பூனை நண்பன்
"இவன் தானா?"
"இவனாகத்தான் இருக்கனும்."
"பார்த்தா அப்படி தெரியலையே? நல்லா படிக்கற பையன் மாதிரி தானே..."
"அட, அவன் அப்பன் என்ன சொன்னான்னு மருந்துட்டியா?" மாரி தன் மீசை வைத்த நண்பன் முத்துவை பார்த்து முறைத்தான். "அந்த ஆளோட கேனத்தனமான பார்வை இவன் கிட்ட இருக்கே?"
"ஆமாம். இந்த ஊர்ல பிசினஸ்மேன் லேர்ந்து டீ கடை காரன் வறைக்கும் எல்லாரும் தான் கேனத்தனமா பார்ப்பானுங்க. எல்லாருமே அந்த ஆளோட பசங்களா?"
"போதும். நிறுத்து." மாரி முத்துவின் மீசையை மோசமாக கிள்ளி விட்டு எழுந்தான்.
"ஆ!"
"இங்கேயே வலில துடிச்சிண்டு இரு. தோ வந்துடறேன்."
மாரி எதிரில் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த இளைஞனிடம் நடந்தான். அந்த இளைஞன் ஆவேசமாக நகங்களை கடித்துக்கொண்டு தன் காலேஜ்ஜிலிருந்து வெளி வரும் ஆட்களை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.
"தம்பி?"
அவன் மாரியை திரும்பி மேலும் கீழும் பார்த்தான். வேறொரு பக்கம் முகத்தை திருப்பி நகத்தை துப்பினான்.
"என்ன வேணும் உங்களுக்கு?"
அந்த இளைஞனின் முகம் இப்பொழுது நேராக பார்க்கையில் அவன் பார்வை கேனத்தனமாக இல்லை. சமீபத்தில் வாயோரம் தையல் செய்திருந்த வண்ணம், அவனின் வாய் கொஞ்சம் கோனிற்று. இடது கண்ணிற்கு மேல் இன்னொரு தையல். பார்க்கிறவர்கள் அனைவரும் வேர்க்க தூண்டும் அவனின் ஃபுல் ஹாண்ட் ஸ்வெட்டரின் கைகளை தனக்கும் வேர்த்திருக்கும் என்ற வகையில் மேலே தூக்கினான். இரண்டு கைகளிலும் இரண்டு பெரிய காயங்கள், வெள்ளை பாண்டேஜ் உடைகள் அணிந்திருந்தனர். மெரினா கடற்கரையில் கிடக்கும் வேர்கடலைகள் போல் அங்கே இங்கே கிடந்த சிறு சிறு காய்ந்த இரத்த புள்ளிகள். சொராண்டினால் உயிர் போகும்.
அவனின் முகத்தை மறுபடியும் நேர் எடுத்து பார்த்தான் மாரி.
"என் ஃபிரண்ட அங்கே அடிச்சு போட்ட மாதிரி கிடக்கறான்..."
"உங்க ஃபிரண்டு தானே, நீங்க என்ன செஞ்சிண்டு இருந்தீங்க அப்போ?"
மாரி பற்களை அழுத்தினான். இவனின் அப்பா சொன்னது ஞாபகம் வந்தது. "அவனை பேச விட்டால் பேசிக் கொண்டே போவான். அவசரமாக அவனை தனியாக ஒரு இடத்துக்கு கூட்டி சென்று நல்லா இரண்டு சாத்து சாத்துங்க!"
மாரி அவனை பார்த்து நகைத்தான்.
"நான் இப்பதான்பா பஸ் லேர்ந்து இறங்கினேன். அதுகுள்ள..."
அந்த இளைஞன் திரும்பி காலேஜ் கதவுகளை பார்த்தான்.
"என் ஃபிரண்டுக்காக வெயிட் பண்ணிண்டு இருக்கேன்..."
"தம்பி, என் ஃபிரண்ட்ட உதவுங்க. ஹாஸ்பிடல்க்கு கூட்டிண்டு போகனும்..."
