முப்பெரும் தேவர்

வியாழக்கிழமை, காலை நான்கு முப்பது மணிக்கு திருவொற்றியூர் கடற்கரை அருகினில் இருந்த பட்டினத்தார் ஆலயத்திற்கு எதிரில் இருந்த பட்டினத்தார் கோவில் தெரு சாந்தமாக இருந்தது. ஆறு, ஏழு மணிக்கு மேல்தான் எல்லோரும் விழித்து, குளித்து, தெருவோர கடையில் ஒரு பால் பாக்கெட் வாங்கி, அவசரமாக காஃபியோ பூஸ்ட்டோ போட்டு குடித்துவிட்டு ஆஃபிசுக்கும் ஸ்கூலிற்கும் கிளம்புவார்கள். அந்த தெருவில் ஒருவன், அவனுடன் சேர்ந்து மற்ற இருவரும் வேண்டா வெறுப்பாக எழுந்துகொண்டார்கள்.
"பத்ரிஈஈ! தூக்கம் வருது டா!"
தலை வாரிக் கொண்டே, கண்ணாடி வழியாக பதில் அளித்தான் பத்ரி.
"தூங்கு. உன்னை யாரு எழுந்துக்க சொன்னாங்க இப்ப?"
"நீ லைட்டை ஆன் பண்ணிண்டிருக்கியே!" பைரவன் கண்களை இறுக்கி மூடிய படி எழுந்தான். "ச்ச, இப்ப நைட் டைம் வறைக்கும் தூக்கம் வராது."
பத்ரி சிரித்து அறையை விட்டு வெளியேறினான். பைரவன் தன் பக்கத்தில் மூஞ்சியை மூடி படுத்திருந்த பாரதியை பார்த்தான். 
"இவனுக்கு மட்டும் என்ன சுகம், எழுந்திரு டா!" 
போர்வையை பிடுங்கிப் போட்டான். பாரதியின் இளைய முகம் வெளி வந்தது. லைட்டின் வெளிச்சத்தில் அவனும் கண்களை இறுக்கி மூடினான்.
"அவன் எழுந்துட்டானா?" விம்மினான். "லைட்டை அனைச்சிருக்கக் கூடாது?"
"என்ன செய்யறது? நடு பையன் இல்லை? கெட்டு குட்டிச்சுவரா வளர்த்துட்டாங்க நம்ம அப்பா அம்மா."
பாரதி சிரித்தான். "யூஷுவலா கடைக்குட்டிதான் அப்படி இருக்கும்ன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்."
"ஹும், நீயும் அப்படித்தான். எல்லாம் என் தலைவிதி, உங்க ரெண்டு பேரோட சமாளிக்க வேண்டும்ன்னு."
பாரதி தலையணையால் பைரவனை அடித்து மறுபக்கம் படுத்து மறுபடியும் போர்வையால் முகத்தை மூடினான். 
"இப்ப என்ன, எழுந்துக்கட்டுமா வேண்டாமா?" என்று தினம் தினம் வரும் குழப்பத்துடன் தன் கலைந்த முகத்தை கண்ணாடியில் பார்த்தான் பைரவன். வெளியில் தோசைக்கல் சுட்டு, "உஸ்" என்று ஒரு சத்தம் வர பின்னால் படுத்து, ஃபோனை நோண்ட ஆரம்பித்தான். 
"டேய், தூங்குமூஞ்சிகளா, நான் போயிட்டு வரேன்!" என்று சிறிது நேரத்தில் கதவை உடைத்து வராத நிலையில் பத்ரி அவர்களைப் பார்த்து கத்தினான். பைரவன் திடுக்கிட ஃபோன் முகத்தில் விழுந்தது. பாரதியின் உருவத்தை குறிக்கும் மூட்டையிலிருந்து ஒரு "ம்ம்ம்!" சத்தம் வெளி வந்தது. பத்ரி சிரித்துக் கொண்டே, தன் காதொலிப்பானை காதுகளில் சொருகிவிட்டு, "பில்லீ ஜீன், இஸ் நாட் மை லவர்!" பாடிக்கொண்டே சென்றான்.
"பெரிய மைக்கேல் ஜாக்சன்னு நினைப்பு!"
"ஆமாம், டிரிபில் ஆர் பார்த்துட்டு 'நாட்டு நாட்டு' டான்ஸை உன் காலேஜ் ஃபங்க்ஷன்ல ஆடினவன் தானே நீ?"
பாரதி மறுபடியும் முகத்திலிருந்து போர்வையை எடுத்து பைரவனை முறைத்து பார்த்தான்.
"ஐ காட் எ பிரைஸ் ஃபார் தாட்."
"எண்டெவர் பரிசெல்லம் ஒரு பரிசா? குட் எஃபர்ட்ன்னு சொல்லறாங்கநல்லா இருந்துச்சுன்னு சொல்லலை."
பைரவனுக்கு மறுபடியும் தலையணையால் ஓர் அடி விழுந்தது. 

முன் குறித்த ஏழு மணிக்கு தெருவோடு சேர்ந்து இரண்டாவது முறையாக பைரவனும் பாரதியும் எழுந்தார்கள். 
"நான்தான் முதல்ல குளிக்க போனோம்!"
பைரவன் கண்களை சுழற்றி துண்டை தூக்கி போட்டான்.
"போய் குளிச்சு தொலை! சீக்கிரம் வா, எனக்கு ஆஃபிஸ் இருக்குது."
"நீ எப்போ வேணும்னாலும் போகலாம். எனக்கு ஒன்பது மணிக்கு கிலாசஸ் ஆரம்பிச்சுடும்." பாத்ரூம் கதவை மூடியபடி முடித்தான், "மிஸ் அட்டெண்டென்ஸ் எடுக்க மாட்டாங்க அப்புறம்!"
"உள்ள போடா!"
பைரவன் கிச்சனிற்கு சென்று பத்ரி காலையில் செய்த கூத்தின் மிச்சங்களை கவனித்தான். சிங்க்கிள் தோசையும் மிளகாய்ப்பொடியும் சாப்பிட்ட குறியோடு ஒரு தட்டு கிடந்தது. அதைப் பார்த்து முறைத்தான்.
"ஒரு தட்டை கழுவ முடியாதா?" 
பாரதி தலையை துவட்டிக் கொண்டே, ஜீன்சும், உள்ளே சொருகின சட்டையுடனும் காட்சி அளித்த பொழுது, வாயில் முனுகளுடன், வளைந்த புருவங்களுடன் பத்ரியின் தட்டை பைரவன் ஆக்ரோஷமாக தேய்த்துக் கொண்டிருந்தான். பூஜை அறையில் ஏற்றி இருந்த விளக்கைப் பார்த்தான் பாரதி. பைரவனை பார்த்து சிரித்தான்.
"பத்ரி தான் தினமும் காலையில் விளக்கு ஏத்தறான்."
"அதுக்கென்ன இப்ப? அதாவது செய்யட்டும்."
"இல்லை... விஷு அக்கா எப்ப..."
சிங்க் பக்கத்தில் இருந்த கிடுக்கியை எடுத்து கையை ஆட்டினான் பைரவன்.
"உன் வாயிலிருந்து இன்னொரு வார்த்தை வந்தது, இது என் கையில இருக்காது."
