லல்லியின் பெயர்
"அம்மா..."
"என்னடா?"
"வேண்டாம், உனக்கு பதில் தெரியாது. அப்பா..."
"என்னடி இப்படி சொல்லிட்டே!" அம்மா அவளைப் பார்த்து முறைத்ததில் பொய் பயத்துடன் அப்பாவை கட்டிண்டாள் லல்லி. அப்பா அவள் தலையை தட்டினார்.
"அம்மாவை எது வேணும்னாலும் கேட்கலாம். அவங்களுக்கு எல்லாம் தெரியும்."
அம்மா அவளின் ஆசைக் கணவரைப் பார்த்து வெறுப்புடன் சிரித்தாள்.
"எல்லாம் தெரியாது. ஆனால் உன் கேள்வியை என்கிட்ட கேட்டுத்தான் பாரேன்?"
லல்லி அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்திருந்தவனை உற்று பார்த்தாள். வெள்ளையாக, தலை முடியும் தோல் நிறமும் சேர்ந்து கொள்ள, ஒல்லியாக, நீட்ட மான கால்களை கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் அடக்கி, இளமஞ்சள் முடிக்கு நேர் எதிராக அலங்கரித்த கருப்புக் கண்ணாடியும் தலையுமாக, மிகவும் தீவிரமாக ஃபோனை சாய்த்து வைத்து இரண்டு கட்டை விரல்களாலும் நோண்டிக் கொண்டிருந்தான்.
"அவன் யாரும்மா?"
அம்மா முழித்ததை அப்பா பார்த்து வாயைப் பொத்திக்கொண்டார்.
"சொல்லேன் மா. குழந்தை கேக்கறால்லை?"
"எனக்கு எப்படி தெரியும், அந்த வெள்ளைக்காரப் பையன் யாருன்னு?" சுற்று முற்றும் பஸ்ஸில் ஏறி அங்கங்கே துளி துளியாக, சமர்த்தாக உட்கார்ந்திருந்த மற்ற வெள்ளைக்காரர்களை பார்த்தாள். "இங்க வந்தே நாலு நாள்தான் ஆச்சு."
பஸ் மிகவும் வேகமாக பிரேக் போட்டு நின்றதில் லல்லி அப்பாவின் மேல் விழுந்தாள். இருவரும் உறக்காக சிரித்தார்கள். அம்மா கவலையுடன் எதிரில் இருந்த பையனைப் பார்த்தாள்.
"ஸ்ஸ்ஷ்ஷ்!" என்று பலத்தமாக அவர்களை அதட்டினாள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தனர்.
"ஏன் இப்படி வெளியில வந்து சத்தம் போடறீங்களோ?"
"ஏன் மா, வேடிக்கையா இருந்தது. இந்தா..." என்று லல்லியை அவள் பக்கம் தள்ளினார். அவள் இரண்டு இருமல்களுடன் அழுதாள்.
"அப்பா! வலிக்கிறது!"
"ஸ்ஸ்ஷ்ஷ்!"
"ஸாரி கண்ணு."
பஸ்ஸில் ஏறிய ஒரு வயதான ஆஸ்திரேலியப் பெண்மணியை கால்கள் கீழே எட்டாத வண்ணம் ஆட்டி வேடிக்கைப் பார்த்தாள்.
"அம்மா, நாம் இறங்கும் போதும் ராம்ப் கேட்கலாமா?"
"அது கஷ்டப் படறவங்களுக்குத் தான்."
"ஓ..." ஜன்னலில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை மெல்ல படித்தாள்.
"அப்படின்னா உனக்கும் இந்த ப்ளூ பொம்மை மாதிரி வயிறு ஒப்பியிருந்ததுன்னா ராம்ப் போடுவாங்களா?"
"ஆமாம்." அப்பா மிகவும் அவசரமாக பதில் சொல்ல அம்மா அவரைப் பார்த்து "ட்ச்" என்று ஒரு சத்தம் விட்டாள்.
"அம்மா, கேர்ள்ஸ்க்கு தான் வயிறு உப்புமா?"
"ஐயோ!"
"இது மிடி போட்டுண்டு இருக்கு..."
"ஏன் லல்லி, கொஞ்சம் சும்மா இருக்கறியா?"
"Excuse me, can you please get up?"
அப்பாவும் அம்மாவும் அவர்களை சுருக்கிய கண்களால் எரிக்க முயற்சித்து கொண்டிருந்த பாட்டியைப் பார்த்து முழித்தார்கள். அப்பா அவருக்கு தெரிந்த ஒரு சிறிய இரண்டு சப்த ஆங்கிலத்தை சொன்னார்.
"S-sorry?"
"I want to sit here."