"ஐயோ, அதுக்கெல்லாம் நேரமில்லை! நான் ஒரு முக்கியமான ஒருத்தரை..."
"தம்பி பிளீஸ் உங்களுக்கு புண்ணியமா போகும்."
என்னடா இவன் இப்படி வற்புறுத்துகிறான் என்ற ஒரு கடைசி முறைப்பு கொடுத்துவிட்டு, மாரியுடன் சேர்ந்து முத்து இருந்த இடத்திற்கு நடந்தான். அங்கே முத்து மண்டூகாசனத்தில் உட்கார்ந்து ஒரு பீடியை பிடித்துக்கொண்டிருந்தான். இளைஞன் வந்ததும் பெரிதாக அவனை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து, அவன் மூஞ்சியில் புகை ஊதினான்.
"என்னதிது, இவனுக்கு ஒன்னும் ஆகலையே?"
வார்த்தையால் பதில் கொடுக்காமல் மாரி பின்னால் இருந்து அவனின் பின்மண்டையில் அடித்தான். முத்துவின் கைகளில் அவன் சரிந்து வீழ்ந்தான்.
இந்துவின் வாழ்க்கை சாதாரணமாகத்தான் இருந்தது. அக்காவின் ஸ்கூட்டியை திருடிக்கொண்டு, திருவல்லிக்கேணியில் ஒரு குட்டி சந்தில் பின்னாடி வந்திருந்த ஒரு காரின் மேல் மோதி, இரண்டு நாட்கள் கோமாவில் கிடந்து, அழகான ஒரு யுவதி நர்ஸ் தொட்டவுடன் எழுந்து, தன் கடைசி பரிட்சைகளை எழுத முடியாமல் போய், அழகு இல்லாத ஒரு கிழ டாக்டர் சொன்னது போல் தன் மற்ற உடம்பு உபாதைகளை சரி செய்ய வீட்டில் ஃபுல் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருந்த வறைக்கும்... இந்துவிற்கு வாழ்க்கை சாதாரணமாகத்தான் இருந்தது. காதுகளில் அவ்வப்பொழுது இரத்தம் சொட்டும். அக்காவின் இரண்டாவது ஸ்கூட்டியை திருடி, இந்து அந்த அழகு இல்லாத டாக்டரை தானே பார்க்க போவான். "ஒன்னும் இல்லை. இந்த ஆன்டிபயாட்டிக்கை சாப்பிடு, எல்லாம் சரியாப் போகும். அடுத்த தடவை நடந்தால் உடனே வந்துடு." என்று சொல்லி, வாயில் நுழையாத அளவிற்கு பெயர் கொண்ட ஒரு மாத்திரையை கொடுத்து விடுவார். அடுத்த தடவை காதுகளிலிருந்து இரத்தம் வரும் பொழுது, "அது சரியில்லை போலிருக்கு, இந்தா இதை எடுத்துக்க." என்று வேறொரு மாத்திரையை அறிமுகப் படுத்துவார். இந்த மாத்திரைக்கும் பெயரைக் கேட்டாலே நாக்கு சும்மா அதிர்ந்துபோய்விடும்.
இப்பொழுது இந்துவிற்கு பணமில்லாததால் காலேஜ்ஜிலிருந்து வெளி வர அம்மா சொல்லி விட்டார்கள். அம்மா கஷ்டப்பட்டு அக்காவின் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த பணமெல்லாம் அவனின் இரண்டு நாள் ஹாஸ்பிடல் ஹனிமூனில் செலவாகி விட்டது. அக்கா அதற்காக கோபித்துக் கொள்ளவில்லை. நல்ல வேளையாக. டெண்டிஸ்ட்டாக இருக்கும் அவளுக்கு எப்பொழுதும் கைவசம் பயிற்சி செய்ய அவனின் பற்கள் இருந்தது. அம்மாவிற்கு தான் ஒரே கடுப்பு. "ஆக்ஸிடென்ட் பண்ணற்து தான் பண்ணறே, அக்கா கல்யாணத்துக்கு அப்புறம் பண்ணிற்கக் கூடாது?" என்று அவன் கோமாவிலிருந்து எழுந்த இரண்டாவது நிமிடமே கேட்டாயிற்று. அக்கா வெறுமென பக்கத்தில் நின்று சிரித்தாள்.
வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு எத்தனையோ நாட்களானது போல் காலம் சென்றது. ஆரம்பித்த வேலையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று தன் டீனின் கால்களில் விழுந்து, கெஞ்சி கூத்தாடி, எப்படியாவது அந்த ஃபைனல் எக்சாம்ஸை மட்டும் செய்து முடிக்க திட்டமிட்டு காலேஜ்ஜிற்கு சென்றான் இந்து. அன்றைக்கு அக்காவின் ஸ்கூட்டியில்லாததால் பஸ்ஸில் சென்றான். பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு கிளி ஜோசியர்.
"தம்பி..." இந்துவின் முகத்தை உற்று பார்த்து மேலும் கீழும் தலையசைத்தார். "ராஜா மாதிரி இருக்கியே பாக்கறதுக்கு, உன் பெயர் என்னப்பா?"
இந்து சிரித்தான். "எங்க, கண்டுபிடிங்க பாக்கலாம்." கிளியை நோக்கினான். "அதுக்கு தெரிந்திருக்கும், இல்லை?"
"ஹும்..." என்று ஒரு பெருமூச்சு விட்டு, அதன் முதுகை வருடினார். அது ஒரு கார்டு சீட்டு எடுத்து நீட்டியது. இந்துவின் புன்னகை கூண்டில் சிக்காத கிளி போல் பறந்தது.
"ஐயோ, சீட்டெல்லாம் வேண்டாங்க. சும்மா சொன்னேங்க. என்கிட்ட காசெல்லாம் இல்லை உங்க கிட்ட கொடுக்கறதுக்கு."
"பரவாயில்லை பா. இந்தா, திறந்து பாரு?" அதனின் வாயிலிருந்து சீட்டை வாங்கி அவனிடம் நீட்டினார்.
"வேண்டாங்க, சொன்னா கேளுங்க!" அவன் அவசரமாக எழுந்து வெளியில் சமாளித்து போய் நின்றான். "என்கிட்ட காசு இல்லைங்க!"
ஆர்ப்பாட்டத்தில் சீட்டு ஜோசியனின் கையிலிருந்து தடுக்கி இந்துவின் பெல்ட்டில் வந்து விழுந்தது. அதை எடுத்து திரும்பி அவரிடம் கொடுக்க போனான்.
"உங்க வம்பே வேண்டாம்!"
"என்ன பயமப்பா உனக்கு? உன் வருங்காலத்தை நினைச்சாலே துடிக்கறை போல இருக்கு?"
இந்து அவரை பார்த்து முறைத்து அந்த கார்டை தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு கிளியின் கூண்டிற்குள் உண்டியலில் போடுவது போல் ஐந்து ரூபாய் செளுத்திவிட்டு, பஸ்சிலிருந்து இறங்கினான்.
"என்ன கொடுமைப்பா. ஒரு பஸ்ல நிம்மதியா போக முடியலை!"
இந்துக்கு அவனின் அப்பாவின் குணம், கோவமோ வெறுப்போ, நகத்தை கடிக்க ஆரம்பித்து விடுவான். அப்பா இப்பொழுது இல்லை. அவர் இந்துவிற்கு கொடுத்த ஒரு சொத்து இந்த பழக்கம். மற்றொறு விஷயம் வீட்டில் அவன் படுக்கைக்கு கீழ் பத்திரமாக அக்காவின் கண்களில் எட்டாத அளவிற்கு வைத்திருந்தான்.
