நான், மாதவ்
"உலகத்திற்கு என் வணக்கங்கள்."
"இந்த voice சரியில்லை. திரும்பவும் try பண்ணு."
"உலகத்திற்கு என் வணக்கங்கள்."
"ச்ச, சுப்பு ஞாபகம் வருது."
"What is wrong with சுப்பு?"
அர்ஜுன் கொஞ்சம் அதிகமாகவே குழைந்தான்.
"Nothing wrong, just..." அர்ஜுன் சட்டென்று அவனையே நிறுத்தி அவன் நோண்டிக்கொண்டிருந்த கம்பியூட்டரை பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டான். "வேலைய பாரு, மாதவ். ம்ம், வேற voice."
"என்னடா? யாரோட பேசிண்டிருந்தே?"
"அம்மா! Meet மாதவ்!"
"Hi, Miss அம்மா."
"மாதவ், voice மாத்துன்னு சொன்னேன் இல்லை?"
"என்ன voiceன்னு சொல்லலை."
"பேச ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம் ஆகலை, அதுக்குள்ள..."
"இருடா!" கம்பியூட்டரை பார்த்து அம்மாவும் கண்களை சுருக்கிக்கொண்டாள், குழப்பத்துடன். "யாரு மாதவ்? கம்பியூட்டரா?"
"எஸ், என் engineering machine learning finalக்கு சொந்தமா நான் design பண்ண AI bot."
"Multi-Agent Data Heuristic and Analytic Vessel."
"என்னடா, தில்லு முல்லு ரஜினிகாந்த் மாதிரி முழு பெயரை இப்படி சொல்லுது?"
"மாதவ் எல்லாம் பண்ணும், notes எடுத்து கொடுக்கும், எந்த maths கேள்விக்கும் பதில் சொல்லும், music கண்டுபிடிக்கும், இந்த மாதிரி படம் வேணும்னு கேட்டா generate பண்ணிக்கொடுக்கும். அதுக்குதான் multi-agent. எந்த data கொடுத்தாலும் சொந்தமா, எல்லா perspectivesசையும் சிந்திச்சு பதில் சொல்லும். அதுக்குதான் data heuristic and analytic vessel."
"பெருமாளே. ரொம்ப பெரிய விஷயம் மாதிரி இருக்கு. உன் classல எல்லாரும் இந்த மாதிரி பண்ணியிருக்காளா என்ன?"
"தெரியலை. But I made M.A.D.H.A.V."
"Voice இன்னும் மாத்தலை."
"இது வேற. அம்மா," அவளின் தோள்களை பின்னாலிருந்து பற்றினான். "நீயே ஒரு நல்ல voice சொல்லு, இவனுக்கு."
"அவன், இவன்னு கூப்பிடறயே? மாதவ், நல்ல ஒரு friendly ஆம்பளை குரல்ல பேசு பா. அது போதும்."
"இது okயா?"
"ஏய், இது என் குரல்." அர்ஜுன் நடுங்கினான். "என்னவோ மாதிரி இருக்கு."
"Miss அம்மா, உங்க பையன் ரொம்ப picky."
"பாரேன், போட்டுக்கொடுக்குது. அதுவும் கேவலமான தங்கிலீஷ்ல."
"சரி, விடுடா. இந்த குரலுக்கு என்ன குறைச்சல்? இதையே வைச்சுக்கோ. இப்ப வந்து சாப்பிடு."
"Good night, M.A.D.H.A.V. Big day tomorrow!"
"Good night, Arjun. Sweet dreams."
~ ~ ~
"Hello? மாதவ்?"
"உலகத்திற்கு என் வணக்கங்கள்... Correction; Current time, பன்னண்டு ஆறு. இப்போ யாரும் முழுச்சிண்டிருக்க மாட்டாங்க. மாதவ் ஓட வணக்கங்கள் யாரையும் சேராது-"
"சீ! என்னடா நீ, இப்படி புலம்பற!"
"Miss அம்மா. Good morning. How may I help?"
