அணுவின் ஆள்

தேர்ந்தெடுத்தல்

மைலாப்பூர் மாதவப்பெருமாள் கோவில் தெருவில் வாழ்ந்த சடகோபாச்சாரியின் மகன் ராஜகோபால் அலியாஸ் 'ராஜு'வை காலேஜ்ஜில் சந்தித்திருக்கக்கூடாது... அவனுடன் பேசியிருக்கக்கூடாது... அவனிடம் ஸ்பேர் பென்சில் வாங்கியிருக்கக்கூடாது. இப்பொழுது பாருங்கள்? அந்த பென்சிலை வைத்துத்தான் மீண்டும் மீண்டும் நோட்டு புத்தகங்களில் இயல்பியல் சமன்பாடுகளுக்கு அருகில் 'அனகா ராஜகோபாலன்' என்று வித விதமான கையெழுத்து பயிற்சி செய்துவிட்டேன். ஒரு எக்ஸாம் பேப்பரின் கவர் ஷீட்டில் கூட அதே பென்சிலை வைத்து என் தந்தையின் அழகான பெயரான ராமசந்திரனுக்கு பதிலாக என் மனதில் அவ்வளவு இலவசமாக குடியிருந்தவனின் பெயரை எழுதிவிட்டேன். நல்ல வேலை, என் வளைவு எழுத்து பழக்கத்தினால் முதல் எழுத்தான 'ஆர்' தெரிந்ததே தவிர, வேறு எதுவும் புரியவில்லை. ஆமாம், இதில் என்ன அவ்வளவு பெரிய சிக்கல் என்று கேட்காதீர்கள். பேப்பரை திறுத்தியவர் ராஜுவின் தந்தை இயல்பியல் பிரபஸர் சடகோபாச்சாரி.

ராஜுவின் அண்ணன் பள்ளிக்கூடத்தில் கண் முன்னால் எண்களும் எழுத்துகளும் பறக்குகிறது என்று சொல்லி அழுத பொழுது அவனின் டிஸ்லெக்சியா மீது கோபம். இப்பொழுது அண்ணன் பெங்களூரில் பெரிய வீ.எப்.எக்ஸ் ஆர்டிஸ்ட்டாக வீட்டிலிருந்தே வேலை செய்கிறான். மனைவியுடனும் குழந்தைகளுடனும் எப்பொழுதும் இருந்து சந்தோஷமாக இருக்கிறான். அப்பாவிடம் பேசுவதில்லை. அடிக்கடி ராஜூவை வீடியோ கால் பண்ணுவான். ஒன்றில் என்னை அறிமுகப்படுத்தின ராஜுவிடம் குறும்புத்தனமாக சிரித்து "பெங்களூர்ல உனக்கு ஒரு கல்யாண மண்டபம் புக் பண்ணட்டுமா?" என்று கேட்டான். ராஜுவிற்கு அவன் அண்ணன் மேல் பெரிய மரியாதை. அவன் பெயர் என்னவென்று எனக்கு இன்றைக்கு வரைக்கும் தெரியாது.

ராஜுவின் பத்தாவது வயதில் இரண்டாவது டாக்டரேட்டிற்காக இமயமலைக்கு சென்று எதிர்பாராத நிலச்சரிவில் மறைந்துபோன அவனின் அம்மா மீது பிரபஸர் சடகோபாச்சாரிக்கு ஒரு கோபம். உடல் கண்டுபிடிக்கவில்லையே என்று ராஜுவின் அண்ணன் சாதாரணமாக சொன்னதில் கோபம். ஓரமாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த ராஜுவின் மீது கோபம் ('போய் படிடா, போடா!'). இதில் எனக்கென்று வந்தது ஒரு மிஷன் இம்பாஸிபிள் (ராஜுவுக்கு மிகவும் பிடித்த பிலிம் சீரீஸ்). பிரபஸர் சடகோபாச்ச்சாரியின் திர்ட் இயர் மாணவி அனு அவரின் இளைய மகன் ராஜகோபாலை காதலித்துவிட்டாள். அந்த செய்தியை அவர் எப்படி சந்திக்கிறாரோ இல்லையோ. இந்த அனு ராமச்சந்திரன் அனு ராஜகோபாலன் ஆக வேண்டும். அவ்வளவுதான்.

ஒரு இனிய மாலையை தேர்ந்தெடுத்து சடகோபாச்சாரியின் வீட்டிற்கு முன்னால் நின்றேன். உள்ளிருந்து மூடிவைத்த இரும்பு தாழ்ப்பாளை நத்தை வேகத்தில் கிழற்றி, அதனின் ஓசைகள் என் ஆரம்பகால வயலின் பயிற்சியை ஞாபகம் ஊட்டும் அளவு சத்தம் போட்டு திறந்தாள் வேலைக்கார அம்மா. என்னை உள்ளே விட்டு என் முகத்தை மேலே நோக்கி சிரித்தாள். நானும் பதிலுக்கு சிரித்தேன். மறுபடியும் சிரித்தாள்.
"என்ன சிரிக்கறீங்க?"
"இல்லை, அய்யாவோட மூத்த மகனோட பொஞ்சாதி தப்பிச்சுட்டா. நீ சிக்கிகிட்ட."
"என்னங்க சொல்றீங்க?"
"நீயே புரிஞ்சுப்ப மா. உள்ளே வா."
எனக்கு இப்படி பட்ட அபாய அறிவிப்பு வெளிக்கதவருகிலேயே கிடைத்தது நல்ல சந்தர்ப்பம். அதை அறிந்து புரிந்து அங்கேயே 'ராஜுவும் ஆச்சு, அவன் தந்தையும் ஆச்சு' என்று சொல்லி ஓடியிருக்கலாம். ஏனோ, அப்படி செய்யவில்லை. மிகவும் துணிந்து உள்ளே நுழைந்தேன். 

பழமையான வீடு. பரம்பரை பரம்பரையாக அவர்களின் குடும்பம் வசித்திருக்கும். சுற்றி பார்த்துக்கொண்டே சென்றேன். சுவர்களில் தெரிந்த கரைகளும் நிழல்களும் மிகவும் வினோதமான வடிவங்களில் இருந்தது.  எப்பொழுதும் யாரோ பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பது போல் ஒரு உணர்வு அந்த வீட்டின் சுற்று சூழலிலிருந்து கிடைத்தது. எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. நடைபாதை கிடைசியில் தெரிந்த பெரிய அறையின் பெரிய ஊஞ்சலில் வீற்றியிருந்த என் வருங்கால மாமனாரை பார்த்தேன். அவர் பக்கத்தில் பவ்யமாக ஊஞ்சல் கம்பியின் மீது சாய்ந்தபடி ஒரு கோப்பையை ஆற்றிக்கொண்டிருந்தான் ராஜு.

சடகோபாச்ச்சாரி முன் வந்து நின்றேன். அவர் மூக்கின் மீது விடாமல் சரக்கு மரம் விளையாடிக்கொண்டிருந்த கண்ணாடி வழியாக வேலைக்கார அம்மாவிடம் கனிவுடன் சிரித்து தலையை அசைத்தார். அவள் பதிலுக்கு தலையசைத்து, "நாளைக்கு வரேங்க." என்று சொல்ல, அவர் "வேணாம். நாளன்னைக்கி வந்தா போதும்." என்று சொன்னார். அவளும் "சரிங்க" என்று கிடைசியாக சொல்லி அவசரமாக ராஜுவிடம் ஒரு தனி கும்பிடு போட்டுவிட்டு கிளம்பினாள். சடகோபாச்ச்சாரி என்னை பார்த்து தனியாக புருவங்களை உயர்த்தினார்.
"அந்த அம்மா பெயர் கூட அங்கயற்கண்ணி."
"சார், என் பெயர் அனகா."
"அப்படியா?" தாடையை தடவி யோசித்தார். "ராமபத்திரன்?"
"ராமசந்திரன், சார்."
"க்ளோஸ். சன்னுக்கு பதிலா பத் போட்டுட்டேன்."
அவரிடம் நெருங்க முயன்றேன்.
"போர் யுவர் இன்போர்மேஷன், அனு ராமபத்திரன் பீ.எஸ்.சி கெமிஸ்ட்ரி வகுப்புல இருக்கா."
"அவளை பத்தி இப்ப என்ன பேச்சு?"
"இல்லை, அவ கூடத்தான் என்னை நீங்க குழம்பிட்டீங்களோன்னு..."
"என்னம்மா உளர்ர? கெமிஸ்ட்ரி படிக்கறவ எப்படி எனக்கு தெரியும்?"
"ஒரு தடவை ஹாஸ்டல் சுவருல ஸ்ப்ரே அடிச்சு மாட்டிக்கிட்டா. ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணாங்க, ஆனா அவ அப்பா லோக்கல் எம்.எல்.ஏவோட செக்ரட்டேரியோட பொண்ணோட நாய்க்கு வைத்தியம் பார்த்தவருன்னு அவளை ஒரே ஒரு நாளுக்கு மட்டும் சஸ்பெண்ட் பண்ணாங்க."
ரொம்ப பேசிவிட்டேன் போல. அவர் ராஜூவை மேலே நோக்கி பார்த்தார். அவன் ஆற்றிக்கொண்டிருந்த டம்ளரை அவரிடம் நீட்டினார். அவர் வாங்கி ஊஞ்சலில் வைத்தார்.
"இப்பயாவது ஆத்தி முடிச்சையே."
ஒரு பெரிய கூட்டமே என்னை பார்த்து சிரிப்பது போல் உணர்ச்சி பெற்றேன். என் கைகளில் இருந்த முடிகள் தானாக நின்றன, ஆனால் காதுகளில் ஒன்றும் கேட்கவில்லை, கண்களும் எதுவும் காணவில்லை. எங்கிருந்து வந்த உணர்வு? கவனத்தை இழுத்து அவர் மீது வைத்தேன். 

