கோதாவரி கோங்குரா - சுவர்ண யக்நோபவீதம்
கீதாஞ்ஜலி
ஏங்கும் கண்களுடன் சண்டி அந்த அவெஞ்ஜர்ஸ் படப் போஸ்ட்டரை பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவனின் காலை இழுக்க "ஓ, பிரியா பிரியாஆஆஆ" என்று அவன் காதில் பாடினேன்.
"சீ! நோ வே! ஏஜ் ஆஃப் அல்ட்ரோன் பார்த்தே ஆகனும்!"
"ஆமாம், ஆமாம். அந்த ஆஸ்திரேலியன் இருக்கான் இல்லை?"
"அவனும் இருக்கான் சரி. ஆனால் கதை நல்லா இருக்குமே!"
நான் சிரித்தேன். என் பைசாவை அவனிடம் கொடுத்தேன்.
"உனக்கு பிடிச்ச படத்துக்கு டிக்கெட் வாங்கிண்டு வா. போ, ரா!"
ஓடாத குறையாக அவன் கௌண்ட்டரிற்கு சென்ற பொழுது நான் ஒரு பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டேன். திருப்பதிக்கு நான் போனதில்லை. பள்ளிக்கூடம் போகும் வழியிலேயே பத்ராசலம் ராமர் இருக்கும் பொழுது, திருப்பதி கோவிந்தன் எதற்கு (சாரி கோவிந்தா). ஆனால் திருப்பதிக்கு போகும் அனைவரும் பதிவு செய்யும் ஒரே "ஜரகண்டி" அனுபவம் நான் அப்பொழுது அந்த கூட்டத்தில் பெற்று விட்டேன். இந்த கூட்டம் அநேகமாக பாகுபலியிலிருந்து வந்தது. "பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றான்?!" என்ற ஆவேச வெறியில் வெளியே வந்திருந்தார்கள். அந்த படக் கடைசியில் இருக்கும் பெரிய போர் சீனிலிருந்து தாவிய காலகேயர்களைப் போல் என்னை மொத்தினார்கள். எதிரில் தோன்றின ஒரு பெண்ணின் மேல் நான் விழப் போனேன்.
"பார்த்து!" என்று கத்தி என்னை தள்ளினாள். இருவரும் கூட்டத்திற்கு வெளியில் விழுந்தோம். அவளின் மணிபர்ஸ் சரிந்து காசு பரவியது. என் கண்ணாடியை தூக்கி மூக்கின் மேல் வைத்தேன். அவளின் முகம் தெளிவானது. அவளைப் பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பு சிரித்துவிட்டு, கிடந்த காசுகளைப் பொறுக்க ஆரம்பித்தேன். என் செய்கையை பார்த்து அவளும் பொறுக்கினாள். எழுந்து அவளிடம் சென்று நான் பொறுக்கின பதினான்கு ரூபாயை கொடுத்தேன்.
"எல்லாம் இருக்குதா?"
ஒரு நிமிடம் என்னை விரிந்த கண்களுடன் சிறிதாக வாயைத் பிளந்து பார்த்தாள். எச்சிலை முழுங்கி அந்த பர்ஸை பார்த்தாள்.
"ஆ... ஐ திங்க்... தாங்க்ஸ்."
"நோ மென்ஷன். உனக்கு ஒன்றும் ஆகலையே?"
"ஆ... ஏமி?"
"கூட்டத்தில் வந்ததனாலே.."
"அது... பாகுபலி..."
"அது தெரியும். நீ ஓகேயா இருக்கியான்னு செக் பண்ணேன்."
தலையசைத்தாள். மெல்ல ஒரு புன்னகை அளித்தாள். அது என்னை ஏதோ செய்துவிட்டது. அவள் தியேட்டரை விட்டு எங்கோ தெருவைத் தாண்டும் வரை அவளை விழிகளால் பின்தொடர்ந்தேன்.
"என்னடா மூஞ்சி இது, து! மாத்தித் தொலை!"
என் கைகளில் பாப்கார்ன் பக்கெட்டை திணித்தான் சண்டி. ஏஜ் ஆஃப் அல்ட்ரான் யாரு பார்த்தார்கள்? நான் அந்த பாப்கார்னை மென்றுக்கொண்டு அந்த பெண்ணின் புன்னகை பற்றி நினைத்தேன். தியேட்டரில் இனிய கனவைக் கண்டேன்.
கண்ணாடி
"புது பொண்ணைப் பார்த்தையா?"
என் புளிஹோராவிலிருந்து மேலே நோக்கினேன். சண்டி தன் வாயில் தால் சாதத்துடன் கேட்டான். என் மனதில் ஒரு புதிய பெண் இருந்தால், ஆனால் அவளை அன்றைக்கு தியேட்டரில் சந்தித்ததற்கு பிறகு பார்க்கவில்லை.
"என் சோசியல் சைன்ஸ் கிளாஸ்ல இருக்கா."
"அண்டே?"
என்னை பார்த்து முறைத்தான்.
"சும்மா சொன்னேன்! நம்ம பள்ளிக்கு யாரு வராங்க புது ஆளுங்க? அல்லூரி சீதாராமராஜு காலனியில இருக்கிற அந்த பெரிய ஸ்கூல்க்குதானே எல்லாரும் போராங்க."
இவன் என்னத்தான் சொல்ல வருகிறான் என்ற குழப்பத்தில் அவனை பார்த்து முறைத்தேன்.
"அண்டே?"
"ஏமி ரா, அண்டே, அண்டேன்னு சொல்லின்டே இருக்கே?"
என் சிரிப்பை ஒரு வாய் புளிஹோரையுடன் அடக்கிக் கொண்டேன்.
"அவளின் நான்னாதான் பிணபல்லே சீதாராமசந்திரசுவாமி கோயிலோட பூஜாரி. அண்டே!"
"ஹையோ. சூப்பர் பா." என்று உணராமல் பதில் அளித்து அவனை பார்த்து கஞ்சத்தனமாக சிரித்தேன். அவன் பின்னால் இருந்த அவளை கவனித்து என் சிரிப்பு தானாக பெரிதானது. சண்டி என் பார்வையையும், அசட்டு சிரிப்பையும் நோக்கி அவளைத் திரும்பிப் பார்த்தான்.
"அண்டே, அண்டேன்னு சொன்னையே, அவதான்டா புது பொண்ணு. கீதாஞ்ஜலி. சூடு!"
எவ்வளவு ஒரு பொருத்தம்? நான் விரும்பிப் பார்க்கும் படத்தின் பெயரா அவளுக்கு? அடுத்த முறை தியேட்டரில் அந்த படத்தை போடும் பொழுது கண்டிப்பாக இவளை அழைத்துப் போக வேண்டும் என்று சங்கல்பம் போட்டுக் கொண்டேன்.
"பாரு அவளை? ஏதோ திறு-புறுன்னு முழிச்சிண்டு இருக்கா?"
அவள் ஒரு கண்ணாடியை தன் மிடியில் துடைத்துக் கொண்டிருந்தாள். அது வழியாக முறைத்து பார்த்து மறுபடியும் துடைத்தாள். ஒரு வேளை ஒழுங்காக தெரியவில்லை போல். நான் எழுந்தேன்.
