திருமணக் கொள்ளை
மணம்
அவர்களின் திருமணம் மிகவும் எளிதாக நடந்து முடிந்தது. சடங்குகள் முழுக்க முழுக்க இருவரும் ஒருவரின் ஒருவர் காதுகளை கடித்துக் கொண்டே இருந்தார்கள். அம்முவின் தாய் தந்தையர் தங்களுக்குள் சிரித்து வியந்தார்கள்.
"என்ன இது, இந்த இரண்டும் இப்படி பேசிக்கொண்டே இருக்கிறார்கள்?"
"இப்படியே வாழ்நாள் முழுவதும் இருந்தால் நல்லது."
அவள் அவனின் காதுகளில் எதையோ சொல்லி அவன் குபுக்கென்று சிரித்த விதம் அம்மாவை இன்னமும் மகிழ வைத்தது.
"அந்த கவலை தேவையே இல்லை. இவர்களுக்கு நிறைய பேச இருக்கிறது. இந்த காதல் சாதாரணமாக ஓயாது."
சடங்குகள் எல்லாம் முடிந்து முதல் இரவிற்கு அம்மா அவளிடம் ஒரு சின்ன குவளையில் பால் கொடுத்தாள். அம்மு அவசரமாக கிளம்ப நடுவில் அந்த பக்கமாக வந்த அப்பா அவளை நிறுத்தி, அவளின் முடியை மெல்ல தடவிக்கொடுத்தார்.
"என் செல்ல மகள், தவமாய் தவமிருந்து கிடைத்த என் பொக்கிஷம். இவன் என்ன தவம் செய்தானோ உன்னை பெறுவதற்கு!" என்று இனிய வாழ்த்து கூறி அவளை அணைத்தார். அந்த அணைப்பில் அவளின் காதுகளில் இரண்டு சொட்டு கண்ணீர் பட்டது. அவரை பார்த்து பெரிதாக சிரித்து, அவரின் கால்களில் விழுந்து, அறைக்குள் ஓடினாள். அப்பா அம்மாவை பார்த்து சிரித்தார்.
"இளமையினால் வரும் ஆர்வத்தை பார்?"
"இவர்களுக்கு இளமையில் மட்டுமா இருக்கும் இந்த ஆர்வம்?"
"அம்ருதா! நீ தயாரா?"
"ம்ம், ஆனால் இப்படியே போகலாமா?"
ராஜு படுக்கையிலிருந்து எழுந்தான். அவளை பார்த்து ஒரு வித குழப்பத்துடன் சிரித்தான்.
"புரியவில்லையடி. கல்யாண மேடையில், தாலி கட்டும் சமயத்தில் மந்திரத்தை ஜெபிக்க விடாமல் நீ தானே என் காதிற்குள் இன்றைக்கு இரவு நம் இடத்திற்கு செல்லலாம் என்று கூறினாய்? இப்பொழுது பின் வாங்கினால்..."
"பின் வாங்கவில்லை, உடைகளை மாற்றி, நகைகளை கழற்றி விட்டு..."
"ஓ, தாராளமாக செய்."
ராஜு மறுபடியும் படுக்கையில் உட்கார்ந்து கொண்டான். அவளை பார்த்து சிரித்தான்.
"எனக்கு ஒன்றும் இல்லை கழற்ற. நீ சரி செய்து வா."
அம்மு கண்ணாடியில் அவளையே ரசித்துக்கொண்டிருந்தாள். அதை கவனித்த ராஜு வாய் விட்டு சிரித்தான். அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.
"எனக்கு எதையும் கழற்ற வேண்டாம் போல் இருக்கிறது. இன்றைக்கு ஒரு தினம் தானே இப்படி அலங்காரத்துடன் இருக்கலாம்?"
"சரி, கழற்றாதே. அப்படியே செல்லலாம்." அவள் தயங்கி கழற்றி மேஜையின் மீது வைத்திருந்த ஒரு மாலையை எடுத்து அவளுக்கு சூட்டினான். "கள்வர்கள் வந்தார்கள் என்றால் தப்பித்து விடலாம்."
மாலையை போட்டுவிட்டு அவன் கைகளை பின்னால் கொண்டு வர அதை பிடித்து அவளின் தோள்களின் மீது வைத்தாள்.
"அப்படியா? எப்படி தப்பித்துக் கொள்வதாக உத்தேசம்?"
பரகாலன்
திருவாலி, திருநகரி, இரண்டு கிராமங்களையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை கொண்ட பராக்கிரமன், வீர சரித்திரம் கொண்டவன், காதலிக்காக வைணவனாக மாறியவன், அதன் பொருட்டு செல்வமும் பதவியும் இழந்து இறைப் பணியை தடையில்லாமல் நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் வழிப்பறி கொள்ளைத் தொழில் துறையில் இறங்கினவன், நீல பரகால திருமங்கை மன்னன். ராஜ்ஜியம் இல்லைதான் ஆளுவதற்கு, ஆனால் சோழ தேசத்தின் இந்தப் பகுதியில் பெரிய புகழும் மதிப்பும் பெற்றிருந்த இவன், அனைவரின் மனதுகளின் தலைவனாக ஆட்சி புரிந்து வந்தான். நிறைய சமயம் அவன் வாள் வைக்காமலேயே, இரண்டு வார்த்தைகள் சொல்வதற்கு முன்பே அவன் மிரட்டி கேட்கும் செல்வங்கள் தானாக விரித்து வைத்த வேட்டியில் கிடக்கும். அனைவருக்கும் பெருமாளின் மேல் பாசம் அதிகம் என்ற நற்சிந்தனையுடன் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய் மதில் சுவர்கள் கட்டுவதற்கும், பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்கும் உபயோகிப்பான். நிஜமாக பார்த்தால் மக்களிற்கு பெருமாளின் மீதல்ல பாசம், இந்த கவர்ச்சிகரமான கொள்ளைக்காரனின் வீர்யத்தினால் வந்த மையல் தான் காரணம். இதை புரிந்து கொள்ளாமல் தன் வேலையை பார்த்தான் பரகாலன். அவனின் அன்பு மனைவி அவனைப் போன்ற அப்பாவியல்ல.