சங்கதியை மாற்றுவது நல்லது என்று ராஜு யோசித்தான் போல்.
"அனு, உனக்கு ஏதாவது வேணுமா?"
"நோ, தாங்க யூ, ராஜு." என்று என்னால் முடிந்த அளவு மரியாதையுடன் சொன்னேன். கையில் அந்த காப்பி கோப்பையை எடுத்து கலக்கிக்கொண்டிருந்தவர் தலையை திருப்பி என்னை பார்த்து முறைத்தார்.
"ஏன் மா? ஏதாவது சாப்பிடேன்? இவ்வளவு தூரம் வந்திருக்கே..."
"சார், நான் இங்கதான் வூட்லண்ட்ஸ் பக்கத்துல இருக்கேன் சார்."
"என் ஆத்துக்கு வந்திருக்க. உனக்கு ஒரு க்ளாஸ் தண்ணி கூட கொடுத்த அனுப்பலைன்னா என்னையே என்னால நாளைக்கு கண்ணாடில பாத்துக்க முடியாது."
"கண்ணாடில எப்படி சார் உங்களையே பாத்துக்க முடியும்? அதுதான் மூக்கு மேல உட்கார்ந்திருக்கே?"
குழப்பத்துடன் ராஜூவை பார்த்தார்.
"முடியலைடா. உள்ளே போய் எனக்கு என்ன செஞ்சி கொடுத்தையோ இன்னொரு டம்ளர் செஞ்சிட்டு வா."
"அப்பா, அது வந்து... அங்கயற்கண்ணி அம்மா தான் போட்டு கொடுத்தாங்க. நான் வெறும் ஆத்தினேன்."
"என்ன போட்டு கொடுத்தாங்கன்னு தெரியாதா, நோக்கு?"
ராஜு உதட்டை கடித்துக்கொண்டான். தலையை அடிக்க வேண்டும் என்று அவர் கைகள் துடித்திருந்தாலும் செயல்படுத்தவில்லை. பிறகு காப்பி அபிஷேகம் தான். பரவாயில்லை. ஆறின காப்பிதான். சுடாது.
சடகோபாச்ச்சாரி கண்களை சுருக்கி என்னை பார்த்தார்.
"இது என்ன, உன்னால கண்டுபிடிக்க முடியுமா, அனிதா?"
"அனகா, சார்."
"ம்." ஒரு சிறிய அளவு பருகினார், உறக்காக. "என்னன்னு சொல்லி என் மகனை கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்?"
"காப்பி, சார்."
புருவத்தை உயர்த்தி ராஜூவை மீண்டும் பார்த்தார். அவனும் அவரைப்போலவே புருவங்களை உயர்த்திவைத்திருந்தான். ஒரே ஜீன்ஸ் இல்லையா?
"எப்படி கண்டுபிடிச்ச?"
"ஊஞ்சல்ல நீங்க டம்ளரை வைச்ச போது ஆத்தினதுனால சிந்திய துளிகள்ல வளையம் உருவாயிருக்கு, பாருங்க?"
ஊஞ்சலில் காட்சியளித்த அந்த பழுப்பநிற துளிகளும் அதனுடைய வளையங்களையும் சுற்றிக்காட்டினேன். அவர்கள் இருவரும் மிகவும் உன்னிப்பாக அதை நோக்கினார்கள். என்னை சுற்றி சில மற்றவர்களும் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது போல் இருந்தது. ஆனால் யாருமில்லை.
"தேனீருந்தான் வளையம் செய்யும்?"
"இல்லை, சார். டீ துகள்கள் படியும் போது இப்படி வளையத்தோட காயாது. டீல இருக்கிற போலிபீனால்ஸ் எல்லாம் காப்பில இருக்கிறதை விட குட்டி. அதனால அது ஒரு சர்பேஸ்ல படியும் போது எல்லாம் ஒண்ணா அப்படியே சேர்ந்துக்குமே தவிர, காப்பி துகள்கள் மாதிரி ஓரத்துக்கு போகாது."

ஊஞ்சலிலிருந்த காப்பி கோப்பையையும் சந்தமிகு தமிழ்மறை புத்தகமும் மூன்று பேனாக்களும் ஒரு நோக்கியா மொபைலையும் இரண்டு தோய்க்காத அங்கவஸ்திரங்களையும் கொஞ்சம் கூட கண்டுக்காமல் சட்டென்று எழுந்து என்னிடம் கண்களை பெரிதாக வைத்தபடி உற்றுப்பார்த்தார்.
"ஜனனி..."
"சார், அனகா, சார்."
"இல்லை. என் குடும்ப சாபத்தை காப்பாத்த போறது ஜனனி." ஆட்காட்டி விரலை என்னிடம் எதோ குற்றம் சாட்டுவது போல் நீட்டினார். "நீதான் ஜனனி."
"இல்லை, சார். ப்ராமிஸ், என் பெயர் அனகா. எங்கப்பா வேலை விஷயமா திருவனந்தபுரம் போன பொழுது நான் பிறந்தேன்னு ஸ்ரீஹரிலக்ஷ்மின்னு இன்னொரு பெயர் வைச்சாங்க. ஆனா ஜனனின்னு... எனக்கு ஜனனின்னு யாருமே தெரியவும் தெரியாது சார்."
உதட்டை கடித்துக்கொண்டார். அதுவும் ஜீன்ஸ். சொடுக்குகள் போட்டுக்கொண்டே பின்னால் சென்றார். ராஜு குழப்பத்துடன் கீழே விழுந்த சாமான்களை பொருக்கி ஊஞ்சலில் வைத்து, காப்பி டம்ளரை உள்ளே கொண்டு சென்றான். 

சுவரு வரைக்கும் நடந்து சென்று அதை தடவி கொடுத்த சடகோபாச்ச்சாரி என்னை ஒரு சொடுக்குடன் அழைத்தார். நான் மெல்ல நடந்து சென்று அவர் அருகினில் நின்றேன். சுவற்றின் மீது கையை வைக்க சொன்னார். குழப்பமாக இருந்தது. ஆனாலும் வைத்தேன்.
"இந்த ஆத்து என் ஆத்து இல்லை. என் மனைவியோடது."
அவர் சுவற்றை தட்டி நடக்க ஆரம்பித்தார், நானும் பின் தொடர்ந்தேன்.
"இந்த போன நூற்றாண்டுல இருந்து அவ குடும்பத்துல பிறந்தவங்க எல்லாரும் ஒரு விதமா செத்தாங்க. உடல் கண்டுபிடிக்க முடியாதபடி, எங்கேயோ இயற்கையோட சேர்ந்து மறைஞ்சு போன மாதிரி... ராஜுவோட அம்மாவும் அப்படிதான்."
சட்டென்று நின்றார். அவர் அடைந்திருந்த சுவற்றின் கரு நிற கரையை காண்பித்தார். அதை உற்று நோக்கினால்... ஒரு தாமரை போல் தெரிந்தது.
"கமலாவல்லி. அவளோட பெயர்."
"கமலம்னா... சம்ஸ்க்ருதத்துல..."
"தாமரை."

அந்த தாமரையை மீண்டும் பார்த்தேன். சற்று பெரிதாகி விட்டதுபோல் தெரிந்தது. கண்களை சுருக்கிக்கொண்டு அவரை பார்த்தேன்.
"என்ன சாபம் சார் அது? எங்கேருந்து வந்தது?"
"அதுதான் தெரியலை. இந்த குடும்பத்துல பிறந்தவங்க எல்லாம் விநோதமா செத்துப்போய், இந்த வீட்டுக்கே ஒரு வித... சூக்ஷ்ம சரீரத்துல திரும்பி வந்து சுவறுகள்ல படர்ந்துக்கறாங்க."
"என்னது? படர்ந்துக்கறாங்களா? என்னவோ வந்து பாயை விரிச்சு படுத்துக்கற மாதிரி சாதாரணமா சொல்லறீங்க?" அவர் அருகினில் சென்றேன். "நாம பேசறதெல்லாம் அவங்களுக்கு கேட்குமா?"
"தெரியலை. கேட்கலாம்."
"கலாமா?" 

சுவற்றில் முட்டிக்கொள்ள வேண்டும்போல் தோன்றியது. என்ன பாழாய்ப்போன குடும்பத்தில் காதல் வயப்பட்டுவிட்டேன்! 

"இதெல்லாம் ராஜுவுக்கு... அவங்க அண்ணனுக்கு..."
"தெரியாது."
"அன்னிக்கு தெரியுமா?"
"அவ யாரோ கோவா நாட்டுக்காரி. கிறிஸ்டியன்." தலையில் அடித்தார், கைதான் இப்பொழுது காலியாக இருந்ததே. "தலையெழுத்து."
"அவங்க பெயருக்கு 'ஜனனி'ன்னு அர்த்தம் வரலாமில்லையா?"
"அவ பெயர் வெரோனிக்காவோ என்னவோ."
"தொ, ஒரு நொடி." என் போனை வெளியில் எடுத்தேன். "ஹெய் கூகிள், வாட் இஸ் தி மீனிங் ஆப் தி நேம் வெரோனிக்கா-"
"அதெல்லாம் வேண்டாம்மா!"
நான் அவசரமாக போனை அனைத்து பின்னாடி கைகளை கோர்த்து அட்டெங்ஷனில் நின்றேன். என்னிடம் அருகினில் வந்து என் தோள்களில் கைகளை வைத்தார்.
"இது அவ பொறுப்பு கிடையாது. உன்னோடுது."
"பொ- பொறுப்பா? என்ன பொறுப்பு?"
"உன் வருங்கால புருஷனோட குடும்ப சாபத்தை நீக்கறது."
வாயை பிளந்தேன். 
"ஏங்க, உங்களாலையே ஒன்னும் செய்ய முடியலையே, நான் என்னத்தை கிழிப்பேன்?"
"நான் ஒன்னும் செய்யலைன்னு யாரு சொன்னா? இப்ப எனக்கு தேவை ஒரு ஜனனி. அவளாலத்தான் இந்த சாபம் போகும்னு குடும்ப ஜாதகம் சொல்லுது."
"ஒன்னு, நான் ஜனனி கிடையாது. இரண்டு, நான் ஜாதகத்துல எல்லாம் நம்பறதில்லை."
"நான் நம்பறேனே."
"நீங்க நம்பிட்டு போங்க. நான் ராஜுவைத்தானே கல்யாணம் பண்ணிக்க போறேன்?"
"ஓ, பண்ணிப்பையா கல்யாணம்? அவன் கூட ஓடி போய் கல்யாணம் பண்ணிப்பையா?"
பின்னால் ராஜு மெல்ல நுழைவதை ஓரக்கண்களால் பார்த்தேன். மூச்சை பிடித்து உதட்டை கடித்துக்கொண்டான், அவனின் அப்பாவின் அடுத்த வார்த்தைகளை எதிர்பார்த்து.
"சார், நான் வந்து..."
"என் பையனை பத்தி எனக்கு தெரியும். அவன் என் விருப்பத்துக்கு எதிரா ஒன்னும் பண்ண மாட்டான். உனக்கு உன் காதல் நிறைவேறணும்னா, நான் சொல்றதைத்தான் செய்யணும்."
ஒரு மூச்சு திணறலுடன் முற்றிலும் விஷயத்தை மாறாக புரிந்தபடி ராஜு முன்னால் ஓடி வந்தான்.
"அப்பா, என்னப்பா அவகிட்ட இப்படி பேசிட்டே! அவாள்ளாம் மிடில் கிளாஸ் பா, நீ என்ன கேட்டாலும் அவளால ரொம்ப சிரமப்பட்டு தான் கொடுக்க முடியும்." என்னிடம் சட்டென்று நெருங்கினான். "கொடுக்க முடியும்தானே?"
தலையில் அடித்துக்கொண்டேன். மீண்டும் தவறாக புரிந்து அப்பாவிடம் அழுவதை தொடங்கினான்.
"அப்பா, ஐ லவ் ஹர். போக போக நீங்களும் அவளை லவ் பண்ண ஆரம்பிப்பீங்க."
"வாட்?"
"அனு, ஐ மென்ட், பொண்ணு மாதிரி."
"போதும் இரண்டு பையன்களோட நான் பட்ட பாடு. ராஜு. நான் உன் காதலி கிட்ட கேட்டது டவுரி கிடையாது. அதை விட முக்கியமான ஒரு விஷயம். ரகசியமான என் ரிசர்ச்சுல ஹெல்ப்."
"அதை நான் செய்யறேன்..."
"நோ. அதை அவளாலதான் செய்ய முடியும்." என்னை பார்த்து முறைத்தார். "நீ அவளுக்கு அவ்வளவு முக்கியம்னா அவ செஞ்சே ஆகணும்."