"எக்கட..."
"ஒக்க நிமிஷம் ரா." அவள் இருந்த இடத்திற்கு ஓடிச் சென்று வார்த்தை ஒன்றும் கூறாமல் சிரித்தேன். கண்ணாடியை அவளிடம் வாங்கிக் கொண்டு என் கண்ணாடிக்காக வைத்திருந்த சுத்தம் செய்யும் ஸ்பிரேயும் துணியும் எடுத்து பளிச்சென்று துடைத்து கொடுத்தேன். அது வழியாக பார்த்து குபுக்கென்று சிரித்தாள்.
"தாங்க் யூ!"
"நோ மென்ஷன்." திரும்பி சண்டியைப் பார்த்தேன். அவன் வயிறு எறிவது இவ்வளவு தூரத்திலிருந்தும் தெரிந்தது. திரும்பி கீதாஞ்ஜலியை பார்த்தேன். அந்த கண்ணாடியை பைக்குள் வைத்துக் கொண்டிருந்தாள்.
"நுவ்வு... கீதாஞ்ஜலி?"
என்னை நோக்கி ஒரு புன்னகை கொடுத்தாள்.
"அவுனு. ஆனால் என்னை எல்லாரும் கீதுன்னு கூப்பிடுவாங்க."
அழகான பெயரை ஏன் இப்படி மோசமாக சுறுக்கிரார்கள் என்று எனக்கு கோவம் வந்தது, எல்லோர் மீதிலும். அவளிடம் நாசூக்காக என் வருத்தத்தை மறைத்தபடி சொன்னேன்.
"கீதாஞ்ஜலியும் நன்னாத்தான் இருக்கு."
"ஆனால் அந்த பழைய படம் ஒன்னு இருக்கே, சுத்த போர்! எங்கம்மா நான்னா அந்த ஹீரோயினுக்கு அப்புறம்தான் என் பெயர் வைச்சாங்க."
என் ஆசை சங்கல்பம் அந்த நிமிடமே வானில் பறந்து டாட்டா காட்டி செல்வதை உணர்ந்தேன். பரவாயில்லை. அவளுக்கு பாகுபலி பிடித்திருந்ததா என்று எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். இரண்டாவது முறையாக அழைத்து செல்கிறேன்.
"என் பெயர் என்னன்னு கேட்கமாட்டியா?"
என்னை மேலும் கீழும் பார்த்தாள். சிரிப்பை அடக்கிக் கொண்டு, "மீ பேர் ஏமி?"
"துருவா. என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம்."
"அப்படியா? சரி." யோசித்தாள். "பிரகாஷ்ன்னு கூப்பிடட்டுமா?"
சிரித்துக் கொண்டே அவளின் தோழிகளுடன் சேர்ந்து கரைந்து போனாள். திரும்பும்பொழுது ஹரியிடம் இடித்தேன்.
"ஏமி ரா, ஏமாயிந்தி?"
"ட்ச், கண்ணாடியை காணும்!"
"எங்கே டா வைச்சே?"
"தெரிந்தால் நான் ஏன் இப்படி எல்லார் மீதிலும் மோதிண்டு இருப்பேன்? சோசியல் சைன்ஸ் கிளாஸ்ல எடுத்து டெஸ்க் மேலே வைச்சேன், துடைக்க துணி எடுக்க ஒரு நிமிஷம் குனிஞ்சேன்! அப்போதிலிருந்து..." என் தோளின் மேல் கை வைத்தான். "எங்கேயாவது பார்த்தேன்னா எடுத்துக் கொடு ரா."
"அலாகே ரா. குட் லக்."
"டேய், அவள் கைல என்ன இருந்தது?"
சண்டி நம் பக்கத்தில் வந்திருந்தான். நான் முறைத்தேன்.
"அது அவளோட கண்ணாடி."
"எப்படி அவ்வளவு ஷியூரா சொல்லற?" கைகளை மடித்துக் கொண்டான். "கண்ணாடியை துடைச்சுக் கொடுத்த உடனே போட்டுக்க வேண்டியதுதானே? அவள் என்ன செஞ்சா? பைக்குள்ள வைச்சா."
"சரி விடு ரா. எல்லார்க்கும் என்ன என்னை மாதிரி கர்மாவா, எப்போதும் கண்ணாடி போட்டுண்டு சுத்த? ரீடிங் கிலாஸஸா இருக்கும்!"
சண்டி தலையசைத்தான். தன் விரலை முகத்திற்கு பக்கத்தில் கொண்டு வந்தான்.
"எனக்கு ஏதோ சரியாப் படலை."
அவன் கையை கீழே தள்ளினேன். "நகத்தை கடிக்காதே. உன் டிடெக்டிவ் வேலையெல்லாம் இங்கே தேவையில்லை."
அன்று என் சோசியல் சைன்ஸ் பீரியட்டில் இனிய கனவு கண்டேன்.
கணையாழி
மாலை சூரியன் பட்டும் படாமல் என் மேல் விழ நான் சண்டியின் வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தேன். லைபிரெரி பக்கத்தில் ஓடின சாக்கடையை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள் கீதாஞ்ஜலி. சண்டியின் வீட்டிற்கு செல்லும் ரைட்டை எடுக்காமல் ரோட்டைத் தாண்டி அவளிடம் சென்றேன்.
"உன்னை போன்ற ஒரு அழகு இந்த சாக்கடை பக்கத்தில் வீற்றிருப்பது ஒரு தாமரையை பெண்ணாக பார்ப்பது போல் அல்லவா இருக்கிறது?"
என் ஆசை மொழிகளை கேட்டு திடுக்கிட்டு பின் விழ போனாள். அவளின் கையை இறுக்கப் பிடித்தேன். தாமரையின் கண்ணம் சிவந்தது. தூக்கி மேலே உட்கார வைத்து அவளின் பக்கத்தில் அமர்ந்தேன்.
"இங்கே என்ன செஞ்சிண்டு இருக்கே?"
"மோதிரம்..."
"உந்தா? விழுந்துத்தா?" நான் உள்ளே எட்டி பார்த்தேன். மதியம் சாப்பிட்ட பருப்பு சாதமும் வெண்டைக்காய் கரமேதும் என்னுள் கரைந்தது. பின் வந்தேன்.
"அவுனு. துருவா, நீ எனக்கு எப்போமே உதவி செய்வே இல்லை? இன்னிக்கி..."
என்ன பன்ன சொல்கிறாள்? கையை உள்ளே விடவா? நானா? மறுபடியும் எட்டிப் பார்த்தேன். இப்பொழுது ஒரு மோதிரத்தின் உருவம் தெரிந்தது. பாவமாக மிதந்து கொண்டிருந்தது.
"அதோ! அக்கட சூடு!"
அக்கட நான்தான் பார்த்துவிட்டேனே! என்ன செய்ய சொல்கிறாள்? கண்களை மூடிக் கொண்டேன். என் குல தெய்வம் ராமனையும் சீதம்மாவையும் சேர்த்து வைத்த அருமை கணையாழியை யோசித்துக் கொண்டேன். என் அம்மாவின் இஷ்ட தெய்வம் ஆஞ்சநேயரை மனதில் வைத்துக் கொண்டு ஒரு தாவு தாவினேன்.
