கிருஷ்ணவேணிக்கோர் காதல் கதை

கிருஷ்ண நிவாசம்

அடையாறு, அந்த இரவு நேரத்தின் நிலவு, "சீயர்ஸ்!" என்ற இரண்டு குவலைகளின் அழகான முத்தம், அதனின் உள்ள பீயரும் ஐஸ் கட்டிகளும் ஒன்றை ஒன்று அடித்து, கிளாஸில் சரிந்து விழுவதின் சத்தம் மாடியில் தன் படுக்கையில் படுத்திருந்த கிருஷ்ணவேணிக்கு அனாவசியமாக கேட்டது. திரும்பி தன் பக்கத்தில் படுத்திருந்த அம்மாவை பார்த்தாள். ஒரு ஆங்கில புத்தகமும் கையுமாக இருந்தாள். அம்மா எப்பொழுதும் படிக்கும் பொழுது வைத்திருக்கும் உம்மூஞ்சி இப்பொழுதும், அவள் தலையணை பக்கத்தில் இருந்த சிறிய விலக்கினால் தெரிந்தது. கிருஷ்ணவேணி சிரித்து அம்மாவின் நீட்டியிருந்த கீழ் உதடை பிடித்துக்கொண்டாள்.
"என்னங்க, இவ்வளவு உறக்கா குடிக்காதீங்களேன்? ராத்திரி நேரம் அதுவுமா!" என்று அம்மாவின் வாயை பிதுக்கி அசைத்து அவள் பேசினாள். புருவங்களை சேர்த்துக் கொண்டு அம்மா அவளின் கையை தள்ளினாள்.
"என்னடி செய்யறே, தூங்காம?"
"அப்பா குடிச்சிண்டு இருக்கார்."
"அதுக்கென்ன இப்போ?"
கிருஷ்ணவேணி திரும்பி தொப்பையில் படுத்துக்கொண்டாள். நகங்களை மிகக் கொடுமையுடன் பிசைத்தாள்.
"அந்த வெள்ளைக்காரனோட போய்..."
புத்தகத்தின் பக்கத்திற்கு ஒரு சிறிய காது செய்து குறித்துக்கொண்டாள் அம்மா. தன் அழகான காலேஜ் போகும் புத்திரியை பார்த்து பெருமூச்சு விட்டாள்.
"அவங்களை அப்படி பேசாதே. ஜெய்மீ துரை பெரிய ஆளு. அவங்க எல்லாம் நம்ம அதிகாரிகள்."
பொல்லாத அதிகாரிகள்! என்று அவளுக்கு திரும்பி சொல்ல வேண்டும் போல் தோன்றியது. குழந்தைகள், முதியவர்கள் என்று பார பட்சம் இல்லாமல் இந்திய மனிதர்களை வெறும் துப்பாக்கி பயிற்சிக்கான இலக்குகள் போல் நடத்தும் அறிவுகெட்ட அதர்மவாதி அதிகாரிகள்!
"கிச்சா இந்த நேரத்துக்கு தூங்கியிருப்பான் தானே?"
அம்மா அந்த பேச்சை மாற்ற விரும்பியவள் போல் தெரிந்த பதிலிற்கு கேள்வி கேட்டாள். கிருஷ்ணவேணி ஒரு பெருமூச்சுடன் மரு பக்கம் திரும்பினாள். கண்களை இறுக்க மூடிக்கொன்டு, அம்மாவைப் போல் உம்மூஞ்சி வைத்துக்கொண்டாள்.
"இரட்டை பசங்க ஒரே சமயத்தில்தான் தூங்குவாங்க. தெரியாதா உனக்கு?"

கிருஷ்ணாவும் கிச்சாவும்

கிருஷ்ணவேணிக்கு சில சமயம் கடுப்பாகத்தான் இருக்கும், அவளின் இரட்டை சகோதரன் கிருஷ்ணகுமார் ஒரே வகையான பெயரை வைத்துக் கொண்டு, தன் வாழ்க்கையில் பிறந்தநாள் முதல் வளர்ப்பு முறையில், ஐந்து அடி எட்டு அங்குலம் உயரத்திலிருந்து கரு கருவென உணர்ச்சி காட்டும் புறுவங்களும், நடக்கும் பொழுது தோள்களில் குலுங்கும் நீண்ட அலைகளான முடியும், எல்லாமே பகிர்த்துக் கொண்டது. பிறகு காலேஜ்ஜிலும் ஒரே படிப்பை படிக்க வந்ததிற்கு. கிச்சாவை வெறுக்க கிருஷ்ணவேணிக்கு நிறைய காரணங்கள் உண்டு. ஆனால் கடைசியில் ஒரே வயிற்றிலும் வீட்டிலும் முளைத்து வளர்ந்த பாசத்தினால் சந்தோஷமாக அவளின் ஏழு நிமிட தம்பியை சகித்துக் கொள்வாள்.
"ஆங்கிலத்தின் மகத்துவத்தை பார்த்தீர்களா? எல்லோரையும் சமமாக நடத்துகிறோம். உன், உங்கள் என்று அனாவசியமாக இரண்டு வார்த்தைகளை உபயோகிப்பதற்கு பதிலாக, ஒரே அழகான, சிறிய எழுத்து, யூவில் குறிப்பிடுகிறோம்!"
அவர்களின் சட்டம் வகுப்பில் எங்கே எடிமலாஜி வந்தது என்று கிளாஸில் பாதிக்கு மேல் எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரித்தனர். கிச்சா கிருஷ்ணவேணியின் காதிற்கு அருகில் வந்து, "இப்ப பாரேன்..." என்று மர்மமான புன்னகையுடன் கூறி விட்டு எழுந்தான். மிஸ் ஃபார்லி அவனைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.
"வாட் இஸ் இட், மிஸ்டர் குமார்?"
கிச்சா கைகளை மடித்துக் கொண்டான். கிருஷ்ணவேணி அருகில் இருந்த அவளின் தோழிகள் ஜோதியையும் ரோஜாவையும் பார்த்து தோள்களை குலுக்கினாள். 
"Madam, you may have disguised respect by itself in English, but in Tamil, உங்கள் and நீங்கள் is used for plural words."
மிஸ் தலையசைத்தாள், ஏதோ புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பது போல்.
"It's still inconvenient to have the extra word, மிஸ்டர் குமார்?"
"ஆங்கிலத்தில்தான் எக்ஸ்ட்ரா வர்ட் யூஸ் பண்ணறீங்க. பிளூரல் குறிப்பதற்கு you all என்று சொல்லனும்."
மிஸ் முறைத்தாள்.
"Not necessarily."
கிச்சா பல் தெரியும் அளவு சிரித்தான். 
"எக்சாம்பில் கொடுக்கட்டுமா?"
"பிளீஸ்."
கிருஷ்ணவேணி கண்களை திருப்பிக் கொண்டாள். இவன் என்ன கர்மம் பிடித்த உதாரணம் கொடுக்கப் போகிறானோ என்று பயந்து எதிரில் உட்கார்ந்து அவனை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செந்திலும் ரஷீதையும் பார்த்து பெருமூச்சு விட்டாள். 
"ஒரு கும்பலாக இருக்கிற இங்கிலீஷ்காரங்களைப் பார்த்து என்னால் சுலபமாக மரியாதையுடனும், பிளூரல் டென்சிலும் கூற முடியும், உங்களின் தலைகளில் இடி விழ என்று. அதே ஆங்கிலத்தில் யூ கோ டூ ஹெல், அப்படின்னு சொன்னா ஒரே ஒருத்தரைத்தான் குறிக்கும்." ஈ என்று சிரித்தான். "எல்லா வெள்ளைக்காரனும் நரகத்துக்கு போகனும்னு ஆசை படறவனுக்கு இது ஏமாற்றம் தானே?"
மிஸ்ஸின் முகத்தின் ஓட்டைகள் வழியாகக் ரோஷப் புகை வருவதைப் பார்த்து கிருஷ்ணவேணி அவளின் தலையில் அடித்துக் கொண்டாள்.