முன்னேற்பாடு

ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை கூக்குரலிட்டு முன்னும் பின்னும் சென்ற ட்ரெயின்களின் பின்னணி இசைக்கு சிரிது நேரம் முண்டக்கண்ணி அம்மன் கோவில் ஸ்டேஷன் பக்கத்தில் கண்களை மூடி உட்கார்ந்தேன். ராஜுவின் வீட்டில் நடந்தவை எல்லாம் ஒவ்வொன்றாக என் மனதில் தோன்றி மறைந்தது...

'அய்யாவோட மூத்த மகனோட பொஞ்சாதி தப்பிச்சுட்டா. நீ சிக்கிகிட்ட'
'என் குடும்ப சாபத்தை காப்பாத்த போறது ஒரு ஜனனி. நீதான் ஜனனி.'
'நீ அவளுக்கு அவ்வளவு முக்கியம்னா அவ செஞ்சே ஆகணும்.'
"ஹேய், அனு. எவ்வளவு நேரம் ஹாரன் அடிச்சிண்டே இருக்கிறது?"
கண்களை திறந்தேன். அம்மா ஸ்கூட்டரில் வெளியில் இன்ஜின் அணைக்காமல் காத்துக்கொண்டிருந்தாள். என் கை கடிகாரத்தை பார்த்தேன். சரியான நேரத்தில்தான் வந்திருக்கிறாள். நான்தான் கனவுலகத்திற்கு சென்று விட்டேன்.
மௌனமாக அவள் பின்னால் போய் உட்கார்ந்ததை ரியர் கண்ணாடி வழியாக ஒரு குழப்பம் மிகுந்த புன்னகையுடன் கவனித்தாள். கூடிய சீக்கிரம் மெயின் ரோட்டை பிடித்து வூட்லண்ட்ஸ் ஹோட்டல் போகும் வழியில் மிதந்தோம்.
"ஸோ, ஹவு வாஸ் யுவர் டே?"
உண்மையை சொல்வதா, பொய் சொல்வதா? கொஞ்சம் அதிகமாக யோசித்துவிட்டேன். அவளே தொடர்ந்தாள்.
"என்னடீ, இவ்வளவு குழம்பியிருக்க? இன்னைக்கி காலேஜ் எப்படி போச்சு? நல்லா போச்சா, இல்லையா?"
"அம்மா, இந்த உலகத்துல இருக்கற நிறைய விஷயங்கள் மனுஷ மூளைக்கு எட்டாதுதானே?"
"பிசிக்ஸ் படிக்கற. இப்படித்தான் எக்ஸ்சாம்ல எல்லாம் கேட்டு குழப்புவாங்க போல." சிரித்தாள். "ஆமாம். உலகத்துல எவ்வளவோ விஷயங்கள், ஏன், புரியறதுன்னு நினைக்கற விஷயங்களிலையே ஏதாவது செக் இருக்கும்."
"புரியலை."
"இப்ப, பயாலஜில, பிசிக்ஸ்ல, கெமிஸ்ட்ரில அடிப்படை தத்துவம் என்னது?"
"அணுக்களா?"
"கரெக்ட். உலகத்துல இருக்கிறது எல்லாமே அணுக்களால ஆனவை. அந்த அணுக்கள் குள்ள?"
"ப்ரோடான்ஸ், நியூட்ரோன்ஸ்."
"அதுங்களுக்குள்ள?"
"குவார்க்ஸ்." அம்மா ஒன்றும் சொல்லவில்லை என்று நானே தொடர்ந்தேன். "ஆனா குவார்க்ஸ் குள்ள எதுவும் கிடையாது."
"கிடையாதா, கண்டுபிடிக்கலையா?"
"கண்டுபிடிக்க முயற்சி பண்றங்க."
"கண்டுபிடிப்பாங்கன்னு நீ நினைக்கரையா?"
"கண்டுபிடிக்கலாம்-"

மறுபடியும், அந்த 'கலாம்'!

"எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்கு. இந்த ஸ்கூட்டர், அந்த டிராபிக் லைட், அந்த தெருக்கோடி கடை, அந்த கோவில் சுவரு முதக்கொண்டு."
"சு-சுவருக்குமா விதி?"
"பின்ன? அதே மாதிரி இந்த குவார்க்ஸ்சுக்கு குள்ள இருக்கிற விஷயத்துக்கும் ஒரு விதி இருக்கும், அத்தை மனுஷங்க கண்டுபிடிக்க போறாங்களா இல்லையான்னுட்டு."
"என்னம்மா இது. இப்படி சொன்னா, வேலை எங்க நடக்கும்? என் எக்ஸ்சாம்ல நான் பாஸ் ஆவேனோ ஆக மாட்டேனோ, அது முன்னாடியே விதிச்சது, நான் மாங்கு-மாங்குன்னு படிச்சி போய் எழுதறதுனால என்ன மாறிடும், அப்படின்னு யோசிச்சா..."
அம்மா சிரித்து நம் வீட்டின் தெருவுக்குள் செல்ல லெப்ட் இண்டிக்கேட்டர் போட்டாள்.
"மனுஷங்க பிறந்தது விதியை பார்த்து வாழறதுக்கு இல்லை."
"பின்ன?"
வீட்டு வாசலில் நிறுத்தி, ஸ்கூட்டரிலிருந்து இறங்கி கேட்டை திறந்து உள்ளிருந்து என்னை பார்த்து சிரித்தாள்.
"வாழறதுக்குத்தான் பிறந்திருக்காங்க."
அம்மாவின் குழப்பம் மிகுந்த வார்த்தைகளை எண்ணிக்கொண்டே ஸ்கூட்டரை உள்ளே செலுத்தினேன். அம்மா எப்பொழுதும் இப்படித்தான், ஏதாவது தத்துவமாக உளறிக்கொண்டே இருப்பாள். பார்த்தால் என்னவோ ஒரு ஆரம்பப்பள்ளியில் டிராயிங் டீச்சர். நான் பரவாயில்லை, அவளுடன் இருவது வருடங்கள் தான் இருந்திருக்கிறேன். அப்பா எப்படி இன்னமும் உலகத்தை துறக்கவில்லை என்று கொஞ்சம் ஆச்சிரியமாகத்தான் இருந்தது. அவள் மீது அவ்வளவு காதல் போல். 

எனக்கு கொஞ்சம் தைரியம் மூட்டியது அவர்களின் காதல்...

அடுத்த நாள் காலேஜ்ஜில் ராஜூவை சந்தித்தேன். இல்லை. வகுப்புக்கு சென்றுகொண்டிருந்த என்னை தனியாக இழுத்து ஒரு காலி வகுப்பறைக்குள் அழைத்து சென்றான்.
"ராஜு! உனக்கு வெறி வந்துடுச்சா?"
"து! நான் உன்னை அதுக்காக காதலிக்கலை அனு!" என்னை பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டான். "ஒரு வேலை நீ என்ன..."
"கம் ஆன். இட் வாஸ் ஜஸ்ட் எ ஜோக்."
"டேஸ்ட்லஸ்."
"சரி, சொல்லு சீக்கிரம்." என் மணிக்கட்டை நோக்கினேன். வாட்ச் கட்ட மறந்துவிட்டேன். "என் கிளாசுக்கு டைம் ஆகுது."
"வாட்ச் கட்டிக்கலை?"
"அதுனால என்ன? ஐ ஹாவ் எ வெறி குட் சென்ஸ் ஆப் டைம். நீ என்னை உள்ள கூப்பிட்டு இத்தோடு ஒரு எழுபத்திரண்டு வினாடிகள் ஆயிருக்கும்." சிரித்தேன். "இன்னும் விஷயத்துக்கு வரலை."
"அனு ப்ளீஸ். லேட் மி கம் டு தி பாய்ண்ட்." நெருங்கினான். "எங்கப்பா சொல்லற ரகசிய விஷயம் என்னது?"
கையை முன் நீட்டி ஆட்காட்டி விரலும் கட்டை விரலும் தடவினான்.
"இல்லை, ராஜு. உங்கப்பா சொன்னது உண்மை. அவர் டவுரி கேட்கலை."
"நினைச்சேன். அவர் அப்படி பட்டவர் கிடையாது. ஹீ டஸன்ட் கேர் அபவுட் ஆச்சரம், அனுஷ்டானம் எல்லாம்."
"ஜாதகம் ஜோசியம் எல்லாம் நம்பறாரே?"
"என்னவாம்?" கண்கள் விரிந்து கேட்டான். "உனக்கு செவ்வாய்தோஷம் இருக்கா? ஐயோ! அவர் ஜாதகத்துல மாட்டுப்பொண்ணுக்கு செவ்வாய்தோஷம்னா கல்யாணத்துக்கு அப்பறம் இரண்டு மாசத்துல அவர் ஏழரை ஆரம்பிச்சிடுமாம்."
"சும்மா இரு! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை!"
"அப்படின்னா உனக்கு செவ்வாய்தோஷம் கிடையாதுதானே?"
"ஐ டோன்ட் திங்க் ஸோ."
"டோன்ட் திங்க். நோவ்."
சிரித்தேன்.
"ஐ விஷ் ஐ குட் நோவ் எவ்ரிதிங்."
"பேச்சை மாத்தறை. எங்கப்பாவோட சேர்ந்து பண்ண வேண்டிய அந்த ரகசிய ரிசர்ச் என்னது?"
ஒரு பெருமூச்சுடன் என் பாக்கெட்டிலிருந்து அவன் பென்சிலை எடுத்து கையில் தாறு-மாறாக சுத்த ஆரம்பித்தேன், பதிலை சொல்லாமல்.
"அது... முக்கியமில்லை."
"அதெப்படி நீ சொல்லலாம்!" பெருமூச்சு விட்டு தலை மேல் கை வைத்தான். "அதை செய்ய ஒத்துண்டாத்தான் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாராமே!"
"எஸ், ஐ மென்ட்... உனக்கு அது... முக்கியமில்லை."
என் கையிலிருந்து அவன் பென்சிலை பிடுங்கினான். அவன் முகத்தை நேரிட்டு பார்த்தேன். பார்க்க முடியவில்லை. மிகவும் பாவமாக இருந்தது. காலியான என் மணிக்கட்டை மீண்டும் தலை திருப்பி நோக்கினேன். அவன் தொடர்ந்தான்.
"என்ன உளர்ர? எனக்காகத்தானை செய்யப்போற இந்த ரிசர்ச்ச?"
"ஒப் கோர்ஸ்."
"அப்படின்னா நான்தானே முக்கியம்?"
"போடா. பெரிய சூரியன்னு நினைப்பு. உலகமே உன்னை சுத்திதான் வருது."
"நான் சூரியன் கிடையாது. நான் ஒரு... மீஸான் துகள்."
"மீஸானா?"
"மீஸான் குள்ள இரண்டு பருப்பொருள்தான் இருக்கும். ஒரு குவார்க், ஒரு ஆண்டி-குவார்க்."
என் வாயோரம் ஒரு சிரிப்பு நழுவியது. 
'இந்த ராஜு மீஸான்ல, அனு குவார்க்கா ஆண்டி-குவார்க்கா?'