தன் சீட்டை விட்டு துரத்திவிட்ட அந்த கிளி ஜோசியனை எண்ணிக்கொண்டே பஸ் ஸ்டாண்டில் நின்றான். நண்பன் ரவி வந்து அவனை டீனிடம் அழைத்து செல்வதாக சொல்லியிருந்தான். சரியாக அவன் கிலாஸ் முடியும் சமயம். கூடிய சீக்கிரத்தில் வந்து விடுவான், வந்தாக வேண்டும், என்ற தீவிர யோசனையில் நகத்தை கடிக்க ஆரம்பித்தான்.
"தாதா..."
"என்னய்யா?"
"எங்களுக்கு ஒரு சின்ன செய்தி வந்தது இன்னிக்கி..."
"என்னய்யா செய்தி?"
"எனக்காக ஒரு விஷயம் செஞ்சீங்கன்னா செய்தி கொடுப்பேன்னு ஒருத்தர் பார்க்க வந்தாரு."
"யோவ், எவன்யா அவன்? யாரை பத்தி, என்ன விஷயம்..."
"அத்த கண்டுபிடிக்கறதுக்குத்தான் நானும் முத்துவும் அந்த வேலையை செய்ய போனோம்..."
"செஞ்சீங்களா? கண்டுபிடிச்சீங்களா?"
"செஞ்சிட்டோம்... தோ இப்ப கால் பண்ணி..."
"சீக்கிரம் பண்ணுங்க! என்ன விஷயமோ, நம்ம கிட்ட காமெடி பன்றானோ."
கோனி மூட்டைக்குள் கொஞ்சம் அசதியாக உட்கார்ந்திருந்த இந்து அவனின் கடத்தல்காரர்கள் பாஸ்ஸிடம் திட்டு வாங்குவதை வேடிக்கையுடன் கேட்டுக்கொண்டான். அவ்வப்பொழுது ஒரு மெல்லிய உறுமல் சத்தமும் கேட்டது. நைண்ட்டீஸ் தொலை பேசியில் தட்டுத் தடுமாறி ஒரு நம்பர் அடித்து, அதுவும் ஒலிக்க, மறுபக்கம் மெஷினிற்கு சென்று "போவோமா ஊர்கோலம்" பாட்டு பாட ஆரம்பித்தது. சரணத்தை கேட்க முடியாமல் முதல் இண்டர்லூடின் நடுவிலேயே எடுத்து விட்டார்.
"என்னையா பன்றீங்க நீங்க?"
"ஸார், கடத்திண்டு வந்துட்டோம் ஸார்! அவன் கை, கால், முதுகு பூறா இருக்கிற காய்ந்த காயங்கள் எல்லாத்தையும் சொராண்டி விட்டு சித்திரவதை செய்யப் போறோம்."
இந்து எச்சிலை முழுங்கினான். டாக்டர் சொன்னது போல் வீட்டிலேயே அடங்கியிருந்திருக்கலாம். யாரு கேட்டார்கள் காலேஜ், டீன், ரவி, ஃபைனல் எக்ஸாம்ஸ்... மறுபடியும் அந்த மெல்லிய உறுமல்.
மாரி அசட்டுத்தனமாக சிரிப்பது கோனியை மீறியும் இந்துவிற்கு தெரிந்தது.
"நீங்க மட்டும் உங்க செய்தியை எங்ககிட்ட சொண்ணீங்கன்னா..."
"மண்ணாங்கட்டி! என் பையன் என் வீட்டு மொட்டைமாடியில் அவன் ஃபிரண்ட்ஸ் ஓட கூத்து அடிச்சிண்டு இருக்கான், நீங்க என்னன்னா..."
"என்ன ஸார் சொல்றீங்க?"
"உண்மையை. நீங்க வெச்சுண்டு இருக்கிறது வேற எவனையோ. அவனை விட்டுட்டு, ஒழுங்கு மரியாதையா என் பையனை கடத்தின்டு போய், இரண்டு நாள் உங்க வீட்டு வேலையெல்லாம் பாத்துக்க சொல்லி, நல்லா அடிச்சுட்டு, திரும்பி கொடுத்துடுங்க." அவர் பற்கலை வெறுப்புடன் கடிப்பது லைனை தாண்டியும் கோனியை தாண்டியும் இந்துவின் காதுகளில் நுழைந்தது. "எக்சாம்ஸ் எல்லாத்தையும் ஃபெயில் பண்ணிட்டு வந்து என் முன்னால நிக்கறான், வெட்கமே இல்லாமல். இரண்டு நாள் நான் இல்லைன்னா என்னத்த பண்ணுவான்னு அவன்கிட்ட காமிங்கடா!"