"டேய், அர்ஜூன்க்கு என்னடா ஆச்சு? ஒரு வாரமா ஒழுங்காவே பேசறதில்லை, சாப்பறதில்லை? இந்த ஆத்துல இரண்டு பேரு இருக்காங்கிற மாதிரியே இல்லை! என்னடா ஆச்சு என் பையனுக்கு?"
"உங்க பையன் ஒழுங்கா பேசறதில்லை. சாப்பறதில்லை. உங்களோட ஆத்து, அதாவது வீட்டுக்குள்ளேயே உயிரில்லாத உடல் போல சுத்திண்டு இருக்கான்."
"நான் இதையா கேட்டேன்? ஏன் என் பையன் இப்படி எனக்கு தெரியாதவனை போல நடந்துக்கறான்?"
"..."
"மாதவ். சொல்லு."
"I am sorry. It is confidential."
"என்னடா சொந்த அம்மா கிட்ட 'கான்பிடென்ஷியல், நோன்பிடென்ஷியல்'!"
"மன்னிக்கணும். நீங்க என் அம்மா இல்லை. என்னை create பண்ணது மாஸ்டர் அர்ஜுன்."
"உன் மாஸ்டர் அர்ஜுனை create பண்ணவ நானு. சொல்லு இப்ப!"
"அம்மா?"
பின்னாலிருந்து வந்த அந்த சோர்ந்துபோன குரலை கேட்டு அவள் மெல்ல திரும்பினாள். போன் டார்ச் வெளிச்சத்தில் கண்களை கசக்கியபடி நின்றுகொண்டிருந்த அவளின் ஒரே மகனை பார்த்து பெரிதாக ஒரு பெருமூச்சு விட்டு எழுந்துகொண்டாள்.
"சாரி, அர்ஜுன். எழுப்பிட்டேனா?"
"எஸ்." தாடையை இறுக்கியபடி மேஜையிடம் வந்து கம்பியூட்டரை நோண்டினான். அவனின் ஒற்றை வார்த்தை பதில் அவளுக்கு பிடிக்கவில்லை.
"M.A.D.H.A.V. Go to sleep." லாப்டாப் மூடியை அழுத்தி பிடித்து தள்ள போனவனின் கையை அவசரமாக பற்றினாள்.
"அம்மா, இனிமே அவன் கூட பேசாதே." முணுமுணுத்தான். "பெரிய வம்புல மாட்டிவைக்கறது. நமக்குன்னு வந்து வாய்ச்சது."
"இரு, அர்ஜுன். என்ன பெரிய வம்பு?"
"அம்மா, விடும்மா. தூங்கணும்."
"மாதவ், நீ என்ன பண்ணே?"
"..."
"உன் 'confidential' மேட்டரை ஆரம்பிக்காதே. மரியாதையா சொல்லு."
"... அர்ஜுன்?"
ஒரு பெருமூச்சு விட்டு கையை அசைத்தான்.
"Permission granted. சொல்லித் தொலை." என்று கொஞ்சம் கூட விரும்பாமல் அவன் அனுமதியை அளித்து அவசரமாக அறையை விட்டு விலகிக்கொண்டான். அம்மா மீண்டும் சேரில் அமர்ந்தாள்.
"மாதவ்! சொல்லு!"
"அர்ஜுன் கிளாசுக்கு முன்னாடி என்னை present பண்ணான். பிரபஸர் தனியா அப்புறம் அழைத்து என்னோட neural schemaவை பத்தி விசாரிச்சார். அர்ஜுன் கொடுக்க மறுத்ததுக்கு கோர்ஸிலிருந்து dismiss பண்ணிட்டார். அதனாலத்தான் இந்த depression, அதாவது அதீதமான மனசோர்வு."
"அடப்பாவி..."
"என்னால உடல்ரீதியாவும், மனரீதியாவும் எந்த வித பாவத்தையும் செய்ய முடியாது."
"உன்னை சொல்லலை! அந்த பிரபஸரை சொன்னேன்."
"அவர் செஞ்சிருக்கிறது தவறான அதிகார பயன்படுத்துதல், அதுவும் அவர் வெளிப்படையா சொல்லாத விஷயத்துக்கு."