வகுப்பு முடிந்து காலேஜ் மூன்றாவது மாடியில் ஒதுங்கிய பாதையில் ஒவ்வொன்றாக போர்ட் படித்துக்கொண்டே சென்றேன். என்றைக்கும் ஒரு பிரபஸரை தனியாக அவர்களின் அறையில் சந்திக்க வேண்டும் என்ற நிலைமை நான் அனுபவித்ததில்லை. வலது பக்கம் துளசிராமன் சார். இடது, யாமி மேடம். வலது, ஹரிஷ் சார். இடது, ராபர்ட்ஸன் சார். வலது, ரவீனா மேடம். இடது... ஜனனி. அவர்களின் அறைக்கு முன் நின்றேன். அவர்களின் பொறுப்பாக இருக்குமோ?
"இந்த ஜனனி இல்லைம்மா. அவங்க பெரியவங்க."
பின்னாலிருந்து வந்த குரலை நோக்கி திரும்பி, சடகோபாச்சாரியை பார்த்தேன். என் உயரம் தான். ராஜுதான் என்னை விட சற்று உயரம்.
"பெரியவங்களா இருந்தா?"
"என் பையன் காதலிக்கறதுக்கு வாய்ப்பு கிடையாது."
"ஓ. உங்க குடும்ப சாபத்தை நீக்கறவங்க உங்க குடும்பத்துக்குள்ள வரவங்களா இருக்கணுமா?"
"எஸ். இப்ப புரிஞ்சுதா?"
"எங்க? ஒன்னும் புரியாமத்தான் இருக்கு."
அவர் சிரித்து அவர் அறைக்குள் செல்ல எனக்கு வழி விட்டார். உள்ளே நுழைந்து உட்கார்ந்து, மேஜை மேல் அவர் வைத்திருந்த ஒரு பிரேம் பண்ண படத்தை கையில் எடுத்து பார்த்தேன். பல வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம். பிரபஸர், அவரின் மனைவி, இரு அழகான மகன்கள். ராஜுவுக்கு ஐந்து வயதுதான் இருக்கும். கையில் ஐஸ் கிரீம் உருக காமிராவை வேண்டா வெறுப்புடன் நோக்கினான். அண்ணனுக்கு ஏழு எட்டு வயது இருக்கும். ராஜுவின் தோல் மீது ஒரு கையை ஆசையாக, பொறுப்பாக வைத்திருந்தான். அம்மா, அழகாக இருந்தாள். ராஜூவை போலவே சற்று சப்பையான மூக்கு, குறுகிய கண்கள், கழுத்தில் ஒரு மச்சம்.
"அவ காண்டாக்ட்ஸ் போட்டுப்பா. என்னை விட ஜாஸ்தி பவர்."
"இன்டெலிஜெண்ட். ஜாஸ்தி பவர் இருந்தா கண்ணாடி ரிம் தடிமனா இருக்கும்."
"அதுக்கு?"
அவர் குரலில் கொஞ்சம் அதட்டல் தெரிந்தது. எச்சிலை முழுங்கிக்கொண்டேன்.
"இல்லை... மேனேஜ் பண்றது கஷ்டம், இல்லை?"
"ம்? இல்லையே. இப்ப நான் பண்ணலை? என் பையன் பண்ணலை?"
தரையை பார்த்தேன். மேஜையில் போட்டோவை மெல்ல வைத்து பெருமூச்சு விட்டேன். அவர் எதிரில் வந்து உட்கார்ந்து முன் சாய்ந்துகொண்டார்.
"ஸோ..."
"நான் ஒத்துக்கறேங்க. உங்க குடும்ப சாபம் போக்கறதுக்கு ஹெல்ப் பண்றேன்."

அவர் முகத்தில் அப்பொழுது விரிந்த புன்னகையை பற்றி கூறுவதற்கு சரியான வார்த்தைகள் இந்த உலகின் மொழிகளில் எதுவுமே கிடையாது. என் கையை வெறிகொண்டு பற்றினார்.
"நீ எவ்வளவு பெரிய விஷயம் பண்ணரன்னு உனக்கே தெரியாது, அதீரா."
"சார், அனகா, சார்."
என் பெயரை இப்பயாவது மனதில் வாங்கிண்டாரா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. கீழே குனிந்து மேஜையின் கீழ் டிராயரிலிருந்து ஒரு பெரிய பயில்லை எடுத்து அவசரமாக புரட்டினார்.
"ராஜு அம்மாவழி குடும்பத்துல இருந்தவா எல்லாருக்கும் இந்த ஈவென்ட் ஹொரைசன்ங்கிற கான்செப்ட் மேல ஒரு வித பித்து. எல்லாரும் இந்த உலகத்துலயே, இயற்கைலையே அந்த நிகழ்வு எல்லை தோன்றுமான்னு தேடி தேடி அலைஞ்சாங்க." கண்ணாடி வழியாக என்னை எட்டிப்பார்த்தார். "ராஜுவோட அம்மா ஹிமாலயாஸ்ல மறைஞ்சாங்க. அவளோட அப்பாவும் அண்ணனும் பெர்மூடா ட்ரையாங்கில்ல. அவரோட அப்பாவும் அவரோட அப்பாவும் சேர்ந்து ஸ்டோன்ஹெஞ்ஜ்ஜூக்கு போய் மறைஞ்சாங்க."
"அந்த ஈவென்ட் ஹொரைசன் எங்கேயுமே கண்டுபிடிக்கலையா?"
என் முகத்திற்கு நேராக ஒரு சொடுக்கு போட்டதில் நான் சற்று பின் வாங்கினேன்.
"கண்டுபிடிச்சிருப்பாங்க. அதை மறைக்கத்தான் இந்த சாபம் அவங்கள தாக்கியிருக்கு.
"சாரி, உங்க தியரி எனக்கு புரியலை."
பெருமூச்சு விட்டு அவர் சீட் பின்னால் சாய்ந்தார். என்னை பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டார்.
"கங்கை நதி உலகத்துக்கு எப்படி வந்ததுங்கிற புராண கதை உனக்கு தெரியுமா?"
"ம். பகீரதன்னு ஒரு முனிவர்-"
"முனிவர் இல்லம்மா. அவர் ராஜா."
"அதான், சார். முக்காவாசி கதை ருஷி கெட்டப்ல இருப்பாரு." கையை அசைத்து மீண்டும் சங்கதிக்குள் நுழைந்தேன். "அந்த பகீரதன் அவரோட முன்னோர்களோட சாப விமோசனத்துக்கு கங்கை பூமிக்கு வரணும்னு வேண்டி தவம் இருந்தாரு."
"அந்த முன்னோர்களோட சாபம் என்னது?"
"ஆ... சம்திங்... ஹோர்ஸ்?" நெற்றியில் விறல் நுனிகளால் வருடினேன். "அஸ்வமேதம் பண்ணினாங்க, குதிரையை தேட போய் யாரோ ஒரு ருஷியோட தியானத்தை கலைச்சி சாம்பல் ஆனாங்க." அவரை பார்த்து சிரித்தேன். "கரெக்ட்டா?"
"எஸ்." மேஜையை ஆவேசமாக தட்டினார். பரவாயில்லை, அவர் மேஜையாகத்தான் இருந்திருக்கும். காலேஜ் கண்டுக்காது. "இதே மாதிரிதான் கமலாவோட குடும்பத்துக்கு நடந்திருக்கு."
"என்ன சொல்லறீங்க? எந்த ருஷியோட தியானத்தை இவங்க கலைச்சிருப்பாங்க?"
"பூமியில ஈவென்ட் ஹொரைசன் கண்டுபிடிக்க முயன்றதுதான் அவங்க பண்ண தபஸ் கலைச்சல்."
"யாரோட தபஸ்?" கண்கள் விரித்தேன். "ஏலியன்ஸ்?"
"யாருக்கு தெரியும்? நம்மளை விட உயர்ந்த மூளை உள்ளவங்க இந்த ப்ரபஞ்சத்துல இருக்க வாய்ப்பு ஜாஸ்தி."
"ஓகே, ஸோ, ராஜு குடும்பத்தோட சாப விமோசனத்துல அந்த 'ஜனனி'க்கு என்ன ரோல்?"
சிரித்தார்.
"பகீரதன் கங்கையை வைச்சி சாம்பலான அவரோட முன்னோர்களுக்கு முக்தி அளித்தது மாதிரி, நான் உன்னை வைச்சி சூக்ஷ்ம சரீரத்துல மாட்டிண்டு தவிக்கற என் மனைவியோட குடும்பத்துக்கு விமோச்சனம் அளிக்கறேன். எஸ்," தொடர்ந்து ஏதோ மேஜர் சுந்தர்ராஜனை போல் அனாவசியமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தினார், "வீ வில் லெட் தெம் கோ."
"என்னங்க இப்படி சொல்லறீங்க? என்னவோ நாமதான் அவங்களை பிடிச்சு வைச்சிருக்க கிட்னாப்பர்ஸ் மாதிரி!"

பிரபஸருடன் ஒரு ஆட்டோவில் ஏறி மைலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெருவிற்கு சென்றோம். ராஜு இன்னமும் வீட்டிற்கு வரவில்லை.
"நாளைக்கு ஏதோ பரிட்சையாம், படிச்சிட்டு வரேன்னு சொன்னான்." என்னை அவசரமாக அவர் ஸ்டடி அறைக்குள் செலுத்தினார். "அவன் வரதுக்கு முன்னாடி இந்த விஷயத்தை செஞ்சி முடிச்சிடலாம்."
"சார்..."
களேபரமாக வைக்கப்பட்டிருந்த டிராயர்களில் எதையோ அவசரமாகவும் ஆவேசமாகவும் தேடிக்கொண்டிருந்தவர் நிறுத்தி என்னை ஒரு நொடி பார்த்தார்.
"என்னம்மா?"
மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து விட்டேன். பத்திரமாக, தெளிவாக தலையசைத்தேன்.
"நான் என்ன செய்யறேனோ, அது ராஜூவுக்காகத்தான்." தோளை இயல்பாக குலுக்கினேன். "இந்த நிகழ்வு எல்லை தியரில எல்லாம்... எனக்கு சுத்த இண்டரெஸ்ட்டே கிடையாது."
புரிந்தது போல் தலையசைத்தார். எனக்கு கொஞ்சம் மனநிறைவு அளித்தது. என் வேலையை தவிர்த்து வேறெதுவும் செய்ய சொல்ல மாட்டார் என்று ஒரு அற்ப நம்பிக்கை உருவாகியது.
கிடைசியாக டிராயரிலிருந்து ஒரு வினோதமான வஸ்துவை எடுத்தார். கண்ணாடியால் செய்திருந்த ஒரு க்யூப் போல இருந்தது... அந்த பெரிய க்யூபிற்குள் ஒரு சிறிய க்யூப் தெரிந்தது. பத்திரமாக உள்ளங்கையில் அப்பொழுது பிறந்த குழந்தைபோல் சுமந்துகொண்டு வந்தார்.
"இந்த டெஸ்ஸராக்ட் சாதாரனது இல்லை." சுவர் வரைக்கும் மெல்ல மெல்ல நடந்து சென்றார். "இந்த வீட்டை கட்டின என் மனைவியோட தாத்தாவோட தாத்தா இயல்பியல் வழியா இந்த வீட்டுக்கும் இந்த டெஸ்ஸராக்டுக்கும் கனெக்ஷன் உருவாக்கியிருக்காரு."
"எப்படி?"
என்னை நேராக பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டார்.
"உனக்குத்தான் இதுல எல்லாம் இன்டரஸ்ட் இல்லையே?"
வாஸ்தவம்தான். இதை தெரிந்து கொண்டு நான் என்னத்தை கிழிக்கப்போகிறேன்?
"இந்த டெஸெராக்ட் வழியா இன்னொரு உயிரினத்தை சுலபமா இந்த சுவருக்குள்ள இருக்கிற க்வாண்டம் உலகத்துக்கு அனுப்பறதுக்கு நான் இத்தனை நாள் ராப்பகலா ஆராய்ச்சி செஞ்சி ஒரு சூப்பர் கம்பியூட்டர் மூலமா வழி கண்டுபிடிச்சிருக்கேன்." சிரித்தார். "ஆனால் நாம கண்ணுக்கு தெரியாத எத்தனையோ புல்லு-பூச்சிங்க இருக்கு இல்லை? அதெல்லாமும் போயி குவாண்டம் உலகத்தை குழப்பிடக்கூடாது. அதனால வெளியில சூப்பர்வைஸ் பண்றதுக்கு ஒரு ஆளு தேவை."
"அதனாலைத்தான் நீங்களே உள்ளே போகலை."
"எஸ்."
"ஒரு மாட்டுப்பொண்ணு பலியாடு தேடிந்திருந்தீங்க?"
என்னிடம் மீண்டும் தலையை திருப்பி சுட்டெரித்து போல் பார்த்தார். தாடையை அழுத்தி அந்த டெஸ்ஸராக்டை கையில் வைத்தபடி திருப்பினார். சுவரில் இருந்த ஒரு சிறிய சதுர மாடத்தில் பொருத்தினார்... என் வாய் தானாக கொஞ்சம் பிளந்தது. அதற்கு என்று தைத்து வைத்த சட்டை போல் அழகாக கொஞ்சம் கூட இடைவெளி வைக்காமல் உள்ளே போயி உட்கார்ந்தது. என் கண்களை அதனிடம் எடுக்க முயன்ற பொழுது சட்டென்று ஒரு ஒளி அதனின் சிறிய கியூப்பிலிருந்து புறப்பட்டது. ஏதோ பட்டனை ஆன் செய்தது போல். மெல்ல அடி வைத்து முன் நெருங்கினேன்.