"அப்பா..." லல்லி அவரின் கையைத் தட்டி அந்த ஜன்னல் ஸ்டிக்கரில் இருந்த ப்ளூ பொம்மையை காட்டினாள். அப்பா தலையாட்டி உடனே எழுந்தார்.
"Sorry."
புரியாமல் உட்கார்ந்திருந்த அம்மா அப்பா எழுந்துகொள்வதை கவனிக்காமல் அப்படியே இருந்ததைப் பார்த்து அந்த பாட்டி மறுபடியும் அதட்டினாள்.
"Up, lady! I need to sit!"
கையில் லல்லியை தாங்கி நின்றிருந்த அப்பா முறைத்தார். அவர் மனைவியை அதட்டுவதற்கு இவள் யார், கிழவி, என்று நினைத்தார் போல். அம்மா முழிப்பு வந்தவள் போல் தலையை ஆட்டி எழுந்துகொண்டாள்.
மூவர் உட்கார்ந்திருந்த இடத்தில் அந்த குள்ளமான, அதிக வயதினால் சுறுங்கியிருந்த பாட்டி, அப்பாவின் சீட்டில் ஒரு பாதி இடம் மட்டும் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். அப்பா அம்மாவைப் பார்த்தார்.
"நிலா..."
"வேற இடம் இல்லையே, உட்கார்ரதுக்கு."
"நிலா, அவங்க..."
"பாவம், லல்லியை நான் தூக்கட்டுமா?"
"நிலா, மதி சொல்றதைக் கேளு, நிலா!"
மேலிருந்து தொங்கிக் கொண்டிருந்த முக்கோணக் கைப்பிடியை பற்றியபடி அம்மா அவளின் ஆசைக் கணவரைப் பாவாமாகப் பார்த்தாள். அவளின் மார்பகம் தாலமில்லாமல் எழுந்து எழுந்து விழ, ஒரு அருவியை தடுக்க முயலும் மடையைப் போல் விம்மியது. அப்பா அவளின் கண்களை நேராகப் பார்க்க இயலாமல் லல்லியின் கடல் நிறச் செருப்புகளை உற்று பார்த்தார்.
"நிலா, கவலைப்படாதே. இன்னும் கொஞ்சம் தூரம்தான்."
"பஸ்ஸில் இன்னும் கொஞ்சம் தூரம். ஆனால் இந்த ஊர்ல? வாழ்க்கையில?"
லல்லி அப்பாவை பார்த்தாள். அவர் அவளை ஒரு குட்டி, நான்கு வயது, மெல்லிய நீலத்தில் ஃபிராக் அணிந்து, இரட்டைப் பின்னலிட்ட பானைப் போல் அவரின் இடுப்பில் உட்கார வைத்தார். அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.
"அப்பா..."
"என்னம்மா?"
"கேர்ள்ஸ்க்கு மட்டும்தான் வயிறு உப்புமா?"
~ ~ ~
"சைல்ட்ஸ் நேம்?"
அப்பா எச்சிலை முழுங்கினார். லல்லியை பிடித்து, அந்த மொட்டையான, சிகப்பு டை அணிந்திருந்த, கண்ணாடியை அடிக்கடி அவரின் பெரிய மூக்கில் மேல் தூக்கி வைத்துக் கொண்டிருந்த வெள்ளைக்கார பிரின்சிபால் முன் செலுத்தினார். அவள் அவரைப் பார்த்து கவர்ச்சிகரமான ஒரு சிரிப்பு சிரித்தாள்.
அந்த சிரிப்பை கண்டு மிஸ்டர் ஃபோர்ட் மயங்கவில்லை. அவளைப் பார்த்து முறைத்து அப்பாவைத் திரும்பிக் கேட்டார்.
"What is your child's name?"
"நேம்? லலிதகமலம் மதிவாணன்."
தலை அசைத்து அப்பாவிடம் ஒரு பேப்பரை கொடுத்தார்.
"Write it down."
"ஐ... ஐ வில் டிரை மை பெஸ்ட்."
அப்பா பேப்பரை வெறித்து, மெதுவாக எண்ணி எண்ணி 'லலிதகமலம் மதிவாணன்' என்பதை ஆங்கிலத்தில் எழுத முயற்சித்தார். மிஸ்டர் ஃபோர்ட் அப்பாவையும் அம்மாவையும் மாற்றி மாற்றி பார்த்தார், அதே முறைப்புடன். அவரின் சக்கரம் அணிந்த நாற்காலி குறட்டை சத்தம் செய்ய பின் சாய்ந்தார். அம்மாவைப் பார்த்து கேட்டார்.
"So, may I know how you all made it here?"
அம்மா வெறித்துப் பார்த்தாள்.