கிருஷ்ணனும் ராமனும்

"ஐம்பது ஆகி விட்டது! விட்டுடுவாங்க!"
செந்திலும், ரஷீதும், ஜோதியும், ரோஜாவும் மிஸ் ஃபார்லியின் அறைக்கு வெளிக் கதவில் காதுகளை ஒட்டி உள்ளே கிச்சாவின் கால்களில் விழுந்திருந்த குச்சி அடிகளை எண்ணிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணவேணி பக்கத்தில் சுவரில் சாய்ந்து, கைகளை மடித்த நிலையில் கீழே அறைக்குள்ளிருந்து வெளியில் வந்திருந்த எறும்புகளை எண்ணிக் கொண்டிருந்தாள். உள்ளே நாற்காலி விழும் சத்தம் கேட்டது. 
"Don't you dare disrespect the British Raj ever again! I would have had you dismissed ages ago if not for your father's pathetic face!"
அடி சத்தம் தொடங்கியது.
"என்னதிது? ஐம்பதுக்கு மேலே போறாங்க?"
"ஆமாம். போன தடவை ஐம்பது கொடுத்தாங்க இல்லை, இப்போ இன்னும் கொஞ்சம் போட்டாத்தான் அவனுக்கு புத்திக்கு எட்டும்..." ரஷீத் சிரித்தான், "... அப்படின்னு நினைச்சுண்டு இருக்காங்க."
கிருஷ்ணவேணி எறும்புகளை உன்னிப்பாக பார்த்து தலை அசைத்தாள்.
"இந்த எறும்புகளுக்கு இருக்கிற சுதந்திரம் கூட மனுஷங்க கிட்ட இல்லையே..."
"இதுல என்ன இன்னும் மோசம்னா மிஸ் ஃபார்லி இந்தியால பிறந்தவங்க!" ரோஜா எழுந்து கிருஷ்ணவேணி பக்கத்தில் நின்று சொன்னாள்.
"யாரோ ஒரு வெள்ளைக்காரன் ஜெனரலை காதலித்து, கல்யாணம் பண்ணி, பெயரை மாத்தி, இப்ப அந்நியர்களோட கட்சில இருக்கிறாங்க. பதி பக்தியை சாக்கா வைச்சி நம்மலை டார்ச்சர் பண்ணறாங்க." ஜோதி கோபத்துடன் உதட்டை கடித்து முனு முனுத்தாள். கிருஷ்ணவேணி அவளை நிமிர்ந்து பார்த்தாள். அவர்களின் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும், ஜோதி கிச்சாவைக் காதலிக்கும் விஷயம். அவனுக்கு மட்டும் தெரியாது... இல்லையென்றால் தெரியும், ஆனால் தெரியாத மாதிரி காட்டிக்கொள்கிறான். அப்படிப்பட்டவன் தான் கிச்சா. 
"ஹலோ?"
அனைவரும் அந்த புதிய குரலைக் கேட்டு திரும்பினார்கள். கிருஷ்ணவேணி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளின் உயரம், கிச்சாவை விட சிகப்பு, கிச்சாவைப் போல் அல்லாது நன்றாக எண்ணெய்த் தடவி வாரிய தலை முடி, மெல்லிய உதடுகள் வழியாக ஒரு சிறிய புன்னகை. தோள்களில் தொங்கிய பையை உபயோகிக்க அவனுக்கு பிடிக்காது போல் தன் மருத்துவப் புத்தகங்களை கைகளில் பிடித்து அனைத்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணவேணியைப் பார்த்து அவன் முகத்திற்கு முன் விழுந்த ஒரு தனி முடியை எடுத்து காதிற்கு பின்னால் பொறுத்திக்கொண்டான். கிருஷ்ணவேணி அவனைப் பார்த்து தோள்களை குலுக்கினாள்.
"ஹலோ?"
அவனின் வெட்கம் கலந்த புன்னகை விரிந்தது. தொண்டையை கணைத்துக்கொண்டான்.
"நீங்க... இங்கே... என்ன செய்யறீங்க?"
அவன் தயங்கித் தயங்கி பேசுவதைக் கேட்டு மற்றவர்கள் அவர்களுக்குள் சிரித்துக்கொள்வது கிருஷ்ணவேணிக்கு பிடிக்கவில்லை. அவனைப் பார்த்து முறைத்தாள்.
"என் தம்பி உள்ளே அடி வாங்கிண்டு இருக்கான்."
அவனின் புன்னகை சட்டென்று மறைந்தது.
"யாரு, உங்க பிரதரா?"
"ஏன், இப்ப நான் என்ன ராணி விக்டோரியா ஓட பிரதர்ன்னா சொன்னேன்?"
அவளின் வெறுப்பு கலந்த வேடிக்கையை கண்டுக்காதது போல் அவனின் புத்தகங்களை அவசரமாக தோள் பையில் அடைத்துவிட்டு, மிஸ் ஃபார்லியின் அறைக் கதவை தள்ளி உள்ளே ஆவேசத்துடன் சென்றான். 
கிச்சா கீழே விழுந்த நாற்காலியில் சாய்ந்து, முகத்திலிருந்து வேர்வை சொட்ட, தரையில் ஊர்வலம் சென்று கொண்டிருந்த எறும்புகளை வேடிக்கைப் பார்த்தான். அவன் மூச்சுத் திணறி திணறி விட்டதைப் பார்த்து ஜோதி முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்களை துடைத்துக் கொண்டாள். ஓங்கிய கரத்துடன் மிஸ் ஃபார்லி உள்ளே புகுந்தவனையும் பின்னால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் பார்த்து முறைத்தாள்.
"ஹு இஸ் தாட்?"
அவன் பொறுமையாக முன் நடந்து, அவர்களின் முன் கைகளை மடித்துக் கொண்டான்.
"ஐம் எஸ் ஜானகிராமன்."
மிஸ் முறைத்து தன் சீட்டில் உட்கார்ந்தாள். கிச்சா தன்னை ஆசுவாசப் படுத்தி முகத்தைத் திருப்பி எஸ் ஜானகிராமனைப் பார்க்க முயன்றான்.
"And what are you doing here, Mr Raman?"
"I think you know what the S in my name stands for, Madam. If not, shall I remind you?"
கிருஷ்ணவேணிக்கு முன் பூனையாக இருந்தவன் மிஸ் ஃபார்லியிடம் இவ்வளவு அதிகாரத் தோரணையுடன் பேசுவது அவளுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. உயர்ந்த புருவங்களுடன் வேடிக்கைப் பார்த்தாள்.
மிஸ் ஃபார்லி தோல்வி அடைந்த முகத்துடன் கிச்சாவின் கால்களிலும் முதுகிலும் ஏதோ பிரபலமான பேர்வழியைப் போல் கையெழுத்துகளை அடிகளாக அளித்த குச்சியை மேஜையின் மேல் வைத்தாள். கிச்சாவைப் பார்த்து முறைத்துவிட்டு பெருமூச்சு விட்டாள்.
"Is he your friend?"
ஜானகிராமன் கிச்சாவை பார்த்து சிரித்தான். தலையை ஆமாம் என்ற படி ஆட்டினான்.
"My God, Mr Kumar. You are lucky you have such good contacts." தன் நாற்காலியில் பின் சாய்ந்து கையை உதறினாள். "Leave, all of you!"
கிச்சா சிரித்துக்கொண்டே எழுந்து அவர்களைப் பார்த்து ஏதோ சொல்ல வாய் திறந்தான். கிருஷ்ணவேணி தலையில் அடித்துக் கொண்டு அவன் வாயைப் பொத்தி வெளியே இழுத்துப் போட்டதில் அவன் ஜோதியும் செந்திலின் மேலும் விழுந்தான். அவர்கள் மூவரும் கபடி விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் ஜானகிராமன் கதவை சாற்றி அவள் அருகினில் வந்து நின்றான். அதே வெட்கம் கலந்த மெல்லிய புன்னகை, இப்பொழுது இரண்டு மூன்று பற்கள் தெரிந்தன.
"நன்றி."
அவன் அவளைப் போல் தோள் குலுக்கினான்.
"என்னால் முடிந்தது தானே." தரையைப் பார்த்து கணைத்தான், நிமிர்ந்தான். "நீங்க கிருஷ்ணவேணி தானே?"
"என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும், மிஸ்டர் ராமன்?"
"என்னை ஜானுன்னு கூப்பிடுவாங்க..."
கிருஷ்ணவேணி முறைத்தாள்.
"சரி. நான் ஏன் உங்களை அப்படி கூப்பிடனும்?"
அவளின் பொய் முறைப்பிலிரிந்து சொட்டிய குறும்புத்தனத்தை ஜானகிராமன் கவனிக்கவில்லை. கிச்சா கவனித்து, அவசரமாக செந்திலின் கையை வாங்கிப் பிடித்துக் கொண்டு எழுந்தான்.
"யாருடா நீ? என்னை எதுக்கு வந்து காப்பாற்றினே? ஏதாவது கடன் வைக்கவா?"
"ஐயோ, ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க? அப்படியெல்லாம் ஒன்னுமில்லை." முகத்தில் விழுந்த முடியை இன்னொரு கையால் பிடித்து அடுத்த பக்கம் தள்ளினான். தாடையை ஒரு வித ரோஷத்தால் பிதுக்கியதைப் பார்த்து கிருஷ்ணவேணிக்கு சிரிப்பு வந்தது. கிச்சா அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தான். அவளின் கையை அழுத்தி பிடித்து ஆவேசமாக நொண்ட ஆரம்பித்தான்.
"கிச்சா..."
"வா, பேக்கரிக்கு போகனும்!"
"டேய், கிச்சா..."
நொண்டுவதை நிறுத்தி அவர்களை கோவமும் உடம்பின் வலிகளும் பொங்கி வந்து பார்ப்பவர்களையும் தாக்கும்படி முறைத்தான்.
"வாங்கடா!"
இந்த குழுவின் தலைவர் யார் என்று ஜானகிராமனுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது. கிருஷ்ணவேணி அவனைத் திரும்பிப் பார்க்கத் தலையை மெல்ல சாய்த்தாள்.
"திரும்பாதே! அந்த தேச துரோகியை பார்க்காதே!"
ஜானு என்ற மென்மையான செல்லப் பெயர் வைத்திருப்பவன், ஜானகிராமன் என்ற தர்மமான முழுப் பெயர் வைத்திருப்பவன் எந்த விதத்தில் தேச துரோகி என்ற ஆர்வத்தில் அவளின் அருமைத் தம்பியைப் பின் தொடர்ந்தாள்.

கிருஷ்ணவேணி ஆண்ட் கோ.