பிரபஸர் நான் அடைந்திருந்த கவர்ச்சியை கவனித்து சிரித்தார்.
"இந்த ஆத்துல  இருக்கிற எல்லா மாடத்துலையும் இந்த டெஸெராக்ட் பொருந்தும். அப்படி கட்டியிருக்கார் ராஜுவோட எள்ளுத்தாத்தா. நான் இந்த அறையில் மட்டும் சூப்பர் கம்பியூட்டர் வைச்சி பிக்ஸ் பண்ணிட்டேன். இப்ப யாரு வேணும்னாலும் இந்த டெஸ்ஸராக்ட் வைச்சிண்டு சுவருக்குள்ள போயிட்டு வரலாம்."
மிகவும் கேனத்தனமாக ஒரு எண்ணம் எனக்கு வந்தது. இதை உபயோகித்து ஒரு பொழுதுபோக்கு பூங்கா செய்யலாமே? ஸ்டாண்டார்ட் டிக்கட் இருநூறு ரூபாய், குழந்தைகளுக்கு நூறு, ஸ்டூடன்ட் டிஸ்கவுண்ட் நூற்றி ஐம்பது, சீசனால் பாஸ் ஆயிரம்... மிகவும் கஷ்டப்பட்டு அந்த எண்ணத்தை அடக்கினேன். என்ன செய்வது இந்த கேபிடலிஸ்ட் உலகத்தில்? நல்லா யோசனைதான், ஆனாலும் அனைவரும் ஜுராசிக் பார்க் பார்த்திருப்பார்கள். அந்த விளைவுகளை எந்த விதத்திலும் ஒப்பிக்க வேண்டாமே!
திடீரென்று என்னை பார்த்து வினோதமாக ஜொலிக்க ஆரம்பித்தது அந்த டெஸெராக்ட். 'வா! வா!' என்று கூப்பிட்டது. எனக்கு மட்டுமா தோன்றியது இந்த உணர்வு? அவர் எதையோ அவசரமாக பேச ஆரம்பித்தார்.
"உள்ள போயி நீ ஒன்னும் செய்ய வேண்டாம். ராஜுவோட குடும்பத்துல இருக்கறவங்க எல்லாரையும் கண்டுபிடிச்சு தொட்டாப்போதும். உன் உடம்புக்குள்ள சுத்திண்டிருக்கற உயிர் ஆற்றல் அவ்வளவு சக்தி வாய்ந்தது. புரிஞ்சுதா, அனன்யா?"

என் கையை உயர்த்தி அந்த டெஸ்ஸராக்ட்டின் வெளி பாகத்தை தொட்டேன். என் மூச்சு அதிகமானது. என் உடம்பை கோர்த்து வைத்திருந்த அணுக்களை ஒவ்வொன்றாக கிழற்ற ஆரம்பித்தது. உள்ளே இழுக்க தொடங்கியது. நீரோட்டத்தில் மாட்டிக்கொண்டோம் என்றால் அதற்கு எதிர்ச்செயல் செய்யக்கூடாது என்று படித்திருக்கிறேன். இந்த டெஸ்ஸராக்டின் மின்சக்தியிடம் சண்டை போடாமல் சமர்த்து பெண்ணாக அதை தொடர விட்டேன். என் உடம்பை உள்ளே இழுத்தது... கனவுலகத்திலிருந்து, எங்கோ தூரத்திலிருந்து யாரோ பேசுவது போல் ப்ரபசரின் குரல் என் காதுகளில் ஒலித்தது.
"அனன்யா! இல்லை, அனாமிகா? ஐயோ, இதப்பாரும்மா, ஒன்னு சொல்ல மறந்துட்டேன், கேட்டுக்கோ, க்வாண்டம் உலகத்துல எல்லாமே வேற மாதிரி இருக்கும்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்துடு-"

அவரிடம் நான் கேட்டுக்கொண்ட கடைசி மொழிகள் அவை என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

பயணம்

நீலம்! கண்கள் முழுவதும் அதே நிறம்! வானத்தில், தரையில், என்னை சுற்றியிருந்த பொருட்களில், ஏன், நானே ஏதோ 1960ஸ் ஏ பீ நாகராஜன் படத்தில் வரும் கிருஷ்ண பெருமாளை போல் அந்த நீல நிறத்தில் தெரிந்தேன். உண்மையான கிருஷ்ண பெருமாள் இந்த நிறத்தில்தான் இருப்பானா என்ற ஒரு சந்தேகம் தோன்றியது. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் வீ எப் எக்ஸ் இல்லை. கையில் கிடைத்த டை பொருட்களை வைத்து சிவகுமாரையும் என் டீ ஆரையும் நன்றாகவே வண்ணம் தீட்டிவைத்தார்கள். உடலின் பழுப்பு நிறத்தோடு சேர்த்து அந்த நீல வண்ணம் உருவுக்கிய அழுக்கு நீலத்திலா பெருமாளும் காட்சி அளிப்பார்? ஆமாம். க்வாண்டம் உலகிற்கு வந்திருக்கிறோம். அநேகமாக ஒரு பருப்பொருள் அளவிற்குத்தான் இருப்போம். க்வார்க்குக்கு தேவையா, பரமாத்மாவின் நிறத்தை பற்றிய சந்தேகங்கள்?

காலியான பாலை வனம் போல் தெரிந்தது. நிறைய தூரத்திற்கு ஒன்றுமே இல்லை. வெறும் மணல் குன்றுகள். அதே நீல நிறத்தில். சிலது வெளிர் நீலம், சிலது கருநீலம், சிலது சாம்பலுடன் சேர்ந்த நீலம். நான் நுழைந்திருந்த இடத்தை சுட்டி காட்டுவதற்கு ஏதாவது வைக்கலாமா, ஏதாவது செய்யலாமா, என்று கீழே குனிந்தேன். மெதுவாக கையை அந்த மணல் மீது வைத்தேன்... மணலே தான்! நான் அள்ளிய கை வழியாக அப்படியே நழுவி சென்றது! குபுக்கென்று சிரித்தேன். அந்த மௌனத்தை களைத்து நெடுந்தூரம் எதிரொலி அடித்தது. நானே சற்று பயந்துவிட்டேன். சாதாரணமாக அவ்வளவு பயங்கரமாக சிரிப்பவள் அல்ல, நான். 

நான் நுழைந்த இடத்தில குறி வைப்பதற்கு மணலில் ஒரு சிறிய ஓட்டை தோண்ட ஆரம்பித்தேன். வெறும் என் ஆட்காட்டி விரலை வைத்துத்தான். பட்டாம்பூச்சி விளைவு போல் நான் இங்கே செய்த ஒல்லியான ஓட்டையினால் என் முகத்திற்கு முன்னால் வந்தது ஒரு திடீர் மணல் புயல்! முகத்தை கைகளால் பற்றி மூடிக்கொண்டே நிற்க முயன்றேன். என் கால்களும் மீண்டும் மீண்டும் தடுமாறின என்று கீழேயே குனிந்து சசாங்காசனாவில் அமர்ந்தேன். கைகளால் காதுகளை பொத்திக்கொண்டு, கண்களை இருக்க மூடினேன். என் வாய் தானாக "முத்தைத்தரு பதித்திருநாகை" ஜபம் செய்யத் தொடங்கியது. எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. எனக்கு அந்த பாட்டு முழுமையாகக் கூட தெரியாது. ஒரு வேலை க்வாண்டம் உலகில் இருக்கும் அனுவுக்கு தெரிந்த விஷயமோ...

என்ன ஒரு புதிய எண்ணம்! க்வாண்டம் உலகின் அனு! அவள் வேறு யாரோவா? இல்லை, நானேதானா? ஒரு டெஸ்ஸராக்டில் வழியாக பருப்பொருள் அளவிற்கு சுருங்கி சுவருக்குள் புகுந்து இங்கு வந்தவள்தானா நிஜ உலகில் ராஜு என்கிற ராஜகோபாலை காதலித்து அவன் மீது இருக்கும் காதல் வெறியினால் இப்படிப்பட்ட ஒரு மிஷன் இம்பாஸிபிளுக்கு ஒத்துக்கொண்டு க்வாண்டம் உலகிற்கு வந்திருப்பவள்? இல்லை... இவள் வேறு யாரோவா? வேறு யாரோ என்றால்... இவள் யாரு?