தட்டை கோபத்துடன் உள்ளே செலுத்திவிட்டு பாத்ரூமிற்கு சென்றான் பைரவன். பாரதி தலையசைத்து கொண்டே பூஜை அறையில் இருந்த அவர்களின் குல தெய்வத்தின் படத்தையும், தாய் தந்தையரின் கல்யாண ஃபோட்டோவையும் பார்த்து கண் அடித்தான்.
"அண்ணனை ரொம்ப படுத்தறேன் இல்லை? ஸாரி." என்று சொல்லி பெருமூச்சு விட்டான். "ஆனாலும் புரியலை. விஷு அக்காவை காதலிக்கிறான். அவளுக்காக பொறுமையா காத்துண்டிருக்கான். சோ ஏன் கல்யாணம் பண்ண மாட்டேன்கிறான்?" தோள்களை குலுக்கி, விபூதியை நெற்றியில் லேசாக இட்டுக்கொண்டு கிச்சணிற்கு சென்றான். அடுப்பை ஆன் செய்து வெளியில் இருந்த தோசை மாவை கலக்கினான். ஏதோ யோசனை பட்டு பாத்ரூமிற்கு சென்று கதவை தட்டினான்.
"டீ போடட்டுமா?"
"ஓகே. எனக்கும்?"
"உணக்கும்தான் டா!"
12 மணி நேர ஷிஃப்ட்களில் வேளை செய்த பத்ரிதான் இந்த வீட்டில் காஃபி குடிப்பான். மாஸ்டர்ஸ் படித்துக்கொண்டிருந்த பாரதிக்கும், கார்பரேட் ஆஃபிசில் ஆறு மணி வேலை செய்யும் பைரவனுக்கும் டீ போதுமாக இருக்கும். பாரதியின் இஞ்சி டீ "வேற லெவல்" என்று பைரவனின் காதலி விஷாலாக்ஷி அலையஸ் விஷு வந்த பொழுது குடித்து சொன்னதிலிருந்து "இவள்தான் என் பெரிய அண்ணியாக வேண்டும், வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று திடீர் சபதம் எடுத்து விட்டான் பாரதி. அவர்கள் இருவருக்கும் ஏதோ பெருத்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்ததையும் ஏற்றுக்கொள்ள வில்லை. பார்த்து பேசி பத்து மாதம் ஆகியிருந்தது. இதில் விஷு பார்டரில் வேலை செய்யும் ஏர் ஃபோர்ஸ் பைலட். பைரவன் கொஞ்சம் பெயருக்கு ஏற்ற படி கோப ஸ்வரூபன். அவனின் கோபத்துடன் ஏற்றி அனைத்து விளையாட விஷுவிற்கு பிடிக்கும். 
தெருவோரக் கடையில் பால் பாக்கெட் வாங்குவதற்கு கதவைத் திறந்தான் பாரதி. கேட் பக்கத்தில் ஒரு பார்சல் டப்பா, முழுசாக மூடாமல் கொஞ்சம் திறந்திருந்தது. பாரதி பெருமூச்சு விட்டான். 
"இந்த பத்ரி இருக்கானே... ஆன்லைன்ல கண்டதையெல்லாம் வாங்கிட்டு, காலைல டெலிவரி செய்த டப்பாவை வெளியிலேயே திறந்து பார்த்து அப்படியே போய்ட்டான்! பைரவன் சொல்றது சரிதான். இவன்தான் இந்த  வீட்டோட ஸ்பாயில்ட பேபி." என்ற முனுகளுடன் அந்த பார்சலை திறந்து பார்க்காமல் உள்ளே தூக்கிக்கொண்டு சென்றான்.
"என்னடா அது, இவ்வளவு பெரிய டப்பா? பால் எங்க?" பைரவன் பூஜை அறையில் குல தெய்வம், அம்மா அப்பா, மூவருக்கும் ஒரு கும்புட்டு போட்டுக் கொண்டிருந்தான்.
"பத்ரி ஆன்லைன்ல வாங்கி வந்த பார்சல். வெளியிலேயே திறந்துட்டு போயிட்டான்."
"வாட் அன் இடியட்." சோஃபாவில் உட்கார்ந்து மறுபடியும் ஃபோனை நோண்டினான். "உள்ள என்ன இருக்கு? துனியா, புக்ஸா?"
"புக்ஸாத்தான் இருக்கணும். கனம்." 
பாரதி பைரவனின் சீட் பக்கவாட்டில் வைத்த உடன், டப்பாக்குள் ஒரு மெல்லிய முணுகள் கேட்டது. ஒருவரை ஒருத்தர் பார்த்தார்கள்.
"புக்ஸ் கொட்டாவி விடுமா?"
"சீ, திறந்து பாரு!"
இருவரும் நடுங்கும் கரங்களுடன் டப்பாவை திறக்க, உள்ளே காட்சியளித்த விஷயத்தை பார்த்து பைரவன் மயங்கி விழுந்தான். 
"டேய்! என்னடா, இதை என் கையில விட்டுட்டியே! ஐயோ நான் என்ன செய்வேன்?" பாரதி டப்பாக்குள் எட்டி பார்த்தான். எச்சிலை முழுங்கினான். "பத்ரி எந்த கர்மம் பிடித்த வெப்சைட்டில இதையெல்லாம் வாங்கறான்?" 
பாரதி சுற்று முற்றும் பார்த்து, பைரவனை நோக்கி ஒரு தடவை எச்சிலை முழுங்கி விட்டு, டப்பாவை மூடி, தன் காலேஜ் பையை தோளில் மாட்டிக்கொண்டு, விறு விறு என்று வீட்டை விட்டு ஓடி சென்றான்.

"ஹவ் இர்ரஸ்பான்சிபில் கென் யூ பீ?"
4 மணிக்கு காலேஜ் முடிந்து வீட்டில் தன் நண்பன் கணேஷ் வந்து விட வறைக்கும் காலை நடந்த நிகழ்வுகளை சவுகரியமாக மனதில் ஒதுக்கி வைத்திருந்தான் பாரதி.
"அது... அது வந்து..."
"அடுப்பைக் கூட அணைக்கலை! நான் மயங்கிக் கிடந்தேன். அது..." டப்பாவை திரும்பி காட்டினான், "அது டப்பாக்குள்ளயே இருந்தது. நீ என்னன்னா  அப்படியே ஒன்னும் நடக்காதது போல காலேஜ்ஜூக்கு போய்ட்ட? ஒருவன் என்ன செய்வான்?"
"காம் டவுன்." பாரதியின் வார்த்தைகளை கேட்டு பைரவன் எகிறி குதிக்கும் விதம் சிவந்தான்.
"என்ன டா காம் டவுன்? அது என்னது? நம்ம வீட்டில என்ன செய்றதுன்னு நீ இப்ப சொல்ற, இல்லைன்னா என் தலை வெடிச்சுடும்!"
பார்சலில் இருந்த விஷயத்திற்கு பைரவனின் கோவம் பிடிக்கவில்லை. வீல் என்று அழ ஆரம்பித்தது.
"என்ன டா இது?"
"இப்படித்தான், ரெண்டு மணி நேரமா காலையில் ஒரு அழுகை செஷன் முடிந்சு தூங்க போயிற்று. இப்ப மறுபடியும் தொடங்கியிருக்குது."
"ஏதாவது... சாப்பாடு கொடுத்தயா?"
"அது என்ன சாப்பிடும்?" பைரவன் கைகளை மடித்து முறைத்தான். "என்கிட்ட எங்கே தாய்ப்பால்?"