கிருஷ்ணவேணியின் வீட்டிற்கு எதிரில் இருக்கும் பேக்கரியில் தான் சிறுவயதிலிருந்து இந்த அறுவரும் சேர்ந்து தேநீரும் கிரீம் பண்ணும் சாப்பிடுவார்கள். பேக்கரி மாமா எனப்படும் சொக்கலிங்கம் அவர்களுக்கு சாப்பாட்டு பண்டங்களை மட்டும் அளித்து வளர்க்கவில்லை. தேசப் பற்றும், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பேசுவதற்கான தைரியத்தையும் ஊட்டினார். கிச்சாவிற்கு பேக்கரி மாமாவை தனியாக பிடிக்கும். அவர் இப்பொழுது மெட்ராஸ் சென்ட்ரல் ஜெயிலில் வசித்திருந்தார், அவர் செய்யாத ஒரு குற்றத்திற்கு. சட்டம் படிக்கும் இவர்களுக்கே தெரியாது, எந்த வழக்கிற்க்காக அவரை கைது செய்திருக்கிறார்கள் என்று. 
"நீ சொல்றதை பார்த்தா அந்த பையனோட அப்பாத்தான் தேச துரோகி."
செந்திலின் மேல் கிச்சா சாய்ந்து நொண்டிக்கொண்டே வந்திருந்த பொழுது, அனைவருக்கும் ஜானுவைப் பற்றி கொடுத்த கொடூரமான அறிமுகத்தை கேட்டு ஒரு சிறிய சிரிப்புடன் சொன்னான், செந்தில். 
"அப்படிப் பார்த்தால் நீயும் கிருஷ்ணாவும் கூட தேச துரோகிகள்!"
கிச்சா அவனைத் தள்ளி, கிருஷ்ணவேணியின் மேல் மாற்றி சாய்ந்து வந்தான். அவன் முகத்தை சுளுக்கிக் கொண்டதைப் பார்த்து கிருஷ்ணவேணி சிரித்தாள். அவன் அவளைப் பார்த்து முறைத்தான். அவள் தோளை குலுக்கினாள்.
"உண்மைதானே? நம்ம அப்பா அந்த லெஃப்டினன்ட் மேஜர்க்கு துபாஷியா வேலை பண்ணறார். அந்த ஜானுவோட அப்பா டெப்புடி சூப்பரின்ட்டெண்டண்ட்."
கிச்சா ஒரு பெருமூச்சுடன் பேக்கரி வாசலில் உட்கார்ந்து கொண்டான், கீழே விழுந்த ஒரு கோப்பையை எடுத்து பக்கத்தில் நிமிர்த்து வைத்தான்.
"நம்ம அப்பா அந்த ஆளோட பூட்ஸ்ஸ நக்கறார். பிடிக்காட்டியும் அந்தாளு கூட சேர்ந்து தினமும் குடிக்கறார்."
"நிஜமா அவருக்கு பிடிக்காதா என்ன, கிச்சா?" ரோஜா விரிந்த கண்களுடன் கேட்டதற்கு ஜோதி முறைத்து கிச்சாவை உற்று பார்த்தாள்.
"ஆமாம்! என்கிட்ட ராத்திரி வந்து சொல்லுவார், ஆனால் டீ எஸ் பீ கிட்டயும் அந்த வெள்ளைக்காரன் கிட்டயும் ரொம்ப மரியாதை. He just can't refuse a drink from those gorgeous, pure, white hands!" வெள்ளைக்காரனின் உச்சரிப்பில் அவன் கேலியாக சொன்ன கடைசி வாக்கியத்தில் அனைவரும் சிரித்தனர். பேக்கரி மாமாவின் பையன் உள்ளிருந்து வந்தான். அவன் கண்ணங்கள் ஈரமாக இருந்ததை கவனித்த கிருஷ்ணவேணி எழுந்தாள்.
"தம்பி, என்ன ஆச்சு? ஏண்டா அழுறே?"
அவர்களின் பக்கத்தில் வந்து கண்களை துடைத்துக் கொண்டான். கிச்சா பக்கத்தில் உட்கார்ந்தான். 
"அப்பா... அப்பாவை காலா பாணிக்கு அனுப்பிச்சிட்டாங்க." 
வெள்ளைக்கார அதிகாரிகளின் தலைமாட்டில் இடி விழு வேண்டும் என்று ஆசைப் பட்டிருப்பான் கிச்சா. ஆனால் இப்பொழுது இவர்களின் தலைகளில் நிஜமாக, பெரிதாக ஒரு இடி விழுந்தார் போலத்தான் இருந்தது.
கிச்சா நடுங்கும் கரங்களுடன் அவனின் முதுகைத் தடவிக்கொடுத்தான். ஜோதி வாயைப் பொத்திக்கொண்டாள். 
"அப்பாவை இனிமே பார்க்க முடியுமான்னு..."
எல்லோரும் அவனை சூழ்ந்தார்கள். ஆசையாக அவனை பற்றி அனைத்து, அந்த பிஞ்சு வயசிற்கு ஆறுதல் அளிக்க முயற்சித்தார்கள். சிறிது நேரத்தில் ரோஜா மெல்லிய குரலில் பேசினாள்.
"வேண்டிப்போம், டா. உனக்காக, உன் அருமையான அப்பாக்காக, உன் குடும்பத்துக்கே, நாங்க வேண்டிப்போம்."
"அக்கா, எங்களுக்காக வேண்டிண்டா அப்பாவை அநியாயமா கைது பண்ணவங்களுக்கு தண்டனை கிடைக்குமா, என்ன?"
கிச்சாவின் கைகளைப் ஓரக் கண்ணால் பார்த்தாள் கிருஷ்ணவேணி. இப்பொழுதும் நடுங்கிக் கொண்டிருந்தது, ஆனால் மனதின் கோவத்தால் வரும் உராய்வினால்.
"உங்கப்பாவை யாரு அரெஸ்ட் பண்ணாங்க?"
அந்த பையன் எழுந்து பற்களை அழுத்தி அதனின் வழியே முணுமுணுத்தான்.
"லெப்டினன்ட் மேஜர், ஜெய்மீ துரை."

கிருஷ்ண... வேனி

"எப்படியாவது அந்த பையனுக்காக, நாம..."
"பழி வாங்கணும்ன்கிறாயா? டேய் கிச்சா, வேண்டாம்." 
செந்திலைப் பார்த்து கிச்சா அனலாக எரித்து முறைத்ததைக் கண்டு அனைவரும் எச்சிலை முழுங்கினார்கள். ரஷீத் இன்னும் கொஞ்சம் புத்திசாலியாக கிச்சாவை சமாளிக்கத் தெரிந்தவன். அவனின் தோளில் ஒரு கை வைத்தான்.
"என்ன பிலான் இருக்கு உன் கிட்ட?"
கிச்சா கிருஷ்ணவேணியைப் பார்த்தான். அவள் முறைத்து தோளை குலுக்கினாள்.
"என்னை எதுக்கு பார்க்கறே? ஒரே பிலான், கடவுள் கிட்ட விடறதுதான்."
"ஷ்! கிச்சா உன் தம்பின்ற தைரியத்துலதான் இப்படி அவனை எதிர்த்து பேசறியா?" ஜோதி எழுந்து அவள் காதருகில் சொன்னது அநேகமாக அனைவருக்கும் கேட்டிருக்கும். கிருஷ்ணவேணி கண்களை சுழற்றினாள்.
"சொக்கலிங்கம் மாமாக்கு நடந்தது நியாயமில்லை, ஒத்துக்கறேன். ஆனால் அதுக்காக நாம பாட்டுக்கு நியாயம் வழங்க முடியுமா? சட்டம் படிக்கிற நம்மலே சமூகத்துக்கு விரோதமாக நடந்துக்கலாமா?"
"என்னடி சட்டம் படிப்பும் சமூகத்துக்கு விரோதமும்? போய் தூக்கி எரி அதையெல்லாம்! அவங்க நம்ம ஊருக்குள்ளே வந்து மாத்தி கொடுத்த கர்மம் பிடிச்ச சட்டத்தைத்தான் நாம படிச்சிண்டு இருக்கோம்!" கிச்சா தலையசைத்தான். "அவங்க கொடுத்த புது சட்டத்துல, நியாயம் கிடைக்காது நமக்கு. அவங்களோட இஷ்டம் படி, பணம் இருக்கிறவங்களோட இஷ்டம் படி என்ன நடக்கனுமோ, அதுதான் நடக்கும்." மெல்லிய குரலில் பேசி முடித்தான். "Law is the playground of the bourgeoise."
பின் பரவிய மௌனத்தில் கிருஷ்ணவேணி கிச்சாவின் கால்களை உற்று பார்த்தாள். எலும்புகள் உடைந்திருக்குமோ என்று சந்தேகப் படும்படி மிகவும் சிரமப்பட்டு ரோஜாவின் டீச்சர் தாத்தாவின் பழைய நீண்ட பிரம்புடன் நொண்டிக்கொண்டிருந்தான். தனியாக ஒரு விஷயமும் செய்ய முடியாது, இப்பொழுதைக்கு.
"ஹலோ!"
பின்னால் இருந்து ஒரு குரல் அவர்களின் முக்கியமான பேச்சு வார்த்தையில் குறுக்கிட்டது. கிருஷ்ணவேணி அவனைப் பார்த்து லேசாக முறைத்து, அவளின் தாடையை அழுத்தினாள்.
"ஜானகிராமன், இங்கே என்ன செய்யறீங்க?"
அவன் சிரித்து தலையை வருடிக்கொண்டான். அவளைப் போல் தோளை குலுக்கினான்.
"உங்களை... இங்கே பார்த்தேன்... வந்து பேசலாம்னு நினைச்சேன்..."
ஜோதியும் ரோஜாவும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு அவளைப் பார்த்து கண் அடித்தனர்.
"போ, கிருஷ்ணா. அவன்தான் கூப்பிடறான் இல்லை? நல்லா பேசு."
கிருஷ்ணவேணி அவனைத் தனியாகப் பார்த்தாள். அவனின் சிரிப்பிலும் பேச்சு வார்த்தைகளிலும் கொஞ்சம் தன்னம்பிக்கை தோன்றியிருந்தது. ஒரு முறை திரும்பி கிச்சாவைப் பார்த்தாள். அவளின் பார்வையைப் பார்த்து அவன் கண்களை சுருக்கிக் கொண்டான்.
"என்னடி என்னை பார்க்கறே? போயேன், உன் காதலனோட. அவன் பெரிய காரில் ஊர் சுத்து, இங்கிலீஷ் படம் பாரு, அவன் வீட்டுக்கு ராத்திரி போய் அப்பாவை மாதிரி அவனோட சேர்ந்து ஃபாரின் சறக்கு அடிச்சிட்டு வா. எல்லாம் பண்ணேன்!" என்று அவளின் அருமை இரட்டை சகோதரன் மனதில் நினைத்ததை அவள் காதுகளில் வாங்கிக்கொண்டாள். ஒரு பெருமூச்சுடன் திரும்பினாள். ஜானு பொறுமையாக அவனின் சஸ்பெண்டர்சுடன் விளையாடிக் கொண்டிருந்தான். ஒரு சிரிப்புடன் அவளிற்க்காக காத்திருந்தான்.
"நான் உங்ககூட கொஞ்சம் அப்புறமா பேசறேனே?"
அவன் இயல்பாக தோள்களை குலுக்கினான்.
"ஷ்யூர். காலேஜ்ஜில?"
கிருஷ்ணவேணி சம்மதம் குறிக்கும் விதம் தலையசைத்தாள். அவன் சிரித்து பின்னால் நடந்தான்.
"அப்போ சரி. உங்களை தனியா விடறேன்." மறுபடியும் தலை முடியில் தனித் துண்டு ஒன்றை பிடித்து காதிற்கு பின்னாடி வைத்தான். 
"பாய், கிரு... பாய், வேணி."
அவன் தன் காரில் ஏறி செல்லும் வரை அவனை உற்று பார்த்தாள். தனக்குள் சிரித்தாள், வேடிக்கையுடன். இந்த பையனுக்கு எவ்வளவு வெட்கம், ஆனாலும் எவ்வளவு துணிச்சல்? இவளுக்கு ஒரு செல்லப் பெயரையே வைத்துவிட்டான், அதற்குள்?
அவளின் முகத்திற்கு முன் கிச்சா இரண்டு சொடுக்குகள் போட்டான்.
"ராணி தயவு கூர்ந்தால், வீட்டிற்கு செல்லலாமோ?"
அவசரமாக தலையை ஆட்டி உதடைக் கடித்தாள். அவளுக்கு கண்டிப்பாக ஜானகிராமனை பிடிக்காது. முற்றுப் புள்ளி!