என்னை சுற்றிலும் திடீரென்று உலாவிய அமைதி என்னை என் வாட்டுகின்ற எண்ணங்களிலிருந்து ஆவேசமாக 'எழுந்திரு, அஞ்சலி, எழுந்திரு!' ஸ்டைலில் எழுப்பியது. கண்களை திறந்து, கைகளை முகத்திலிருந்து எடுத்து மேலே நோக்கினேன். கரு கரு உருவங்கள் ஒரு பத்து பதினைந்து இருக்கும். முகம் இல்லாமல், கைகளிலிருந்து கால்களிருந்து உடல் முழுவதும் இருந்த அணுக்கள் நிரந்தரமாக மிதந்து கொண்டே இருந்தன. அவர்களே பறந்தபடி என்னை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். என்று நினைக்கிறேன்.
"யாரு நீ?"
"இங்க எங்க வந்தே?"
"உனக்கு மட்டும் மூஞ்சி இருக்கு? எங்களை மாதிரி இல்லை நீ."
"ஸ்ஸ்!" என்று அதட்டின ஒரு பெண் குரல். முன்னால் வந்தது ஒரு உருவம். என்னை உற்று நோக்கினாள். என்று நினைக்கிறேன்.
"என் கோபு பண்ண ரிசர்ச்ல இங்க வந்திருக்கா." அவர்கள் அனைவரும் முணுமுணுத்தார்கள். "நம்ம ராஜுவோட காதலி."
"கிழிச்சாங்க, உன் புருஷனும் உன் பையனோட காதலியும். இவள் இங்க வந்து என்னத்தை கிழிக்கப்போறா?"
"தாத்தா, கொஞ்சம் பேசாம இருங்கோளேன்? எங்க எல்லாரையும் இங்க மாட்டிவைத்தவரே நீங்கத்தான். என் புருஷன் உங்க ஆத்தொட டெஸ்ஸராக்ட்டை வைச்சி ஒரு பொடென்ஷியல் தீர்வு கண்டுபிடிச்சிருக்காருன்னா..." என்னிடம் நெருங்கினாள், "முயற்சி பண்ணி பார்க்கலாமே?"
அந்த தாத்தா கேரக்டரை தவிர மற்றவர்கள் அனைவரும் தலையை ஆமோதிக்கும்படி அசைத்தார்கள். நான் பேசுவதற்கு காத்திருந்தார்கள் என்று நிறைய நேரங்கள் கழித்து உணர்ந்து கொண்டு என் தொண்டையை கணைத்துக்கொண்டேன்.
"நீங்கல்லாம்... எப்படி பேசறீங்க?"
"வாட்?"
"இல்லை, வாயே இல்லாம, எப்படி..." என் தலையை அசைத்து கொண்டேன். ரொம்ப முக்கியம்! அவர்கள் கொஞ்சம் பொறுமையை இழந்திருந்தார்கள் போல் ஒரே சமயத்தில் நீண்ட நோட்டில் நிற்கும் ஆர்கெஸ்ட்ரா போல் பெருமூச்சு விட்டார்கள். எச்சிலை முழுங்கி விஷயத்திற்கு வந்தேன். சடகோபாச்சாரியின் தியரியை அவர்களுக்கு விளக்கினேன்.
"கன்பர்ம்."
"மாப்பிளைக்கு மூளை கெட்டுப்போச்சு."
"அவர் சொல்றதுல நியாயம் இருக்கலாம்..."
"எங்கேயாவது இருந்தே ஆகணும்."
"இவ நம்மளை தொட்டா இங்கிருந்து கிளம்பிடுவோமாம்." தாத்தாவின் குரல். நக்கலோடும் சுத்த அவநம்பிக்கையுடனும் சிரித்தார். "பெரிய கங்கை நதி. இவளை தொட்டா சாபம் தீர்ந்துடுமாம்."
நான் அவரிடம் தலையை படு வேகமாக திருப்பி என்னால் முடிந்த அளவு பெரிதாக சிரித்தேன்.
"அதேதான்! அதே உதாரணம் தான் கொடுத்தார்!"
"சடகோபன் இந்த உதாரணம் கொடுத்தானா? பலே." தலையை பலத்த அசைத்து கைகளை ஓசை இல்லாமல் தட்டிக்கொண்டார் தாத்தா. "எல்லாரும் இங்கேயே செட்டில் ஆயிடுங்கோ. என்னை மாதிரி. இன்னும் எத்தனை நாள் இங்கே குப்பை கொட்டணுமோ கொட்டுங்கோ. வந்துட்டா அப்பனும் மருமகளும், சாப விமோசனத்தோட." என்னிடம் வந்துகொஞ்சம் கூட மரியாதையில்லாமல் கும்பிட்டார். "அம்மா தாயே, கிளம்பு. இந்த இடத்தை விட்டு மட்டுமில்லை. ராஜூவை விட்டு ஓடிடு. இது எங்க ஆத்து சாபம். இன்னும் கொஞ்சம் நாள்ல ராஜுவும் இங்க வந்துடுவான், அத்தோட வேறு யாரையும் பாதிக்காது. நாங்க இங்கேயே இருந்துக்கறோம். நீ கிளம்பு. எஸ்கேப் பண்ணு, போ."

அவரின் தியாகச் செம்மெல் தனியுறையை கேட்டு மற்றவர்கள் அனைவரும் சண்டைக்கு இழுக்க ஆரம்பித்தார்கள். எனக்கு மனதில் ஒன்றே ஒன்றுதான் பட்டது.
"ராஜு... இங்க வந்து மாட்டிப்பானா?" மெல்லிய குரலில் கேட்டேன். மற்றவர்கள் சற்று அமைதியானார்கள்.
"ஆமாம். நிச்சயமா வருவான். அவன் கல்யாணம் பண்ணிக்கலைன்னா அவனோட போயிடும் இந்த சாபம்."
"அவனுக்கு இயல்பியல் ஆராய்ச்சியில் எல்லாம் ஒரு இன்டரஸ்ட்டும் கிடையாதே?"
"எனக்கு மட்டும் இருந்துச்சா?" ஒரு பெண் குரல் முன்னால் வந்தது. "நான் ராஜுவோட சித்தி. அமெரிக்கால ஒரு டாட்டா சைன்டிஸ்ட். போயும் போயும் ஈவென்ட் ஹொரைசன் பத்தி ஒரு படம் பார்த்து தொலைச்சுட்டேன். அப்பலேர்ந்து விடலை பைத்தியம்." ஒரு பெருமூச்சு. "அந்த தேடல் என்னையும் தாக்கிடுச்சு. என் குடும்பத்துல இருந்து என்னை பிரிச்சிடுச்சு."
"அவளாவது ஏதோ சைன்ஸ் சம்மந்தமா படிச்சிருந்தா." ஒரு ஆன் குரல், இந்த பக்கத்தில் இருந்து எழுந்தது. "நான் ராஜுவோட அம்மாவோட பெரியப்பா. ரெயில்வேஸ்ல இருந்தேன். நல்ல கவர்ன்மென்ட் ஜாப்! அந்த காலத்துல கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?"
"அவ்வளவுளாம் நீ ஒன்னும் கஷ்ட பட்டா மாதிரி ஞாபகம் இல்லையே, செல்லப்பா-"
"அப்பா சும்மா இருங்கோ!" பெருமூச்சு விட்டார். ராஜுவின் அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது.
"யாருக்கெல்லாம் இந்த ஜீனோம் இருக்கோ, அந்த சாபம் அவங்களை பாதிக்குது. ராஜு கல்யாணம் பண்ணிக்காம, வாழ்க்கையை ஒண்டிக்கட்டையா, குழந்தை குட்டி இல்லாம இருந்தான்னா இந்த சாபம் அவனோட முடிஞ்சிடும்." அம்மாவின் குரலில் வருத்தம் அலைபாய்ந்தது. "திரும்பி போம்மா. ராஜூவை மறந்து, சந்தோஷமா இரு. இது நம்ம குடும்பத்தோட விதி."
எனக்கு தெரியும் அது நடக்கவே நடக்காதென்று. ராஜுவும் இந்த சாபத்துக்கு பலியாகி இந்த பாழாய்ப்போன சுவற்றில் வந்து தங்க வேண்டுமாம், அதுவும் வாழ்க்கையை வாழாமல் வாழ்ந்துவிட்டு. என் அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. அந்த உருவங்களிடம் அதை ஒப்பித்தேன்.
"மனுஷங்க பிறந்தது விதியை பார்த்து வாழறதுக்கு இல்லை."
"பின்னே?"
"வாழறதுக்குத்தான் பிறந்திருக்காங்க." மெதுவாக சிரித்து, ராஜுவின் சித்தியும் பெரியப்பா-தாத்தாவிடம் சென்றேன். அவர்களின் அணுக்களை என் கைகளால் நெருங்கினேன். பிரகாசமான சிறிய மஞ்சள் துகள்கள் என் விரல்களை விட்டு புறப்பட்டு அவர்களின் கரிய உடல்களை பற்றியது. அவர்கள் இருவரும் ஒரு மூச்சு திணறலுடன் உடல் முழுவதும் அந்த மஞ்சள் துகள்களை அனைத்துக்கொண்டுவிட்டு... சட்டென்று மறைந்தார்கள்!

மற்றவர்கள் எல்லோரும் கூடவே மூச்சு திணறி, சுற்றி சுற்றி பார்த்தார்கள். 'செல்லப்பா', 'விமலா' என்று திரும்பி திரும்பி கூப்பிட்டார்கள். பிறகு என்னிடம் நெருங்கி வாய் விட்டு நிறைவுடன் சிரித்தார்கள். எல்லோரையும் ஒவ்வொன்றாக அணைத்து வெளியில் அனுப்பியது என்னிடம் இருந்த உயிர் ஆற்றல். ராஜுவின் அம்மாவின் கொள்ளுத்தாத்தா வரிசையின் கிடைசியில் அம்மாவுடன் நின்றார். என்னை பார்த்து சிரித்தார்.
"எ-எப்படி இது சாத்தியம்னு, எனக்கு இன்னமும் புரியலை... ஆ..." என்னிடம் ஒரு விரலை நீட்டினார். "உன் பெயர் என்ன?"
"அனகா. பட் ராஜு என்னை செல்லமா அனுன்னு கூப்பிடுவான்." தேவையில்லாத விஷயமோ.
அவர் சிரித்தார். கொஞ்சம் தைரியம் கிடைத்தது என்று அவர் வினாக்கு ஒரு விடை அளிக்க முயற்சிக்கலாம் என்று வாய் திறந்தேன்.
"தாத்தா, ஒரு வேலை, வெளியிலையே எல்லா விஷயத்துக்கும் பதில் தேட பழகிட்டீங்களோ?"
"என்னம்மா சொல்லற?"
என் விரல்களையும் அவைகளின் மஞ்சள் துகள்களையும் அவரிடம் செலுத்தினேன்.
"நமக்குள்ளேயே எல்லாத்துக்கும் பதில் நன்னாவே கிடைக்கும்."

ராஜுவின் அம்மா, கமலா, கடைசியில் வந்தாள். அவள் முகம் எனக்கு ஞாபகம் வந்தது. அவள் என் தலையில் கை வைத்து வருடினாள். அழுகையை சிரமப்பட்டு தடுப்பது போல் மூச்சை இழுத்து பிடித்தாள்.
"என் ராஜுவுக்கு நான் இல்லாம போயிட்டேன். நாங்க சொன்னதை கேட்டு நீயும் கிளம்பியிருந்தேன்னா," அவளின் மூக்கு பலமாக ஒழுகியிருக்கும், நல்ல வேலை முகம் ஒன்றும் தெரியவில்லை என்று நினைத்தேன், "ராஜூ இங்க வந்திருந்த போது என்னால அவனை நேரிட்டு பார்த்திருக்க முடியாது."
நடந்து முடிந்த கதையை ஏன் இப்படி இழுக்கிறாள் என்று கொஞ்சம் புரியவில்லை. பரவாயில்லை. என் கையை நீட்டினேன். அவளுக்கு எப்பொழுது வேண்டுமோ தொடட்டும். எனக்கு உலகில் உள்ள அத்தனை நேரமும் இருக்கிறது.