என் கை மட்டும் உள்ளே குதித்து அந்த மோதிரத்தை காப்பாற்றியது. அதை அவளின் முன் நீட்டினேன். குபுக்கென்று அவளின் அழகான சிரிப்பை சிரித்தாள். எனக்கு வேறு ஏதோ குபுக்கென்று வந்துவிடும் போல் இருந்தது.
"வாவ்! துருவா தாங்க் யூ! தாங்க் யூ சோ மச்!" என்று என் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டாள். இந்த தாமரையும் சிவந்து விட்டது.
பக்கத்தில் இருந்த ஒரு பம்ப் செட்டில் தண்ணி பிதுக்கி என் கையையும் மோதிரத்தையும் அலம்பினாள். ஒரு அழகான வெண்ணிற முத்து உதித்தது.
'ஏண்டா, கீதாஞ்ஜலியும் துருவனும் சேருவதற்கு சாக்கடையிலா போய் விழுவாய்?' என்று மனதிற்குள் அந்த முத்து மோதிரத்தை திட்டினேன். பாதி கறைந்திருந்த வெண்டைக்காயை எப்படியோ தேற்றிவிட்டேன், அதுவும் சமத்தாக திரும்பி உள்ளே சென்று தன் வேலையைப் பார்த்தது.
"அழகா இருக்கு, இல்லை?"
"உன்... உன் பிர்த் ஸ்டோனா?"
"ஆ..." யோசித்தாள். என்னை உற்று நோக்கி தலையசைத்தாள், ஆமாமென்று. "யெஸ், இது வந்து..."
"கடக ராசி. முத்து."
என்னைப் பார்த்து திகைத்தாள். மறுபடியும் தலையசைத்தாள். "யெஸ், யெஸ். நான் கடகம்தான்."
அந்த மோதிரத்தை பல பலவென்று துடைத்து விட்டு தன் பையில் போட்டுக் கொண்டாள். என் மனதில் ஏதோ பட்டது. இது என்ன வழக்கம், என்ன எடுத்து கொடுத்தாலும் அப்படியே பையில் போட்டுக்கொள்வது?
சண்டியின் வீட்டிற்கு சென்றதும் முதல் காரியம் என் கைகளை லைஃப்போயால் துவைத்து எடுத்தேன். அப்பொழுதுதான் தொண்டையை அடக்கிய பித்தம் கல்லீரலிற்கு திரும்பிச் சென்றது.
கல்லீரல்
கல்லீரலை பற்றி பேசும் பொழுது ஒரு முக்கியமான நபரை அறிமுகப் படுத்த வேண்டிய அவசியம் வந்து விட்டது. பிணபல்லே சத்தியம் ராஜு. அவனின் குடும்பம் கீதாஞ்ஜலியின் அக்கிரஹாரத்திலிருந்து இரண்டு தெரு தள்ளி. ஆனால் அவனோ லைபிரெரிக்கு எதிர்த்து இருந்த டீ கடைக்கு பின்னால் இருந்த (சின்ன கள்ளு, பெத்த லாபம்) சிறிய டாஸ்மாக்கில் குடி இருந்தான். என் அக்காவின் தோழி அனிதா அவனின் மகள். காலேஜ் படிப்பை முடிக்கும் வரை தினமும் அவனை இரவு பதினொன்று மணிக்கு வீட்டிற்கு இழுத்துவிட்டுத்தான் படுக்கப் போவாள். இந்த வருடம் பத்ராசலத்தில் வேலை கிடைத்து, அம்மாவும் பொண்ணுமாக அந்த அநாவசிய ஆம்பலையை வீட்டை விட்டு துறத்தின காட்சி பிணபல்லே மக்களின் மனதுகளில் நீங்கா வரம் பெற்றிருக்கிறது. பிணபல்லே சீதாராமனிற்கும் ஜானகி தேவிக்கும் ஒரு பட்டு வேஷ்டி, பட்டு சேலை, தன் முதல் சம்பளத்தில் வாங்கிக் கொடுத்தாள், அனிதா அக்கா. வேண்டுதல் போல்.
அவ்வளவு புகழ் பெற்றிருந்த சத்தியம் ஒரு மதியம் வீதி ஓரத்தில் போதையில் இருந்ததையும் அவனின் எதிரில் கீதாஞ்ஜலி உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டேன். அவளிடம் ஓடி சென்றேன்.
"ஏமி மாமா இதி... உங்களுக்கு கிடைக்கிற கொஞ்சம் காசை வைச்சு எங்கேயாவது நல்ல சாப்பாட்டா சாப்பிடக் கூடாது? போதையை விட போஜனம்தான் பெட்டர், என்ன?"
அவளின் கையை பற்றி இழுத்தேன்.
"கீதாஞ்ஜலி! இவனிடம் பேசாதே! இவன் மோசமான, பொறுப்பில்லாத குடிகாரன். அவன் கர்மத்தை அனுபவிக்க விடு. நீ என்னோட வா."
என் கையை உதறி விட்டு அவனைப் பார்த்து டாட்டா காட்டினாள்.
"அப்புறம் பேசுலாம், என்ன?"
அவன் மெதுவாக வாயை திறந்து ஏதோ சொல்லப் போனான். அதற்குள் அவளை இழுத்து சென்று விட்டேன்.
"துருவா, வதலு!"
மறுபடியும் உதறினாள். என்னைப் பார்த்து முறைத்தாள்.
"என்ன பிரச்சினை இப்போ? அவன்கிட்ட எல்லாருக்கும் அப்படி என்ன பயம்? இந்த ஊர் ராமருக்கே..."
"தெய்வத்தை பழிக்காதே! யாருக்கும் அவன் மேலே பயமில்லை. ஜஸ்ட்... அவன் கூட சம்மந்தம் வைச்சுக்க வேண்டாம்னு..."
"எனக்கு இரண்டும் ஒண்ணாத்தான் தோணுது."
அன்று இரவு எனக்கு ஒரு கெட்ட கனவு வந்தது.
கனவு இரவு
சத்தியம் அனிதா அக்காவின் சிகப்பு நிற ஸ்கூட்டியில் ஊரை சுற்றிக் கொண்டிருந்தான். கோதாவரி நதிக்கரை பக்கத்தில் கீதாஞ்ஜலி நின்று கொண்டிருந்தாள். அவன் அவளின் அருகினில் சென்று நான் முன் கூறிய தாமரை வசனத்தை சொன்னான். அவள் குபுக்கென்று சிரித்துவிட்டு நதிக்குள் எதையோ காண்பித்தாள். அவன் உள்ளே தாவினான். நிறைய நேரம் கழித்தும் வெளியே வரவில்லை. கீதாஞ்ஜலி அங்கே நின்ற அனிதா அக்காவின் ஸ்கூட்டியை அவளுடைய ஹேர் பின்னை வைத்து ஆன் செய்து, ஓட்டி சென்று விட்டாள். கனவு நடக்கும்பொழுது முழுக்க முழுக்க "ஜகட ஜகட ஜகடம்" பாட்டு, பின்னனி இசையாக ஓடிக் கொண்டிருந்தது. இது என்ன கர்மம் பிடித்த கனவு என்று எழுந்தேன். நல்ல வேளை, கனவு என்று தெளிவாக தெரிந்ததே. அது வரைக்கும் கொஞ்சம் நிம்மதி.