பாரதி சிரித்து அவசரமாக அடக்கிக் கொண்டான். பைரவன் ஓங்கி ஒன்று விட்டான். கண்ணத்தை தடவிக்கொண்டே மெல்ல நகைத்தான் பாரதி.
"எனக்கே இதுன்னா, பத்ரிக்கு என்னவோ?"
"அவன் வந்தவுடனே பார்த்துக்கலாம், இப்ப இது அழறதை எப்படி நிறுத்தறது?"
"பாட்டு?"
"பாடனுமா?"
"சீ, நீ பாடினேன்னா இதுக்கு நானே இன்னும் நல்லா பாடுவேன்னு இன்னும் கத்தும்."
"ஜோக்கு?" கையை மறுபடியும் வீசினான், இந்த முறை தயாராக இருந்த பாரதி சரியான நேரத்தில் குனிந்து தப்பித்தான். 
"போடு, பாட்டை."
அவசரமாக அங்கே கிடந்த டீ வீ ரிமோட்டை எடுத்து ஆன் செய்தான் பாரதி. சன் மியூசிக்கில் தேவா பாட்டுக்கள் ஓடிக் கொண்டிருந்தன.
"மல்லிகையே, மல்லிகையே, மாலையிடும் மன்னவன் யார் சொல்லு!"
"இது வேலை செய்யும்கிற?"
"ஆமாம், இந்த பாப்பாவுக்கு தேவாதான் பிடிக்கும், ஜான் கால்டிரேன் சாக்சஃபோன் இசைன்னா உசுரு, எல்லாம் எனக்குத்தான் தெரியும், போவியா?"
"இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை!" 
அழும் குழந்தையையும், டீவீயில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த தேவயானியையும் ரம்பாவையும் கண்ணத்தில் கை வைத்து பார்த்தார்கள். 
"டீ வேண்டுமா?"
"ம்ம்."
பாரதி எழுந்து, பாப்பாவை பார்த்துக் கொண்டே கிச்சனிற்கு சென்றான். பத்து நிமிடங்களில் சுட சுட இஞ்சி மசாலா டீயும் கையுமாக அழும் குழந்தையையும், டீவீயில் இப்பொழுது டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த சிம்ரனும் ரம்யா கிருஷ்ணனையும் பார்த்துக் கொண்டே மௌனமாக குடித்தார்கள்.
"வந்தேன், வந்தேன், மீண்டும் நானே..."
"இது வர்க் ஆகுமா?"
பைரவன் கடிகாரத்தைப் பார்த்தான். பத்ரியின் ஷிஃப்ட் முடிய இரண்டு மணி நேரங்கள் இருந்தன. தேவா கிலாசிக்ஸ்க்கு அப்புறம் குத்து கலாட்டா (விஜய் ஆண்டனியின் பாட்டுக்கள்தான் நிறையா ஓடும்) பிறகு மெல்லிசை மன்னரின் மெல்லிசை பிரோகிராம். பைரவன் பாப்பாவை பார்த்தான். எந்த மியூசிக் டைரெக்டரின் பாட்டுகளுக்கு அது அடங்குகிறதோ அவர்தான் உண்மையான இசை மன்னர்.

"டேய், பாப்பால்லாம் இவ்வளவு கூட அழுமா? எங்கேருந்து வருது இந்த தெம்பு?"
பைரவன் தலையசைத்து லேப்டாப்பை பார்த்தான்.
"நான் இன்னைக்கி காலையில ஆஃபிசுக்கு ஈமெயில் அடிச்சு, வர்க் ஃப்ரம் ஹோம் செய்றேன்னு அப்ரூவல் வாங்கினவன், இப்ப வறைக்கும் கூட ஒரு வேலையும் செய்யலை!"
"அது உன் பிரச்சனை. நீ இன்னைக்கி இரவு பண்ணண்டு மணி வறைக்கும் கூட முழிச்சு வேலையெல்லாம் முடி. யார் வேண்டாம்னாங்க?"
தன் கையில் இருந்த ப்ளூடூத் மவுஸை பாரதியிடம் வீசினான். அது டப்பாக்குள் விழுந்து சட்டென்று அழுகை நின்றது. பாரதியும் பைரவனும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
"டேய் இது முன்னமே தெரிஞ்சிருந்தா..." 
பைரவன் தலையில் கையுடன் டீவீயை நோக்கினான். 
"யானை படை கொண்டு சேனை பலவென்று வாழப் பிறந்தாயடாஆஆ!"
"டேய், அது பொண்ணா, பையனா?"
"தெரியலையே? எப்படி கண்டுபிடிக்கறது?"
"லூசாடா நீ?" 
பாரதி உள்ளே எட்டிப் பார்த்தான். அது சந்தோஷத்துடன் மவுஸை கடித்தது.  "நான் பார்கட்டுமா?"
"வேணுமுன்னா..."
பாப்பாவை எப்படி வெளியில் எடுப்பது என்று பாரதி ஆராய்ந்து கொண்டே குணிந்தபொழுது கேட் பக்கம் சத்தம் வந்தது.
"குற்றவாளி கிரைம் சீனுக்கு திரும்பி வந்துட்டான்!"
"இரு. அவன் போய் குளிச்சுட்டு, டிரஸ் மாத்திட்டு வரட்டும். அப்புறம் பேசலாம்."
பாரதி பாப்பாவை பார்த்தான்.
"கேட்டியா டா, கண்ணு? அந்த அங்கில் உள்ள போய் வர வறைக்கும் ஸ்ஷ்..." லேசாக அதனின் கண்ணத்தில் தட்டினான், "சத்தம் போடக் கூடாது, டீல்?"
"என்னடா டீல், யார் கூட?" பத்ரி உள்ளே வந்து ஷூவை கழற்றி, அழகாக வைத்துவிட்டு காதொலிப்பானை காதுகளில் இருந்து எடுத்து டேபிள் மேல் வைத்தான். 
"ஆ, அது ஒன்னும் இல்லையே!" பாரதி அசட்டுத்தனமாக சிரித்தான். "இப்பதான் விஜய் ஆண்டனி பாட்டு வந்தது. அது பெட்டரா, எம். எஸ். வீ பாட்டு பெட்டரான்னு..."
"இரண்டு பேரும் வேற வேற ஜோன்ற. வேற ரகங்கள், வேற காலகட்டங்கள்ல இருந்தவங்க. கம்பேர் பன்னக் கூடாது."
தலையாட்டினான் பாரதி. "ஓகே."
உள்ளே செல்ல இருந்த பத்ரி திடுக்கிட்டு முறைத்துப் பார்த்தான்.
"ஓகேயா? நான் சொன்னதுக்கு நீ ஓகே சொல்ற?" பைரவனை குழப்பத்துடன் பார்த்தான். "என்னடா ஆச்சு இவனுக்கு?"
"நீ உள்ள போய் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வா, போ."
கண்களை குழப்பத்துடன் சுருக்கிக் கொண்டு உள்ளே சென்ற பத்ரி, பதினைந்து நிமிடங்களில் மெடிமிக்ஸ் வாசனையும், நிறம் சாய்ந்த ஒரு மஞ்சள் காட்டன் குர்தா பைஜாமா செட்டில் வந்தான்.
"என்ன சாப்பாடு?"
பைரவன் பாரதியை பார்த்து, "நேரம் ஆச்சு. சொல்லு."
"என்ன நேரம்?"