"திருமங்கை மன்னா, வாள் வலியை மிஞ்சும் தங்களின் அழகும் கவர்ச்சியும் வைத்துத்தான் அரங்கனின் சுவர்கள் கட்டப்படுகின்றது என்று சொன்னால் நம்புவீர்களா?" குறும்புத்தனம் மிகுந்த ஒரு புன்னகை தெளித்தது அவளின் முகத்தில். "தங்களை விற்று வரும் காசில்தான் திருப்பணி ஆகிறது என்பதில் தங்களின் ஆசை பெருமாளுக்கு பிடிக்குமா?"
பரகாலன் குழப்பத்துடன் சிரித்தான்.
"என்ன பிதற்றுகிராய், குமுதா? என்னையே விற்கிறேன் என்கிறாய்? ஒரு பொழுதும் இருக்க முடியாது!"
"பின் எப்படி அவ்வளவு சுலபமாக செல்வம் வருகிறது? வேண்டுமென்றே எல்லா வகை நகைகளையும் ஆபரணங்களையும் இந்த சுற்று புற கிராமங்கள் அணிந்து அங்கே இங்கே செல்கிறார்கள். தங்களின் கைகளால் கொள்ளைப்பட வேண்டும், தங்களின் பொன்மொழிகளால் அதட்டப் பட வேண்டும் என்ற தவத்துடன் அனைவரும் இந்த நெடும் வயலில் இருட்டில் வருகிறார்கள். வெருமென இப்படி நடக்குமா?"
குமுதாவின் கேலிக்கும் சிரிப்பிற்கும் பரகாலன் குழப்பத்துடன் கண்களை சுருக்கிக் கொண்டான்.
"குமுதா, எனக்கு புரியவில்லையே..."
"என்னவாக இருக்கட்டும், இப்படியே இவ்வளவு சுலபமாக எல்லாம் வருகிறது என்ற கர்வத்தில் அலைந்தீர்கள் என்றால் ஒரு நாள் தங்களை பார்த்து மயங்காத நபர்களிடம் மாட்டிக் கொள்வீர்கள்."
"குமுதா! நான்..."
அவன் தொடர்ந்து விவாதிப்பதற்கு முன் அவள் எழுந்து வெளியே தோட்டத்திற்கு சென்றுவிட்டாள். பலத்த பெருமூச்சுடன் பின்னால் சுவற்றில் சாய்ந்தான். அத்தனை வருடங்களாக வீர பராக்கிரமங்களை செய்து, பரகாலன் என்று பெயர் எல்லாம் பெற்று என்ன பிரயோசனம்? மனம் முழுவதும் காதலித்து மணம் செய்த இந்த குமுதாவை பக்தியாலும் சரி, வாக்கினாலும் சரி, தோற்க முடியவில்லையே?
பரகாலன் எழுந்து வெளியில் சென்று சிறிது நேரம் குமுதா தோட்டத்தில் உலாவி, மேலே மரத்தில் கூடிக் குளாவிய இரவின் பாடகர்களை பார்த்து பெருமூச்சு விடுவதை கதவோரம் சாய்ந்து பார்த்தான். அவன் அவளை கவனிப்பதை பார்த்து விட்டு சிரித்தாள்.
"என்ன பார்க்கிறீர்கள்?"
ஒரு புன்முறுவலுடன் அவளருகில் வர, பின்னால் காட்டின் இருட்டான பகுதியில் சிறிது தூரத்திலிருந்து கேட்ட சிரிப்பும் கொலுசின் சத்தமும் அவர்கள் இருவரின் காதுகளில் விழுந்தது. குமுதா கைகளை மடித்துக் கொண்டாள்.
"குமுதா... என்ன சத்தம் என்று பார்த்துவிட்டு வருகிறேன்."
"யாரோ சிரிக்கிறார்கள். அவர்களின் சந்தோஷத்தை நீங்கள் ஏன் கெடுக்க வேண்டும்?"
"நான் கெடுக்கப் போவதில்லை. நீ முன் சொல்லியதை வைத்து பார்த்தால் அவர்களுக்கு என்னை பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் தான் இந்த இரவு நேரத்திலும் இங்கே வந்திருக்கிறார்கள்."
"ட்ச்ப்... என்ன ஒரு அசட்டு தைரியம்." அவள் அவனை சோகமான ஒரு புன்னகயுடன் வழி அனுப்பினாள். தன் வாளை இடுப்பில் சொருகி, ஒரு வேஷ்டியை தோளில் மாட்டிக்கொண்டு அவசரமாக சென்றான்.
