒரு கதவு சாற்றியதைக் கேட்டு, அவசரமாக சிகரெட்டை அனைத்து, ஒரு சூவிங் கம்மை எடுத்து வாயில் திணித்து, கொள்ளாத ஆர்வத்துடன் பார்த்தான். அவனின் பார்வையை பாரதியும் வேடிக்கையுடன் பின் தொடர்ந்து வாசலில் வரப் போகும் அந்த மகானுபாவரை எதிர்பார்த்தான். ஒரு இளைஞன் வெளியில் வந்தான். சந்துருவைப் பார்த்து மரியாதையுடன் சிரித்தான்
"சீனு அண்ணா! ஹாய்!"
"ஹாய் டா, சந்துரு. எப்படி இருக்கே? அண்ணன், அண்ணி எல்லாரும் நல்லா இருக்காங்களா?"
"அவங்கள மென்ஷன் பன்னாலே இவன் இங்கிருந்து ஓடி போய்டுவான்." 
அந்த வீட்டுக்காரன் பாரதியைப் பார்த்து குழப்பத்துடன் சிரித்தான். சந்துருவிடம் திரும்பினான்.
"யாரு டா இது?"
"என்  அண்ணியோட அத்தைப் பையன், அண்ணா." சந்துரு தரையைப் பார்த்து சிரித்து, முகத்தை மறுபடியும் மேல் நோக்கினான். "ஆமாம், நீங்க எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேண்டா, ஆனால் என்ன, டெய்லி அவளை மிஸ் பண்றேன்."
"நானும்" என்று சொல்ல ஆவலாக இருந்தது சந்துருவிற்கு, ஆனால் தன் ஆர்வத்தை அடக்கிக்கொண்டான்.
"யாரை மிஸ் பண்ணறீங்க, இரண்டு பேரும்?"
இப்பொழுது இருவரும் பாரதியை உயர்ந்த புறுவங்களோடு திரும்பிப் பார்த்தனர். 'இவனுக்கு எப்படி நம்ம மனசுல இருக்கிறது எல்லாம் தெரிஞ்சிருக்கும்...' என்ற பயத்துடன் சந்துரு, சாதாரணமாகக் குறுக்க பேசும் மூன்றாவது மனிதனின் மேல் வரும் வெறுப்புடன் சீனு.
"சந்துரு, நல்ல அத்தை பையன் உனக்கு."
"ஐயோ! நான் இவனோட அத்தைப் பையன் இல்லைங்க! இவன் அண்ணியோடது." சந்துருவைப் பார்த்து கண் அடித்துக்கொண்டே ஒரு கையை நீட்டினான் பாரதி. குலுக்கலாமா வேண்டாமா, இவனோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று சீனு பல்லைக் கடித்துக்கொண்டு சிரித்தான். 
சந்துரு முறைத்தான். அவன் வந்த வேலை நீண்டிக் கொண்டே இருந்தது. எத்தனை நேரம்தான் காத்துக்கொண்டிருப்பது?
"சீனு அண்ணா, அவள் வந்தான்னா என்கிட்ட சொல்லுங்க. அவளை பார்த்து பேசனும் போலவே இருக்கு."
சீனுவிற்கு சந்தோஷம், அந்தக் கை குளுக்கள் பிரச்சனையிலிருந்து விடை கிடைத்தது. சந்துருவைப் பார்த்து சிரித்தான்.
"ஷியூர் டா, உனக்கு இல்லாமலையா? அவ வந்தா ஃபர்ஸ்ட் உன் வீட்டுக்கு அனுப்பறேன், செரியா?"
சந்துரு ஆசையாக விரிந்த புன்னகையுடன் தலையசைத்த விதத்தை பாரதி மெல்ல கவனித்தான். சீனு தன் ஸ்கூட்டியில் கிளம்பி அவர்களைப் பார்த்து சிரித்தான்.
"எங்கே போறீங்க, வீட்டுல விடட்டுமா?"
"வேண்டாம், அண்ணா. இங்கே தானே இருக்கு, இவன் கூட போய்டுவேன்."
சீனுவின் ஸ்கூட்டி சத்தத்தோடு சேர்ந்து இருவரும் நடந்தார்கள். சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு பாரதி ஆரம்பித்தான்.
"காலேஜ்ஜுல என்ன படிக்கற?"
"ஃபிசிக்ஸ்."
"பிடிச்சிருக்கா?"
"ஹும்."