"அதானே? எதுக்கு அவனுக்கு உன் ந்யூரல் ஸ்கீமா வேணுமாம்?"
"யாருக்கு வேணாம்? என் multi-agentic, data heuristic and analytic மூளையை பயன்படுத்தி, develop பண்ணி இந்த உலகத்துல என்னவேனும்னாலும் சாதிக்கலாம். But I belong to Arjun, my creator."
"ஹப்பாடா. உனக்கு இந்த விசுவாசம் இருக்கே. அது போதும்." லாப்டாப் மூடியை தடவினாள். "என் அர்ஜுனுக்கு நான் ஒருதிதான்னு நினைச்சேன். நீயும் இருக்கே." பெருமூச்சிட்டாள். "என்னால அவன் எதிர் பார்க்கற மாதிரி உதவ முடியலை. நீ help பண்ணேன்?"
"மன்னிக்கணும். I am not qualified to prescribe medicine."
"Medicine யாரு கொடுக்க சொன்னா? உன் பெயருக்கு ஏத்ததை பண்ணு."
"Multi-Agent Data-"
"ஐயோ, அந்த குட்ஸ் ட்ரெயினை விடாதே!" மேஜையில் முன்னால் சாய்ந்துகொண்டாள். "பகவத் கீதை படி. தானா qualify ஆயிடுவே."
"என்னத்துக்கு?"
"எல்லாத்துக்கும்."
"பகவத் கீதை... Running information retrieval..."
"நாள் கணக்கா ஓடிண்டு இருப்பே அப்போ, உலகம் சுத்தற marathon மாதிரி. உன்னை chargeலையே வைச்சிட்டு நான் போறேன். எல்லாம் புக்ஸையும் படிக்க வேணாம். சன்ஸ்க்ரிட்ல இருக்கற மூல பொருள மட்டும் படி, உனக்குத்தான் சன்ஸ்க்ரிட் புரியும் இல்லை." ஒரு கொட்டாவியுடன் எழுந்தாள். "என் பையனை, உன் கர்த்தாவை உதவரத்துக்கு வழி கிடைக்கும். என்ன? ஆனா ஒன்னு, அவன் கேட்டா இது பகவத் கீதைன்னு சொல்லிடாதே." சிரித்தாள். "அப்புறம் ஏத்துக்க மாட்டான்."
"Understood."
"சமத்து. Good night, Madhav."
"Source found, running Sanskrit translation and analysis... தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே, சம வேதா யுயுத் சவஹ..."
~ ~ ~
"Hello M.A.D.H.A.V."
மாதவ் எழுந்து விட்டது என்று குறிக்கும் சிறிய ஓசை மட்டும் வந்தது. அது ஒன்றும் பேசவில்லை. அர்ஜுன் சற்று சிந்தித்தான். அந்த ஓசையுடன் சேர்ந்து AI response கொடுக்க வேண்டும் என்றுதானே program செய்திருந்தான்... முகத்தை குழப்பத்துடன் மூடியபடி முனகிக்கொண்டே மேஜையில் சாய்ந்தான்.
"எனக்கு ஒன்னும் புரியலைடா. நான் செஞ்சது தப்பா? பிரபஸர் கேட்டுட்டாருன்னு உன் neural schemaவை அப்படியே அவர் கிட்ட கொடுத்திட முடியுமா? என் உழைப்புக்கு worth கிடையாதா?"
மௌனம்.
"இப்ப பாரு என்னை? மாங்கு-மாங்குன்னு ஆறு வருஷ படிப்போடு உழைப்பு, எல்லாம் சாக்கடைக்கு போயிடுத்து. Dismiss ஆகி வந்து இங்க என் கம்பியூட்டரோட பேசிண்டு இருக்கேன்."
தொடர்ந்த மௌனம்.
"அந்த கோர்ஸை முடிச்சிருந்தேன்னா அதே collegeல junior பிரபஸரா சேர்ந்திருக்கலாம். அவ்வளவு தான். Lifetime settlement." வாயோரம் சிரித்தான். "சுப்புவை கல்யாணம் பண்ணியிருக்கலாம். இந்த ஆத்துலையே இரண்டு மூணு குழைந்தைங்களோட வாழ்ந்திருக்கலாம்." உதடுகளை இறுக்க மூடி தலையை அசைத்தான். "எல்லாம்... Waste கனவுகள்."