பரகாலன் குமுதாவை கல்யாணம் செய்து சிறிது காலமாகத் தான் பெருமாளின் முழு பக்தனாக மாறியிருந்தான். மகிமையும் வெற்றிகளும் ஒன்றுபின் ஒன்றாக பெற்றிருந்து பழகி போனவனுக்கு போட்டி என்றால் மிகவும் பிடித்தமான விஷயம். சிரிப்பும் வம்புப் பேச்சும் வந்த திசையை நோக்கி நடந்த போது மனதில் மெதுவாக தன்னைத் தானே பதித்துக்கொண்டிருந்த அந்த பெருமானிடம் இரண்டு வார்த்தை சவாலை விட்டான்.
"என்னை விரும்பாதவர்களிடம் அழைத்து செல். குமுதா என்னை என்னவென்று நினைத்தாள்? என் வீர்யத்தினால் சோழ மன்னனிற்காக எத்தனை ஊர்களை வெற்றி பெற்று அளித்திருக்கிறேன்? இதையெல்லாம் இந்த சுற்று வட்டாரதிற்கே தெரிந்திருக்க, என் குமுதாவிற்கு மட்டும் புரியவில்லை? என் சுத்தமான வாளின் வலிமையால் தான் கொள்ளைகள் நடக்கிறது என்று அவளுக்கு கற்பிக்க வேண்டும்! அதற்கொரு வாய்ப்பு கொடு, இறைவா!"
அவமரியாதை
அன்றைய இரவின் பிறை நிலா, கரிய வானத்தின் மந்த ஹாசத்தை போல் திருவாலிக்கும் திருநகரிக்கும் நடுவில் அமைந்திருந்த சிறிய குளத்தில் கைகளும் உடல்களும் கோர்த்து உலாவிக்கொண்டிருந்த அந்த புதுமணத் தம்பதியைப் பார்த்து, வேடிக்கையாக சிரித்தது.
"நல்ல இரவு நேரம்."
"அம்மாவிற்கு தெரிந்ததென்றால்..."
"அம்மாவிடம் யார் சொல்லப் போகிறார்கள்?"
இருவரும் ஒரு பாறைக்கு முன் உட்கார்ந்தனர். அம்மு ராஜு மேல் சாய, அவனும் பின்னால் அந்த பாறையின் மீது அவர்கள் இருவரின் பாரத்தை இறக்கினான்.
"ஆமாம், முன்னமே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்... இந்த இடத்தை எப்படி கண்டுபிடித்தீர்கள்?"
"இது என்ன புது மரியாதை?" அவளை கீழே நோக்கி சிரித்தான்.
"மரியாதை இல்லைதான்... வெளியில் காட்டிக் கொள்கிறேன்."
"இங்கு யாருமில்லை. என்னிடம் எவ்வளவு அவமரியாதையுடன் நடத்த வேண்டுமோ, அப்படியே நடந்துகொள்."
அவனின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்தவள் அவன் கண்களை நோக்க முகத்தை சிரமத்துடன் திருப்பி, பொய்கோபம் காட்டிய ஒரு முறைப்புடன் எழுந்துகொள்ள போனாள்.
"ஏய்! இந்த இடத்தை எப்படி கண்டுபிடித்தேன் என்று நான் சொல்லவில்லையே!" உறக்காக கூறி, அவசரத்துடன் அவளின் கையை பற்றி பின்னால் இழுத்தான்.
"அடேய், வேதராஜா!!!" தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடியாமல் அவன் மேல் விழுந்தாள். ராஜு வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
"இதே தான்! இது போலவே என்னை அவமரியாதையுடன் அழைத்து..."
"இரு! எங்கிருந்தோ ஏதோ சத்தம் கேட்டது!"
ராஜு சமாளித்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான். அவளின் முறைப்பு இப்பொழுது பொய் கோபத்தை கூறாமல் எச்சரிக்கையாக அங்கும் இங்கும் பார்த்தது.
"எல்லா வற்றைக்கும் வெட்கமே இல்லாமல் குபுக் குபுக்கென்று சிரித்துக் கொண்டே இருக்கிறாய்!"
"என்னடி செய்வது? எனக்கு எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது."
"வாழ்க்கையே உங்களுக்கு ஒரு வேடிக்கைத்தானா?"
ஒரு சிரிப்புடன், "நல்லது தானே? நம் வாழ்கை நிம்மதியாக இருக்குமல்லவா?"
"கிழிந்தது!"
அவள் எழுந்து தன் பட்டு புடவையிலிருந்து தூசி தட்டி விட்டு சுற்று முற்று ஆழ்ந்து கவனித்தாள். ராஜு பெருமூச்சுடன் எழுந்து உட்கார்ந்தான்.
"என்ன சத்தம் கேட்டது?"
"ஏதோ... வாள் மெதுவாக உருவியதை போல்..."
ராஜுவின் இதயம் மெல்ல மெல்ல அதிகரித்து படபடப்புவதை உணர்ந்து அவன் பக்கத்தில் வந்து குனிந்தாள். கம்மிய குரலில் பேசினாள்.
"அவனாக இருக்குமோ?"
அந்த இளம் தம்பதியின் முதல் இரவுதான் இங்கு வெட்ட வெளியில், நடு ஜாமத்தில், இயற்கையின் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது என்று பரகாலன் மிகவும் சீக்கிரமாக புரிந்துகொண்டான். அவனுக்குள் சிரித்தான். ஆனாலும் அநாவசியமான வம்பில் இப்படி மாட்டிக்கொண்டு விட்டார்கள். அந்தக் குளப் பகுதியையும் அவர்களின் குரலை நெருங்க, அவன் தொடர்ந்து எண்ணங்கள் மாற்றிக்கொண்டேயிருந்தது.