ஆக்ரோஷ வெறியில் அநேகமாக ஃபோனை தூக்கி எறிந்திருப்பார் அந்த மகத்தான தந்தையர். சிறிது நேரம் ஒரு மௌனம் பரவியது. மற்றொரு உறுமல், கொஞ்சம் நீடிற்று.
"என்னடா இது? இந்த மூட்டைல யாரு இருக்காங்க?"
"எங்களுக்கு தெரியாது, தாதா. நாங்க வந்து..."
"வந்து, வந்து, வந்து. சீ, திறங்கடா அதை!"
"தாதா, ஆனால் பாத்துக்கோங்க..." தாதாவிடம் பக்கத்தில் சென்று எதையோ முணுமுணுத்தான் மாரியோ முத்தோ, அது இந்துவின் காதுகளில் விழவில்லை.
"அப்படியா?!" தாதாவின் குரலில் இனிய அதிர்ச்சி.
"ஆமாங்க! டேய் முத்து, திற டா."
முத்து கோனியின் மேல் கட்டிய கயிறை மெதுவாக கழற்றி திறந்தான். இந்து அப்படியே உட்கார்ந்த நிலையில் அவர்கள் நால்வரும் இருந்த சிறிய, இருட்டான அறையை சுற்றிப் பார்த்தான். வெளவால்கள் அங்கே இங்கே சத்தம் போட்டது. ஒரு பூனையை தடவிக்கொண்டு தாதா நடுவில் சேரில் கம்பீரமாக உட்கார்ந்தார். நன்றாக இருந்தார், ஜோர்ஜ் கிலூனிக்கு இந்திய முக லட்சனங்கள் இருந்திருந்தால் எப்படி இருப்பாரோ, அதைப்போல். இந்துவிற்கு ஜோர்ஜ் கிலூனி என்றால் மிகவும் பிடிக்கும். அவனின் அக்காவிற்கும் எல்லா பெண்களைப் போல அந்த நடிகனை பிடிக்கும்.
"இவனா?" தாதா பூனையை வருடுவதை நிறுத்தினார். அவனை மேலும் கீழும் பார்த்தார். அவனின் கண்ணத்தின் கீழ் பக்கத்தில் இருக்கும் மச்சத்தை உற்று கவனித்து சிரித்தார். "நல்லாத்தான் இருக்கான்."
மாரி பெரிதாக சிரித்தான். "இல்லை?" இந்துவை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த முத்துவை பார்த்து கண் அடித்தான். "அப்படியே பாப்பாவோட லிஸ்டில் எழுதியிருக்கிறது போல..."
"ஸ்ஸ்ஷ்..." தாதா பின்னால் சாய்ந்தார். இந்துவை பக்கத்தில் அழைத்தார். மெல்ல எழுந்து தூங்கிப்போயிருந்த கால்களை ஆட்டி எழுப்பினான். அவரிடம் சென்று பக்கவாட்டில் விணயத்துடன் நின்றான்.
"பெயர் என்ன?"
"இந்து."
"செல்ல பெயரை நான் கேட்டா மாதிரி ஞாபகம் இல்லை."
இந்து எச்சிலை முழுங்கினான். தன் ஸ்வெட்டரின் கைகளை கீழே இறக்கினான்.
"இந்திராநாதன்."
"ஹும்." எதையோ யோசித்துப் பார்த்தார். மாரியும் முத்துவும் அவருடன் சேர்ந்து எதையோ யோசித்தனர்.
"என்ன யோசிக்கறீங்க?"