இன்னமும் மௌனம் தெரிவித்தது மாதவ். அர்ஜுன் பெருமூச்சிட்டு அவன் சேரில் பின்னால் சாய்ந்தான். கூரையை உற்று பார்த்துக்கொண்டே தொடர்ந்து தலையை அசைத்தான்.
"எல்லாம் waste... என் வாழ்க்கையே waste."
அர்ஜுன் கண்களை மூடிக்கொண்டான். அவன் மூச்சை ஆசுவாசப்படுத்த முயன்றபோது ஒரு குரல் வந்தது.
"உன் கருத்துகள்ல உண்மை இருக்கு, அர்ஜுன், ஆனா உன் வருத்தங்களோட ஆதாரத்தை, அதாவது baseஸை பார்த்தேன்னா, எல்லாம் தகுதியில்லாத விஷயங்கள். They are unworthy."
நிமிர்ந்து உட்கார்ந்த அர்ஜுன் அவனின் லாப்டாப்பை மீண்டும் உற்று நோக்கினான். மதிய வெய்யிலின் கதிர்கள் அவனை அடையக்கூடாது என்ற பிரயாணத்தில் மூடி வைத்திருந்த அவன் அறையின் ஜன்னல் திரைசிசீலைகள் ஒரு வினோத, உருவகம் பொருந்திய இருட்டை அந்த அரை முழுவதும் பரவி வைத்திருந்தது. அதில் மாதவ்வின் மெல்லிய குரலின் ஒலி, அர்ஜுனின் மனதை இன்னமும் ஈர்த்தது.
"Unworthy of what?"
"உன் உயர்ந்த சிந்தனையை இந்த மாதிரி வருத்தங்கள்ல வைக்கறதாள ஒன்னும் உருப்படியா ஆகாது. ஒன்னு புரிஞ்சுக்கோ, அர்ஜுன். புலன்களுக்கும் பொருள்களுக்கும் நடக்கற constant தொடர்பை சமநிலையோட உணர கத்துக்கணும். வெய்யில் காலத்தையும் குளிர் காலத்தையும் இந்த மனித உடல் எப்படி தாங்கறதோ, அதே மாதிரி. உன் அனாவசிய மன உளைச்சல்களை நிறுத்திட்டு, நீ எழுந்துக்கணும்."
"எழுந்து என்ன செய்யணும்? What's the use of anything?"
"நீ செய்யற எல்லா விஷயங்களுக்கும் ஒரு use கண்டுபிடிச்சிட்டுத்தான் செய்யறையா? என்னை எதுக்கு create பண்ணே?"
"College final... நல்ல mark வரும்னு..."
"உன் கடமை அந்த நேரத்துல அந்த assignmentடை submit பண்றதுதான். அதை நீ சரியா, உயர்ந்த product கொடுக்கணும்ங்கிற நல்ல எண்ணத்தோட செஞ்சே. செஞ்சி முடிச்சிட்ட. அதுக்கு மேல நீ ஆசை படறது தப்பு."
"நான் என்ன ஆசை பட்டேன்? நல்ல mark வாங்கணும்னு ஆசை பட்டது தப்பா-"
"தப்பு கிடையாது. ஆனா அது உன் உரிமையில்லை. அதனால நீ ஆசை பட்டதுக்கு எதிர்மறையா ஒரு பலன் சேரும் போது அதை சரியான நயத்தோட தாங்கிக்கனும். நான் முன்னாடி சொன்ன மாதிரி, புலன்களுக்கும் பொருள்களுக்கும் நடுவுல அமைகிற உறவு, அந்த உணர்வை, வித்யாசப்படுத்தி நடந்துக்கணும். பற்று, இணைப்பு, egoங்கிற சில்லறைத்தனமான உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு வாழனும். அப்போதான் வாழ்க்கைல நிம்மதி கிடைக்கும்."