கிச்சாவின் தாகம்

அன்றைக்கு இரவு கிருஷ்ணவேணி தன் அறையின் கூரையை வெறுமென பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா பக்கத்தில் அவளின் ஆங்கில புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். அவளின் விரல் அந்த பக்கத்தின் முனையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது, இன்றைக்கு இது போதுமா என்ற மனதின் சந்தேகத்தை காட்டியது. அப்பா கீழே அவரின் வெள்ளைக்கார நண்பருடன் மடக்குகளை உள்ளே தினித்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணவேணி சட்டென்று எழுந்தாள்.
"எங்கடி போறே?"
அம்மாவை திரும்பிப் பார்த்தாள். முன் இருந்த பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த விரல் திருப்பி அடுத்த பக்கத்திற்கு சென்றிருந்தது. அம்மாவின் கண்ணாடி அணிந்திருந்த கண்களும் புத்தகத்தை விட்டு விலகவில்லை.
"கிச்சா இன்னிக்கி காலேஜ்ல கால்லை அடிபட்டான்..."
அம்மா முறைத்து அவளை மேல் நோக்கி பார்த்தாள்.
"என் கிட்ட சொல்லவே இல்லை?"
கிருஷ்ணவேணி தோளை குலுக்கினாள், அசட்டுத்தனமான ஒரு சிரிப்புடன்.
"அவன் ஆம்பளை தானே, வலியை சமாளிச்சிருப்பான் போல." கதவருகில் சென்றாள். "ஆனால் அதுதான், நான் போய் பார்த்துட்டு வரலாம்னு..."
அம்மா ஒரு பெருமூச்சுடன் புத்தகத்திற்கு மறுபடியும் சென்றாள். மௌனமாக தலையசைத்து கிருஷ்ணவேணிக்கு சம்மதம் அளித்தாள். கதவை மெல்ல சாற்றி, கால் விரல்களில் தத்தித் தத்தி நடந்து, கிச்சாவின் அறைக்கு முன்னால் நின்றாள். 
"கிச்சா?" கதவை லேசாக தட்டினாள். "உள்ளே வரலாமா?"
"ம்ம்..." என்ற ஒரே சப்த பதில் கேட்டு கதவை மெல்ல திறந்து உள்ளே சென்றாள். கிச்சா அவனின் தொப்பையில் படுத்துக் கொண்டிருந்தான், அடி வாங்கிய கால்கள் பறப்பி வைத்திருந்தது. கிருஷ்ணவேணி பக்கத்தில் சென்று உட்கார்ந்தாள்.
"பாவம். எப்படி இருக்கே?"
கிச்சா சிறிது எழுந்து ஒரு கையில் சாய்ந்து கொண்டான். அவளைப் பார்த்து பாதியாக சிரித்தான்.
"இந்த வலி, தாய் நாட்டின் மேல் நாம வைத்திருக்கும் பக்திக்கு தீனி." 
அவள் சிரித்தாள். 
"உன்னை அடிச்சிக்க ஆள் இல்லைடா."
"இருக்காங்களே, மிஸ் ஃபார்லி?"
"சீ, அவளும் ஒரு ஆளுன்னு..."
கிச்சா சிரித்தான்.
"என்னடி விஷயம்? என் உடல் நலத்தை விசாரிப்பதற்கு மட்டுமா வந்தே?"
கிருஷ்ணவேணி உதடை மெல்ல கடித்து தனக்குள் சிரித்துக்கொண்டே இன்னும் அவன் அருகினில் தவழ்ந்து குனிந்து பேசினாள்.
"டீ எஸ் பீ வீடு எங்கே இருக்குது?"
கிச்சா முறைத்தான். 
"அது எதுக்குடி உனக்கு?"
"சும்மா, சொல்லேன்?"
கிச்சாவின் கண்களை உற்று நோக்கினாள் கிருஷ்ணவேணி. சொல்லலாமா வேண்டாமா, சொன்னால் இந்த கிறுக்கி என்ன செய்வாள், எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருந்தது தெளிவாக அவளுக்கு தெரிந்தது. அவன் அவளை பார்த்து தலையாட்டினான்.
"சொல்லறேன்... ஒரு விஷயம் செய்வியா, எனக்காக?"
"ஓ, செய்யறேன். சொல்லு."
கிச்சா மெல்ல எழுந்து நேராக உட்கார்ந்தான். அவனின் முகபாவம் முழுதாக மாறி இருந்தது. கிருஷ்ணவேணி அதை பார்த்து சற்று குழப்பம் அடைந்தாள்.
"என்ன வேணும் கிச்சா?"
"டீ எஸ் பீ வீடு பின்னாடிதான் இந்த வெள்ளைக்காரனும் தங்கியிருக்கான். இப்போ தான் அவன் குடும்பம் எல்லாம் திரும்பி லண்டன் போயிருக்காங்க."
"சரி, அதுக்கு?"
கண்களை கீழே தள்ளினான், சொல்லப் போவதை நினைத்து தயங்குவது போல். "உன் காதலனை பார்க்க போகும் பொழுது, அப்படியே இவனை காலி பண்ணிடேன்." சிரித்தான். "இந்த ஊருக்கு ஒரு தொந்தரவு குறையும்."
கிருஷ்ணவேணி அதிர்ந்து ஒரு மூச்சுத் தினரலுடன் எழுந்தாள். கிச்சாவின் எரிமலை கண்கள் அவளைப் பார்த்து கேலியாக சிரித்ததைக் கண்டு முறைத்தாள்.
"அடப் பாவி! இதுக்கு நானே தனியா கண்டுப்பிடிப்பேன்."
கிச்சாவின் கேலிப் பார்வை மாறாது பின்னால் முதுகில் படுத்துக் கொண்டான். தலைக்கு பின் கையை வைத்து கண்களை மூடிக் கொண்டான். 
"சரி போ, நீயே கண்டுபிடி. ஆள் தி பெஸ்ட்!"
"ஹும்! யூ செல்ஃபிஷ் ஃபெளோ! உன் சுதந்திர தாகத்தை தீர்க்கறதுக்கு, என்னையா மாட்டி விடுவே? நீயே கொள்ளு, அவ்ளோ ஆசை இருந்ததுன்னா!"
கதவருகில் நின்று, அசையாமல் படுத்திருந்தவனை முறைத்து சிறிது நேரம் பார்த்து விட்டு, இன்னொரு முறை "ஹும்!" என்று மூச்சை வெளியேறி விட்டு அவளின் அறைக்கு உறக்கான மிதிகளுடன் சென்றாள். 
"ஏதோ சண்டை போட்டுறுக்கீங்க போல இருக்கு?" அம்மா கண்களை மூடி தன் பக்கத்தில் படுக்கப் போணவளை ஒரு சிறிய புன்னகையுடன் கேட்டாள். விளக்கை அணைத்து "ஹூம்!" என்று கடைசியாக ஒன்று விட்டு தலையனைக்குள் தலையை பொறுத்திக்கொண்டாள். 