கண்களைக் கசக்கிக் கொண்டே பூஜை அறைக்கு சென்றேன். எங்களின் ஸ்மால் ஸ்கேல் பத்ராசலம் ராமர் விக்கிரஹத்தின் முன் விழுந்தேன். அழுதேன். சத்தியம் செய்தேன். "இனிமேல் இனிய கனவுகளை எல்லாம் என்றும், எங்கும் கானமாட்டேன், யோசிக்கக் கூட மாட்டேன். இந்த கனவை மறக்க வைத்து விடு, நா பங்காரு தன்ட்ரி கதா?"
ஞாபகம் போகவில்லை. மரு ஒளி பரப்பு தொடங்கியது. மறுபடியும் "ஜகட ஜகட ஜகடம்" இண்டர்லூட் ஆரம்பித்தது. ராமனைப் பார்த்து முறைத்தேன். மெதுவாக எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் என்னைப் பார்த்து சிரித்தான்.
"என் நான்னா மாதிரிதான் இருக்கே நீயும். யூஸ்லஸ்! நான் எங்கம்மாவை கேட்கிறேன்." ராமனிடம் டூ செய்துவிட்டு சீதம்மாவிடம் திரும்பினால் வெளியிலிருந்து ஒரு சத்தம். வேண்டும் என்றே பூஜை அறையின் ஜன்னலில் யாரோ தட்டினார்கள். மெல்ல போய் திரும்ப தட்டினேன். மரு பக்கத்தில் இருந்தவன் சிறிது யோசித்து "ஓ... பிரியா பிரியா" விசில் செய்தான். இல்லை, செய்தாள்! கதவை அவசரமாக திறந்தேன். உதட்டை மென்று கொண்டு நின்றிருந்தாள்.
"உதட்டை கடிக்காதே! இப்புடு ஏமாயிந்தி? செப்பு."
"இந்த நேரத்துல நீ முழிச்சிண்டு இருப்பேன்னு கொஞ்சம் டவுட்டாத்தான் இருந்தது."
நான் திரும்பி ராமனை பார்த்தேன். 'இதற்காகத்தான் என்னை எழுப்பினாயோ?'
"துருவா, நான் என்ன சொன்னாலும் செய்வையா... ஐ மீன், உனக்கு என்னை ஹெல்ப் பண்ண பிடிக்கும் தானே?"
"யெஸ், இதுல என்ன இருக்கு? செப்பம்மா, நீக்கு ஏம் காவாலி?"
கொஞ்சம் மனதில் பயந்தேன். கோதாவரிக்குள் குதிக்க சொன்னாள் என்றால்? காது, காது. ராமன் அவ்வளவு சுலபமாக விட மாட்டான்.
மங்கலாக ஏதோ ஒரு மஞ்சள் கயிர் போல் எடுத்து என்னிடம் நீட்டினது தெரிந்தது. கண்ணாடி என் அறையில் இருந்ததால் என்னால் முடிந்த வரை புரிந்து கொண்டேன்.
"ஐயோ, கீதாஞ்ஜலி! நாம இரண்டு பேரும் பத்தாவது படிக்கிறோம்!"
"சீ! இதி மங்களசூத்திரம் காது!" அதில் ஒரு சிடுக்கை கழற்றி இரு கைகளாலும் நீட்டி காட்டினாள். இப்பொழுது சரியாக புரிந்து கொண்டேன்.
"சுவர்ண யக்நோபவீதம்!"
அவள் மௌனமாக தலையசைத்தாள், ஆமாமென்று.
சுவர்ண யக்நோபவீதம்
அவளின் சைக்கிளில் இருவரும் பிணபல்லே சீதாராமசந்திரசுவாமி கோவிலிற்கு சென்றோம். கீழே என்ன கிடக்கிறது என்று தெரியாமல் தாரு மாறாக ஓட்டின விதம் அவள் என் முதுகில் இடித்து இடித்து சறிவதை ஏற்படுத்தியது. ஒரு பகுதி அவளின் மேலும் ஒரு வித வெறுப்பு வந்து வேண்டும் என்றே செய்தேன். இது எப்படி அவள் கைக்குள் வந்தது என்று தெரிந்துகொள்ள கொஞ்சம் ஆவலாக இருந்தது. ஆனால் வாய் விட்டு கேட்க என் ஆண்மை விடவில்லை.
"துருவா, ஐம் சாரி! ஐம் எ கிலெப்டோ மேனியாக்! எல்லார் கிட்டேயும் ஏதாவது திருடிண்டே இருப்பேன்! ஹரியோட கண்ணாடி, ஷாலினியோட மோதிரம், எவனோ ஒருவன் தியேட்டருக்கு வந்தவனோட பர்ஸ்! என் அம்மா நான்னாவுக்கு தெரியாது. நான் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிருந்தேன்னு நினைச்சேன், பார்த்தா இப்போ கடவுள் மேலேயே கை வைச்சுட்டேன்! ஐயோ, தேவுடா!"
"புலம்பாதே! ஒன்னும் ஆகாது."
"நான் கடக ராசி இல்லை!" இரண்டு விக்கள்கள் விக்கினாள். "மிதுன ராசி! இரண்டு முகம்!"
"ஷூ!"
என் அதட்டலில் அவளின் புலம்பல் அந்த இருட்டிலும் கண்ணாடியில்லாமல் ஓட்டும் என் கவனத்தில் சேதம் செய்து கொண்டிருந்தது. என் சொல்லை கேட்டு வாய் மூடி விட்டாள். நிம்மதியாக சிறிது தூரம் ஓட்டினேன். கோயில் தெருவில் திரும்பினேன். பாதி நிலா எங்களை பார்த்து வெற்றித் திருநாமம் இடுவது போல் எங்களுக்கு பாதை காட்டியது. கோயில் வாசலில் நிறுத்தி இருவரும் கோபுரத்தின் நிழலில் மெல்ல இறங்கினோம்.
"இப்ப என்ன?"
"துருவா, நான் முக்கியமா உன்னை ஏன் கூப்பிட்டேன்னா எனக்கு அது வந்துடச்சு. இல்லைன்னா நானே உள்ளே கொண்டே போய் வைச்சிருப்பேன்."
அக்காவிற்கு மாதா மாதம் வருமே, அது வந்து விட்டது போல்.
"இதிகோ." என்று பெரிய கதவின் கீழ் ஒரு சிறிய கதவைக் காட்டினாள். அதில் நான் பத்துவேன் என்று அவள் மட்டும்தான் நம்பியிருப்பாள்.
"உள்ள போய், ராமர் சந்நிதியை திறந்து, பூணூலை அவர் மேல வைச்சுட்டு, திரும்பி வெளியில வரணும், கரெக்டா?"