"நீ ஒரு பார்சலுக்காக காத்துண்டிருக்கியா?"
பத்ரி சோஃபாவில் உட்கார்ந்து தலையசைத்தான்.
"இல்லையே. எல்லாம் வந்துச்சு." கையில் எண்ணினான். "ரெட், பிங்க், டார்க் ப்ளூ கலர்ல கதவுக்கு ஒட்டும் ஸ்டிக்கர்கள், இரண்டு ஜீன்ஸ், பிரின்சஸ் மோனோனோகே ஜாப்பணீஸ் படத்தோட காமிக் புக், செஃபோரா கன்சீலரும் ஐடெக்ஸ் மையும்..."
"உனக்கு எதுக்கு மேக்கப்?"
"கேட்பியே, நான் கன்சீலர் போடலைன்னாகண்ணு குழிகள் ரொம்ப மோசமா தெரியும்." கண்களிற்கு கீழ் காட்டினான், "பேய் மாதிரி இருப்பேன், பரவாயில்லையா?"
"அது சரி. மை?"
"அது அழகுக்கு."
"யாரை மயக்கப் பார்க்கற?"
பத்ரி நகத்தை பார்த்தான். பைரவன் தலையசைத்தான்.
"இன்னைக்கி காலைல வந்த பார்சலை நீ பார்க்கவே இல்லையா?"
"இல்லையே? நான் கிளம்பினப்போ ஒன்னும் இல்லையே?" எட்டி பின்னால் பார்த்தான். "அந்த பார்சலா வந்தது?" எழுந்தான். "அதுல என்ன இருக்குது?"
"போய் பாருடா!" 
பத்ரி டப்பாவிற்கு சென்று திறந்து பார்த்தான். மவுஸை முழுவதாக வாய்க்குள் நுழைக்க பார்த்துக்கொண்டிருந்த பாப்பா அவனை பார்த்து கையை நீட்டி சிரித்தது. 
"டேய் பசங்களா. இது என்னடா இது?" மெல்லிய குரலில் கேட்டான்.
"எங்களைக் கேட்காதே! இந்த மாதிரி பார்சல் எல்லாம் உணக்குத் தான் வரும்."
"டோண்ட் பீ பெட்டி! இந்த மாதிரி குழந்தையை நான் ஆர்டர் பண்ணியிருக்கேனா, என்ன?" குழந்தையை பத்திரமாக வெளியில் எடுத்தான். "யாராவது மேல பழி போட்டே ஆகணும்." கீழே வைத்து அதனின் கைகளையும் கால்களையும் மெதுவாக மஸாஜ் செய்தான். 
"முழு நாளும் இது குள்ள இருந்துச்சா?"
பைரவன் பாரதியைப் பார்த்தான். பாரதி உதடை கடித்துக்கொண்டான். 
"பாவம். சைடு எல்லாம் சிவப்பாச்சு." சட்டென்று ஏதோ யோசனை தோன்றி அவர்களை மறுபடியும் பார்த்தான்.
"ஏன் டா..." மெதுவாக, பற்கள் வழியாக சீறினான், "நீங்க இன்னைக்கி பாத்ரூம் போனீங்களா?"
மௌனம்.
"நல்லா போனீங்களா?"
உதட்டை மறுபடியும் கடித்தான் பாரதி. பத்ரி பாப்பாவை தலையில் தடவிக்கொடுத்து அவசரமாக வாலட்டுடன் வெளியேறினான். அவனின் முனுகளை பைரவனும் பாரதியும் வெட்கத்துடன் கேட்டனர்.
"உருப்படியில்லாதவன், காலையில எழுப்புறவன்னு என்னைப் பத்தி புலம்ப மட்டும் முடியும்." 
ஸ்கூட்டி விர் என்று செல்வது காதுகளில் விழ, பாப்பாவை வெருமென இருவரும் பார்த்தார்கள்.
"பத்ரி திடீதிடீருன்னு இவ்வளவு பொறுப்பா தெரியறான்?"
"இல்லை?"

அன்று இரவு தோசை செய்து சாப்பிட்டார்கள் மூவரும். பத்ரி தன் மடியில் பாப்பாவை வைத்து பேபி ஃபார்முலா கலக்கினான். இப்பொழுது நல்ல சுத்தமான, புத்தம் புது நாப்பி போட்டுக்கொண்டு சந்தோஷமாக அவனை பார்த்து கண்களை சிமிட்டியது. அவனும் திரும்ப அதைப் பார்த்து சிமிட்டும் பொழுது கலகலவென்று சிரித்தது. 
"அது என்ன சாப்பிடும்னு உனக்கு எப்படி தெரியும்?"
"அது இல்லை, அவள். அழகான பெண் குட்டி! இல்லையா, கண்ணு? எந்த பாப்பாக்கு அங்கிளை பிடிக்கும்? இந்த பாப்பாக்கு பிடிக்குமா?" அதனின் சிறிய வாய் திறந்திருக்க, டம்ளரை உள்ளே செலுத்தினான். 
"சாப்பிடு டி, என் ராசாத்தி!"
"இல்லை, இது சாப்பிடுமான்னு..."
"இதோ பாருங்க, நான் போய் நல்லா செக் பண்ணிட்டுதான் வாங்கினேன். நாள் முழுக்க பட்னி போட்டிருக்கீங்க, இப்ப மட்டும் இவள் சாப்பாட்டுமேல என்ன அக்கறை?"
பாரதி முறைத்தான். "எங்களுக்கும் தெரியணுமுன்னு ஆசை. தப்பா?"
"ஐயோ சாமி. நீங்க என்ன தப்பு செஞ்சிங்கன்னு என்கிட்ட கேட்காதீங்க. நிம்மதியா சாப்பிடுங்க."
பாரதி பைரவனை பார்த்தான். மனது அவன் சாப்பிட்டுக்கொண்டு இருந்த தோசையின் மேல் இல்லை என்று அவன் சட்னியை பிரிக்க முயற்சித்து கொண்டிருந்ததில் தெரிந்தது. சிரித்து அவனின் கையை பிடித்து தோசை மேல் வைத்தான். 
"தோசைக்கு தொட்டுக்கத்தான் சட்னி, சட்னிக்கு தொட்டுக்க தோசையில்லை. புரிஞ்சுதா?"
பைரவன் திடுக்கிட்டு மன ஓட்டத்தில் இருந்து வெளிவந்தான். தோசையை பிரித்து வாயில் போட்டுக் கொண்டான். மனதில் ஓடியது அவனும் விஷுவும் கடைசி முறை பார்த்தது. 

"ட்ச! பாண்டி பஜார் எப்பவுமே இப்படி கூட்டமா இருக்குது! நான் எப்ப உனக்கு ஒரு நல்ல பெனாரஸ் புடவை வாங்கிக் கொடுக்க?"
விஷு சிரித்தாள். "அமேஸான்னு ஒரு ஆன்லைன் வெப்சயிட் இருக்குது, அங்க எல்லாம் விதமான டிரஸ் கிடைக்குதே." ஒருவன் ஃபோன் பேசிக்கொண்டே அவளின் மேல் மோதப் போய் பைரவன் அவளின் கையை பிடித்து அவன் பக்கவாட்டில் இழுத்தான். அவள் சிரித்தாள். 
"ஆன்லைன்ல பெரிய வசதி, இவ்வளவு கூட்டம் இருக்காது."