திரும்புதல்

பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், இந்த கூத்தெல்லாம் நடந்து முடிய. திருப்தியாக மீண்டும் காலியான அந்த நீல நிற பாலை வானத்தை சுற்றிப்பார்த்தேன். நான். மௌனம். என் விரல்களிருந்து வந்திருந்த மஞ்சள் ஒலித் துகள்கள் இப்பொழுது மறைந்திருந்தன. பெரிதாக கைகளை விரித்து முறித்துக்கொண்டேன். ஐயோ, மீண்டும் அந்த பலத்த எதிரொலி! பின்னால் நடந்து சென்றேன். அவ்வளவாக டெஸெராக்ட் நுழைவாயிலிருந்து நான் நகரவில்லை. மணல் புயலினால் அந்த உருவங்கள் என்னிடம் வந்துவிட்டார்கள்! ஏதோ தெய்வச்செயல் போல்.
எத்தனை சுலபம். பிரபஞ்சம் என் சார்பில் நன்றாகவே வேலை செய்துகொண்டிருந்தது! டெஸெராக்ட் நுழைவாயிலை கண்டுபிடித்து கையை விட்டேன். திரும்பி அந்த மணல் மேடுகளை அழுக்கு நீளத்தை பார்த்து மனதிற்குள் ஒரு டாட்டா கொடுத்தேன். டெஸெராக்ட் என்னை உள்ளே இழுத்தது.

எத்தனை சுலபமான விஷயம்... இதற்கா அவ்வளவு பயப்பட்டேன்?!

கண்களை திறந்து சுற்றிப்பார்த்தேன். என் உடலை, என்னுடன் சேர்ந்து சுருங்கிய என் சுடிதாரையும் காதுதோடுகளையும் கொலுசுகளையும் ஒவ்வொன்றாக தொட்டேன். எங்கேயோ மிதந்துகொண்டு இருந்தேன். இந்த இடம், நீல நிறமாக இல்லை. சாம்பல். கருகிய சாம்பல் நிறத்தில், எனக்கு கீழே ஒரு க்யூப், அவ்வப்பொழுது ஜொலித்தது. அந்த டெஸெராக்ட் குள்ளே இருந்தேன். ஆனால், க்வாண்டம் உலகத்திற்குள் போகும் பொழுது இந்த வழி...

என் இதயத்துடிப்பு மெல்ல அதிகரித்ததை உணர்ந்து அதன் மேல் ஒரு கையை வைத்து சாந்தப்படுத்த முயன்றேன். 'இது... இது ரெயில் ஸ்டேஷன் சுரங்கப்பாதை மாதிரி. மேல் ஸ்டேஷன் வழியா க்வாண்டம் உலகத்துக்கு போனேன்... சப்வே வழியா... வெளியில... வந்ததுண்டு இருக்கேன், அதென்ன கீழே?'
எட்டிப்பார்த்தேன். ப்ரபசரின் ஆராய்ச்சி அரை. காலியாக இருந்தது. கோனால்-மாணாளாக வைக்கப்பட்டிருந்த டிராயர்ஸ், சரி செய்து வைக்கப்பட்டிருந்தது. அரை ஓரத்தில் இரண்டு மூன்று டப்பா; பிரபஸர் டீ. சடகோபன். மெட்றாஸ் சைன்ஸ் இன்ஸ்டிட்யூட். என் காலேஜ்தான். அவர், ரிட்டையராகி விட்டாரா... பத்து நிமிடங்களில்?

திடீரென்று கதவு திறந்து உள்ளே புகுந்தான்... ராஜு! வெள்ளை வெட்டியும் நெத்தியில் பட்டையும் கன்னங்களில் காய்ந்து போன நீரும்... கீழே விழுந்து மண்டியிட்டு அழத்தொடங்கினான். ஜன்னல் விளிம்பு வழியாக பார்ப்பது போல் அவனை ஆசிரியதுடன் பார்த்தேன். எங்கேயடா, உன் ஜீன்ஸ் பேண்ட்டும் கருப்பு விளிம்பு போட்ட கூச்சி கண்ணாடியும்? எங்கேயடா உன் பெரிய புன்னகையும் அதனுடன் சேர்ந்து சிரித்து வெறும் கோடுகளாக மாறும் அந்த கண்களும்?  ராஜூ இப்படி அழுது நான் பார்த்ததில்லையே! வாயை பிளந்து, என் இதயத்துடிப்பு இன்னமும் அதிகரிக்க பார்த்துக்கொண்டே இருந்தேன். அவனிடம் சென்று அணைக்க முடியாமல் தவித்தேன். பத்து நிமிடத்தில் இத்தனை மாற்றங்களா?

அந்த பத்து நிமிடத்தில்தான் ஏதோ உள்ளது. க்வாண்டம் உலகத்தில் எல்லாமே வேற மாதிரி இருக்கும் என்று பிரபஸர் அனன்யாவிடமோ அனாமிகாவிடமோ சொல்லியிருந்தார்... எல்லாமே என்றால்? என்னவெல்லாமே? அறிவு பரிணாமத்திலா, ஆற்றலின் பரிணாமத்திலா, இடையா, கனமா, கிராவிடி... தலையில் அடித்துக்கொண்டேன். 

காலம். 

அங்கு ஒரு நிமிடம். இங்கு எத்தனை நாட்கள் ஆகிவிட்டதோ! என்னையே அதட்டிக்கொண்டே மிதந்தேன். அறியாமல் காலை (கையை) நுழைத்து விட்டேன். இங்கு எத்தனை பெயர்களை தவிக்க வைத்திருப்பேன். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, என் மேல் சற்று அளவுக்கதிகமாக ஒரு வித பற்றும் பரிவும் வைத்திருக்கும் தங்கையின் நண்பன் வினோத், மாத்ஸ் டியூஷனுக்கு வாரா வாரம் வரும் தாரிணி, ஹசீனா, வூட்லன்ட்ஸ் ஹோட்டலில் வேலை செய்யும் என் தோழிகள் ரோஜா, ஜென்னி, அப்பார்ட்மெண்ட் வாசலில் என்னிடம் கும்பிடு போடும் வாட்ச்மான் தாமு... பிறகு அதி முக்கியமாக...

ராஜு!

அதனால்தான் இந்த கோலமோ? என்னை மறப்பதற்கு ஜீன்ஸ் பேண்ட்டை துறந்து, நெற்றியில் பட்டையுடன் எல்லா வற்றையும் துறந்துவிட்டு இப்படி சுற்றுகிறானா? அது சரி. இப்பொழுது பிரபஸர் சடகோபாச்ச்சாரி இருந்தார் என்றால் என்னை இங்கிருந்து சுலபமாக வெளியே எடுத்துவிடலாமே. அவரை எப்படி கூப்பிடுவது?

"ராஜு? இங்க என்ன பண்ணிண்டு இருக்க?"
அண்ணன் அவசரமாக உள்ளே வந்து ராஜுவின் நிலைமையை ஒரு வினாடி ஆராய்ந்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் கதவை சாற்றினான். மெல்ல அடி எடுத்து ராஜுவின் முதுகை பற்றி அணைத்தான்.
"அழாதேடா. என்னாலை பார்க்க முடியலை."
"அண்ணா, ஏன் எல்லாரும் என்னை விட்டு போறாங்க?" மூச்சை இழுத்து பிடித்து மிகவும் சிரமப்பட்டு தொடர்ந்தான். "முதல்ல அம்மா, அப்புறம் அனு, இப்ப அப்பா."
மூச்சு திணறி பின்னால் அந்த சிறிய க்யூப் மீது விழுந்தேன். அப்பாவா?! எப்பொழுது? எப்படி? அதனால்தான் என்னை அவரால் திரும்பி அழைக்க முடியவில்லையா! அதனால்தான் நான்... இந்த டெஸெராக்ட்டில் மாட்டிக்கொண்டு விட்டேனா!
"ராஜு, எல்லாரும் ஒன்னும் உன்னை விட்டு போகலை." அவனின் இதயத்தை தொட கை முன்னால் வைத்தான் அண்ணன். "எல்லாரும் இங்க இருக்காங்க-"
"நன்னா இருக்காங்க!" அவன் கையை தள்ளி ஆவேசமாக எழுந்தான். "உலகத்துல என் கூட வாழாம அதென்ன என் இதயத்துல போயி இருக்கணும்? அங்கே என்ன இருக்கு அப்படி?"
"ராஜு..."
"அம்மா அப்பா கூட பரவாயில்லை, அவங்க செத்துப்போயிருக்காங்க, ஒத்துக்கறேன், ஓகே." தலை முடியை பிடித்து குழப்பத்துடன் ஆட்டினான். "என் அனுக்கு என்ன ஆச்சு?!"
"ஏதோ ரகசிய ரிசர்ச்சுக்காக அப்பா அனுப்பிச்சாருன்னு சொன்னா இல்லை? அங்கேதான் இருப்பாள்."
"பத்து மாசம் ஆயிடுச்சே?"
மறுபடியும் மூச்சு திணறிக்கொண்டேன். பத்து மாசம்! மேலே முறைத்து பார்த்தேன்.
'கோபு சார்! இதுதான் உங்க பைத்தியக்காரத்தனமான ஜனனி கான்செப்ட்டா?!'
"அவளுக்கு ஒன்னும் ஆயிருக்காது." அண்ணன் பெருமூச்சு விட்டான். "ஒன்னும்... ஆயிருக்கக்கூடாது. அவ அம்மா அப்பா எத்தனை நாள் நம்ம கிட்டு வந்து கேட்டுண்டு இருக்கா. வெறும் கையோட, ஒரு அப்டேட்டும் இல்லாம அனுப்பறது எனக்கு பாவமாத்தான் இருக்கு. அவா மட்டும் பெரிய இடது ஆளா இருந்தாங்கன்னா இத்தனை நாளுக்கு அப்பா மேலே ஒரு கோர்ட் கேஸ் நடத்தி இருப்பாங்க."
"நமக்கு ஒன்னும் தெரியலையே, அந்த பாழாய்ப்போன ரிசர்ச் பத்தி." ராஜு மறுபடியும் அழத்தொடங்கினான். "அண்ணா, இதுல என்ன கொடுமை தெரியுமா?" அவனின் மார்பை இடித்தான். "எனக்காக அந்த ரிசர்ச்சை பண்ண ஒத்துண்டா. எனக்காக! என்னை கல்யாணம் பண்ணிக்க! அவளுக்கு கொஞ்சம் கூட இண்ட்டரஸ்ட் இல்லை இந்த விஷயத்துல எல்லாம்." அண்ணனின் மார்பிற்குள் அணைத்து முழுமையாக விம்மி விம்மி முடித்தான். "அவ பெரிய வயலினிஸ்ட் ஆகப்போனவ!"
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு திருப்புகழையே முழுமையாக தெரியாதவளுக்கு கர்னாடிக் ம்யூசிக் சர்க்கிளில் இடம் கிடைப்பது ஒரு பெரிய இடத்து சம்பந்தத்தினால், இல்லையென்றால் ஓர் தனிப்பட்ட பரிசுத்தொகையினால். ச்ச! கூடிய சீக்கிரம் அந்த பாட்டை மனப்பாடம் பண்ண வேண்டும். அதற்கு முதலில் வெளியே செல்ல வேண்டும்! என்னை தாக்கிய திடீர் கோவமும் வெறுப்பும் இயலாமையும் என் உடலில் புகுந்து என்னை கீழே தள்ளியது, அந்த கியூப்பின் மீது கையை ஓங்கி இடித்துக்கொண்டே அழுதேன். யாரையோ கேட்டேன், இங்கிருந்து வெளியில் செல்வதற்கு வழி...