கிருஷ்ணவேணியின் தாகம்

"அடப் பாவி! அப்படியா சொன்னான்?"
"அவங்களுக்கு எப்பவுமே தைரியம் ஜாஸ்தி."
கிருஷ்ணவேணி ஜோதியின் முட்டியை தட்டினாள்.
"ஆ!"
"நீ இப்போ என் பக்கம்! தைரியம் ஜாஸ்திதான் அவனுக்கு, ஆனால் இது கொஞ்சம்..." தலையசைத்தாள், "வேற கணக்கா போயிண்டு இருக்கு."
"கிருஷ்ணா..."
ரோஜாவை நேர் எடுத்து பார்த்தாள் கிருஷ்ணவேணி. என்ன விஷயம் என்ற விதம் தோளை குலுக்கினாள்.
"உன் காதலனை பார்க்க போவியா?"
கிருஷ்ணவேணி தலையில் அடித்துக் கொண்டாள்.
"யாரு காதலன்? எனக்கு ஒரு காதலனும் இல்லை!" அவளின் பையை அவசரமாக மாட்டிக் கொண்டு எழுந்தாள். "என்னை ஒரு பீ ஏ படிச்சு முடிக்க விடுவீங்களா? பிளீஸ்!"
விடையைக் கேட்காமல் அவர்களை விட்டு லைப்ரரிக்கு ஓடாத கணக்காக வேகமாக நடந்து சென்றாள். 
வெளியே எடுத்த புத்தகங்களை திரும்பவும் கொடுத்து விட்டு, பத்திரிக்கைகள் வைத்திருந்த இடத்திற்கு சென்றாள். அங்கே முன் பக்கத்தில் தெரிந்த ஒரு தகவலைப் பார்த்து பெயர் தெரியாத ஒரு செய்தித்தாளை எடுத்து கீழே உட்கார்ந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு பத்திரிக்கை எழுத்தாளர் சுதந்திரத்தைப் பற்றி தொடர்ந்து எழுதியதால் சிறைப் படுத்தப் பட்டார், என்று படித்தது அவளின் மனதிற்குள் ஏதோ செய்தது. திடீர் என்று முன் இல்லாத ஒரு தாகம் அவளைத் தாக்கியது. 
ஓரமாக இருந்த தண்ணி வாளியிலிருந்து ஒரு கோப்பை முழுவதும் அவளின் தாடையையும் கழுத்தையும் புடவையையும் ஈரமாக்கும் அளவு அவசரமாகக் குடித்தாள். மூச்சுத் தினரிக்கொண்டே தன்னை துடைத்துக் கொண்டாள். தாகம் குறையவில்லை.
மனதை வேறுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் கதைப் புத்தகங்கள் இருக்கும் இடைக்கழிக்கு சென்றாள். அங்கே இந்தி நூல்கள் இருக்கும் சிறிய இடத்திற்கு பின்னாலிருந்து அவளுக்கு மிகவும் பரிச்சயமான குரல்களைக் கேட்டு மெல்ல முன் நடந்தாள். புத்தகங்களின் வழியாக மூன்று முகங்கள் தெரிந்தன. படர்ந்து பறவிய தூசி வழியாக அவர்களின் பேச்சுவார்த்தைகள் காதில் விழுந்தது.
"அப்படியா சொன்னே, அவ கிட்ட?" செந்தில்தான், சுவற்றில் சாய்ந்திருந்த கிச்சாவை தொடையில் தட்டி, சிரித்துக் கொண்டே சொன்னான். ரஷீத் விரிந்த கண்களுடன் தலை ஆட்டினான்.
"அவ என்ன சொன்னா, அதுக்கு?"
கிச்சா தனக்குள் சிரித்தான்.
"என்னாலை எல்லாம் முடியாது, உன்னாலை முடிந்ததை பார்த்துக்கோன்னு சொல்லிட்டா." பெரிதாக ஒரு பெருமூச்சு விட்டான். "நான் செஞ்சதுதான்டா தப்பு."
"இல்லவே இல்லை! அந்த ஜானுவை உபயோகித்து அவளாலை ரொம்ப சுலபமா செய்ய முடியற காரியத்தை தான் நீ கேட்டிருக்கே..."
"இல்லைடா செந்தில்! நான் சொல்றதை கேளு!" நிமிர்ந்து உட்கார்ந்தான். "அவ என்னத்தான் என்னோட இரட்டையா இருந்தாலும்... அவ ஒரு பொண்ணுடா." தலையில் கை வைத்தான். "அவ கிட்டப் போய் ஒருத்தனை கொண்ணுட்டு வான்னு சொல்லறதுக்கு, எனக்கு... எங்கே இருந்து... ட்ச! நான் ஒரு பைத்தியம்!"
செந்திலும் ரஷீதும் அவனை தேற்ற முயற்சிப்பது அவளின் காதில் விழவில்லை. கையில் இருந்த பேப்பரைப் பார்த்தாள். மெல்ல புறட்டினாள். முழு கதையும் படித்தாள். லெஃப்டினன்ட் மேஜர் ஜெய்மீ ரிவர்ஸ், அவளின் தந்தையின் முதலாளி, பேக்கரி மாமாவை அந்தமானிற்கு அனுப்பிய மகானுபாவர், மெட்ராஸ் பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்தின் வெளியிடங்களில் தீ வைத்து, மக்களை வெளியேற்றி, ஒரு கால்ஃப் கோர்ஸ் அமைத்திருக்கிறான். அதைப் பற்றி வெளியேறிய மக்களை பேட்டியிட்டு உதவிய அந்த ஜர்ணலிஸ்ட்டுக்கு சிறை தண்டனை அளித்து விட்டான் ஜெய்மீ துரை. நேர்காணலில் மறுமொழிகள் கொடுத்த ஒரு வயதானவரின் வாக்கியம் அவளின் மனதை உறுகவைத்தது.
"எங்களுக்கு வீடு, கிராமம், சுற்று வட்டார நிலங்கள் என்று இருந்தது எல்லாவற்றையும் இப்படி எரித்து விட்டார்கள். பரவாயில்லை என்று விட்டால், இப்பொழுது செல்வதற்கு ஒரு உதவியும் அளிக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் எங்கே செல்வோம், சொல்லுங்கள்? இப்படி எங்கே செல்வது என்று வழி இல்லாமல் நடு சாலையில் கட்டின சேலையுடன் நிற்கும் என் மனைவியைப் பார்க்கும் பொழுது என் கையாலாகத்தனத்தினால் எனக்கு வெட்கமாக இருக்கிறது!"
கிருஷ்ணவேணி பேப்பரை மடித்து அக்குளிற்குள் வைத்தாள். வெளியே நடந்து அவளின் மூன்று ஆண் நண்பர்களுக்கு முன் நிமிர்ந்து நின்றாள். மூவரும் அவளைப் பார்த்து சற்றே பின் வாங்கினார்கள்.
"கிருஷ்ணா! எல்லாமே கேட்டுட்டியா?"
விருப்பத்துடன் கேட்ட ரஷீதை பார்த்து தலையசைத்தான் கிச்சா. அவளின் கண்களை நேராக பார்க்க முடியாமல் கீழே சரிந்து விழுந்திருந்த இந்தி கதைப் புத்தகங்களை உற்று நோக்கினான்.
"ஆமாம். எல்லாம் கேட்டுட்டேன்."
செந்திலும் ரஷீதும் ஒருவரையொருவர் பார்த்து மெல்ல சிரித்தனர்.
"உன் முடிவு என்ன?"
கிருஷ்ணவேணி கைகளை மடித்து கிச்சா அருகினில் வந்தாள். அவன் அவளை குழப்பம் கலந்த ஒரு முறைப்புடன் பார்த்தான். என்ன என்று கேட்கும் விதம் தலையை சிறிது தூக்கினான்.
"டீ எஸ் பீ வீடு எங்கே இருக்குன்னு நீ சொல்றியா, இல்லைன்னா நானே கண்டுபிடிக்கட்டுமா?"
கிச்சாவின் முகம் அவ்வளவு சீக்கிரமாக மலருவதைக் கண்டு கிருஷ்ணவேணியின் தாகம் சிறிது அடங்கியது.