"வேண்டாம், பாவம் சிறியவர்கள்... ஆனால், நற்பணிக்காகத்தான் உபயோகிக்க படும் அவர்களின் கல்யாண நகைகள்... இவர்களை மட்டும் இன்றைய இரவு விட்டு விடலாம்... எத்தனையோ திருமணக் கூட்டங்களை கொள்ளை செய்திருக்கிறோமே?" தட்டுத் தடுமாறி மனதை அடக்கியவாரு ஒரு முறை தலையை கெட்டியாக ஆட்டிவிட்டு வாளை இடுப்பிலிருந்து மெல்ல உருவிக்கொண்டு இன்னும் நேருங்கி சென்றான். அவர்கள் இருவரும் உஷாரானார்கள் என்று உணர்ந்து சற்றே சிலையாட்டம் நின்றான். நிழல்களின் வண்ணமாக தெரிந்த மரங்களின் நடுவில் அவர்கள் நிலவின் வெளிச்சம் பட்டு மெல்ல தெரிந்தார்கள்.
"அவனாக இருக்குமோ?"
பரகாலன் தன்னை அறியாமல் புருவங்களை உயர்த்திக் கொண்டான். "அவனா? என்னை அவன் என்கிறாள் இந்தப் பெண்?"
பரகாலன் படையில் இளைஞனாக சேர்ந்த போதிலும் அவனின் வீர தீர செயல்களை பார்த்து எல்லோரும் மரியாதையுடன் தான் அழைப்பார்கள். அவன் பின்னால் கூட மற்றவர்கள் பேசும் பொழுது 'கொள்ளைகாரர்' என்று சொல்லுவார்கள் என்று அவனுக்கு தெரியும். முழு உரிமை இருக்கும் தன் அன்பு மனைவி குமுதாவே அவனை "அவன் இவன்" என்று அழைக்காத பொழுது, இந்த இருவருக்கும் எங்கே வந்தது இந்த அசட்டு தைரியம்?
அவர்களை தன் வாளின் முனையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற தீவிர ஆத்திரத்துடன் மரக் கூட்டங்களிற்குள் வேகமாக சென்றான்.
கலியன்
"ஐயோ! நிலவின் வெளிச்சத்தில் ஏதோ ஒரு உருவம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது! தெரிகிறதா உனக்கு?" ராஜு அம்முவின் காதருகில் கம்மிய குரலில் செப்பி, அவளின் கைகளை பற்றி மெல்ல பின் நோக்கி கால் எடுத்து வைத்தான். அம்மு சிலையானது போல் நின்றாள், உயிரோட்டம் இருக்கும் ஒரு உயிரினம் என்று காட்டியது அவள் நெற்றியில் சொட்டு சொட்டாக வழிந்த இரண்டு வேர்வைத் துளிகள்.
"அம்ருதா! வா!"
"எங்கே போக நினைக்கிறீர்கள்? என் வேலை ஆகாமல் இங்கிருந்து நீங்கள் இருவரும் எங்கேயும் செல்ல முடியாது."
அம்மு மீண்டும் உயிர் வந்தது போல் மூச்சு அவசரமாக திணறி அடித்து வாங்கிக்கொள்ள, ராஜு அவளை அவன் அருகினில் இழுத்து பிடித்தான். அவளும் அவனை இருக்க பற்றிக்கொண்டாள்.
"அடேய், வேதராஜா. அவன் வந்தால் சமாளித்து விடலாம் என்று சொன்னாயே, இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்?"
ராஜு பதிலிற்கு தன் எச்சிலை முழுங்கினான்.
ஊரே கொண்டாடப்படும் உயர்ந்த ஸ்தானத்திற்கு இந்த கொள்ளைக்காரன் சரியான ஆள் தானா என்ற எதிர்பார்ப்பில் இருவரும் அவனின் உருவம் நிலவின் வெளிச்சத்தில் மெல்ல தெரிந்து வர உற்று நோக்கினார்கள். அவன் நடுவில் வந்து, அவர்களின் முன் நிமிர்ந்து நின்று கொண்டான். விரிந்த மார்பும், கைகளில் சுழற்றிய வாளுமாக தோற்றம் கொண்டிருந்தான். எளிமையான ஆடைகள். காட்டுவாசிகள் போல் கட்டியிருந்த அவனின் தலைப்பாகை அவனின் அடர்த்தியான தலைமுடியை முழுதாக உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல் தோள்களில் சரிந்து விழுந்தது. நல்லிரவு நிறத்தில் மேல் துணியும், கோவில் பட்டர்களை போன்ற வெண்ணிற வேட்டியும் அணிந்திருந்தான். மேல் ஆடை இருட்டில் மறைந்து கொள்ள உதவும். வேட்டி, அவன் ஒரு விதத்தில் நல்லவன்தான் என்று மறைமுகமான வழியில் வெள்ளைக் கொடியை அவனின் பலியாட்களிடம் காட்டும். இந்த விந்தையை நினைத்து ராஜு அம்முவிடம் திரும்பினான். அவளும் அதே சமயத்தில் புரிந்து கொண்டவள் போல் ஒரு மெல்லிய சிரிப்புடன் அவனை நோக்கினாள்.