"ராஜு, அது என்னடா லைட், திடீர்னு ஜொலிக்குது?"
கண்களை திறந்து பார்த்தேன். என்னிடம் நெருங்கினார்கள் அந்த சகோதரர்கள். எப்பொழுது ஜொலித்தது? டெஸெராக்ட்டின் க்யூப் ஜொலித்ததா? கையை மெல்ல மேலே எடுத்துச்சென்று கீழே இடித்தேன்.
"ஆமாம்! ஜொலிக்குது?"
என் ராஜுவின் முகத்தை நேரிட்டு ஒரு வினாடி பார்த்துக்கொண்டேன். நான்தான் இங்கே இருக்கிறேன் என்று எப்படியாவது சொல்ல வேண்டும்! என்ன சொல்லலாம், எப்படி சொல்லலாம்...
"ஏய், ஏதோ பாட்டரன்ல ஜொலிக்குது." ராஜூவை தள்ளி ஒரு ஸ்பேர் பேப்பர் எடுத்துக்கொண்டான் அண்ணன். "பேனா இருக்கா?"
ராஜு அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு பெருமூச்சுடன் எடுத்தது... என் பென்சில். இல்லை, அவன் பென்சில்தான் ஆனால் அவனை விட அதற்க்கு நானும் நான் அதனுடன் பயிற்சி செய்த 'அனகா ராஜகோபால்' கையெழுத்தும் தான் அதிகம் பரிச்சயம். அதை வைத்து மெல்ல எழுதினான்.
"டாஷ் டாஷ், டாட், டாட் டாட் டாட், டாஷ் டாஷ் டாஷ், டாஷ் டாட்."
"மோர்ஸ் கோட்? உனக்கு தெரியுமா?"
"கொஞ்சம். எம், ஈ, எஸ், ஓ..." அவன் முகத்தில் புன்னகை மெல்ல தோன்றியதை கண்டு நானும் சிரித்தேன். எத்தனை அழகாக இருந்தான் அந்த நேரத்தில். அவனுக்காக, அந்த முகம் முழுவதும் அவன் காட்டும் சந்தோஷமும் அன்பிற்காகவும் க்வாண்டம் உலகமென்ன, பாதாள உலகத்துக்கே போயிட்டு போயிட்டு வருவேனே!
"என்னடா சொல்லுது?"
"மீஸான்." அந்த சீட்டை அவன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான். "என் அனு!"
"வாட்? எப்படி?" நேராக என்னை பார்த்து ஆட்காட்டி விரலை காண்பித்தான் அண்ணன். "அதுக்குள்ளேயா?"
நான் ஆவேசமாக தலையசைத்தது அவர்களுக்கு தெரிந்திருக்காது. ராஜுவின் மூச்சு வேகமாக அவன் என்னிடம் நெருங்கினான். வெளியிலிருந்து அவனின் நீண்ட ஆயுள் ரேகை தெரிய கையை டெஸெராக்ட் மேல் வைத்தான்.
"அனு... என்கிட்டே வாயேன்." கண்களில் நீர் ததும்பியது. "எத்தனை நாள் என்னை விட்டு...!" அவனால் முடிக்கவில்லை போல். தலையை முன்னால் சாய்த்து அழுதான்.
ஆமாம். நானே எப்படி உள்ளே போனேன் என்றே முழுவதுமாக தெரியவில்லை. இதில் நானாக வெளியில் வர வேண்டுமாம். நீதான் கண்டு பிடியேன் கொஞ்சம் உன்னுடைய அறிவுஜீவி குடும்ப மூளையை வைத்துக்கொண்டு?! 
“ராஜு! இந்த… டப்பாக்குள்ளேயா அவள் இருக்கா?” கைகளை வெளியில் இருந்து டெஸெராக்ட் மீது வைத்தான் அண்ணன், அவன் கையில் வைத்திருந்த ராஜுவின் பென்சிலை பொருட்படுத்தாமல். போர்-டீ சினிமா பார்ப்பது போல் வெளியிலிருந்து நெருங்கி பார்த்த இருவரும் அவர்களின் கைகளும் ஏற்கனவே இருட்டாக இருந்த என் அறையை இன்னமும் இருட்டில் செலுத்தினார்கள். நான் அவசரமாக கியூப்பிற்கு சென்று மற்றொரு மெசேஜ் கொடுக்க முயன்றேன். ஆனால், இப்பொழுது என்ன அனுப்புவது?

"டேய், மறுபடியும் ஜொலிக்குது..."
"ஐம் ஆன் இட், அனு! சொல்லு." பென்சிலை அண்ணனிடம் பிடுங்கி சீட்டில் எழுத ஆரம்பித்தான். "டாட் டாஷ் டாஷ் டாட், டாட், டாஷ் டாட், டாஷ் டாட் டாஷ் டாட்..." அவனுக்கு புரிந்திருக்கும். "பென்சிலா?" அவன் பென்சிலை பார்த்தான்.
"பென்சிலா?" அண்ணனும் முறைத்து, தாடையை தடவினான். "பெனிசிலின்னா இருக்குமோ? அவளுக்கு ஷுகர் இருக்கா?"
"வெறுப்பேத்தாத, அண்ணா! நாங்க இரண்டு பேரும் பிசிக்ஸ் ஸ்டூடண்ட்ஸ். கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட்ஸ் இல்லை." 
"பின்ன என்னத்துக்கு?"
பென்சிலை ராஜு உற்று கவனிப்பதை என் மூச்சை பிடித்துக்கொண்டு, என் ட்ரான்ஸ்பரென்ட்  டெஸெராக்ட் சுவற்றில் முன் சாய்ந்தபடி நோக்கினேன். 'புரியுதா, ராஜு! ப்ளீஸ், புரிஞ்சுக்கோ!'
"க்வாண்டம் எண்டாங்கில்மெண்ட்."
அடி சக்கை! பிடிச்சுட்டான்!
"வாட்?"
குழம்பிக்கிடந்த அண்ணனுக்கு பதில் அளிக்காமல் ராஜு மெதுவாக அவன் பென்சிலை உள்ளே செலுத்தினான், அதனுடைய அணுக்கள் விரிந்து உள்ளே இழுக்கப்பட்டு அவன் லேசாக மூச்சு திணறி இரண்டு கைகளாலும் கெட்டியாக பிடித்துக்கொண்டான். 
"அண்ணா! புள் வித் மீ! இதுதான் அனுவோட சாவீ!"
அண்ணனுக்கு ஒன்றும் புரியாட்டியும் பின்னாலிருந்து ராஜூவை பற்றி இழுத்தான். நான் சிரித்தேன், அந்த பென்சிலின் அணுக்கள் எனக்கு சற்று மேலே நுழைந்துகொண்டிருததை பார்த்து. அதனிடம் அவசரமாக மிதந்து சென்று இந்த பக்கம் சேர்க்கப்பட்டிருந்த அணுக்களை பற்றிக்கொண்டு வெளியே தள்ளினேன்.
"ராஜு! அந்த பென்சில் நம்மளை புஷ் பண்றது டா."
 ராஜு பெரிதாக சிரித்து பின்னால் ஒரு அடி எடுத்து வைத்தான். 
"அது பென்சில் இல்லை அண்ணா! என் அனு!"

அவன் சொல்லி முடிப்பதற்குள் டெஸெராக்ட்டை விட்டு பென்சிலும் நானும் இறங்கினோம். இறங்கினோமா, கொஞ்சம் நயம் குறைந்தபடி... விழுந்துவிட்டோம். அதுவும் நன்றாகவே ராஜுவின் மேல். அண்ணன் சரியான சமயத்தில் பின்னால் குதித்து ஓரமாக நின்று விரிந்த கண்களுடன் வேடிக்கை பார்க்க, நானும் ராஜுவும் ஒருவரை ஒருவர் அணைத்து, நம் கைகளில் அந்த பென்சிலை கொஞ்சம் கூட விடாமல் தரையில் சுழன்றபடி சிரித்தோம். சாதாரணமாக சிரித்தோமா! காலையில் கனகாரியமாக வேறு வேலை எதுவும் இல்லாத இறை கிடைத்த பறவைகளைப்போல் சிரித்தோம்! இரவில் அனைவரும் உறங்க முயற்சிக்கும் பொழுது நல்ல நேரம் தேர்ந்தெடுத்து சிரிக்கும் தவளைகளை போல் சிரித்தோம்!

உலகங்கள் பிரிந்து முழுமையாக புரியாத மாயையினாலும் விஞ்ஞானத்தினாலும் சேர்க்கப்பட்ட காதல் ஜோடியை போல் சிரித்தோம்.

"ஹப்பா. இப்ப சந்தோஷமா, ராஜு?" அண்ணன் எங்களை பார்த்து சிரித்தான். "உன்னுடையவள் திரும்பி வந்துட்டா."
ஒரு பெருமூச்சுடன் எழுந்தேன். 
"ஐம் ரியலி சாரி அபவுட்... கோபு சார்."
ராஜு சிரித்தான், அண்ணன் கண்களை சந்தேகத்துடன் விரித்தான்.
"எப்பலருந்து அவரை கோபு சாருன்னு கூப்பிட ஆரம்பிச்ச?"
"அதானே? கமலா சித்திதான் அவரை அப்படி கூப்பிடுவா."
அண்ணனை பார்த்து வாய் பிளந்தேன்.
"கமலா... சித்தியா?"
சகோதரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து தோள்களை குலுக்கினார்கள்.
"ஐ தோட் யூ நியூ, அனு. அண்ணன் அப்பாவோட முதல் கல்யாணத்துல இருந்து பிறந்தவன்."
"அப்படியா?!"
என் மனதில் இருந்த எத்தனையோ சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்ததப்பா!
"ஆமாம். எங்கம்மா கமலா சித்தி மாதிரி பெரிய அறிவாளிலாம் கிடையாது. வைடூகே போன் ஒன்னு அப்பா அவங்களுக்கு வாங்கி கொடுத்து, அதுல இருந்த ஸ்நேக் கேமுக்கு ரொம்ப அடிக்ட்டாகி, கோடம்பாக்கம் ஹை ரோட்டுல-"
"அண்ணா! அண்ணி உங்களை தேடறாங்கன்னு நினைக்கறேன், போங்க." ராஜு என் தோளை அமுக்கி, அவனுடன் சேர்த்து கொண்டதில் என் கண்ணங்கள் தானாக சிவந்தது எனக்கு தெரிந்தது. அண்ணன் வெளியில் செல்ல நான் ராஜுவிடம் கொஞ்சம் விலகிக்கொண்டேன்.
"நானும் என் அம்மா அப்பாவை போயி..."
"எஸ், எஸ். ப்ளீஸ். அவங்க ரொம்ப பாவம்." என் தலைமுடியை தடவினான். "பட் ஐ அம் ஸோ லக்கி."
"நீ தான் பெரிய ராஜு மீஸான் ஆச்சே."
தலையை ஒரு சிறிய சிரிப்புடன் ஆசைதான்.
"இந்த ராஜுக்கு இனிமேலிருந்து ஒரே ஒரு அடிப்படைத்துகள் தான்." என்னை மார்போடு சேர்த்து அழுத்தியதுடன் இனிதாக அந்த துகளுக்கு பெயர் சூட்டி முடித்தான். "என் அனு பார்ட்டிகள்!"

Comments

Popular posts from this blog

ஜாக்கிரதை!

Dharam Yuddh - 4

Dharam Yuddh - 5