"யெஸ், தாட்ஸ் இட்!" என்னை பார்த்து ஈ என்று சிரித்தாள். நடுங்கும் விரல்களுடன் அந்த சிறிய கதவைத் திறந்தாள். மிகவும் சமத்தாக சத்தமே போடாமல் திறந்தது. சீக்கிரம் இதை முடித்து விடலாம் என்கிற மன உறுதியுடன் உள்ளே நுழைந்தேன். என் தலையும் தோளும் சென்றுவிட்டது.
"ஐயோ, இதிகோ யக்நோபவீதம்!"
கையை மட்டும் பின்னாடி நீட்டினேன். அதை என் கைகளில் வைத்துவிட்டு விரல்களை பார்சல் ராப் செய்வது போல் மூடினாள். என் இடுப்பையும் ஒரு காலையும் அந்த கதவிற்குள் செலுத்தினேன்.
"ஐயோ, சந்நிதி சாவி!"
மோசமாக இடுப்பை திருப்பி, ஒரு கையை சாவிக்காக நீட்டினேன். என் கையில் வைத்து விட்டு குனிந்து எட்டிப் பார்த்து சிரித்தாள்.
"ரொம்ப நேரமா கஷ்டப்பட்டுண்டு இருக்கே, டூ யூ நீட் ஹெல்ப்?"
இன்னொரு கால் மாட்டி இருந்தது. பெருமூச்சு விட்டேன்.
"நீ உதவினா நல்லா இருக்கும்மா."
சிரித்துக் கொண்டே என் காலை இன்னமும் மடக்கி உள்ளே செலுத்தினாள். கோயிலின் தரையில் விழுந்தேன். சில பிராணிகளின் மாநாட்டை களைத்திருப்பேன் போல், சர சர வென்று சத்தம் போட்டுக்கொண்டு மறைந்து சென்றது. அவைகள் பிராணிகள் என்றே நம்புவோம் (கோவிலிற்குள் வேறென்ன வரும்?). மெல்ல எழுந்து என்னை தட்டிக்கொண்டேன். என் கால் காலி. இனிமேல் இரண்டு மாதத்திற்கு ஒழுங்காக நடக்க முடியாது என்று குறிக்கும் ஒரு சுள் சென்றது. அவளிடம் நொண்டிப் போனேன்.
"நீ இங்கேயே இருப்பையா?"
"யெஸ், டோண்ட் வர்ரி!" ஈ என்று மறுபடியும் சிரித்தாள். "இங்கே நான் காவலுக்கு நிக்கறேன்."
சிரித்தேன். காவலிற்கு, இவளா?
இருட்டில் நான் கோயில் சென்றதில்லை. எக்ஸாம்ஸின் பொழுது நரசிம்மரின் மண்டபம் படிப்பதற்கு நல்ல இடமாக இருக்கும். புதிதாக பின்னாடி கோநேரியை ஒட்டி கோதாவரி தேவிக்கு ஒரு சந்நிதி செய்திருந்தார்கள். பெரும்பாலும் அங்கேதான் இப்பொழுது படிப்போம், கோநேரியிலிருந்து வந்த தண்ணீரின் சரசங்களைக் கேட்டுக்கொண்டு, காற்று வீச்சு முகத்தில் பட்டுக்கொண்டு. நரசிம்மரை கழற்றி விட்டோம்.
கோதாவரி நதிக்கரைக்கு செல்லும் கேட்டை நொண்டிக்கொண்டே தாண்டினேன். ஒரு மெல்லிய காற்று வந்து என் மேல் பட்டது. என் நடுங்கும் விரல்களை சமாதானப் படுத்தியது. ஆஞ்சநேயரின் சந்நிதிக்கு மேல் இருந்த சுந்தர காண்டம் பெய்ண்டிங்கை ஒரு நிமிடம் நின்று பார்த்தேன். கைகளைக் கூப்பிக்கொண்டு, "நான் ஒரு தவறும் செய்யவில்லை. இது ஒரு ரிடர்ன் மிஷன்." என்று அந்த பெய்ண்டிங்கில் இருந்த ஆஞ்சநேயருக்கும் சீதம்மாவிற்கும் சொன்னேன். ராமர் சந்நிதியின் மண்டபத்திற்குள் நுழைந்தேன்.
பிணபல்லே சின்ன கிராமம் தான். பக்கத்தில் இருந்த பத்ராசலத்தினால் நிழலில் தங்கும் கிராமம். அருமையான கோயில், அற்புதங்கள் புரியும் விளையாட்டு கடவுள்கள். அந்த சந்நிதி முழுக்க இந்த ராமனின் பெருமைகள், சாகசங்கள், பிணபல்லே மக்களிடம் செய்த குறும்புகள், எல்லாம் எழுதியிருந்தது. நான் தெலுங்கு ஸ்கூலில் படித்து இங்கே வந்து படிப்பேன், என் திறமையை சோதிக்க. அப்பொழுது ஒரு முறை படித்தது தான் இந்த யக்நோபவீதத்தின் கதை.
பத்ராசலத்தில் ஶ்ரீராமதாசு கோவிலை கட்டி முடிக்கும் நிலையில் இருந்தார். பக்கத்தில் இருந்த கிராமங்களில் இருக்கும் தட்டாங்களை அழைத்து, "என் ராமருக்கு இந்த கங்கணம், என் சீதம்மாவிற்கு அந்த மூக்குத்தி" என்று வேலை கொடுத்திருந்தார். அப்பொழுது பிணபல்லேயிலிருந்த கிருஷ்ணன் என்ற ஒரு தட்டான் ராமருக்காக ஏதாவது ஒன்று அளிக்க வேண்டும் என்று இந்த யக்நோபவீதத்தை செய்தார். அங்கே சென்று ராமதாசுவிடம் இதை அற்பணிக்களாம் என்று பார்த்தால், அந்த ராமர் ஏற்கனவே ஒரு சுவர்ண யக்நோபவீதம் அணிந்திருந்தார். ஒன்றும் சொல்லாமல் வருத்தத்துடன் திரும்பி வந்தார் கிருஷ்ணன். அன்று இரவு, பிணபல்லே ஜானகி தேவி பூஜாரியின் கனவில் தோன்றினாள்.
"என் கணவன் நிறைய நாட்களாக ஒரே பூணூலை போட்டுக் கொண்டிருக்கிரார். அவருக்கு உன் ஊரின் தட்டான் கிருஷ்ணன் செய்த புது ஸ்வர்ண யக்நோபவீதத்தை கொடு." என்று சொல்லி மறைந்துவிட்டாள். பூஜாரி அடுத்த நாள் காலையில் கிருஷ்ணனிடம் சென்று, விவரத்தை எல்லாம் சொல்லி, அடுத்த நல்ல முகூர்த்தத்திலேயே இந்த ராமருக்கு புது பூணூலை அளித்துவிட்டார்கள்.
பிணபல்லே சீதாராமசந்திரசுவாமிக்கும் ஜானகி தேவிக்கும் இது மிகவும் சிறிய அறிமுகம்தான்.