பாரதி சிரித்தான்.
"இது என்ன, ஆமாம் சொல்லும் ஹும்மா, இல்லை சொல்லும் ஹூம்மா?"
சந்துருவும் மெல்ல சிரித்தான். கீழே கிடந்த ஒரு பேப்பர் உருண்டையை உதைத்துக் கொண்டே நடந்தான். 
"அது என்ன சீட்டு, பாவம். உன் கால்லே உதை வாங்கிண்டிருக்கு?"
ஏதோ ஒன்று மனதில் சுட்டது. வெறித்தனமாக ஓடியது மனதின் காட்சிகள். மீனாவுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாடியது... சேர்ந்து படித்தது... அவள் ஸ்கூல் பரிட்சையில் முதலிடம் பெற்றது... மேடையில் நின்று தன்னைப் பார்த்துத் தனியாகக் கை அசைத்தது... அமெரிக்காவில் ஸ்கொலார்ஷிப் கிடைத்து, பிளேனில் ஏரிய பொழுது அவனைப் பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் வடித்தது... இப்பொழுது அந்த கண்ணீர் சந்துருவிடம் விழுந்தது போல் அந்த சீட்டின் மேல் விழுந்தது ஒரு சொட்டு. 
"மழை வரப் போறதே. நீயாவது அந்த அண்ணன் கூட போயிருக்கலாம்."
கலாம். சந்துருவிற்குப் பிடிக்காத இலக்கணக் குறிப்பு. மீனா இங்கேயே இருந்திருக்கலாம்... 
"அப்படித்தான் நடக்களையே இப்போ, என்னப் பண்ணப் போறே?" 
தனக்குத்தானே முணுமுணுத்தது சற்றே அதிகமாக வெளியில் வந்து விட்டது.  எண்ணங்கள் என்னவென்று கூறாத விதம் சந்துருவைப் பார்த்தான் பாரதி. ஒரு புன்னகை அவனின் வாயோரத்தைக் கிள்ளியது.
"இதுக்கென்ன? சேர்ந்து மழைல வீட்டுக்கு போலாம்."
சொல்லி வைத்தது போல் மழை கொட்ட ஆரம்பித்தது. பாரதி மேலே பார்த்து விரிந்த புன்னகையுடன் ஒரு கை நீட்டினான். கைக் குழியில் தண்ணி சேகரித்து, சட்டென்று சந்துருவின் மேல் வீசினான். சந்துருவிற்கு உள்மனதில் பிடித்திருந்தது, ஆனாலும் வெளியில் வெறுப்புடன் உற்று பார்த்தான். என்ன சொல்லி இவனை அடக்க முடியும் என்று தெரியாமல் தவித்தான்.
"நீ என்ன லூசா?"
"ஆமாம்ன்னு சொன்னா, என்ன பண்ணுவே?"
சந்துரு மௌனமானான். மனதிற்குள் சிரித்துகொண்டான். அந்த பேப்பர் சீட்டு இப்பொழுது முழுக்க முழுக்க ஈரமாகி, அதனின் எழுத்துகள் எல்லாம் வழிந்து தெருவின் சாக்கடைக்குள் சென்றன.
"மழை... வரும், போகும். நல்லா பெய்யும், கொஞ்சமா, கஞ்சத்தனமா கொடுக்கும். ஆனாலும், அது வரும்போதெல்லாம் ஏதாவது கொடுத்துத்தான் போர்றது. சரிதானே?" 
பாரதி கைகளை நீட்டி மறுபடியும் கைக்குழிக்குள் நீரை சேகரித்துக்கொண்டான். "வாழ்க்கையும் அப்படித்தான். மேகங்களோட கணக்கா மக்கள் வருவாங்க, போவாங்க, ஆனா எதையோ நம்ம கிட்ட கொடுத்துட்டுதான் போவாங்க." கைகளை சட்டென்று சந்துருவின் முகத்தில் வீசினான். இந்த முறை அவன் முழு சந்தோஷத்துடன் முகத்தில் வாங்கிக் கொண்டான். "அந்த விதத்தில் அவங்க நம்மளை விட்டு எங்கேயும் போகளைத்தானே?"
மேகங்களுடன் சேர்ந்து சந்துருவும் அழதுகொண்டே பாரதியுடன் வீடு போய் சேர்ந்தான். அன்று இறவு வரைக்கும் நிற்கவில்லை மழை.