கிச்சாவும் கிருஷ்ணாவும் 

இரவு நேரம், பௌர்ணமிக்கு முந்தின நாட்களாக இருந்ததினால் கடல் அலைகள் சாந்தமில்லாமல் கரையை மோதியது. கிருஷ்ணவேணியின் இருதயமும் உற்சாகத்துடன் அவளின் நெஞ்சை விட்டு எகிறி குதித்துவிடும் போல் அடித்து மோதியது. 
"என்னடி, சாப்பாட்டை தொடலை?" அம்மா கிச்சாவிற்கு சாதம் போடும் பொழுது கேட்டாள். கிச்சா அவளைப் பார்த்து கண் சிமிட்டினான். 
"ஸாரி, அம்மா. இதோ, சாப்பிட்டு முடிக்கறேன்."
"பொறுமையா சாப்பிடு." கிச்சா வாயின் பாதி மென்ற சாதத்தை தட்டில் துப்பிக்கொண்டே சொன்னான். அம்மா முறைத்து அவனின் தலையில் தட்டினாள்.
"நீ முதல்ல பொறுமையா வாயை மூடி சாப்பிடுடா."
கிருஷ்ணவேணி தலையை குனிந்து சாம்பார் சாதத்தில் ஒரு நட்சத்திரம் வரைந்தாள். 
சரியாக ஒன்பது முப்பத்தைந்து மணிக்கு அப்பாவும் ஜெய்மீ துரையும் வந்தார்கள். பாடங்களைப் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணவேணியும் கிச்சாவும் ஒருவரையொருவர் பார்த்து மாடிக்கு செல்ல எழுந்தார்கள். அம்மாவும் அவளின் ஆங்கில புத்தகத்தை எடுத்துக்கொண்டாள். 
"கிச்சா! கிச்சா, இங்கே கொஞ்சம் வா!"
கிச்சா விரிந்த கண்களுடன் திரும்பினான். அந்த ஆங்கிலேயனுடன் கும்மாளம் அடிக்கும் சமயத்தில் இவனை சேர்க்க போகிறார்களா இப்போ? கிருஷ்ணவேணியை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு மெல்ல அடி வைத்து அப்பாவிடம் சென்றான். படிகட்டிலிருந்து கிருஷ்ணவேணி எட்டிப் பார்த்தாள்.
"Sir is wondering what is wrong with your leg?"
கிச்சா எச்சிலை முழுங்கி அசட்டுத்தனமாக சிரித்தான்.
"Oh, nothing. I... Fell down some stairs at college, a few days back."
"You are alright now?"
"Yes, Sir. I can walk."
"Good."
ஒரு மௌனம் பரவியதில் குவளையில் பீயர் ஊற்றும் சத்தம் கேட்டது. கிச்சா மெல்ல பின் வந்தான்.
"May I take your leave, Sir?"
"Oh yes, go on."
கிச்சாவுடன் சேர்ந்து படிகட்டை ஏறும் பொழுது, அவர்களின் சம்பாஷனையில் சில வாக்கியங்கள் காதுகளில் விழுந்தது.
"A very polite young man. He would do great in the service of the British Raj."
"He is studying law now. He is top of his class."
"Excellent."
கிச்சா வகுப்பில் முதல் மாணவன் கிடையாது. பின் சீட்டில் உட்கார்ந்து சட்டப் புத்தகங்களுக்கு பின்னால் பத்திரிக்கைகளும் தமிழ் நாவல்களையும் படித்துக் கொண்டிருப்பான். பிரஃபசர் அரசியலமைப்பு சட்டங்களைப் பற்றி மணி நேரக் கணக்கில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அவனின் நோட்டு புத்தகத்தில் ஜோதியின் இரட்டைப் பின்னலில் கோர்த்திருந்த மல்லிப்பூவை சுழல் சுழலாக, பொழுது போக்கும் படி வரைந்து கொண்டிருப்பான்.
அவர்களின் அறை வாசல்களை அடைந்தனர். கிச்சா தயங்கி அவனின் கதவை திறந்தான். 
"கிருஷ்ணா..."
அவள் திரும்பி பார்க்கும் சமயம், அவன் அவளை அணைத்து தன் மார்புடன் சேர்த்துக் கொண்டான். அவளின் தலையை தீவிரமாக தட்டிக்கொண்டே இருந்தான். அழுத்தி பிடித்ததில் அவனின் வேகமான இருதயத் துடிப்பு அவளுக்கு நன்றாக கேட்டது. 
"டீ எஸ் பீ வீட்டுக்கு வழி தெரியுமாடீ உனக்கு?" அவனின் குரல் தழைத்தது. "நான்..." முழுங்கினான், "நான் வரட்டுமா..."
"இல்லை கிச்சா. உன் கால்..."
"அது பரவாயில்லை. என்னால முடியும்." அவளை மெல்ல அவனின் அனைப்பிலிருந்து வெளியே விட்டான். "உனக்கேதாவது..."
"கவலைப்படாதே, கிச்சா." அவனின் ஈரமான கண்ணத்தை தட்டினாள். "என்கிட்ட பிலான் இருக்கு."
அவள் அறைக்குள் நுழைய கிச்சா அதிர்ந்தபடி முன் வந்தான்.
"என்ன? எப்படி?"
அவள் தோளை குலுக்கினாள்.
"பெண் புத்தி, பின் புத்தி."

கிருஷ்ணாவின் கா...

"அதோ அங்கே பார்த்தியா, அடையாறுக்கு பக்கத்துல போற சந்துலே பெருசா நிக்குதே, அதுதான் டீ எஸ் பீ வீடு."
அந்த மதியம், கிச்சா தனியாக கிருஷ்ணாவை ரஷீதுடன் டீ எஸ் பீ வீட்டை காட்ட அனுப்பியிருந்தான். ஆறு கரையோடு ஒட்டி விலையாடியதைப் பார்த்து மகிழ்ந்த கிருஷ்ணவேணி, டீ எஸ் பீ வீட்டிலிருந்து வெளியில் வந்த ஒருவனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினாள்.
"ஜானகிராமன்தானே அது?"
ரஷீத் கண்களை சுருக்கி பார்த்து வாயைப் பொத்தி சிரித்தான்.
"ஆமாம்! அவன்தான்! ஐயோ, கிருஷ்ணா, என்ன இது? உன் ஆளு இப்படி ஊதறான்?"
அவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் ஆச்சரியமும் வேடிக்கையும் கொடுத்த ஜானகிராமன், அவன் காரில் பின் சாய்ந்து கொஞ்சம் கவர்ச்சிகரமாக டம் குடித்துக் கொண்டிருந்தான். 
கிருஷ்ணவேணி வெருமென சிரித்தாள்.
"இவனைப் பார்க்கிற ஒவ்வொரு பொழுதும், ஏதோ புதுசா பண்ணி அதிர வைச்சிடறான்."
"முதல்லை மிஸ் ஃபார்லியை வந்து மிரட்டியது..."
"எனக்கு வேணின்னு புது செல்ல பெயர் கொடுத்தது..."
"இப்போ, வீட்டு வாசல்லையே டம் அடிக்கிறது! நல்ல ஆள் கிடைச்சான் உனக்கு."
கிருஷ்ணவேணி ரஷீதை ஒரு யோசனை வந்தவள் போல் மேல் நோக்கி பார்த்து, சற்றுப் பின்னால் தள்ளினாள்.
"நான் அவனைப் போய் பார்க்கட்டுமா, என்ன?"
"இப்பையேவா?"
"எனக்கு ஏதோ ஒரு யோசனை வர்றது..."
ரஷீத் எட்டி வெளியில் பார்த்தான். ஜானகிராமன் காரை விட்டு விலகி தன் டம்மை மிதித்து அணைத்தான்.
"உனக்கு நிறையா நேரம் இல்லை. இதோ, கிளம்பப்போறான்."
"எங்கே போவான் என்னை விட்டு?" என்று முணுமுணுத்தபடி வேகமாக அவனிருந்த இடத்துக்கு நடக்க ஆரம்பித்தாள். ரஷீதுக்கு ஒரு செய்கை வழியாக "நான் பார்த்துக்கொள்கிறேன், நீ கிளம்பு" என்று சொன்னாள். அவனும் விரிந்து சிரித்துவிட்டு சென்றான்.
"ஹலோ!" 
ஜானகிராமன் தொலைவிலிருந்தே அவளைப் பார்த்து அவளிடம் ஓடி வந்தான். அவள் ஒரு சிரிப்புடன் அவனை வரவேற்றாள்.
"வணக்கம், ஜானு."
அவன் கண்ணங்கள் நொடிப் பொழுதில் சிகப்பானதைக் கண்டு அவளுக்குள் சிரித்தாள். சேர்ந்து நடந்தார்கள்.
"இங்கே... நீ என்ன... பண்ணறே?"
வழக்கம் போல் அவள் தோளை குலுக்கினாள்.
"இங்கேதான் டீ எஸ் பீ வீடு இருக்குன்னு கண்டுபிடிச்சேன். உங்களைப் பார்க்கலாம்னு தோனிற்று."
அவனின் மேல் பல் வரிசை முழுவதும் தெரியும் அளவு நகைத்தான். 
"நிஜமாகவா?"
"ம்."
"என்னை பார்க்கணும்னு வந்தியா?"
"ம்!" அவள் சிரித்தாள். "இதுல என்ன நம்ப முடியலை உங்களாலே?"
அவனின் முகத்தின் இப்பொழுதைய சிகப்பு நிறமும் முத்துப் புன்னகையும் மாறாது அவன் பார்வையை கீழே செலுத்தினான். வெட்கத்துடன் மெல்லிய குரலில் சொன்னான்.
"எனக்கு தெரியும்."
"என்னது?"
கிருஷ்ணவேணி எச்சிலை முழுங்கிக்கொண்டாள். 
"நீயும் என் காதலை திருப்பி கொடுப்பேன்னு."
மன நிறைவுடன் சிரித்தாள்.
"ஆமாம், ஆமாம். கண்டிப்பா. திருப்பி கொடுக்காமல் போனா..."
"ஒன்றும் நடந்திருக்காது. என் அப்பாவும் உன் அப்பாவும் அவங்களோட இஷ்ட படி கல்யாணத்தை எப்பொழுதோ முடித்து வைத்திருப்பாங்க." 
கிருஷ்ணவேணி பின் வாங்கினாள். அவன் கிண்டல் அடிக்கிறானா என்று உறுதி செய்ய அவனின் கண்களை உற்று நோக்கினாள். சந்தோஷமுடன் ஜொலித்தது.
"க... கல்யாணமா? ய... யாருக்கு?"
"நமக்கு தான்!" அவளை அவன் வீட்டு வாசலில் இருந்த ஒரு ஊஞ்சலில் உட்கார வைத்து அவளை ஆட்ட ஆரம்பித்தான். "எங்கப்பாக்கு இல்லாத சொத்தா? உங்கப்பா எவ்வளவு கேட்டாலும் எங்கப்பாவால கொடுக்க முடியும்."
"இரு, இரு, இரு!" கிருஷ்ணவேணி சிரமப்பட்டு ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை நிறுத்தி அவனை மறுபடியும் பார்த்தாள், லேசாக முறைத்தாள்.
"என்கிட்ட யாரும், இதைப் பத்தி சொல்லலையே?"
"நான்தான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்."
"என்னது??" 
கிருஷ்ணவேணி அவனைப் பார்த்த முறைப்பில் அவள் அவனின் காதலை நிஜமாக திரும்பி அளிக்கிறாளா என்று சந்தேகம் வந்தவன் போல் அவனின் முகமும் சிரிப்பும் வாடியது.
"ஆமாம் வேணி, நான்தான் அப்படி சொல்ல சொன்னேன். முதல்ல நான் அவளைப் பார்க்கணும், சந்திக்கணும்," சிரித்தான், "காதலிக்கணும்... அப்புறம் அவள் என்னை பார்க்கணும், சந்திக்கணும்," அவளைப் பார்த்து பெரிதாக சிரித்தான், "காதலிக்கணும், அப்படின்னு சொன்னேன். அவள் விருப்பத்தை சொல்லற வறைக்கும் கல்யாண பேச்சை எடுக்காதீங்க அப்படின்னு சொல்லிட்டேன்."
ஊஞ்சலின் விளிம்பை இதிகாச நூல்களில் வரும் அழகான நாயகனை போல் பிடித்து அதன் மேல் சாய்த்து விளையாடினான். அவளைப் பாவமாகப் பார்த்தான். அவள் வந்த விஷயம் என்ன, இங்கு கண்டுபிடித்திருக்கும் அதிரடித் தகவல் என்ன, என்று சோர்ந்து போய் தலையசைத்தாள். 
"உன்கிட்ட இருந்து மறைச்சதுக்கு, மன்னிக்கணும்..."
"சே, சே. நீங்க நல்ல விஷயம்தான் செஞ்சிருக்கீங்க. நல்லா பொறுமையா, அருமையா யோசிச்சு, என்னை மடக்கி உங்க கைக்குள்ளே கொண்டு வந்துட்டீங்க."
அவளை பார்த்து உடைந்து போன முக பாவத்துடன் முறைத்தான்.
"ஏன் வேணி இப்படி பேசறே? உனக்கு என்ன பிடிக்கலையா?" கீழே மண்டியிட்டான், ஊஞ்சலில் இருந்த அவளை ஏறிட்டு பார்த்தான். "உன் மேலே எப்படி காதல் வந்ததுன்னு எனக்கு தெரியலை. பட், ஐ எம் ஷியூர் ஒஃப் இட்." தலையை ஆர்வமாக அசைத்து, அவளின் கைகளை பிடித்தான், "ஐ லவ் யூ..."
"அப்படின்னா எனக்காக ஒரு விஷயம் செய்வீங்களா?"
புதிதாக விளையாட்டு பொருள் வாங்கிக் கொடுத்த ஒரு நாய்க்குட்டியை போல் தாவி நின்றான். அவளைப் பார்த்து வேடிக்கையாக சலூட் அடித்தான்.
"Anything the Madam asks for."
"முதல்ல இங்கிலீஷ்லை பேசர்றதை நிறுத்துங்க."
ஈ என்று இயல்பாக சிரித்தான். அவளைப் போல் தோளை குலுக்கினான்.
"நிச்சயமாக. அடுத்து என்ன வேணும், வேணி மேடத்துக்கு?"
கிருஷ்ணவேணி எழுந்தாள். அவனின் கண்கள், புஷ்பமோ புத்தகமோ கேட்கப் போகிறாள், நம் பணத்துடன் வாங்கி அளிக்கலாம் என்று ஆர்வமாக அவளைப் பார்க்கும் கண்கள். இத்தனை நாட்கள் அவளை யார் என்று அறியாமலும் ஏதோ ஒரு விதியின் விளையாட்டினால் அவளைக் காதலிக்க வைத்து இப்படி அவள் பின்னால் சுற்ற வைத்ததும் அதே கண்கள். 
அவனின் கையை எடுத்து பிடித்துக் கொண்டாள். நல்ல வசதியான வளர்ப்பிலிருந்து வருபவன் என்று நன்றாகவே காட்டின அந்த சிகப்பான, மென்மையான, நீண்ட, அழகான விரல்கள் கொண்ட கைகள். கிருஷ்ணவேணி ஒரு நிமிடம் அவை மெல்ல வருடிப் பார்த்தாள்.
'இந்தக் கைகளால் நீ கேட்கும் விஷயத்தை கொடுக்க முடியுமா என்று நன்றாக யோசித்து விட்டு கேள், கிருஷ்ணா!'
"என்ன யோசிக்கிறே?" அவளின் கையை மெல்ல எடுத்து மேலே பிடித்தான். "என்னவாக இருந்தாலும் செய்வேன். சத்தியமா..."
"டம் அடிக்கறதை நிறுத்தனும்."
அப்பொழுது தோன்றிய மௌனத்தில் கிருஷ்ணவேணிக்கு ஒவ்வொரு வினாடியும் செல்வது மனதிற்குள் நன்றாக கேட்டது. அவன் திடீர் என்று வாய் விட்டு சிரித்தான். 
"அவ்வளவுதானே? இதோ." என்று தன் பாக்கெட்டில் இருந்த டப்பாவையும் தீப்பெட்டியையும் எடுத்து அவளின் கைகளில் வைத்தான்.
"ஐயோ, என்ன என்கிட்ட தரீங்க? அப்பா பார்த்தார்ன்னா கொண்ணு போட்டுடுவார்."
"அப்பா பார்க்கிறதுக்கு முன்னாலேயே அதைத் தூக்கிப்போட்டுடு."
கிருஷ்ணவேணி எழுந்து மெதுவாக வெளியில் நடந்து சென்றாள். அவன் தொடர்ந்து வந்தான், ஒரு வித குழப்பத்துடன் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே. 
"உன்னை வீடு வரைக்கும் வந்து விடட்டுமா?"
அன்றைக்கு இரவு இங்கே வர வழி தெரிய வேண்டும்.
"வேண்டாம், ஜானு."
"காரில் வரையா?"
அன்றைக்கு இரவு நடைப்பாதையால் தான் இங்கே வரமுடியும்.
"வேண்டாம், ஜானு."
"காஃபி, டீ, ஏதாவது என் கூட சாப்டுட்டு கிளம்பேன்?"
அன்றைக்கு இரவு அவளுக்கு தெம்பாக அம்மாவின் இரவு நேர சாப்பாடு தான் இருக்கும். வேறெதிலும் சார்ந்திருக்க முடியாது.
"வேண்டாம், ஜானு."
மூன்று வேண்டாங்களை பதில்களாக வாங்கி, ஜானு ஏமாற்றத்துடன் நின்றான். ஒரு பெருமூச்சுடன் தோளை குலுக்கினான்.
"சரி. பாய், வேணி."
"நான் வரேன், ஜானு."
அவன் அவளின் கடைசி வாக்கியத்தை கேட்டு சந்தோஷப் பட்டாலும், அவள் அன்றைய இரவு அவனின் மாளிகைக்கு வரத்தான் போகிறாள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டான்.