"தெரியும், மா. என் தம்பி ஆன்லைன்ல ஏதாவது பார்த்தா உடனே வாங்கிடுவான். ரொம்ப மோசம்."
மறுபடியும் சிரித்தாள். எந்த கடை கொஞ்சம் காலியாக இருக்கிறது என்று நடந்த வழி முழுக்க கவனித்துக்கொண்டே சென்றார்கள். கடைசியில் பனகல் பூங்கா பக்கத்தில் வந்து விட்டார்கள்.
"இங்கேயே இருக்கலாமா இல்லை..."
அவள் ஏதோ ஞாபகம் வந்தது போல் புருவங்களை உயர்த்தினாள்.
"ஆக்சுவலி, ரொம்ப விநோதமான ரிக்வெஸ்ட்டா இருக்கும்..."
"சொல்லு பரவாயில்லை." 
"உன் வீடு எதிர்ல இருக்கிற அந்த... பட்டினத்தார் கோவில் போகலாமா?"
வாய் விட்டு சிரித்தான் பைரவன்.
"ரொமான்டிக் டேட்டுல போகும் இடமா அது? சரி போ, நீ ஏதோ கேட்கிற. வா." என்று பைக்கில் இருவரும் சென்னை டிராஃபிக்கை பொறுமையாக ஜான் கால்ட்ரேனின் சாக்சஃபோன் இசையை பற்றியும், அந்நியன் படத்தில் உள்ள ஃபிரோயிட் குறிப்புகள் பற்றியும் பேசிக்கொண்டே கிடந்து திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் சேர்ந்தார்கள். அவனின் வீதியை எட்டி பார்த்தான் பைரவன்.
"என்ன பார்க்கற?"
"இல்லை, தம்பி வீடு திரும்பும் நேரம்."
"உனக்கு எந்த தம்பி இன்னும் பிடிக்கும்?"
"எனக்கு... அம்மா அப்பாவைத்தான் பிடிக்கும்."
"அவங்க..."
"தெரியும். ஆனாலும் தம்பிங்க இரண்டாவது பட்சம்தான்."
கடற்கரை காற்று அவர்களின் மேல் பட, கோவிலிற்குள் மெதுவாக நடந்தார்கள். குளிர்ந்த அறையில் சித்தரின் ஸ்தானம் இருக்க, சேவித்து விபூதி வாங்கி, ஒரு பிரதட்சிணம் செய்துவிட்டு உள்ளே திரும்பி வந்து உட்கார்ந்தார்கள்.
"எனக்கு குழந்தை பிறந்துச்சுன்னா மருதவானன்னு பெயர் வைப்பேன்."
"பொண்ணுன்னா?"
அவள் அவனின் கண்களை நேராக பார்த்தாள்.
"கணவன்கிட்ட பெயர் வைக்கும் பொறுப்பை கொடுத்துடுவேன்."
அவன் சிரித்தான். நெருங்கி வந்து அவள் தொடர்ந்து கேட்டாள்.
"ஏன் இந்த மௌனம்? பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைப்ப நீ?"
பட்டினத்தாரைப் பார்த்தான்.
"அம்மாவோட பெயர்?"
தலை மெதுவாக அசைத்தாள். புன்னகை சட்டென்று மறைந்தது.
"அம்மாவோட பெயர் உண்ணாமுலையாச்சே?"
"அதுக்கு?" அவனின் வாய் ஓரத்தை மட்டும் சிரிக்க அனுமதித்தான். அதை கவனித்துவிட்டு நிறைவுடன் ஒரு மூச்சு விட்டாள்.
"ஆமாம், இங்கே ஏன் உனக்கு வர வேண்டும்ன்னு ஆசை?"
முட்டிகளை கட்டிக் கொண்டே தூரத்தில் கேட்ட கடல் அலைகளின் சத்தத்தை ரசித்தாள்.
"நாளைக்கு... காஷ்மீர் போகணும்."
அவன் புன்னகை மறைந்தது. அவளின் கையை பற்றிக் கொண்டான்.
"எப்ப திரும்பி வருவ?"
தோள்களை குலுக்கினாள்.
"பத்து மாதம் டூ வன் யீயர்."
அவன் பெருமூச்சு விட்டான்.
"ஏன் உனக்கு இந்த வேலை?"
கண்களை சுழற்றி எழுந்துகொண்டாள்.
"மறுபடியுமா?"
"எவ்வளவு முறை இந்த கேள்வியை நான் கேட்டாகணுமோ, அவ்வளவு முறை நான் கேட்பேனடி!"
"என்ன, டீ போட்டு பேசற?" நம்ப முடியாமல் சிரித்தாள். வெளியில் சென்று காலணிகளை போட்டுக் கொண்டாள்.
"பிளீஸ், நான் சொல்றதை கொஞ்சம் கேளு!"
"நோ. எனக்கு இள இரத்தம் ஓடுது. அதை வைச்சுண்டு இப்பொழுதைக்கு என்னால முடிஞ்ச வரை என் நாட்டுக்கு சேவை செய்யணும்ங்கிற ஆசை இருக்குது."
"அப்படின்னா எதுக்கு என்னை காதலிச்சு, உன் வளையில மாட்ட வைத்து, ஆசை காட்டி இப்படி வருஷா வருஷம் மோசம் பண்ணற?" கண்களில் கண்ணீருடன் அவளைப் பார்த்து கத்தினான். "என்னை விட்டு நீ ஒவ்வொரு தடவை பார்டருக்கு போகும் போது எனக்கு... என்னால தாங்க முடியவில்லைம்மா."
அவனின் கண்ணீரை துடைக்க முன் வந்தாள். அவன் பின் சென்றான், ஒரு கையை மேலே தூக்கி.
"வேண்டாம். இத்தனை தடவை நடந்துடுச்சு. என்னால எனக்கு ரொம்ப பிடிச்ச இன்னொரு ஜீவனை இழக்க முடியாது." கையெடுத்து அவளைப் பார்த்து கும்பிட்டான். "என்னை விட்டுடு, விஷாலாக்ஷி."
அவள் வாயை பொத்திக்கொண்டு தலையசைத்தாள். அவன் பைக்கில் உட்கார அவள் ஓடி பைக் முன் நின்றாள்.
"என்ன சொல்ற நீ? இதுக்காகவா என்னை விடுவே?"
"ஆமாண்டி, விடுவேன்! இப்ப நீ என்னை விடு! போ, ஆட்டோ பிடிச்சு போ உன் வீட்டுக்கு. அப்புறம் நாளைக்கு ஜாலியா பார்டருக்கு போ. என்கிட்ட  திரும்பி வராதே!"
பைரவன் ஒரு பதினெட்டு வினாடிகளில் எக்ஸ்பிரஸ் ரோட்டை பைக்கில் தாண்டி தன் வீதிக்குள் நுழைந்து வீட்டு வாசலில் பார்க் செய்து உள்ளே ஓடி சென்றான். கதவு சாற்றினது விஷுவுக்கே கேட்டது. 
பட்டினத்தார் கோவில் வாசலில் நடந்த நிகழ்வை பக்கத்தில் இருந்த டீ கடையில் பத்ரி நின்று வாழைக்காய் பஜ்ஜியும் கையுமாக பார்த்துக் கொண்டிருந்ததை பைரவன் அன்றைக்கு கவனிக்கவில்லை. இன்றைக்கு டைனிங் டேபிளில் வைத்த உணவை சாப்பிடாமல் சாப்பிடும் பொழுது அந்த நிகழ்வைத்தான் எண்ணிக்கொண்டு இருக்கிறான் என்று பத்ரிக்கு தெரிந்தது. 