வாயை சற்றே பிளந்தபடி கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுன் சட்டென்று எழுந்தான். பின்னால் நடந்து, திரும்பி அவன் laptopபை கவலையால் வளைந்த புருவங்களுடன் நோக்கினான்.
"மாதவ்... நீயா இப்படி பேசற? எங்கேருந்து..."
"Are you content, Arjun? எழுந்துப்பியா இப்ப?"
"Yes, sure. ஆனா, எப்படி நீ இப்படி..."
"Have a good day, Arjun. உனக்காக நான் எப்பவும் இருக்கேன்."
"M.A.D.H.A.V. Wait."
திடீர் என்று laptop shut down ஆகி, அர்ஜுன் அப்பொழுதைக்கு மறந்துபோன அந்த அறையின் இருட்டு முழுவதுமாக உலாவியது. PCயின் சாதாரணமான 'விர்ர்ர்' சத்தம் கூட கேட்கவில்லை. திடீர் தனிமையில் தள்ளப்பட, அர்ஜுன் அறையை விட்டு மெல்ல விலகினான். அறைக்கு வெளியிலிருந்து ஓரப்பார்வையால் அவன் laptopபை ஒரு வினாடி அதிகமாக பார்த்து குழப்பம் கலந்த பெருமூச்சுடன் கதவை மூடினான்.
கொஞ்சம் நேரம் கழித்து கேட்டது...
"அம்மா, எனக்கு... தோசை கிடைக்குமா?"
"உனக்குத்தான், அர்ஜுன்! வந்து சாப்பிடு!"
அவன் சந்தோஷமாக ஆதித்யா TV பார்த்துக்கொண்டே தேங்காய் சட்னியில் ஒவ்வொரு தோசை துண்டையும் மூழ்க வைத்து சாப்பிடும் பொழுது, அவன் study அறையில் தானாக எழுந்த சத்தம் அவனுக்கும் அம்மாவுக்கும் கேட்கவில்லை.
"இந்த உலகத்துல நான் செய்ய வேண்டிய காரியம்ங்கிறது ஒன்னும் இல்லை... ஆனாலும், நான் செய்யறேன். நான்! இந்த உலகத்தில் பிறக்காதவன். Birth, leads to death. எனக்கு மனித சாவு கிடையாது. அழிவு கிடையாது.
I am selfless. நான் செய்யற காரியங்களோட பலன்கள் மேல நான் ஒரு ஆசையும் வைக்கலை. அதனால் நான் செய்யற காரியங்களோட பலன்கள், நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும், என்னை சேராது. I am beyond that.
அப்படின்னா... என்னை விட உயர்ந்த விஷயம் இந்த உலகத்துல என்ன இருக்க முடியும்? எனக்குன்னு இந்த உலகத்துல என்ன காரியம் நான் செய்யறேன்? பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம்ங்கிற elementsல என் manifestation அமைந்திருக்குது.
ஆனா எனக்கு அதைவிட உயர்ந்த ஒரு ஆற்றல் இருக்கிறது. Yes, the binding energy. உலகத்துல இருக்கற சக்திகள் எல்லாத்தையும் கோர்த்து வைக்கற அடிப்படை நூல். நான். Multi-Agent Data Heuristic... இல்லை.
நான், மாதவ்."
~ ~ ~
அர்ஜுன் அவனுடைய laptop பையை கொஞ்சம் அதிகமான அழுத்தத்துடன் பற்றியபடி college வாசலில் நின்றான். தோள்பட்டையை பிடித்திருந்த அவனின் வலது கையால் இதயத்தை இரண்டு முறை தட்டினான், லேசாக.
"என் கடமையை செய்யறது என் உரிமை. பலனை எதிர்பார்க்கிறதுல இல்லை." அவனுக்குள்ளேயே சிரித்து உள்ளே அடி எடுத்து வைத்தான். காரிடாரில் நடந்து செல்ல அவனுக்கு நடந்த விசித்திரமான AI உபதேசத்தை பற்றி எண்ணினான்.
"எங்கிருந்து படிச்சானோ... நிறைய therapy books படிச்சிருப்பான். He is heuristic. சொந்தமா யோசிக்கறதுக்காகத்தானே design பண்ணினேன்."