"ஆ? உன் மூஞ்சிக்கு வேறென்ன பெயர் வைக்கலாம்னு யோசிக்கறோம்!" மாரியும் முத்துவும் சிரித்தார்கள். இந்து குழப்பத்தில் முறைத்தான். தாதாவின் முனுகள் காட்டிக்கொடுத்தது.
"ஹேமவதி இந்திரானாதன்... நல்லாத்தான் இருக்கு."
ஒரு பெண்ணின் பெயர் கேட்டவுடன் இந்துவின் உடல் முழுவதும் ஒரு நரம்பு தூதன் சென்று "காம் டவுன்! பொறுமை! கிர்ல் அலர்ட்!" என்ற செய்தித்தாளை பரவி விட்டது. மெதுவாக தனக்குள் சிரித்தான்.
"வயது?"
ஹேமாவின் வயது என்னவாக இருக்கும்?
"இருபத்தி ஒன்று."
"என்ன சாப்பாடு பிடிக்கும்?"
ஹேமாவிற்கு என்ன சாப்பாடு பிடிக்கும்?
"என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்கிற பதில் வேணுமா, இல்லை..."
"உனக்கு என்னடா பிடிக்கும்?"
"ரவா இட்லி, கொத்தமல்லி சட்னி."
தாதா எழுந்தார். பூனையின் கழுத்து கீழ் வருடினார். அது சுகத்தில் உறுமியது.
"டோக்லாவும் ரவா இட்லி மாதிரியே இருக்கும், தெரியுமா உனக்கு?"
"எனக்கு அதுவும் ரொம்ப பிடிக்கும் ஸார். ரவா இட்லி நம்ம ஊர் ஐடம் ஆச்சேன்னு சொன்னேன்."
"குட்." பின்னால் சாய்ந்து, மாரியையும் முத்துவையும் பார்த்து கட்டை விரலை காட்டினார். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தார்கள்.
"கடைசியா ஒரு விஷயம், இப்பவே தெரிந்துக்கறது அவசியம்."
இந்து சிரித்தான். அவ்வளவு அழகான பெயர் கொண்ட, இந்திய ஜோர்ஜ் கிலூனியின் மகள் ஹேமவதிக்கு பெண் பார்க்கும் லட்சணம் இந்த இருட்டு அறையில்தானா.
"என்னங்க ஸார்?"
பதில் சொல்லாமல் அந்த பூனையை இறக்கி விட்டார். அது கொட்டாவி விட்டு இந்துவைப் பார்த்து முறைத்தது. அவனிடம் வராமல், பக்கத்தில் நின்றிருந்த முத்துவின் மேல் தாவி அவன் கைகளில் சுகமாயிற்று. அவனும் அதை கொஞ்ச ஆரம்பித்தான்.
"முத்து, அதை இறக்கு."
"ஸாரி தாதா! என் குழந்தை ஞாபகம் வந்துச்சு." முத்து கீழே பூனையை வைத்து மெதுவாக இந்துவின் அருகில் தள்ள, மாரி அவனின் முதுகில் ஆசையாக தட்டினான்.
அந்த பூனையை கவனித்தான் இந்து. இந்த ஹேமாவை பார்த்ததேயில்லை, அதற்குள் என்ன காதல்? என்று தன்னைத்தானே ஒரு பக்க மூளை திட்டியது. மற்றொரு பக்கத்தில், முன் வந்த நரம்பு தூதுவனின் வார்த்தைகள் இன்னமும் ஒலித்தன. "ஹேமா வாண்டட்!"
பூனையை பார்த்து சிரித்தான். கைகளால் அழைத்தான்.
"பூனையின் பெயர் என்ன?"
"ஆங்? ஹேமா."
"வாட்?"
"மியாவ்!"