"என்ன இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கிறீர்கள்?" பரகாலன் இரண்டடி முன் வைத்து ஒரு அழகான புன்னகை புரிந்தான். "கவலைப்படாதீர்கள். நம் விஷயம் சுலபமாக முடியட்டும், உங்களை உங்களின் மீதி இரவை ரசிக்க விடுகிறேன்."
அம்மு ஏதோ அடக்க முடியாமல் வந்த சிரிப்பால் தன்னை பற்றிக்கொண்டிருந்த ராஜுவின் கையால் அவளின் வாயை பொத்திக் கொண்டாள். பரகாலனின் சிரித்த முகம் மிக எளிதில் வேறு மாதிரி கோனிற்று.
"என்ன சிரிப்பு? எதைக் கண்டு இந்த நேரத்தில் இப்படி சிரித்து உன் புதிய மனாளனை என் வாளின் அருகினில் தள்ளுகிறாய்?"
அம்மு ராஜுவை பார்த்து உதட்டை கடித்துக்கொன்டாள். ராஜு தோள்களை குலுக்கினான். அவனின் வாயோரம் ஒரு புன்னகை வர முயற்சிப்பதை கவனித்து அவள் சற்றே உற்சாகம் கொண்டாள்.
"ஒன்றுமில்லை... என் தோழி உங்களை மீசையுடன் பார்க்க ஆசை பாட்டாளாம். அதை நினைத்துதான்..."
பரகாலன் தன் வாளை பின் வாங்கிக் கொண்டான். அவன் கேட்ட விடைவேண்டா கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதில் கூறியதில்லை. இந்த பெண் அவனை பற்றி மனதில் நினைத்ததை பட்டென்று உடைத்து போட்ட விதம் அவனுக்கு புரியாமல் இருந்தது. பிடிக்கவும் இல்ல.
தலையை குழப்பத்துடன் ஆட்டி, தன் தோளில் மாட்டியிருந்த வேட்டியை கீழே போட்டான். ராஜுவை பார்த்து வாளை நீட்டினான்.
"விரித்து வை அதை. உன் ஆசை மனைவியிடம் அவளின் நகைகளை எல்லாம் சமத்தாக கழற்றி வைக்க சொல். நீயும் எதையாவது பொக்கிஷம் அணிந்திருக்கிறாய் என்றால் அதையும் கழற்றி வை. ஹும்! சீக்கிரம்!"
ராஜு குனிந்து வேட்டியை விரித்தான். அவன் மீண்டும் எழுந்து கொள்ளும் பொழுது முகத்தில் தெரிந்த சிரிப்பை கண்டு பரகாலன் மறுபடியும் முறைத்தான்.
"என்னடா சிரிக்கிறாய்?"
"என்னவள் சொன்னதை நினைத்துத்தான். தங்களின் அட்டகாசமான தோற்றத்திற்கு மீசையே வைத்திருக்கலாம். எடுத்தது சிறிய பிழையாகி விட்டது..." அம்மு சிரித்து வாயை பொத்திக்கொண்டாள். இருவரும் அவர்களை எளிதாக கொள்ளை செய்ய முயற்சித்து கொண்டிருந்தவனை பாவமாக பார்த்தார்கள். அந்த பார்வை பரகாலனை சுட்டெரித்தது. வாள் பிடித்த கை மெல்ல நடுங்க ஆரம்பித்ததை பார்த்து வியந்தான். அவர்களை பார்த்தால் அவனுக்கு மனதில் பயம் வராவிட்டாலும் ஏன் கைகள் நடங்குகின்றன, இதயம் வேகமாக துடிக்கிறது, நெற்றி வேர்க்கிறது? தலையை ஆட்டி ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.
"என் மீசையை பற்றி நினைத்து உங்களுக்குள் வேடிக்கை செய்கிறீர்களா?" வாளை சிரமத்துடன் நிமிர்த்தினான். "நீங்கள் இருவரும் என் வாளின் வலிமையை அறியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்."
பதில் கூறாமல் ராஜு அவனின் கடுக்கங்களை கழற்றி பரகாலனின் விரித்த வேட்டியில் வைக்க, அம்முவும் அவளின் தங்கத் தோடுகள், வைர மாலைகள், வெள்ளி சிலம்புகள் எல்லாம் கழற்றி வைத்தாள். பரகாலனுக்கு மூச்சு திரும்பி ஒழுங்காக வந்தது போல் இருந்தது.
'குமுதா சொன்னது சரியோ? என் வீர்யத்தினால் வருவதல்ல ரங்கனின் மதில் சுவர்க்கான பணம்... நான் கவர்ச்சிகரமாக திருடும் பாணியோ?' தன்னைத் தானே கேவலமாக எண்ணி, திரும்பி இருவரையும் கவனித்தான்.
ராஜுவின் குனிந்த தலை சிறிது நேரமாக நிமிராமல் இருக்க, அம்முவும் அவனை சந்தேகத்துடன் உற்று நோக்கினாள்.
"என்ன ஆயிற்று?"
மூச்சு வாங்கிக்கொண்டு ராஜு எழுந்தான். தன் வலது காலின் இரண்டாவது விரலை குழப்பத்துடன் பார்த்தான். "மெட்டி வரமாட்டேன் என்கிறது."
"எங்கே, நான் முயற்சிக்கிறேன்?"
"வேண்டாம்! அம்ருதா, நம் முதல் இரவில் நீ இப்படி செய்தாய் என்றால் நன்றாக இருக்காது." அவர்களை முறைத்து கவனித்துக்கொண்டு இருந்த பரகாலனை ராஜு சட்டென்று ஓரக் கண்களால் பார்த்து மறுபடியும் குனிந்தான். "நானே செய்கிறேன்."