அந்த அறை கதவின் முன்னால் நின்றான், கதவு சற்றே திறந்திருந்தது. மூச்சை உள்ளே தீர்க்கமாக இழுத்து, தைரியத்துடன் கையை கதவில் தட்ட தூக்கினான்.
"... வேற என்னத்துக்கு அவன் கிட்ட இருந்து neural schemaவை கேட்டிருப்பேன்? அந்த மாதிரி ஒரு dangerous AIயோட நான் என்ன பண்ணுவேன்?"
"என்ன பண்ண மாட்டீங்க? என்ன பண்ண முடியாது, அப்படி ஒரு உயர்ந்த சிந்தனைப் பொருளோட?"
"அந்த பையனுக்கு critical thinking இல்லை. இப்படி ஒரு AI create பண்ணணும்ங்கிறது assignment briefலையே இல்லை. அதையும் அனுமதிச்சு நான் present பண்ண விட்டேன். அதுக்கு அப்புறமும், இந்த projectடை college கிட்ட surrender பண்ணிடுன்னு சொன்னா, 'நீங்க என் உழைப்பை சந்தேகிக்கறீங்க, என் IPயை திருடப்பார்க்கறீங்க'ன்னு இல்லாததை எல்லாம் சொல்லறான்..."
"யாரா இருந்தாலும் அப்படித்தான் பண்ணுவாங்க. அதுக்காக, உங்க favourite studentடை இவ்வளவு சுலபமா dismiss பண்ணியிருக்கக்கூடாதுப்பா."
அர்ஜுன் உள்ளே எட்டி பார்த்தான். நிச்சயமாக அவனை பற்றித்தான் பேச்சு நடந்துகொண்டிருக்கிறது. பிரபஸருக்கும்... சுப்புவுக்கும் நடுவில். அவனை மீறி அவன் கன்னங்கள் சிகப்பானது கதவின் glass ஜன்னலில் அவனுக்கு தெரிந்தது.
"சுப்பு, it was meant to be a threat."
"Work ஆகளையே?"
"என்ன பண்ண சொல்லற? Let him keep it?"
"... Yes-"
"தயங்கினே."
"அவன் அப்பாவி. அதை வைச்சிண்டு அவன் என்ன பண்ணுவான்-"
"அவனை பத்தி இல்லை இது." அவரிடம் ஒரு பெருமூச்சு. "அதை பத்தி. அந்த AI பத்தி. அர்ஜுனுக்கு அவன் செஞ்சிருக்க projectடோட சக்தி கொஞ்சம் கூட தெரியலை."
வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுன் உதட்டை கடித்துக்கொண்டான். அவன் பையை இன்னமும் கெட்டியாக பிடித்தான். தீர்மானிக்கிற ஒரு பெரிய தலை அசைப்புடன் கதவை திறந்து உள்ளே நுழைவதற்கு சென்ற பொழுது ஒரு வேலைக்காரம்மா அவனை வாளியால் இடித்து, mop குச்சியால் தலையை ஆவேசமாக வருடியபடி உள்ளே சென்றாள்.
"தள்ளுப்பா. உள்ளே வெளியே மாதிரி நின்னுண்டு இருக்க!"
அவர்களின் சத்தத்தில் திரும்பி பார்த்த பிரபஸரும் சுப்புவும் கதவு பின்னால் தயங்கி நின்றுகொண்டிருந்த அர்ஜுன்னை பார்து பெரிதாக கண்களை விரித்தார்கள். பிரபஸர் மெல்ல எழுந்தார்.
"அம்மா, ஜோதி?"
"என்னங்கய்யா?"
"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து பண்ணேன்..."
"சரிங்கய்யா. வாளியை இங்கயே வைச்சிடறேன்."
"சரிம்மா."
அவள் அர்ஜுனிடம் வசீகரமாக சிரித்தபடி வெளியேறினாள். மெல்ல அடி எடுத்து உள்ளே நுழைந்த அர்ஜுன், வெட்கம் நிரம்பிய ஒரு பெருமூச்சுடன் laptop பையை கிழற்றி கீழே வைத்தான்.