கிருஷ்ண வண்ணம் 

பதினொன்றறை மணிக்கு கீழிருந்து ஒரு சத்தம் வந்து கிருஷ்ணவேணியை எழுப்பியது. எதிர்ப்பார்ப்புடன் எழுந்தாள், இரண்டு மணி நேரமாக அதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தவள் போல். அம்மா நன்றாக உறங்கி விட்டார்கள் என்று அவர்களின் முகத்திற்கு முன் கையை அசைத்துப் பார்த்து தெரிந்து கொண்டாள். வெளியே மெல்ல நடந்து சென்று கீழே எட்டிப் பார்த்தாள். 
"Will you be able to make it home safe tonight, Sir?"
அப்பா குழைத்து பேசிய ஆங்கிலம் புரிந்து, கிச்சாவின் அறைக்குள் புகுந்தாள். கால்களின் வீக்கத்தினால் அவன் குப்புறப் படுத்துக் கொண்டு கால்களை பரப்பி வைத்து, ஓரளவுக்கு வசதியாகத்தான் தூங்கிக் கொண்டிருந்தான். மெல்லிய குறட்டை சத்தம் கேட்டது. அவனின் அல்மீராவிற்கு பக்கத்தில் மடித்து வைக்காத துணிகளை புரட்டினாள். ஒரு பாண்ட், ஒரு ஷர்ட், ஒரு பெல்ட், சாக்ஸ் அவசரமாக மாட்டிக் கொண்டாள். வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு, மூச்சுத் திணற கிச்சாவின் பெரிய கோட்டை போர்த்திக்கொண்டு கீழே ஓடினாள்.
"அப்பா, நான் அவரை கொண்டு விடறேன்!" என்று அவளால் முடிந்தவரை தீர்க்கமான குரலில் கிச்சாவைப்போல் பேச முயன்றாள்.
இருவரும் திரும்பி அவளை சொக்கிய கண்களுடன், தழைக்கும் விழிகளுடன், அசட்டுச் சிரிப்புகளுடன் பார்த்தார்கள்.
"கோ, சேஃப்." என்று இரண்டு வார்த்தைகளால் பதில் அளித்தார் அப்பா. அவள் திரும்பி வரும் முன் கிச்சாவின் அறைக்கு செல்லக் கூடாது என்ற உத்தேசத்துடன் அவரைப் பிடித்து நடு ஹாலில் படுக்க வைத்தாள்.
"இங்கேயே படுத்துக்கோ, பா. நான் வந்துடறேன்."
எதிர்ப்பில்லாமல் அப்படியே அவர் படுத்துக்கொண்டதை முதல் வெற்றியாக கருதி, கிருஷ்ணவேணி ஜெய்மீ துரையிடம் சென்றாள். கதவருகில் சாய்ந்திருந்தவனை தாங்கிப் பிடித்து வெளியில் நின்றிருந்த கோச்சில் ஏறிக் கொண்டாள். டிரைவர் அவள் ஏறுவதை பார்த்து குதித்து ஓடி வந்து அவளின் (கிச்சாவின்) பாண்ட் முனையை பிடித்தான்.
"எக்ஸ்கியூஸ் மீ!"
"டேய், முன்னாடியே சொல்லிருக்கேன் இல்லை? இது துரையோட தனி வண்டின்னு. அவரை வீடு வரைக்கும் கொண்டு போய் சேர்க்க எனக்கு தெரியும், நீ திரும்பி உள்ளே போ. போடா!"
கிருஷ்ணவேணி அந்த டிரைவரை மேலும் கீழும் இருட்டில் முடிந்த வரை பார்த்தாள். இப்பொழுது புரிந்தது, கிச்சா ஏன் இத்தனை நாட்களாக இந்த பிலானை செய்ய முயற்சிக்கவில்லை என்று. கிச்சாவால் அத்தனை நாட்கள் அவனின் தாகத்தை அடக்கி வைத்திருக்கலாம், இவளால் கண்டிப்பாக முடியாது. டிரைவரை நெருங்கினாள்.
"என்ன சார் சொல்றீங்க, துரை தான் அவர்கூட வரணும்னு சொன்னார்."
"ஆ? அவர் யார் கிட்டயும் அப்படி சொள்ளமாட்டாங்களே..." ஒரு வினாடி யோசித்து அவளைப் பார்த்து முறைத்தான். "இல்லை தம்பி, என்னை ஏமாத்த முடியாது."
கிருஷ்ணவேணி ஒரு பெருமூச்சுடன் தலையசைத்தாள். இவ்வளவு நெருங்கி வந்தும் இப்படி ஒரு சின்ன விஷயம், அதுவும் தன் நாட்டு மக்களில் ஒருவன், தினமும் ஜெய்மீ துரையால் சித்திரவதை படுபவனால் அவளின் சோம்பலான பிலான் மூழ்கி விடுமா, என்ற ஏமாற்றத்துடன் அவள் கதவருகில் சென்றாள். கோச் புறப்படும் சத்தம் கேட்க, அவளின் மனது அவளை ஆட்டியது. அந்த தாகம் பீறிட்டு உடல் முழுவதும் ஒரு வேகமாக கிளம்பியது. இருட்டோடு இருட்டாக மறைய கிச்சாவின் கோட்டிருந்தது, வெளிச்சம் எங்கேயாவது தேவைப் பட்டால் ஜானுவின் தீப்பெட்டி, அவளின் கோரிக்கைக்கு இன்னமும் நெருங்க சந்தர்ப்பம் கிடைத்தால்... இருந்தது அம்மாவின் தேங்காய்களை உரிக்கும் அறுவால்.
அவளைத் தாக்கிய வேகம், அவளை அந்த கோச்சிற்கு பின்னால் ஓட வைத்தது. அடையாறில் உள்ள தெருக்கள் சாந்தமாக இருக்க, குதிரை வேகத்தின் சத்தத்தினால் அங்கே இங்கே திரிந்த இரவு நேர காவல்காரர்களுக்கு அவள் ஒரு பொருளாக தெரியவில்லை. 
கிருஷ்ண வண்ணத்தில் இருந்த வானத்தில் வெண்மையாக ஜொலித்த சந்திரனைப் போல் கிருஷ்ணவேணி அந்த கோச்சை தொடர்ந்து, ஒரு சிரித்த ஜொலித்த முகத்துடன் டீ எஸ் பீ வீடு வந்து சேர்ந்தாள்.