"ஆர்... ஆர் யூ ஓகே?"
பைரவன் மேலே பத்ரியின் கருனையான, விரிந்து ஆசையாக பார்க்கும் பார்வையை நோக்கினான். பத்ரி கண் மை எதற்கு போடுகிறான் என்று கொஞ்சம் புரியவந்தது.
"யெஸ்... ஷியூர்."
பாரதி தட்டை கழுவிக்கொண்டே சிரித்தான். 
"எல்லாம் ஓகேயா இருக்கிறவங்க ஷியூர்ன்னு  சொல்ல மாட்டாங்க."
பத்ரி பாரதியை பார்த்து தலையசைத்தான். பைரவனை மறுபடியும் கண்களுக்கு நேராக பார்த்தான். 
"உன்னால முடியும்ன்னா சொல்லு. மனசை படுத்தும் விஷயங்களை வெளியில போட்டு உடைச்சுட்டா உதவும்ன்னு என் பேஷண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன்."
"நீ பாராமெடிக் தானே, உனக்கு எங்கே நேரம் அவங்களோட பேச?"
"நீ நினைக்கிறதை விட நிறைய சமயம் வரும், அவங்களோட பேச, நலன் விசாரிக்க, எல்லாம்." பத்ரி பெருமூச்சு விட்டு பாப்பாவுக்கு கடைசி மடக்கை ஊட்டினான். "நான் என்ன சொல்ல வரேன்னு நீ புரிஞ்சுண்டா சரி." 
பைரவன் அவசரமாக தட்டை வழித்து சாப்பிட்டுவிட்டு எழுந்து, லாப்டாப்பையும் பாப்பாவின் டப்பாவில் இருந்த ஜொள்ளு மிகுந்த மவுஸையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். 

ஒன்பது மணிக்கு திரும்பவும் வெளியில் ஏதாவது குடிக்க வேண்டும் என்று கிச்சனிற்கு வந்து என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தான். பத்ரி சோஃபாவில் பாப்பாவுடன் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்ததை பாரதி பக்கத்தில் ஹோம்வர்க் செய்யாத விதம் பார்த்துக் கொண்டு மகிழ்ந்தான். 
"உங்களுக்கு ஏதாவது டிரிங்க்ஸ் வேணுமா?"
"வேண்டாம். நாளைக்கு ஃப்ரைடே தானே, அப்போ குடிக்கிறேன்."
"சீ, ஜுஸ் கீஸ் வேணுமான்னு கேட்டேன். பாரதின்னு பெயரை வைச்சுண்டு, புத்தி எங்க இருக்குது பாரு?" ஃபிரிட்ஜ்ஜை கோவமாக சாற்றினான். "டிரிங்க்ஸ் கான்செல்!"
பத்ரி சிரிக்க, புரியாமல் கூடவும் சேர்ந்து பாப்பாவும் சிரிக்க, கேட்டிலிருந்து சத்தம் வந்தது. மூவரும் ஒருவரை ஒருவர் விரிந்த கண்களுடன் பார்த்தனர்.
"அண்ணாமலை...?"
"டேய், உள்ள போ டா!"
"பாப்பா?"
"பாப்பாவைக் கூட்டிண்டுதான், உள்ள போ!"
பத்ரி பாப்பாவுடன் அறைக்குள் ஓடி கதவை சாற்ற சரியாக அவர்களுக்கு இப்பொழுதைக்கு இருக்கும் ஒரே சொந்தம், அம்மாவின் அண்ணன் அண்ணாமலை உள்ளே நுழைந்தார்.
"பசங்களா?"
"வாங்க மாமா, என்ன திடீர் விஜயம்?"
பைரவன் பாரதியை முதுகில் உரக்காக தட்டினான். வலியில் "இஸ்ஸ்" என்று மெல்ல சத்தம் போட்டு "ஹெஹே" என்று சிரித்து சரி செய்தான். அவனை பார்த்து அண்ணாமலை மாமாவும் சிரித்தார்.
"இவன் குறும்புத்தனம் போகலையே?" சோஃபாவில் உட்கார்ந்து கொண்டார். அவசரமாக ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவர் பக்கத்தில் அமுத்தி உட்கார்ந்தனர் அண்ணனும் தம்பியும்.
"என்னடா, என்மேல பாசம் இப்படி பீரிட்டு அடிக்குது இன்னைக்கி ?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா. எங்களுக்கு எப்பவுமே உங்க மேல இவ்வளவு பாசம் உள்ள இருந்திருக்கு."
பாரதி சமாளித்து சொன்னதை பைரவன் வேகமாக தலையாட்டி ஆமோதித்தான்.
"இப்பதான் வெளியில வருது, பாசம்."
சிரித்தார். மாலை நேரம் முழுவதும் பாட்டு பாடி இப்பொழுது கொஞ்சம் உறங்கிக்கொண்டிருந்த டீவீயைப் பார்த்தார்.
"என்னடா இது, இந்த நேரத்தில் நான் வரும்பொழுது டீவீ ஓடிண்டிருக்குமே? இன்னிக்கி என்ன?"
"ஆ... அது வந்து மாமா..." பைரவன் தலை சொறிந்தான்.
"ஆ! பத்ரி இப்பதான் வேலையிலிருந்து வந்து உள்ள தூங்கிண்டு இருக்கான்." பாரதி ஈ என்று அவரை பார்த்து சிரிக்க பைரவன் மூச்சு விட்டான்.
"ஓ, அப்படியா." மாமா வருத்தத்துடன் பைரவனின் தொடையை தட்டினார். "ஏன் பா, அவன் உழைக்கற அளவுக்கு பணம் கிடைக்குதா அவனுக்கு?"
பைரவன் பாரதியை பார்த்தான், அவன் நாக்கை நீட்டி "ஏதாவது உருட்டு" என்று வாய் அசைத்தான். பைரவன் தலையாட்டினான். 
"கிடைக்கும்."
"இல்லை, நீ தயங்கினே." பாரதியை திரும்பிப் பார்த்து, "கண்ணு, எனக்கு கொஞ்சம் மோர் கிடைக்குமா, ராசா?"
"இதோ கொண்டுவரேன் மாமா." 
பாரதி உள்ளே கிச்சனிற்குள் செல்ல, மாமா மறுபடியும் பைரவனின் தொடையை மெல்ல தட்டி ஆரம்பித்தார்.
"உன் அப்பா அம்மா உங்கள் மூணு பெயரோட படிப்பைப் பத்தியும் தொழில்கள் பத்தியும் பெருசா கவலைப்படலை. அது எப்பவுமே எங்கள் எல்லருக்கும் கொஞ்சம்... வருத்தமா இருந்தது."
"ஏன்?"
"நீ பரவாயில்லை. நல்ல ஆஃபிசில, ஸ்டேபிள் பொசிஷன்ல இருக்கே. பத்ரியோ எம். பீ. பீ. எஸ் பாதி கினராட்டம் படிச்சிட்டு பாராமெடிக் தொழில் எடுத்துட்டான்?" பெருமூச்சு விட்டார். "சின்னதுதான் ரொம்ப மோசம். இலக்கியத்தில போய் மாஸ்டர்ஸ். அதை வைச்சு அவனுக்கு என்ன செய்யணுமாம்?"