"ஹியர்?"
"யெஸ்."
அவரின் பெயர் எழுதியிருந்த போர்ட்டை பார்த்து சிரிக்க முயன்றாள்.
"We applied visa... At temple..."
"You got your visa at a temple?"
அவரின் அதிர்ச்சி அம்மாவிற்கு புரியவில்லை. ஒரு தினம் பூவிருந்தவல்லியிலிருந்து விசா விண்ணப்ப படிவத்தை எடுத்துக் கொண்டு, பஸ் பிடித்து, சென்னை சானிட்டோரியத்தில் இருந்த விசா ஆஞ்சநேயரை நூறு தடவை பிரதட்சிணம் செய்து, பத்து நாட்கள் பொறுமையில்லாமல் காத்துக் கொண்டிருந்து விட்ட அப்புறம், மூவருக்கும் எப்படியோ கிடைத்த விசாவின் கதையைக் கேட்க மிஸ்டர் ஃபோர்டுக்கு நேரமும் பத்தாது, பொறுமையும் கிடையாது, நம்பவும் மாட்டார் என்று சரியாகக் கருதிய அம்மா, மறுபடியும் வெட்கத்துடன் தலை குனிந்து சிரித்தாள்.
"யெஸ், டெம்பிள்."
அவர் தோளை குலுக்கினார்.
"And then?"
"Then we catched plane."
"Caught."
"No goat. Tiger Airlines."
"Not goat, caught. You caught a plane here." மெல்ல ஒவ்வொரு அக்ஷரமும் தெள்ளத் தெளிவாக கேட்க பேசினார். அம்மா புரிந்தது போல் நடித்து "ஓ" என்ற திறந்த வாயுடன் தலையை அசைத்தாள். அவர் நம்பாது போல் அம்மாவைப் பார்த்து கண்களை சுழற்றினது லல்லிக்குப் பிடிக்கவில்லை.
"Sir, here. It is done."
"Good." இரண்டு கோடுகளின் மத்தியில் பெரிதாக, படர்ந்து எழுதிய அவளின் பெயரை எட்டிப் பார்த்தாள் லல்லி. ஆங்கிலத்தில் மிகவும் அழகே இல்லாமல், நிமிர்ந்தும் சாய்ந்துமாக இருந்த கோடுகளும் புள்ளிகளுமாக தெரிந்தது. லல்லிக்கு தமிழில் மிகவும் பிடித்த எழுத்து 'ல'தான். அவள் பெயரில் நிறைய தடவை வரும் என்று மட்டும் இல்லை. அப்பாவின் சுருட்டை முடியை நியாபகப் படுத்தியது அந்த எழுத்தும் அதனின் சுழுல் தன்மையும்.
"Most people in her school won't be able to refer to her with... This name. What would you prefer we change her name to?"
அப்பா அம்மாவைப் பார்த்தார்.
"பெயரை மாத்தனுமாம்."
"இவன் யாரு அவள் பெயரை மாத்த சொல்ல?"
"பிரின்சிபால்!" அப்பா அவரைத் திரும்பி பார்த்து பொய் மரியாதையுடன் சிரித்தார். "லல்லின்னு சொல்லட்டுமா?"
அம்மா உதட்டைக் கடித்துக் கொண்டாள். அப்பா திரும்பி அவரைப் பார்த்தார்.
"Lalli is okay?"
"லில்லி?"
"அ... ஆ. ஓகே."
லல்லி அப்பாவைத் திரும்பிப் பார்த்தாள். மிஸ்டர் ஃபோர்டை பார்த்தாள். லேசாக முறைத்தாள்.
"மை நேம் இஸ் லலிதா. நாட் லில்லி."
அவர் புருவங்களை உயர்த்தினார்.
"How well you speak English? Why didn't you tell me before?" விரிந்து அவர் சிரித்ததைப் பார்த்து அம்மா அப்பாவின் முகங்கள் ஜொலித்தன.
"மை நேம் இஸ் லலிதா."
"Yes, I know, but your teachers will have trouble saying it."
"நோ, இட் இஸ் ஈஸி நேம். ல, லி, தா."
"Yes dear, I understand you like your name, but you must think about your teachers."
லல்லி ஒரு வினாடி யோசித்தாள். அப்பாவை திரும்பிப் பார்த்தாள். அவர் சிறிது வாயைப் பிளந்து எதிர்ப்பார்ப்புடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். தலையை அசைத்தாள்.
"ஐ வில் டீச் டீச்சர்ஸ் டூ சே மை நேம்."
மிஸ்டர் ஃபோர்ட் முறைத்து, கையில் வைத்திருந்த பேனாவின் மூடியை கட்டை விரல் நுனியால் நோண்டினார். பெருமூச்சு விட்டபடி கணினியை திறந்தார்.