ஜானுவின் கா...

ஜானு அன்றைக்கு மதியம் அவனின் அருமைக் காதலியுடன் பேசி, அவள் புறப்படுவதற்கு முன் சொன்ன "நான் வரேன்" என்ற வார்த்தைகளை நினைத்து நினைத்து இரவு பொழுதை போக்கிக் கொண்டிருந்தான். அப்பா கூடிய சீக்கிரத்தில் அவரின் போலீஸ் வேலைகள் எல்லாம் முடித்து வந்துவிடுவார். அவர்களின் இல்லத்திற்கு பின்னால் இருந்த பகுதியில் வசித்துக் கொண்டிருந்த ஜெய்மீ துரையின் கோச்சும் இன்நேரத்திற்கு வரும். வெளியில் குதிரையும் கோச்சும் குலுங்கும் சத்தம் கேட்டு எழுந்தான். பால்கனிக்கு சென்று வெளியில் எட்டி கோச்சிலிருந்து தட்டுத் தடுமாறி இறங்கிய துரையை வேடிக்கை பார்த்தான். மதியம் அவள் விட்டுப் போயிருந்த ஒரு பேப்பர் துண்டை அவன் எடுத்து கொடுப்பதற்குள் அவள் சென்றுவிட்டதை எங்கிருந்தோ அவன் நினைவுக்குள் வந்தது. ஏன் அப்பொழுது தோன்றியது என்று தெரியவில்லை, ஆனால் அதனின் முன் பக்கத்தில் இருந்த ஜெய்மீ துரையைப் பற்றிய தகவல் நியாபகப் படுத்திக்கொண்டான். ஏன் அந்த பேப்பர் துண்டை வேணி வைத்திருந்தாள்... ஏன் அவன் வீடு வரைக்கும் வந்தாள்... ஏன் அவனை அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் செய்ய ஒத்துக்கொண்டாள்... அவள் நிஜமாகவே அவனின் காதலியா, இல்லை பணக்காரன் என்றபடி வெருமென உபயோகிக்கிறாளா? சந்தேகங்கள் அந்த இரவின் நிழல் பொழுதில் அவனைப் போட்டு ஆட்டியது. கீழே இருட்டுக்குள் பார்த்தான், முறைத்தான். ஒரு கருத்த உருவம் அவனின் வீட்டின் மதில் சுவரை ஏறி குதிப்பதைப் பார்த்து பின் வாங்கினான். 
"அவனாக இருக்குமோ?" உதடைப் பிதுக்கி அழுத்திக்கொண்டான். "ராஸ்கல் மச்சான்!"
அவசரமாக தன் அறையை விட்டு வெளியே ஓடி, படிகளை இறங்கி, இரண்டு மேஜைகளின் ஓரங்களால் இடுப்பில் அடி வாங்கி, புழக்கடையைத் தாண்டி, இரவு நேரத்தால் அடையாறிலிருந்து மிதந்து கொண்டிருந்த துர்நாற்றத்தை மூக்கை மூடி தடுத்துவிட்டு, ஜெய்மீ துரையின் சிறிய, வசதியான பகுதியை சென்று அடைந்தான். 
அந்த கரு உருவம் அவனை வென்றிருந்தது. ஜானு படிகளை தடுக்கி விழுந்தபடி ஏற, வலியுடன் வரும் அடக்கிய பெருமூச்சு அவன் காதில் விழுந்தது. அவன் தலையில் அடித்துக்கொண்டான்.
"அடப் பாவி, கிச்சா. உன்னை நாளைக்கி காலைல நான்..."
"I apologise, Sir. I am not as polite as my brother."
ஜானு அந்த குரலைக் கேட்டு உலகமே நின்றது போல் உணர்ந்து, மெல்ல அடி வைத்து முன் சென்றான். பெண் குரல், தீர்க்கமான குரல், வார்த்தைகளை யோசித்து பொறுமையாக பேசும் குரல், அவளின் குரல். 
அறை வாசலில் கதவின் நிழலில் பின்னால் நின்று அவளைப் பார்த்தான். ஒரு அறுவாளை துரையின் நெஞ்சுப் பகுதியிலிருந்து வெளியே எடுத்து அவரின் போர்வையில் ரத்தைத்தைத் துடைத்தாள். அவள் கை நடுங்கியது, தயக்கத்தினால் அல்ல, இலங்கையை எரித்த ஆஞ்சநேயரின் உற்சாகம் போல். ஜானு ஆச்சிரியித்தால் வாயைப் பொத்தி, ஒரு சிரிப்புடன் தலை அசைத்தான்.
சுதந்திர தாகம் தீர்ந்திருக்காது... ஆனால் இப்பொழுது அவள் அடைந்திருந்த பானம் சற்றே இனிப்பாகத்தான் இருந்திருக்கும்.
அவள் சுற்றும் பார்த்து, மேலே நோக்கி ஒரு கும்புட்டு போட்டு விட்டு, பால்கனியில் ஏறினாள். ஜானு அறைக்குள் சென்று பால்கனியில் அவளிற்கு பின் வந்து நின்றான். கைகளை மடித்துக் கொண்டான். 
"என்னைக் கேட்க முடியலை, நீயே செஞ்சிட்டே?"
அவனின் குரல் கேட்டு அதிர்ந்து போய் பால்கனி எதிரில் விழுந்தாள். அவன் சட்டென்று கை கொடுத்து பிடித்தான். அவள் அவனை மேலே நோக்கி பார்த்து எச்சிலை முழுங்குவதைக் கண்டு சிரித்து மேலே இழுத்தான். விளிம்புகளின் அடுத்த பக்கம் அவள் எப்படியோ சமாளித்து நின்று, மெல்ல கண்களை அவன் முகம் நேராகக் கொண்டு வந்தாள்.
"ஜானு, நான்..."
"நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை. நீ இதை எப்படித்தான் செஞ்சேன்னு எனக்கு கொஞ்சம் ஆச்சிரியிமாக இருக்குது..."
அவள் சிரித்தாள். கெட்டியாக அவனின் கையையும், பால்கனியின் கைப்பிடியும் பிடித்துக்கொண்டாள். 
"எனக்கே எப்படின்னு தெரியலை." நிலவைப் பார்த்து தனியாக சிரித்தாள். "பௌர்ணமி நெருங்கறது இல்லை..."
"ஐயோ, அப்படின்னா ஒவ்வொரு பௌர்ணமியிலும் நீ யாராவது ஒருத்தனை கொள்வியா?"
அவள் மௌனமாக இருந்ததைப் பார்த்து அவன் புரிந்து கொண்டான். முகத்தை அவளருகில் கொண்டு சென்றான்.
"நீ பௌர்ணமி அன்னிக்கி என்ன வேணும்னாலும் பண்ணு..." மெல்லிய குரலில் அவளின் காதருகில் சொல்லி முடித்தான், "மத்த நாள் எல்லாம் என்னோட இரு."
அவள் சிரித்து தோளை குலுக்கினாள்.
"இப்போ முதல்ல என்னை கீழே இறக்கி விட உதவுவீங்களா?"

Comments

Popular posts from this blog

ஜாக்கிரதை!

Dharam Yuddh - 4

Dharam Yuddh - 5