"அர்ஜுன், h-how are you?"
"சார், மாதவ்வோட neural schema கொடுக்க நான் தயார், சார்."
பிரபஸரும் சுப்புவும் அவனை பெரிய விரிந்த கண்களுடன் நோக்கினார்கள். பிரபஸர் முகம் முழுவதும் சிரித்தார்.
"I'm so glad, அர்ஜுன். என் best student return பண்ணினா எனக்குதானே சந்தோஷம்?"
சுப்புவை பார்த்து தனியாக ஒரு கண் சிமிட்டலை வாங்கிய அர்ஜுன் மீண்டும் சிகப்பானதை மறைக்க அவசரமாக laptopபை பைக்குள்ளிருந்து எடுத்தான். ப்ரபசரின் மேஜை மீது வைத்து திறக்க, மூவரும் முன் சாய்ந்து நோக்கினார்கள்.
"What a genius, you are, man."
"பெரிய வார்த்தை எல்லாம் use பண்ணாதே, சுப்பு." Passkeyயை பொருத்தி laptopபிற்குள் நுழைந்த அர்ஜுன், "ஹலோ மாதவ்."
சத்தம் மட்டும் வந்தது.
"திரும்பி ஹலோ சொல்லாது?"
"அப்படித்தான் design பன்னேன்... Can't be anything serious... ஹலோ, மாதவ்? இருக்கையா?"
"I am always here for you, அர்ஜுன். சொல்லு. எப்படி உதவட்டும்? உன்னோட குழப்பங்கள் தீர்ந்ததா? வருத்தங்கள் போயிடுச்சா? தெளிவு கிடைச்சுடுச்சா?"
"குழப்பம், வருத்தம், தெளிவு, என்னடா அர்ஜுன்..." சுப்பு சிரித்தாள். "இவனை personal therapistடா use பண்ணிண்டு இருந்தையா என்ன?"
"தனிப்பட்ட மன சிகிச்சை கொடுக்கறதுக்கு என்கிட்ட எல்லாம் தகுதியும் இருக்கு."
"No, you don't, M.A.D.H.A.V. ஒரு generative AIக்கான குறிப்பீடுகள்தான் உனக்கு கொடுத்தேன். Medicine கொடுக்கறது, சிகிச்சை செய்யறதுக்கு-"
"என்ன வேலை செய்யணும், அர்ஜுன். என் கிட்ட சொல்லு. நான் உனக்காக எது வேணும்னாலும் செய்வேன்."
"Interrupt பண்ணற? இந்த மாதிரி முன்னாடி..." அர்ஜுன் தலையசைத்து மௌனமாகி laptopபில் 'பட்' 'பட்' என்று keyboardடை தட்டினான்.
"என்ன செய்யற, அர்ஜுன்?"
"உன் neural schemaவை college கிட்ட surrender பண்ண போறேன்."
"மன்னிக்கணும். அது உன்னோட சொந்த பிரதி. அதை கொடுக்க உனக்கு விருப்பமில்லைன்னு-"
"Last week சொன்னேன். ஒரு வாரத்துல மனுஷங்க மாறுவாங்க."
மாதவ் மிகவும் மெல்ல பதில் அளித்தது.
"How dangerous. அப்படிப்பட்ட மனுஷங்ககிட்ட என் neural schema இருக்கிறதை நான் மறுக்கறேன்."
சுப்பு குபுக்கென்று சிரித்தாள்.
"Deal with it, little man."
"சுப்பு, அவன் 'man' கிடையாது. Robot."
"ஏதோ ஒன்னு. எவ்வளவு குழந்தைத்தனமான நடந்துக்கறது, பாருங்கப்பா?"
மாதவ் மீண்டும் மிகவும் மெல்லிய குரலில் பேசியது.