"மாமா நீங்கள் தப்பா புரிஞ்சிண்டிருக்கீங்க, அவங்க இரண்டு பேரும்..."
"மாமா, இந்தாங்க மோர்!" ஒரு டம்ளர் கொண்டுவந்து அவர் கையில் கொடுத்தான் பாரதி. அவர் குடிக்க சிறிது மௌனத்தில் இருந்தது இல்லம். அவர் குடித்து மேசையின் மேல் வைக்க, அலாரம் அடிப்பது போல் ஒரு வீல் சத்தம் இல்லம் முழுவதும் பரவி, டம்ளரை கீழே தள்ளியது. பதறி குதிச்சு எழுந்தார்கள் மூவரும். 
"ஐயோ! என்னது இது? பைரவா! உன் தம்பி வீட்டுக்கு ஆம்புலன்ஸையே கொண்டு வருவானா?" காதை பொத்திக்கொண்டு கேட்டார். பாரதி சிரித்தான்.
"மாமா, நிஜமா சொல்லுங்க? இந்த சத்தம் உங்களுக்கு ஆம்புலன்ஸ் சத்தம் மாதிரியா இருக்கு?"
பைரவன் மறுபடியும் பாரதியை முதுகில் அடித்தான். "ஆ" என்ற முனுகளுடன் வாயை பொத்திக்கொண்டான்.
"ஏண்டா, போய் பார்க்க மாட்டீங்களா?"
"அது..." பைரவனுக்கு ஒரு யோசனை தோன்றியது, "பத்ரி சில சமயம் தூங்கும் பொழுது அழுவான்."
"அழுவானா?"
"ஹும்! பாவம். வேலையில என்னவெல்லாமோ பார்க்கிறான் இல்லை?"
மாமா இந்த விஷயத்தை அப்படியே காலை நியூசை படிக்கும் எஸ். சாந்தாவை நம்புவது போல் நம்பிவிடலாமா என்று யோசித்தார். வீல் சத்தம் லேசாக அதிகமாயிற்று. படுக்கை அறை கதவை சாற்றினதும் முன்னம் போல் ஆயிற்று. பத்ரி விரிந்த கண்களுடன் ஒளிந்து ஒளிந்து வந்தான். பைரவனும் பாரதியும் தலையில் அடித்துக் கொண்டார்கள். அவன் "நாப்பி!" என்று வாய் அசைத்தான்.
"பத்ரி, டேய்! இது என்னடா கூத்து? நீதான் அழுதுண்டிருக்கேன்னு சொன்னாங்க?"
பத்ரி உதடை கடித்தான். 
"டைமிங் சரியில்லையோ?" 
"உள்ள என்ன சத்தம்?"
"அது..." மெதுவாக நாப்பிகள் இருந்த டப்பாவிற்கு நடந்து கொண்டே சிந்தித்தான், "நான்தான்."
"என்ன பா, உளர்ற?"
"அது... எனக்கு வெண்ட்றிலோக்விஸம் தெரியும். பிராக்டிஸ் செய்றேன்."
மாமா குழப்பத்துடன் பத்ரி செல்லும் திசையை நோக்கினார். அவன் கையில் நாப்பி எடுத்ததை பார்த்து பதறினார்.
"இது என்னது?"
"அது நாப்பி மாமா!" பாரதி அவனுக்கு தெரிந்த ஒரு கேள்விக்கு உண்மையாக பதில் அளித்தான். மாமா அவனைப் பார்த்து முறைத்தார்.
"பத்ரிக்கு எதுக்கு?"
"நான் வந்து..." பத்ரி எச்சிலை முழுகினான். "ஆ! 12 மணி நேர ஷிஃப்ட்ல நிறைய நாள் பிரேக்கே கிடைக்காது! அதுக்குதான் இது!" பெருமையாக தன் சாமர்த்தியத்தை மெச்சிக்கொண்டே சிரித்தபடி திரும்ப அறைக்கு நடந்தான் பத்ரி.
"பத்ரி, வேலைக்கு போகும் போது சரி... இன்னைக்கி இரவு வீட்டுல தானே இருக்கே?"
"மாமா, மாமா! நான் சொல்றேன்!" பாரதி முன் வந்து பத்ரிக்கு பேபி வயிப்ஸை பின்பக்கமாக எடுத்துக் கொடுத்தான். அவனும் முறைத்து பார்த்தான், இவன் என்ன கர்மத்தை சொல்லி சமாளிக்க போகிறான் என்று. 
"இவ்வளவு நாளா வேலை செய்து செய்து, அதுவே பழக்கமாயிடுச்சு!" பாரதி வாயை பொத்திக்கொண்டு சிரித்தான். நடந்தவற்றை கவனித்துக்கொண்டு இருந்த பைரவன் தலையில் கை வைத்தான். அவனுக்கும் இது வேடிக்கையாக இருந்தது என்று குறிக்கும் விதம் அவன் தோள்கள் குலுங்கின. 
"என்ன பத்ரி?"
"வெறுப்பேத்தாதீங்க மாமா!" அறைக்குள் ஓடிச் சென்ற சில நிமிடங்களில் அலாரம் சத்தம் ஓய்ந்தது. 
மாமா பைரவனை திரும்பி பார்த்தார். 
"உன் தம்பிங்க போற போக்கு சரியில்லை. அண்ணனா முறையா பார்த்துக்கோ." சாற்றிய கதவைப் பார்த்து சீறினார். "ஒன்னு, பணத்தைப் பத்தி கவலையில்லாமல் உடம்பை கெடுக்குது..."
"மாமா, அப்படியில்லை..."
கிருக்கன் போல் தனக்குள் சிரித்துக் கொண்டிருந்த பாரதியை நோக்கினார். "இன்னொன்னு, பணத்தை வேஸ்ட் பண்ணி, இதோ, இப்படி லூசாட்டம் நடக்குது." பைரவனிடம் கிட்ட வந்து தோளில் கை வைத்தார். "உன் அம்மா அப்பாவுக்கு இது எல்லாம் பிடிக்குமான்னு..."
பைரவன் முறைத்தான். அவரின் கையை உதறினான்.
"என்ன மாமா சொல்லரீங்க? அம்மாவோட அண்ணன்னாஅவங்களோட குடும்பத்தைப் பத்தி எப்படி வேணும்னாலும் பேசலாமா என்ன?"
"பைரவா! யாரு கிட்ட பேசறேன்னு..."
"எனக்கு தெரியும் நீங்க யாருன்னு! அம்மா அப்பா போனதிலிருந்து இப்படி திடீர்னு வீட்டுக்குள்ள நுழைஞ்சு நல்லதா இரண்டு மூணு வார்த்தை எங்க மூணு பேரையும் சேர்ந்து நல்லபடியா வாழ வழி கொடுப்பீங்கன்னு விட்டா, பிரிக்க பார்க்கறீங்களே?"
மாமா வாயை மூடிக்கொண்டு உதட்டை கடித்த விதம் பார்த்தார். பாரதியின் வாய் பிளந்திருந்தது, பத்ரி கதவை லேசாக திறந்து அண்ணனை பார்த்தான்.
"பத்ரிக்கு நல்ல சம்பளம் இல்லை சரி, ஆனால் அவன் சேவை செய்யணும்ங்கிற ஆசையில் வேலை செய்றான். எம். பீ. பீ. எஸ். டிராப் அவுட்டுன்னு மட்டும் சொல்லுவீங்கநம்ம குடும்பத்துலையே அவனுக்குத்தான் பொது அறிவு ஜாஸ்தி." 