அப்பேர் பட்ட யக்நோபவீதம், இப்பொழுது என் கையில் தங்கியது.
ராமர் சந்நிதியை திறக்கும் பொழுது என் கை நடுங்கவில்லை. ஆனால் கதவை தள்ளின பொழுது அது விட்ட பெரிய கொட்டாவி (எண்ணெய் வேண்டும் என்று குறிக்கும் சத்தம்) கொஞ்சம் இதயத் துடிப்பை அதிகரித்தது. நிலவின் வெளிச்சம் ராமரின் மேனியில் விழ வேண்டும் என்கிற ஆர்வத்தில் வெளியிலிருந்து உள்ளே ஓடி வந்தது. இவரின் புன்னகை என்னை ஈர்த்தது. ஆண்களுக்கே ஆசை காட்டும் அழகு, என்னையும் அந்த இரவின் சிறப்பு தரிசனத்தின் பொழுது வீழ்த்திவிட்டது. வந்த காரியம் என்ன என்று ஒரு வெளவால் கிரீச் சத்தம் போட்டு என்னை எழுப்பி ஞாபகப்படுத்தியது. அவரின் மார்பின் மீது அந்த யக்நோபவீதத்தை எனக்கு தெரிந்த அளவு வைத்துவிட்டு, பின்னால் நின்ற மூலவரின் கால்களை எட்டிப் பார்த்தேன். மூலவர் கால் தரிசனம் பெறுவது கஷ்டம் என்று படித்திருக்கிறேன். இது ஒரு அரிய வாய்ப்பு. என் ஒரே வாய்ப்பு. கீழே விழுந்து அவர் பாதங்களை, சீதம்மாவின் பாதங்களை, லக்ஷ்மணின் பாதங்களை, ஆஞ்சநேயரின் பாதங்களை தொட்டு விட்டேன். அவர்கள் எல்லோருக்கும் டாட்டா காட்டி வெளியே ஓடினேன். கதவை சாற்றி, பூட்டினேன். அந்த சிறிய கதவை யோசித்தாலே எனக்கு கால்கள் வலிக்காரம்பித்தது.
"பரவாயில்லையே, இவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டே?"
"எனக்கு தூக்கம் வருதே." உடம்பை எப்படியோ வளைத்து மறுபக்கம் அவள் கையை பற்றினேன். "கீதாஞ்ஜலி, இழு!"
அவள் இழுத்த வேகத்தில் நான் சைக்கிள் பக்கவாட்டில் விழுந்தேன். சமாளித்துக் கொண்டு எழுந்தேன். கால்களில் முன்னாடி சுற்றியிருந்த அந்த வலி இப்பொழுது காணாமல் போயிற்று. ஆனாலும் கண்கள் சொக்கிய நிலையில் சைக்கிள் பண்ணமுடியுமா என்ற சந்தேகத்துடன் சீட்டில் உட்கார்ந்தேன். அவள் என் தோளைப் பிடித்தாள்.
"நான் சைக்கிள் பண்ணட்டுமா?"
நான் அவளைப் பார்த்தேன். நன்றி உணர்ச்சியுடன் என்னைப் பார்த்து சிரித்தாள். தலையசைத்தேன்.
"யெஸ், பிளீஸ்."
அவளின் தோளில் சாய்ந்து பாதி உறங்கிவிட்டேன்.
குறும்பும் குழப்பமும்
சண்டி என் வீட்டிற்கு காலையிலேயே வந்து எனக்காக காத்துக்கொண்டிருந்தான். அம்மா எனக்கு செய்து வைத்த டீயை அவனுக்கு கொடுத்துவிட்டாள்.
"நாக்கூ?"
"இன்னும் கொஞ்சம் நேரம் முன்னாடி எழுந்திருந்து வந்திருக்கலாம். இவன் வந்துட்டான்." அப்பா பேப்பர் படித்து டீ குடித்தார். அம்மா டீவீயை ஆன் செய்து எஸ். வீ. பீ. சீயில் வந்து கொண்டிருந்த திருப்பதி நேரலையை பார்க்க ஆரம்பித்தாள். நான் சண்டி பக்கத்தில் உட்கார்ந்தேன்.
"ஏமி ரா, கண்ணெல்லாம் இப்படி சிவந்திருக்கு? ஒழுங்கா தூங்கலையா?"
அவனின் கவலைக்கு நான் நன்றி சொன்னேன். ஆனால் அந்த இரவின் நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த பிணபல்லேயில் இருக்கும் ஆறு பேருக்குத்தான் தெரிந்திருக்க வேண்டும். (அவர்கள் யார் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள், உங்களுக்கே தெரியும்.)
அவனின் டீயை குடித்து முடித்தவுடன் நாம் இருவரும் மொட்டைமாடிக்கு சென்றோம். அங்கிருந்து முழு பிணபல்லே தெரியாவிட்டாலும், ஒரு அறுபத்தி ஐந்து சதவீதம் தெரியும். பத்ராசலம் கோபுரம் தூரத்தில் தெரியும். இன்றைக்கு சீதாராமசந்திரசுவாமி கோவிலின் வாசலில் ஒரு பெரிய கூட்டம் தெரிய வந்தது.
"என்னடா நடக்குது அங்கே?" விறு விறு என்று படிக்கீழ் செல்ல ஆரம்பித்தான் சண்டி. "ரா, சூத்தம்."
மனதில் ஏதோ குத்தியது. இந்த ராமன் விளையாட்டுக்காரன் ஆயிற்றே. சாதாரணமாக கிருஷ்ணன்தான் எல்லாம் செய்வான் என்று படித்திருக்கிறேன். இந்த ராமரிற்கு மட்டும் என்ன வேண்டுதலோ, இப்படி இருக்கிறார். சண்டியின் சைக்கிளில் கோவிலிற்கு போகும் வழி முழுக்க ராம ரக்ஷா ஸ்தோத்திரம் சொல்லிண்டிருந்தேன். இந்த குறும்பு பிடித்த பிணபல்லே ராமரிடம் பக்கத்து ஊர் பத்ராசலம் ராமர் காப்பாற்றுவான். 'ஐயோ, அவனா? கோவிலைக் கட்டிக்கொடுத்தும் ஆயிரக்கணக்காக மனதை உருக்கும் பாடல்களை இயற்றிய இராமதாசுவை சிறையில் போட்டு சித்திரவதை செய்தவனையா வேண்டிக்கொள்கிறாய்' என்று என்னையே திட்டிக்கொண்டேன். எது நடக்கிறதோ நடக்கட்டும் என்று என் மனதில் ஒரு சிறிய வசனம் உதித்து என்னை ஆசுவாசப் படுத்தியது. கோவில் வெளியில் நின்ற கூட்டத்தை அடைந்தோம்.
"என்ன கொடுமை இது?"
"ரொம்ப அவசகுணமா இருக்குதே!"
"என்ன நடக்கப் போகிறதோ?"
தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தார் ராஜகோபாலு மாமா (கீதாஞ்ஜலியின் தந்தை, கோவில் பூஜாரி). சண்டி அவரிடம் மிக தைரியமாக சென்றான். நான் கூட்டத்திலேயே ஒளிந்து கொண்டேன். ஒரு வேளை அவளின் கிலெப்டோமேனியா என்னையும் தாக்கியிருந்தால்? என்னை அறியாமல் எதையோ எடுத்து விட்டேனா, சந்நிதியிலிருந்து வெளியே வரும் பொழுது? ஒளியின் வேகத்தில் ஒடின என் எண்ணங்கள். அடக்க முடியாமல் மறுபடியும், செகண்ட் ரவுண்ட் ராம ரக்ஷா ஸ்தோத்திரம் ஆரம்பித்தேன்.
"மாமா, ஏமாயிந்தி?"
பெருமூச்சு விட்டார்.
"இன்னிக்கி காலை கோவிலைத் திறந்து உள்ளே போனேன். எல்லாம் சரியாத்தான் இருந்தது. ஆஞ்சநேயர், நரசிம்மர், ரெங்கநாதர் சந்நிதி எல்லாம் திறந்துட்டு, ராமர் சந்நிதிக்கு போறேன்."
என்னடா இவ்வளவு பில்ட் அப்பு? எதையாவது மறந்து அங்கேயே வைத்து விட்டேனா? ஒரு வேளை என் கண்ணாடியை...?! இல்லை இல்லை. அதை என் அறையில் மறந்து விட்டுத்தானே அவளுடன் சென்றேன்.
"அங்கேயும் எல்லாம் சரியாத்தான் இருந்தது. விளக்கேற்றி, பெருக்கி துடைத்து விட்டு உற்ச்சவரைத் திரும்பிப் பார்க்கிறேன்..." அவநம்பிக்கையுடன் தலையசைத்தார், "சுவர்ண யக்நோபவீதம் மாற்றி இருக்குது! வலதிலிருந்து இடது!"
சண்டி என்னைத் திரும்பி பார்த்தான். நான் அவசரமாக தலையசைத்தேன், எனக்கு ஒன்றும் தெரியாது என்ற விதம். எனக்கு ஒன்றும் தெரியவில்லைத்தான். இல்லையென்றால் இப்படி மாற்றிப் போட்டிருப்பேனா அதை!
"மாமா, இது தானாகவே நடந்துடுச்சா என்ன?" சிரித்தான். "ராமரே மாற்றி போட்டுக்கொண்டிருப்பாரா?"
"அட, வெதவ அப்பாயி! தீனி கொரகு ஏம் அர்த்தம் தெலுசா நீக்கு?"
சண்டி முறைத்தான். நான் முன் வந்தேன், இதற்கு என்னத்தான் அர்த்தம் என்று தெரிந்துகொள்ள.
"இராமாயணத்துலையே தசரதர் இறந்த செய்தியைக் கேட்டு ராமர் தன் பூனூலின் பக்கத்தை மாற்றிப் போட்டுக் கொண்டார். அதுக்கப்புறம் அநேகமாக ஜடாயுவுக்கு செஞ்சிருக்கனும். அப்புறம்..." தலையில் கை வைத்தார். "ஈ ரோஜு."
சண்டியும் நானும் திகைத்தோம். சண்டிக்கு டிடெக்டிவ் வேலை எல்லாம் பிடிக்கும். தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
"அப்படின்னா தீர்வு ரொம்ப சுலபம். இந்த கிராமத்துல யாரோ ஒருத்தர், ராமருக்கு ரொம்ப நெருங்கினவங்க, நேத்தி ராத்திரி இறந்திருப்பாங்க. அந்த துக்கத்துல ராமர் இப்படி தனக்குத் தானே செஞ்சிருக்கான். என்ன, நான் சொல்றது சரியா துருவா?"
அவனின் தீவிரத்தில் என்னை இழுத்துவிட்டான். என் சாமர்த்தியத்தை மெச்ச வேண்டும். இப்படிக் கூடவா சொதப்புவார்கள், அதுவும் கடவுள் விஷயத்தில்?
நான் மௌனமாக தலையாட்டினேன்.
"ஆ-ஆமாம். சரியாத்தான் தோ-தோனுது." எச்சிலை முழுங்கினேன். கொஞ்சம் சந்தேகத்துடன் என்னைப் பார்த்தார் மாமா. எழுந்து எல்லோரிடமும் சொன்னார்.
"நேத்தி இரவு யார் இறந்தாங்கன்னு கண்டுபிடிக்கலாம். அவருக்கு நாம எல்லோரும் மரியாதை செய்யலாம். அவங்களோட ஆத்மா சாந்தி அடைய சேர்ந்து வேண்டிக் கொள்ளலாம். வாங்க." என்று சண்டியின் தோளை ஆசையாக தட்டிவிட்டு ஊரின் மயான எல்லைக்கு நடந்து சென்றார். நாம் எல்லோரும் பின் தொடர்ந்தோம். சண்டியின் மாமாவின் கிளினிக் வழியாக சென்றோம். அவன் உள்ளே ஓடி அவனின் டாக்டர் மாமாவை அழைத்தான். வெள்ளையும் சொள்ளையுமாக காட்சி அளித்தார் அவர்.
"ஏமி ரா?! ஹையோ! இவ்வளவு பெரிய ஊர்வலம்? எங்கே போகுது?"
"மாமா! நேத்திக்கு ராத்திரி யாராவது செத்துப் போனாங்களா?"
சண்டியிடம் ஒன்று கொடுத்து கிளினிக்கிலிருந்து வெளியே தள்ளினார்.
"ஞாயர்த்திக் கிழமை கார்த்தாலை வந்து, முதல்லை என்னத்த கேட்கிறான் பாரு, படுபாவி? இனிமே இங்கே வந்தே, துறத்திவிடுவேன் ராஸ்கல்! அம்மா கிட்ட சொல்றேன்!"
என் மனதின் அலைகளை ஒதுக்கி வைத்து அவனைப் பார்த்து சிரித்தேன். என்னைத் தள்ளினான்.
"இவனெல்லாம் டாக்டர். ஊருக்கு ஒரே டாக்டரா இருக்கிறதனாலைதான் இவனுக்கு பொழப்பே நடக்குது. ஹும்!"
"சரி விடு. நம்ம வேலையை பார்ப்போம்."
தெருக்கு தெரு மக்கள் சேர்ந்து கொண்டார்கள். இராமரின் துக்கத்தை பெற்றிருந்த பாக்கியவான் யாரு என்று எல்லோரும் ஆர்வத்துடன் யோசித்து நடந்தோம்.
மயானத்தில் காலை உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த வெட்டியான், வீரையா எங்கள் எல்லோரையும் பார்த்து திடுக்கிட்டார். ஊர்வலத்தின் முன்னணியில் ராஜகோபாலு மாமா. அவரைப் பார்த்து குனிந்தான்.
"என்ன சாமி வேணும்? காலைல இத்தனை பேரு வந்திருக்கீங்க? யாராவது முக்கியமா இறந்துட்டாங்களா?"
"ஆமாம் பா. ரொம்ப முக்கியமானவர். ஆனா அது யாருன்னு உணக்குத்தான் தெரிந்சிருக்கும்."