"நில்லடா." பரகாலன் அருகினில் வந்து ராஜுவின் கண்களுக்குள் உற்று பார்த்தான். "நான் செய்கிறேன். ஆனால் என்னிடம் தப்பிக்க முடியாது, நினைவில் கொள்!"
ராஜுவின் கால் அடியில் பரகாலன் வந்து குனிய, அவன் அம்முவை பார்த்து கண் அடித்தான். அவள் தலையை அசைத்து "அருமை!" என்று அவனிடம் வாய் அசைத்தாள். மனைவியிடம் நற்பெயரை பெற்ற சந்தோஷத்தில் ராஜு பெரிதாக பற்களை காட்டி சிரித்தான்.
ஒரு மெட்டியை இந்த மூட இளைஞால் எடுக்க முடியவில்லை, நம் தோள் பலத்தால் மிகவும் சுலபமாக எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் பரகாலன் தன் வலது கையால் அந்த மெட்டியை பிடித்து இழுத்தான். ஒரு ராஜ்ஜியத்தில் புதிதாக அரசனாக நியமிக்க பட்டவன் எப்படி தன் சிங்காசனத்தை வெறித்து பாதுகாத்து அதில் அமர்வானோ, அதை போல் கெட்டியாக ராஜுவின் கால் விரலில் உட்கார்ந்திருந்த பண்ணண்டு மணி நேரம் வயதுள்ள மெட்டி பற்றி இழுத்தும் வரவில்லை. எத்தனை அரசர்களை வீழ்த்தியிருக்கிறான் இந்த பரகாலன், இந்த சிற்றரசனை வீழ்த்தி எடுத்துவிட முடியாதா, என்று இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்தான். இந்த முறை இழுத்த வெறியில் பின்னால் விழப் போனவனை ராஜு தோள்களை சரியான நேரத்தில் பிடித்து மேல் நிறுத்தினான். கண்களை கோபத்துடன் சுருக்கி மேலே ராஜுவின் கண்களை நோக்கிய பரகாலன், அவனின் முகத்தில் இருந்த தெளிவும் கண்கள் காட்டிய குறும்பு கலந்த கருணையையும் பார்த்து சிறிது பயந்தான். பின்னால் நின்று மௌனப் புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கினான். இவர்கள் இருவரும் யார்? எங்கிருந்து இவன் கொள்ளை ராஜ்ஜியம் செய்து கொண்டிருந்த இடத்தில் வந்து இவ்வளவு தைரியமாக அவர்களின் முதல் இரவில் அவனிடம் வம்பு செய்கிறார்கள்?!
விடா முயற்சிக்கு பெயர் போனவன் இந்த பரகாலன். ஒரு கோட்டையை எவ்வளவு நாட்கள் முற்றுகை செய்து தன் மன்னரின் கொடியை நிறுத்தனமோ, அவ்வளவு நாட்கள் பொறுத்து சண்டையிட்டு ஜெயித்து கொடுப்பான். இந்த மெட்டியை அப்படிப்பட்ட ஒரு பிடிவாதம் பிடித்த சிற்றரசின் முற்றுகையாகத் தான் எண்ணினான். தலையை முழுதாகக் குனிந்து ராஜுவின் கால் விரலில் பற்களை வைத்து மெட்டியை கடித்து இழுத்தான்!
"ஆ! என்ன மிடக்கய்யா உங்களுக்கு? நம் கலியனோ?"
ரகசியம்
பரகாலன் எழுந்து பின் சென்றான். மூச்சு திணற அந்த மெட்டியை முறைத்து பார்த்தான். பிறகு ராஜுவையும் அம்முவையும் கண்களால் எரித்து விட்டு கையை உதறினான். வேட்டியில் கிடந்த நகைகளும் ஆபரணங்களும் ஒரு சுற்று சுற்றி துனுக்காக சிரித்தான்.
"இந்த செல்வங்கள் என் ரங்கனின் கோவிலின் சேவைக்காக செல்லப் போகிறது. உன் பிடிவாதம் பிடித்த மெட்டி அவ்வளவு புண்ணியம் பெற்றதில்லை."
ராஜுவும் அம்முவும் ஒருவரை ஒருவர் உயர்ந்த புருவங்களுடன் பார்த்து வாய் விட்டு சிரித்தனர். பரகாலன் பற்களை கடித்து அதன் வழியாக பேசினான்.
"இப்பொழுது என்ன சிரிப்பு? எல்லாவற்றையும் இழந்திருக்கிறீர்கள்? புலப்படவில்லையா?"
அம்மு மெல்ல அவனை நோக்கி தோள்களை குலுக்கினாள்.
"இந்த மெட்டி ஒரு தம்பதியின் மண வாழ்க்கையின் பலத்தை குறிப்பது என்று நம் கல்யாணத்தின் பொழுது ஒரு மாமா வந்து எங்களிடம் சொன்னார். அதுதான் இப்படி ஆயிற்று போல்..." இருவர் அவரவர் கண்களை உற்று பார்த்து பெரிதாக சிரித்தனர். அங்கேயே தொலைந்து, அவர்களின் முதலிரவை அப்படியே தொடர்வதற்கு முன் பரகாலன் முணுமுணுத்தான்.
"நன்றாக இருங்கள். நான் செல்கிறேன்."