பூனை திடீர் என்று எம்பி குதித்து இந்துவின் முகத்தை பற்றியபடி ஆட வைத்தது. சரிந்து சிறிது நேரம் அவனின் மார்பில் ராக் கிலைம்பிங் பயிற்சி செய்தது. அங்கேயிருந்து கீழே சரிய அதனுடன் சேர்ந்து இந்துவும் வீழ்ந்தான். கால்களில் கடைசியாக சில கை எழுத்துகளை போட்டு விட்டு, குதித்து ஓடி மாரியின் கால்களில் படுத்துக்கொண்டது.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெல்ல எழுந்தான் இந்து. மூச்சு வாங்கிக்கொண்டு அந்த பூனையை பார்த்து முறைத்தான்.
"என்னங்க அது? பூனையா, ஹிட் மேன்னா? இப்படி தாக்குது?"
தாதா தலையசைத்தார். வருத்தத்துடன் எழுந்தார்.
"பாய்ஸ். இவனை இவன் வீட்டில் கொண்டு விட்டுட்டு, அந்த இன்னொரு பையனை கடத்திண்டு வந்து அவன் அப்பன் கேட்கிற மாதிரி செய்யுங்க. அது என்ன விஷயம்னு தெரிஞ்சே ஆகனும்." அவர் பூனையை கையில் அள்ளிக் கொண்டு அந்த அறையை விட்டு செல்ல போனார். இந்துவிற்கு எப்பொழுதும் சஸ்பென்ஸ் என்றால் பிடிக்காது. அக்காவும் ரவியும் எத்தனையோ முறை சர்ப்ரைஸ் பார்ட்டி வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஷெர்லாக் ஹோம்ஸை போல் கண்டுபிடித்து தன் பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன்னமே கொண்டாடி விடுவான். இந்த தாதாவும் ஹேமாவும் அவர்களின் விநோதமான மேரி காம் பூனையும் இந்த இருவது நிமிடங்களில் செய்த சஸ்பென்ஸ் அவனின் தலையை வெடிக்க வைக்கும் அளவு செய்திருந்தது. நொண்டிக்கொண்டே அவர் முன் போய் நின்றான்.
"ஸார்..." பூனை அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்ததை கவனித்து எச்சிலை முழுங்கினான். "இப்ப இங்கே என்னத்தான் நடந்தது?"
"நீ ரிஜெக்ட் ஆன ஆளு இல்லை, சொல்லக்கூடாது பா." பூனையை ஆசையாக வருடினார். இந்துவின் மனதில் ஒன்று தோன்றி அதை அவசரமாக அனைத்து கொண்டான். அது மறுபடியும் வந்தது. "இந்த பூனைதான் ஹேமாவோ?"
தாதா வெளியில் செல்ல, மாரியும் முத்துவும் அவனின் தோளை பற்றினார்கள். ஹேமாவின் பிராண்டல்கள் உடல் முழுவதும் எறிந்தது.
"தம்பி, மூட்டைல வீட்டு வறைக்கும் போறியா, வெளியில் பஸ் பிடிச்சுண்டு போறியா?"
அவன் ஏதோ கலக்கத்தில் தலையசைத்தான். முத்து கை அசைத்தான்.
"இது தேராது பா. பஸ் ஸ்டாண்ட்ல கொண்டு போய் விட்டுடலாம்."
"மூட்டைலயேவா?"
"அதான் வசதி பா."
"எங்கேடா போனே நீ? உனக்காக எவ்வளவு கஷ்ட பட்டு டீன் கிட்ட எல்லாம் கேட்டு மீட்டிங் புக் பண்ணி வெச்சிருந்தேன் தெரியுமா?" இந்து ஃபோனில் திட்டுவாங்கிக் கொண்டிருந்தான். தன் புது காயங்களுக்கு பழைய காயங்களுடன் சேர்த்து காலெண்டுலா அப்பிக்கொண்டிருந்தான்.
"ஐம் ஸாரி டா. இன்னொரு தடவை..."
"இன்னொரு தடவையெல்லாம் கிடையாது! நீயும் ஆச்சு, உன் ஏழரையும் ஆச்சு!"
"ஐம் நாட் கோவிங் த்ரூ மை செவன் அண்ட் எ ஹாஃப்!"
"யெஸ் யூ ஆர்!" ரவி கோபத்துடன் வைத்த ஃபோனை கண் கொட்டாமல் பார்த்தான் இந்து.