"Alright then. But do let them know if you would prefer a nickname."
லல்லியின் புது ஸ்கூலில் விளையாடிக் கொண்டிருந்த வெள்ளைப் பசங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே, அம்மாவின் விரலைப் பிடித்து வெளியில் நடந்தாள். சிறிது தூரத்தில் மரப் பகுதிக்கு கீழ் இருந்த பஸ் ஸ்டாப்பபை அடைந்து, அப்பா அடுத்த பஸ் எப்பொழுது வரும் என்று பார்க்க, அம்மா லல்லியை தூக்கிக் கொண்டாள்.
"அம்மா..."
"என்னம்மா?"
"உனக்கு இந்த ஊரு பிடிச்சிருக்கா?"
"..."
அப்பா அம்மாவைப் ஓரக் கண்ணால் பார்த்ததை கவனித்து லல்லி அம்மாவின் கண்ணத்தை தட்டினாள்.
"நான் இங்கே ஸ்கூல் போயே ஆகனும் அம்மா. பொறுமையா இருப்பியா? ஸாரி."
அம்மா அதிர்ந்து அவளை நேரிட்டு பார்த்தாள்.
"ஏன் இங்கே போயே ஆகனும்?" அவர்கள் பக்கத்தில் வந்து கைகளை மடித்து, கீழே எறும்புகளை அனாவசியமாக எண்ண ஆரம்பித்த அப்பாவைப் பார்த்து முறைத்துவிட்டு, "எங்கேயும் போக மாட்டோம், இப்போதைக்கு, ஆனால் சொல்லேன்? உனக்கு அந்த பிரின்சிபால் பெரியப்பாவை பிடிச்சிருக்கா என்ன?"
அப்பா முறைத்து கண்களை மேலே தூக்கினார். அம்மா சிரிப்பை அடக்கியபடி உதட்டைக் கடித்தாள்.
"ஏய்! என் அண்ணன் மாதிரியா இருக்கான் அந்த ஆளு?"
"பின்னை என்ன என் தம்பி மாதிரியா இருக்கான், மாமான்னு சொல்லறதுக்கு?"
அப்பா கண்களை சுழற்றி வேறு திசையைப் பார்த்து சிரித்தார். அம்மா லல்லியைத் திரும்பி கொஞ்சினாள்.
"சொல்லு லல்லி?"
"அந்த டீச்சர்ஸ்க்கு லலிதான்னு கூட சொல்ல வராதாம்! நான் சொல்லித்தர போறேன்!"
அப்பாவும் அம்மாவும் ஒருவரையொருவர் ஓரக் கண்களால் பார்த்து சிரித்தனர். இருவரும் உள்ளே குனிந்து சேர்ந்து, ஆளுக்கொரு கண்ணத்தை பறித்து முத்தம் அளித்தனர். அம்மாவின் முத்தம் ஈரமாக இருக்க அதை அவர்களின் புடவைத் தலைப்பை வைத்து துடைத்துக் கொண்டாள். அம்மா சிரித்தாள், அப்பாவைக் குறும்புத் தனத்துடன் பார்த்தாள்.
"லலிதகமலம். எவந்தான் இந்தப் பெயரை வைத்தானோ? சின்ன வயசுல வந்த படத்தை பார்த்து, அதுல வந்த கதாநாயகியை காதலிச்சு, இருபது வருஷம் கழித்து அவனுக்கு பிறந்த பொண்ணுக்கு எப்படித்தான் வைக்க நினைத்தானோ?"
பஸ் வந்ததை கவனித்து லல்லி அப்பாவின் கையை தட்டினாள்.
"அப்பா! அந்த போஸ்டர்ல இருக்கிற பொம்மை மாதிரி கையை காட்டு!"
அப்பா மிகவும் சமர்த்தாக அவள் சொன்னதைப் போலவே கையை நீட்டி பஸ்ஸை நிற்க வைத்தார். அம்மாவின் கையை பிடித்தார்.
"தயாரா, நிலாமணி?"
திட மனசுடன் அம்மா தாடையை அழுத்தி சிரித்து, தலையசைத்தாள்.
"உன் பெயரை எல்லார்கிட்டயும் சொல்லித்தர, நான் ரொம்பவே தயார், மிஸ்டர் மதிவாணன்."
மூவரும் பஸ்ஸில் ஏறி, வயிறு உப்பியிருந்த ஸ்டிக்கர் பெண்ணின் ஜன்னலைத் தாண்டி சென்று, பின்னாடி சீட்டில் உட்கார்ந்தனர்.
Comments
Post a Comment