"சாமி, சின்ன கிராமம். எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும். இத்தனை பேருக்கு தெரியாதவங்க எனக்கு எப்படிங்க தெரிந்சிருக்கும்?"
"நேத்தி இரவு யாராவது... உன் கிட்ட வந்தாங்களா?"
"நேத்திக்காங்க? நான் பத்ராசலம்ல ஒரு... அதுக்காக போயிருந்தேனே."
"அப்படியா?"
"அதுக்கு முந்தி கூட யாரும் வரலை சாமி..." யோசித்தான். "இன்னிக்கி காலைலையும் காலியாத்தான் இருந்தது."
என் ரகசிய சொதப்பல் மெதுவாக வெளிவந்து கொண்டிருந்தது. கூடிய சீக்கிரம் எல்லோருக்கும் முன் நான் செய்த காரியத்தைப் பற்றி சொல்லி, அடி வாங்க வேண்டும். பெருமூச்சு விட்டேன். இது நானே குழி தோண்டின பள்ளம். நான் வேண்டின தெய்வத்திற்கு சித்திரவதை செய்வது பிடிக்குமே.
"ஏமி ரா, சண்டி! இப்புடு ஏமி? உன் தீர்வு என்ன ஆச்சு பாரு?"
சண்டி என்னைப் போல் அடங்கியிருக்கிறவன் இல்லை. அவன் தரம் நியாயத்தை பளிச்சென்று புரியும் படி சொல்பவன். முறைத்தான்.
"எனக்கு அப்போ தோன்றியதை சொன்னேன். பதினைஞ்சு வயசு பையனோட பேச்சை பின் தொடர உங்களுக்கு யார் சொன்னாங்க?"
நான் முழுங்கினேன். ஒரு வேளை இங்கேயே எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டால்... இல்லையில்லை. மயானம். வீரையா பிரேக் ஃபாஸ்ட்டின் பொழுது தொந்தரவு செய்து விட்ட கடுப்பில் இருப்பான். எல்லோரும் என்னை இங்கேயே கொன்று எரித்தும் விடுவார்கள். ஹையோ! ஒரு வேளை ராமன் என் சாவைத்தான் துக்கம் கொண்டாடுகிறானோ?! கண்களை இறுக்க மூடி ஆஞ்சநேயனை மனதில் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன். பக்தனின் பக்கத்திற்கு சென்றோம் என்றால் ஒரு வேளை தப்பித்துக் கொள்ளலாம்.
அப்பொழுது என்று லைப்பிரெரிக்கு எதிரில் இருந்த டீ கடைக்காரர் ஓடி வந்தார். கூட்டத்தைப் பார்த்து கொஞ்சம் குழப்பமாக கவனித்து வீரையாவிடம் சென்றார்.
"வீரையா! நம்ம ஆளு பக்கத்து கடையில இறந்து கிடக்கிறான். யாரும் தூக்கிக் கொண்டு வர மாட்டாங்க! அநேகமா நேத்திக்கு ராத்திரியே போயிருக்கனும். வா, கொண்டு வந்து எரிச்சுடலாம்."
வீரையா அவனின் பெசரட்டை ஒரு பெருமூச்சுடன் கீழே வைத்துவிட்டு எழுந்தான். ராஜகோபாலு மாமா திகைத்து நின்றார்.
"யா-யாரு இறந்திருக்காங்க, ட-டாஸ்மாக் கடையில?"
"சத்தியமுங்க. குடிகாரப் பையன். எத்தனையோ தடவை வேண்டாம் பா இந்தா டீ எடுத்துக்கன்னு ஃபிரீயா கொடுத்திருக்கேன். பெரிய பாவம் ஏதோ, தடுத்தது. அவன் வாழ்க்கையை எங்கே முழுக்க வாழ்ந்தான்? அவன் பொண்டாட்டி பிள்ளைங்க சந்தோஷமா பத்ராசலத்தில் இருக்கிறாங்க. இவன் போனதைப் பத்தி கண்டுக்க மாட்டாங்க. யாரு கண்டுப்பாங்க, சொல்லுங்க?"
ராஜகோபாலு மாமாவின் கண்களில் தண்ணீர் விழுந்தது.
"ஒருவன் கண்டுப்பான், பாபு. ஒருவன் எப்போமே கண்டுப்பான்."
கீதாஞ்ஜலி
பிணபல்லேயின் பஞ்சாயத் தலைவர் இறந்த பொழுது கூட அவ்வளவு கூட்டம் வரவில்லை. சண்டியும் நானும் சிறிது நேரம் தீ பரப்புவதை பார்த்துவிட்டு திரும்பி வீட்டிற்கு சென்றோம்.
"மூட் ஸ்போயில் ஆயிடுச்சு டா. நான் வீட்டுக்கு போறேன்." என்று என்னை வீட்டில் விட்டு கிளம்பிவிட்டான். நானும் உள்ளே சென்றேன். என் மனது எங்கேயோ இருந்தது.
"ஏமி ரா, என்ன வருத்தமா இருக்கே?"
"ஏமி லேது, அக்கா."
"அனிதாவைப் பார்க்கப் போறேன். புதிய ஓட்டலில் பிரஞ்ச் சாப்பிட்டுட்டு, பக்கத்துல ஏதோ நார்த் இந்தியன் மேளா நடக்குது. டிரஸ், தோடு, எல்லாம் வாங்கிட்டு, இரவு அவள் வீட்டில் தங்கிட்டு, நாளைக்கி காலை வந்துடறேன். அம்மாகிட்ட சொல்லியாச்சு." இரண்டு கற்பூர வாழைகளை அவசரமாக வாயில் திணித்து விட்டு வெளியே சென்றால். ஸ்கூட்டி சத்தம் தூரத்தில் வரைக்கும் கேட்டது. நானும் ஒரு வாழைப் பழத்தை எடுத்து சாப்பிட தொடங்கினேன். இத்தனை ஆர்பாட்டம் நடந்தும், மணி பத்தறைதானா என்று வியந்தேன். வீட்டு வாசலில் யாரோ கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்து பார்த்தால்...
"ஹாய்."
"ஹாய்."
"நன்னாத் தூங்கினையா?"
"ஓகே. நீ?"
"நான் பயங்கரமா தூங்கிட்டேன். இப்ப தான் எழுந்தேன்!" என்னிடம் கிட்டக்க வந்து. "காலையிலிருந்து கோவில்ல ஏதோ டிராமா எல்லாம் நடந்திருக்கு. தெரியுமா உனக்கு?"
நான் மெல்ல சிரித்தேன். கீழே பார்த்தாள். ஒரு வித வெட்கத்துடன் கால் கட்டை விரலுடன் தரையில் ஒரு கோலம் வரைந்தாள்.
"தியேட்டர்ல கீதாஞ்ஜலி காட்டறாங்க. என்கூட..."
"அந்த படம் பழைசாச்சே... போர் கதா?"
"இல்லைன்னா இருக்கவே இருக்கு... பாகுபலி."
நான் மறுபடியும் சிரித்தேன்.
"ஜம் ஓகே வித் கீதாஞ்ஜலி."
Comments
Post a Comment