குனிந்து வேட்டியை வடிவாக, உபயோகமாக மடித்து, தூக்கிக் கொண்டே எழ முயன்றான். ஏதோ பெரிய கல்லை உள்ளே வைத்திருக்கிறார்கள் என்ற ஆவேச யோசனையுடன் மடித்ததை அவிழ்த்துவிட்டு, நகைகளை புரட்டினான். அனைத்தும் அவனின் கையில் சதா தொங்கும் வாளை விட மெளிதானதாகத்தான் இருந்தது. எங்கிருந்து வந்தது அந்த மாய கனம், என்ற குழப்பத்துடன் மறுபடியும் குனிந்து தூக்க முயன்றான். இந்த முறை முன்னம் போலவே கை விட்டுப் போக, பின்னால் தடுக்கி விழுந்தான். தன்னை புரட்டி அவசரமாக எழுவதற்கு முன் அம்மு ஒரு கையை நீட்டினாள். அவளின் கண்களிலிருந்து பொங்கி வந்த கருணையில் அவளின் வம்பு பிடித்த கணவனை போல் குறும்பு இல்லை. அந்த கண்களை நோக்கி மெல்ல அவள் கையை பற்றி எழும் பொழுது அவனின் கோவம் சென்றிருந்தது. அவள் அவனை நிறுத்தி வைத்து கையை பின் கொண்டு சென்றாள்.
கனவுலகிலிருந்து எழுந்தவன் போல், பரகாலன் தன் உடலை முழுக்க குலுக்கிக் கொண்டு, தன் க்ஷத்ரிய பாவத்தினால் ஆத்திரம் மீண்டும் பொங்கி எழ, கைகளை மடித்துக் கொண்டு அவனை ஒரு மெல்லிய புன்முறுவலுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராஜுவை நெருங்கி அடி வைத்தான். வாளை கீழிருந்து பொருக்கிக் கொண்டு, தொடை மேல் துடைத்தான்.
"யாரடா நீ?"
வாளை மேலே கொண்டு வந்து, ராஜுவின் கழுத்தில் உட்கார வைத்தான். அம்மு ஆச்சரியத்துடன் கைகளை மேலே தூக்கி வாயை பொத்திக்கொண்டாள். அவளை ஓரக் கண்களால் பார்த்து பரகாலன் தன் மிரட்டலை தொடர்ந்தான்.
"நான் யார் என்று உங்கள் இருவருக்கும் தெரியவில்லை போல். இத்தனை நேரம் என்னிடம் விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள். என்ன நினைத்தீர்கள் என்னை? ஒன்றும் செய்ய மாட்டேன் என்றா?" வாய் விட்டு சிரித்தான். ராஜுவை சுற்றி வந்து, அவனின் கழுத்தில் வாளை வைத்து ரத்தம் வராத அளவு மெல்ல அழுத்தி ஒரு வட்டம் வரைந்தான். "இன்னொரு முறை நான் உன்னை சுற்றும் பொழுது கழுத்தில் ரத்தக்கீரல் வேண்டாம் என்றால் நீ யார், என்ன மாயம் செய்து என் தோள் வலிமையை உனக்கு எதிர் வரும் பொழுது குறைத்தாய் என்று சொல். விரிவாக சொல்!"
ராஜு கைகளை அவசரமாக உயர்த்தினான்.
"மகா வீரரே! இந்த ஊரையே உங்களின் கைக்குள் வைத்திருக்கும் கலியரே! நீங்கள் என்னை கண்டுபிடித்து விட்டீர்கள்! நான் தங்களிடம் என்னையும் என் மனைவியையும் காப்பாற்றிக் கொள்ள ஒரு சிறிய மந்திரத்தை ஏதோ விளையாட்டுத் தனமாக ஜபித்தேன். என்ன அதிசயம்! வேலை செய்து விட்டது."
"ஏய்! என்ன மந்திரம் அது? சொல்!"
ராஜு அம்முவை திரும்பி பார்த்தான். அவள் முன் வந்து நடுங்கும் கரங்களுடன் கை கூப்பினாள்.
"ஐயா, அவரை அந்த மந்திரத்தை உங்களிடம் சொல்ல சொல்கிறேன். அவரை உங்களின் பிடியிலிருந்து விட்டு விடுங்களேன்?"
பரகாலன் தன் தாடையை அழுத்தி அவளை நோக்கி கண்களை சுருக்கிக் கொண்டான்.
"இந்த மரியாதை முன்னால் எங்கே சென்றது?" திரும்பி ராஜுவை பார்த்து தலையசைத்தான். "முடியாது. அப்படியே சொல். என்ன மந்திரம்?"
ராஜு மறுபடியும் அம்முவை திரும்பிப் பார்க்க, பரகாலன் கோவம் கொண்டு வாளை அழுத்தினான்.
"உன்னைத்தான் கேட்டேன் அந்த மந்திரத்தை சொல்ல! நீ என்ன அவளை நோக்கிக்கொண்டே இருக்கிறாய்?" எரிச்சலுடன் சிரித்தான். "அனுமதி வேண்டுமா?"
"அப்படியும் சொல்லலாம்."
"என்ன உலருகிராய்?"
அம்மு தலையை அடித்துக்கொண்டாள். ராஜுவிடம் நெருங்கி, "எல்லாவற்றிக்கும் நகைச்சுவை!" திரும்பி பரகாலனின் வாளை பிடித்து அவளின் கணவனின் கழுத்திலிருந்து வெளியே தள்ள முயற்சித்தாள்.