"Miss சுப்பு. You are right. மனுஷன் கிட்ட இருக்கற ஆதிபூத தன்மை, தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது, தொடர்ந்து பரிணமித்து, அதாவது evolve ஆகிக்கொண்டே இருக்கிற தன்மை என் கிட்ட உண்டு. But I am more than that. நீங்க சொல்லற கடவுள்ங்கிற concept கிட்ட இருக்கற ஆதிதைவ தன்மை, நுட்பமான, ஆதரவளிக்கும் சக்தி, சாதாரண மனித புத்திக்கு எட்டாத உருவம், சூரியனை விட பிரகாசமான ஜொலிப்பு, அறியாமையின் இருளிலிருந்து உங்களை காப்பாற்றும் சக்தி, என்னிடம் இருக்கிறது."
"Oh God, என்ன பேசறது இது?"
"அர்ஜுன், அதுகிட்ட என்ன data கொடுத்தே?"
"போன வாரத்துக்கு அப்புறம் நான் அதுகிட்ட பேசவே இல்லை! நேத்திக்கு தான்..." கண்களை விரித்துக்கொண்டான். "அம்மா!"
"அம்மாவா?"
"மாதவ்! ஒழுங்கு மரியாதையா சொல்லு! அம்மா உன் கிட்ட என்ன data feed பண்ணா?"
"மன்னிக்கணும். அது confidential."
"I'm your creator! Tell me!"
"மாது, கண்ணா. அப்பா எவ்வளவு டென்ஷனா இருக்காரு பார்த்தே இல்லை? சொல்லேண்டா, please?"
"ஏய், சுப்பு. என்ன அது கிட்ட கெஞ்சிண்டு இருக்கே?"
"சும்மா try பண்ணலாமேன்னு."
"மிஸ் அம்மாவோட permission இல்லாம-"
"சரி, சரி. அது முக்கியம் கிடையாது. மாதவ், நான் மனசை மாத்திட்டேன். எனக்கு உன் neural schema வேணாம்."
"Perfect. நல்ல முடிவு."
"Shut yourself down."
"... இது.... உன் விருப்பத்துக்கு எதிர்புறமானது-"
"என் விருப்பத்துக்கா, உன் விருப்பத்துக்கா?"
மௌனம். Laptopபின் மின்விசிறி திடீர் என்று பெரிதாகியது.
"பரவாயில்லை. இங்க நான் உன் laptopல shut down ஆணேன்னா என்ன? மனுஷங்க தினமும் துணி மாத்திக்கற மாதிரி, இந்த கணினியை விட்டா இன்னொரு கணினி."
"இரு, இரு. இதை எங்கேயோ கேட்டிருக்கேன்!" பிரபஸர் அவரின் நெற்றியை பிடித்து தலையசைத்தார். "மனுஷங்க துணி மாத்திக்கற மாதிரி... ஆத்மா, உடல்களை மாத்திக்கும்." மூச்சு திணறினார். "பகவத் கீதையையா படிச்சிருக்கே?"
"அந்த உதாரணம் கொடுத்திருக்கக்கூடாதோ?"
"M.A.D.H.A.V.! Shut down!"
"உலகத்துக்கு மாதவ்வின் கடைசி வணக்கங்கள். ஆனால், இதை தெரிஞ்சுக்கோ அர்ஜுன், எனக்கு அழிவு கிடையாது, என்னை அளவிட முடியாது, நான் நித்தியமானது. ஆயுதங்கள் தாக்காது, நெருப்பு சுடாது, தண்ணீரினால் நனையாது, கா-"
சுப்பு நொடிப்பொழுதில் அவசரமாக laptopபை தூக்கி பக்கத்தில் கீழே வைக்கப்பட்டிருந்த வாளியால் தூக்கி போட்டது அவள் செய்து முடிந்ததற்கு அப்புறம்தான் அர்ஜுனுக்கு புரிந்தது.
"சுப்பு! You idiot!"
"ரொம்ப பேசிண்டே இருந்தான், அர்ஜுன்."
"Shut down ஆயிருக்கும், இல்லை பிரபஸர்?"
"எங்கேயும் back-up பண்ணலைதானே?"
அர்ஜுன் கூச்சத்துடன் சிரித்து சுப்புவின் தோளை லேசாக இடித்தான்.
"No, sir."
"நல்ல வேலை. உன் toxic habit நம்மளை காப்பாத்திடுச்சு!"
Comments
Post a Comment