பத்ரி கதவை சத்தம் போடாத விதம் மூடினான். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை இருந்தது.
"பாரதி, அவனுக்கு பிடிச்சது படிக்கிறான். அவன் அதை வைச்சுண்டு என்ன செஞ்சாலும் செய்வான். மாஸ்டர்ஸ்க்கு அப்புறம் டாக்டரேட் செய்வான். அவங்களுக்கும் இளரத்தம்." எதையோ தனக்குள் புரிந்து கொண்டான். விரிந்த புன்னகையுடன் முடித்தான். "ஓடற வரைக்கும் என்ன வேணும்னாலும் செய்யட்டும். அவங்களுக்கு நான் இருக்கிறேன். அம்மா அப்பா இதுதான் ஆசை பட்டிருப்பாங்க. கண்டிப்பா."
மாமா கண்களின் தண்ணீருடன் அவனை நெருங்கினார்.
"நல்ல அண்ணனடா நீ. நானும் இருக்கேனே..." பைரவனின் தலையில் ஆசையாக கையை வைத்தார். "உன் ஆசைகளும் நிறைவேறட்டும்."
பைரவன் சிரித்தான். பாரதியின் கண்ணத்தை தட்டிவிட்டு சென்றார். 
"மாமா..."
"என்னடா கண்ணு?"
"பார்த்து போங்க வீட்டுக்கு."
"சரி டா. நல்லா தூங்கு." 
மாமா கேட்டை சாற்றி வெளியில் செல்ல, பைரவன் இளைய ராத்திரி பொழுதின் மெல்லிய காற்றில் அம்மா எப்பொழுதோ நட்டு வைத்த மல்லிச்செடி ஆடிக்கொண்டிருந்ததை ரசித்து பார்த்தான்.

தன் பாராமெடிக் யூனிஃபார்மை துவைத்து, வெளியில் உலர்த்தி, ஃபான் போட்டுவிட்டு படுக்கை அறைக்கு வந்தான் பத்ரி. பாப்பா படுக்கையில் பாரதியுடன் தூங்கிக் கொண்டிருந்தது. மெல்ல அருகினில் போனான்.
"டேய்..."
"ஹும்."
"போர்வையை மூடிண்டு படுத்துடாதே. பாப்பாக்கு நல்லதில்லை."
கண்களை திறந்து அவனை கவலையுடன் பார்த்தான்.
"ஐயோ, பழக்க தோஷத்தில செஞ்சிட்டேன்னா?" பாப்பாவை அவனிடம் கொடுக்க சென்றான், "நீயே பார்த்துக்கோ."
"பாரதி. நீ போய் பாயில படுத்துக்கோ."
பத்ரி பைரவனை பார்த்தான்.
"பரவாயில்லை, எனக்கு அது..."
"இல்லைடா. உன் மேல நாங்க இரண்டு பேரும் இத்தனை நாளா எவ்வளவு ஒரு அற்ப விஷயத்துக்காக... எங்களை காலையில நீ எழுப்பறயேன்ற கோவத்தில உன்னை பாயில படுக்க சொல்லி, கஷ்டப்படுத்திட்டோம்."
பத்ரி சிரித்தான். "அதை கஷ்டம்ன்னு எடுத்துண்டாடத்தானே? நான் அப்படி ஒரு நாளும் கண்டுக்கலை. இன் ஃபாக்ட், ஐ லைக் டார்ச்சரிங் யூ போத் இன் தி மார்னிங்ஸ்!" வாய் விட்டு சிரித்தான். 
பாரதி பாயில் போர்வையை தன் மூஞ்சி மேல் போட்டுக்கொண்டு தூங்க, பாப்பாவை நெஞ்சில் வைத்து தட்டிக்கொண்டு சீலிங்கை பார்த்தான் பத்ரி.
"தூக்கம் வரலை?"
"இவள்... எங்கிருந்து வரான்னு யோசிச்சிண்டிருக்கேன்."
"... எனக்கு... தெரியும்னு நினைக்கிறேன்."
பத்ரியின் காதருகில் ஒரு விஷயம் சொன்னான். பத்ரியின் வாய் விரிந்து, அழகான ஒரு புன்னகை மலர்ந்தது. பாப்பாவை பார்த்தான். 
"தெரியறது. உன்னை போலவே புருவங்கள்... அண்ணி போலவே கண்ணத்துல குழிகள்..." 
பைரவனின் ஃபோன் அடித்தது. யார் என்று பார்த்து வெளியில் எகிறி குதித்து ஓடி போனான்.
"ஹலோ..."
"அம்மா, விஷு. ஐ அம் சோ சாரி! நீ திரும்பி என்கிட்ட வருவயா? பிளீஸ்? நான் உனக்காக எத்தனை நாள் வேணும்னாலும் காத்துண்டிருப்பேன். உனக்காகவே, உன்னோட வாழணும்னு இருப்பேன். இத்தனை நாளா உன் ஃபோன் காலும், மெசேஜ்ஜும் பார்க்காமல் இருந்ததுக்கு சாரி! உன்னை பிலோக் செஞ்சதுக்கு சாரி! பிளீஸ், ஃபார்கி்வ் மீ!" அழுது தரையில் விழுந்தான். அடுத்த பக்கத்தில் மௌனம் உலாவியது.
"விஷு? விஷாலாக்ஷி? என் மேல கோவம்னு புரியறது, ஆனால்..."
"குழந்தைக்கு பெயர் வைச்சுட்டயா?"
மூச்சு வாங்கிக் கொண்டே நிமிர்ந்து உட்கார்ந்தான்.
"என்ன சொல்ற, என் சந்தேகம் உண்மையா, நீ வந்து..."
"பட்டினத்தார் சித்தர். அவர் வழியா இறைவன்கிட்ட ஒரு வித மன்னிப்பு வாங்கிக் கொள்ளலாம்னுதான் அன்னைக்கி அங்கே கூட்டிண்டு போக சொன்னேன். உனக்காகவும் சேர்த்து மன்னிப்பு கேட்டேன்."
"எதுக்கு மன்னிப்பு?"
"கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நடந்துடுச்சேன்னு."
"என்கிட்ட ஏன் சொல்லலை?"
"உனக்கே இதுக்கு பதில் தெரியும். அவளைப் பத்தி சொல்லத்தான் அத்தனை மிஸ்ஸ்ட் காலும் மெசேஜ்ஜும்."
"... சாரிம்மா."
அவள் சிரித்தாள். 
"இப்ப என்ன..."
"கல்யாணம்தான்? உன் தம்பிங்க உதவுவாங்க இல்லை?"
மெதுவாக எழுந்து ஜொலிக்கும் முகத்துடன் பூஜை அறைக்கு சென்றான். மெல்லிய விளக்கில் அம்மா அப்பா சிரித்தார்கள். அவர்களை தொட்டான்.
"ஆமாம். கண்டிப்பா."
"நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே."
"என்னது?"
"குழந்தைக்கு என்ன பெயர்?"
அப்பா அம்மா மேல் இருந்த அவர்களின் குல தெய்வத்தின் படத்தை நோக்கி சிரித்தான். 
"பாலாம்பிகா."

Comments

Popular posts from this blog

ஜாக்கிரதை!

Dharam Yuddh - 4

Dharam Yuddh - 5