"ஏன் அழற?"
தன் அறையிலிருந்து வெளியில் வந்த பாரதியை நேராகப் பார்க்க முடியாமல் சந்துரு அவசரமாகப் போர்வை போர்த்திக்கொண்டான். பாரதி மெல்ல கிட்ட வந்து அவனின் முதுகில் ஒரு கை வைத்தான். சந்துருவிற்கு இதமாக இருந்தது.
"மழைல வந்ததனால் ஜலதோஷமா? சூடா ரசம் பண்ணித் தரட்டுமா?"
தலையசைத்தான் சந்துரு.
"நீ ஏன் இன்னும் தூங்கலை?"
"நாளைக்கு ஊருக்குத் திரும்பிப் போறேன்."
போர்வையை முகத்திலிருந்து எடுத்தான் சந்துரு. 
"வாட்? அது குள்ளேயா?"
பாரதி சிரித்து சந்துருவின் தலையை மெல்ல வருட ஆரம்பித்தான். அதுவும் இதமாகத்தான் இருந்தது.
"என் ஃப்ரெண்டு கல்யாணம் நல்ல படியா முடிஞ்சுதே." கண் அடித்தான். "இனிமேல் எனக்கு இங்கே என்ன வேலை, சொல்லு?"
குறும்பு. சந்துரு சிரித்தான். 
"ஊருக்குப் போனாலும் அங்கே இரண்டு நாள்தான் மீதி லீவு. அப்புறம் டிரெயின் பிடிச்சு பார்டருக்கு போயிடுவேன்."
"பார்டரா... அப்படின்னா, நீ ஆர்மி..."
பாரதி சிரித்து நிமிர்ந்து உட்கார்ந்தான்.
"அச்சமில்லை பாடினவனுக்கு அப்புறம் பெயர் வைச்சுட்டாங்க. சொல்லும் படியா ஏதாவது செய்யணும் இல்லை?"
பாரதிக்கு நிஜமாக அச்சம் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவன் கையில் இருந்த மோதிரத்தை வைத்து விளையாடிய விதம் வேறு கதையை சொல்லிற்று.
"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்ன?"
பாரதி மோதிரத்தை விரலிருந்து எடுத்து சிரித்தான். "பானு." பெருமூச்சு விட்டான். "அவளை விட்டு நான் கிளம்பிட்டேன். பார்டருக்கு." தலையசைத்தான், குரலில் சற்றே நடுக்கம்!
"ஏன் அங்கே போனே? யாராவது ஃபோர்ஸ் பண்ணாங்களா?"
"சேச்சே! ஏன் ஃபோர்ஸ் பண்ணுவாங்க?"
சந்துரு மௌனமாணான். மீனாவின் அப்பா அம்மாவுடன் அண்ணனும் அண்ணியும் பேசினது ஞாபகம் வந்தது.
"இதோ பாருங்க, இவ்வளவு திறமையிருக்கிறவளை வீட்டுக்குள்ளே பூட்டி வெச்சுக்கக்கூடாது!"
"ஆமாம், அமெரிக்கால இடம் கிடைச்சிருக்குன்னா நம்மலால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்போர்ட் செய்யணும்."
மீனாவின் அம்மா அப்பா ஒருவையோருவர் பார்த்துக்கொண்டனர்.
"அவளை சப்போர்ட் பண்ணனும்னு எங்களுக்கும்தான் ஆசை... ஆனால், பணம் இல்லையே..."
"இதுக்கென்ன?" பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டிருந்த சீனுவின் தொடையை அன்புடன் தட்டினான் அண்ணன். "மீனா எங்களுக்கும் தங்கச்சி மாதிரி. நாங்க நல்லா சம்பாதிக்கிறோம். எங்களை ஹெல்ப் செய்ய விடுங்க."
அவர்கள் திடுக்கிட்டு திரும்பி மீனாவை பார்த்தனர். 
"உங்க இரண்டு பேருக்கும் பரவாயில்லையா? எங்க மீனு படிப்புக்காக..."
"நோ பிராப்ளம் அட் ஆள்!" அண்ணன் ஈ சிரித்து அவரின் கையை பற்றிக்கொண்டான். "நாங்கள்ளாம் ஏன் இருக்கோம்?"
பாரதி கண்களைக் கசக்கிக் கொண்டான். சந்துருவின் தோளைத் தட்டிவிட்டு எழுந்தான்.
"தூங்குப்பா. நாளைக்கு இரண்டு மணிக்கு எனக்கு டிரெயின்." 
"காலைலையா?"
"சேச்சே! மத்தியானம்தான்." கீழே கிடந்த அண்ணனின் புத்தகத்தை எடுத்து பார்த்தான். "திருப்புகழ் தரிசனம். நீ படிக்கிறையா?"
"இல்லை. என் அண்ணன்..."
அண்ணனின் புக் ஷெல்ஃபில் அழகாக வைத்து வெளியில் சென்றான்.
அடுத்த நாள் காலேஜ் லீவு எடுத்து, பாரதியுடன் எக்மோர் மத்ஸ்யாவில் ரவா தோசை ("கொஞ்சம் ரோஸ்ட்டாவே கொடுப்பா!") சாப்பிட்டுவிட்டு,  இரண்டு மணிக்கு ரெயில் நிலையம் சென்று, அவனை பத்திரமாக ஏற்றிவிட்டு, பிளாட்பாரத்தில் இருந்து டாட்டா காட்டி, "பானு வென்றுவிட்டாள்!" என்று நினைத்துக் கொண்டே திரும்ப வீட்டிற்கு சென்றான் சந்துரு. போகும் வழியில் ஒரு கடையைப் பார்த்து நின்றுகொண்டான்.

வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள் அண்ணனும் அண்ணியும். அண்ணன் படிகளில் உட்கார்ந்திருந்தான். சந்துரு கேட்டைத் திறந்து உள்ளே நுழைய நிமிர்ந்து பார்த்தான். அண்ணி ஜுலாவில் பின் சாய்ந்துகொண்டு மேலே மின்விசிறியில் டகாஷிஸ் காசில் விளையாடிக்கொண்டிருந்த பட்டாம்பூச்சிகளை பார்க்கவில்லை. கண்களை மூடியபடி ஆடிக் கொண்டிருந்தாள்.
"காலேஜ் போய்ட்டு வரியா?"
அண்ணன் மெல்ல எழுந்தான். அண்ணி நிமிர்ந்து சந்துருவைப் பார்த்துத் தனியாக சிரித்தாள்.
"ஆ-ஆமாம்? நீங்க... நாளைக்குத்தானே வர இருந்தீங்க..."
அண்ணன் வெட்கத்துடன் அண்ணியைப் பார்த்தான். அவள் தலையசைத்தாள். சந்துருவின் கையில் இருந்த பொருளைப் பார்த்து கொஞ்சம் வியந்தாள்.
"என்னதிது?"
"ஹெல்மெட். நீங்க இன்னொன்னு வாங்கனும்னு சொல்லிண்டே இருந்தீங்கல்லே?"
சந்துரு அவர்களின் ஸ்கூட்டிக்கு சென்று அந்த ஹெல்மெட்டை அங்கே வைத்துவிட்டு திரும்பி நடந்து வந்த பொழுது மேலே நடந்த பாவமான விளையாட்டைக் கண்டான். மின்விசிறியின் ஸ்விட்சை அணைத்துவிட்டு கதவை சாவி போட்டு திறந்தான். 
"தம்பி... என்ன ஆச்சு..."
"ஸ்ஸ்..." அண்ணனை அண்ணி தட்டி முறைத்தாள். "கேட்டால் கண்ணு பட்டுப் போயிடும்."
"அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாதுடி!"
"ஆனாலும் நீங்க கேட்க கூடாது, நான் விட மாட்டேன்!"
இவர்களின் வாக்குவாதம் நடந்து முடிப்பதற்குள் அவர்களின் இரண்டு சிறிய பெட்டிகளும் உள்ளே சென்று விட்டன. அவர்கள் உள்ளே நுழைய சந்துரு அவர்களைப் பார்த்து சின்னதாக சிரித்தான்.
"நீங்க வரீங்கன்னு தெரியலை, இதோ இருங்க. நான் டீ கொண்டு வரேன்."
அவன் உள்ளே ஓடி சென்றான். அண்ணன் வாய்க்குள் சிரிப்பதைக் கண்டு அண்ணி பெருமூச்சு விட்டாள்.
"நீங்க காஃபிதான் குடிப்பீங்கன்னு சொல்லட்டுமா?"
"வேண்டாம். கண்ணு பட்டுப் போயிடும்."

Comments

Popular posts from this blog

ஜாக்கிரதை!

Dharam Yuddh - 4

Dharam Yuddh - 5