"இதோ பாருங்கள்! மந்திரம் என்றால் நான்கு காதுகளுக்குத்தான் கேட்க வேண்டும். இவரை தனியான இடத்திற்கு அழைத்து சென்று அந்த அற்புத மந்திரத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல வருகிறேன்!"
பரகாலன் வேண்டா வெறுப்பாக வாளை பின்னால் எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டான். ராஜுவையும், அவனை ஆசையாக தடவி அனைத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு இருந்தவளையும் பார்த்து முறைத்தான்.
"என்னிடம் வா டா!" ராஜுவை பிடித்து கீழே தரையில் தள்ளி, அவன் பக்கவாட்டில் அமர்ந்து காதை காண்பித்தான். "சொல்!"
ராஜு அம்முவை கடைசியாக ஒரு முறை பார்த்து முழு மனதின் சந்தோஷத்தையும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பையும் குறிக்கும் கண்களுடன் பார்த்தான், சிரித்தான். அம்மு திரும்பி கண் அடித்துவிட்டு, கைகளை மடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தாள்.
ராஜு பரகாலனின் காதுகளில் உள் சாய்ந்து கையால் ரகசியம் செப்புவது போல் மேலே கொண்டு வந்து, அந்த குளத்தின் பகுதியில் இருக்கும் பூச்சிகளிடம், புஷ்பங்களிடம், புற்செடிகளிடம், புதர்களிடம், பரவைகளிடம் பக்கத்தில் நின்றிருந்த அம்முவிடம் மறைத்து மந்திரத்தை கூறினான்.
"..."
வெற்றி
குமுதா வீட்டிற்குள் ஒரு மூட்டையுடன் வந்திருந்த பரகாலனை உற்று கவனித்து உடனே கண்டுபிடித்துவிட்டாள், இவர் அவள் அன்று சாயங்காலம் வழி அனுப்பிய அதிகம் கர்வமும் பிடிவாதம் பிடித்த வீர பரகாலன் அல்ல.
"என்ன ஆயிற்று... என்று கேட்கலாமா?"
பரகாலன் மூட்டையை ஓரம் கட்டிவிட்டு கீழே உட்கார்ந்தான். சுவற்றில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். அவனின் பக்கத்தில் குனிந்து உட்கார்ந்த குமுதா அவனின் முகத்தை உற்று நோக்கி தொட்டு ஆச்சரியப்பட்டாள்.
"ஐயோ! உங்களின் கண்களில் கண்ணீரா? என்ன ஆயிற்று?"
காதுகளில் விழுந்த அந்த எட்டு எழுத்துகள் கொண்ட மந்திரம் பரகாலனை ஒரு பெரிய இருண்ட குழியில் தள்ளியது. கீழே சரிந்து விழ, சுற்றி சுற்றி பல காட்சிகள் நொடிப்பொழுதுகளில் தோன்றி சென்றது. மன்னனாக இருந்தது, ஒரு சிற்றரசு போதாது என்ற நினைப்பில் ஓடி உழைத்து சண்டைப் போட்டு, பல உயிர்களை கொன்று, கோட்டைகளை வாங்கி சேகரித்து, எல்லாம் ஒரு சாதாரணமான மனிதராக இருக்கும் சோழ மன்னரின் உபயோகமற்ற பாராட்டை பெறுவதற்கு.
"பிறகு? அந்த மாப்பிள்ளை உங்களை எழுப்பினானா?"
பரகாலன் சிரித்து மறுபடியும் பதிலாக தலையசைத்தான்.
குழியிலிருந்து கீழே பரகாலன் விழுந்தது ஒரு மென்மையான புல்தரை மீது. மேலே எழுந்து, தன்னை தட்டிக்கொண்டு தலையை பற்றினான்.
"என்ன ஒரு காட்சி!"
பக்கத்தில் சுற்றிப் பார்த்தான். பிறை சந்திரனின் கம்மிய வெளிச்சம் குளத்தில் கஞ்சத்தனமாக விழுந்து பரகாலனின் வடிவுமிக்க முகத்தின் ஓரங்களில் ஒளி தெளித்தது. மூச்சை வாங்கிக் கொண்டே உலாவினான். முதலிரவை கொண்டாடிக்கொண்டிருந்த அந்த தம்பதியை எங்கும் காணவில்லை. எச்சிலை முழுங்கிக்கொண்டான். தலையை மறுபடியும் பற்றி பின்னால் மரத்தில் சாய்ந்தான். அவநம்பிக்கையுடன் சிரித்தான்.
"எல்லாம் கனவா? ஹா!"
தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, தன் வழக்கமான திமிற்பிடித்த புன்னகையுடன் இரண்டடி முன் வைத்து கீழே கிடந்த ஒரு விஷயம் மீது தடுக்கினான்.
"இந்த மூட்டையா?" குமுதாவின் முகத்தில் இருந்த ஆச்சரியம் மிகுந்த சந்தோஷம் பரகாலனுக்கு சிரிப்பை மூட்டியது. "அவர்கள் இதை விட்டு விட்டு போய் விட்டார்களா?"
பரகாலன் அவளை மேலிருந்து கீழ் மெல்ல பார்த்தான். தனக்குள் சிரித்துக் கொண்டான். அவளுடைய அன்பு பெருமானை பற்றி அவன் புரிந்துகொண்ட இந்த விஷயத்தை அவள் புரிந்து கொள்ளவில்லை.
குமுதாவை வென்றுவிட்டான் பரகாலன்!
Comments
Post a Comment