"டேய், என்னடா ஆச்சு உனக்கு? ஏதோ பூனையோட மல்யுத்தம் செஞ்சா மாதிரி மூஞ்சி பூரா காயம்?" அக்கா வீட்டிற்குள் வந்து அவனின் தலையை தடவினாள். "ஆர் யூ ஓகே, கண்ணா?"
இந்து கண்களை மூடிக்கொண்டு தலையசைத்தான். வருத்தத்துடன் உள்ளே சென்றாள். அவன் எழுந்து கைகளை நீட்டி மடக்கிக் கொண்டான். உட்கார்ந்த இடத்தில் அந்த ஜோசியன் கொடுத்த சீட்டு பாக்கெட்டிலிருந்து விழுந்து இருந்தது. பக்கத்தில் யாரும் இல்லை என்று பார்த்துவிட்டு சீட்டை திறந்து பார்த்தான்.
"பூனையால் தப்பிப்பீர்! எல்லோருக்கும் நாய்தான் நண்பன் என்றால், உங்களுக்கு பூனைதான் தக்க சமயத்தில் காப்பாற்றும்! பூனைகளை வளர்க்கலாம், எலிகளை ஒழிக்கலாம்!" எழுத்து பக்கத்தில் ஒரு சிறிய பூனை டிராயிங் இருந்தது. தனக்கே மெல்ல சிரித்துக்கொண்டான்.
"அப்பாடி. நானும் ஏழரை என்று நினைத்துவிட்டேன்!" ஃபோனை எடுத்து மறுபடியும் ரவிக்கு கால் அடித்தான்.
"நான் நாளைக்கு திரும்பவும் வரேன் டா, பிளீஸ் டீன் கிட்ட என்னை கூட்டிண்டு போ டா!"
"சரி போ. எனக்கும் கூட சேர்ந்து கிராட்ஜுவேட் பண்ண ஆள் வேணுமில்லை?"
ஃபோனை கீழே வைத்து, பின்னால் சாய்ந்து டீவீக்கு மேல் தொங்கிய இரண்டு கிளி காதலர்களின் சித்திரத்தை பார்த்தான். ஹேமா யாராக இருந்தாலும் சரி. பூனை காத்தது என்றால் இனிமேல் அவள் யோசனையே வேண்டாம். கண்களை மூடி கோமாவிலிருந்து எழுப்பிய அந்த ஹனிமூன் நர்ஸை பற்றி கனவு கான ஆரம்பித்தான்.
"அப்பா..."
"என்னம்மா?"
"குட்டி ரொம்ப படுத்தரா இப்ப எல்லாம்."
"ஆமாமில்லை. இன்னிக்கி புதுசா ஒருத்தன் வந்தான், அவனை போட்டு நாசம் பண்ணிட்டா."
"அவளால இரண்டு மூணு பர்ஃபக்ட் ஆளுங்க விட்டு போய்ட்டாங்க."
"ஆமாம் மா. இன்னிக்கி வந்த பையனுக்கு லிஸ்ட், பெயர், வயசு, சாப்பாடு, எல்லாமே செட் ஆச்சு!"
"அவனுக்கு டோக்லா பிடிக்குமா? அப்பா சான்ஸ் மிஸ் பண்ணிட்டீங்களே!"
"பட்டு, நீ அழாதே! நான் ஏன் பக்கத்துலயே ரெண்டு ஆளுங்கலை வெச்சிருக்கேன்? மாரி! முத்து!"
தப தப என்று ஓடி வரும் சத்தம். கையில் மூட்டை. உள்ளே ஏதோ குளுங்கிற்று.
"என்னங்க தாதா?"
"இவனையும் இவன் அப்பனையும் நான் பாத்துக்கறேன். நீங்க அந்த இந்து பையனை திரும்பவும் கூட்டிண்டு வாங்க."
மாரியும் முத்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"மூட்டைலயா?"
"அது தானே வசதி?"
Comments
Post a Comment